குப்பைகள்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

இளந்திரையன்


01

அவன் குழம்பிப் போயிருந்தான். கசக்கி எறிந்திருந்த காகிதங்களின் எண்ணிக்கையே அவனின் குழப்பத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாக இருந்தது. அவன் மனதில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அம்மாவின் கடிதம் வந்ததிலிருந்தே அவன் குழம்பிப் போயிருந்தான். வாழ்க்கையின் கஸ்ர நஸ்டங்களில் அடிபட்டு நொந்து நுாலாகிப் போயிருந்த அவள் முகம் அவனைப் பார்த்து கெஞ்சுவது போல இருந்தது.

கனடா வந்த இந்த இரண்டு வருடங்களில் அவனால் எதையுமே சாதிக்க முடியவில்லை. அவனது அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் பரமலிங்கம் – அவரதும் அவர் குடும்பத்தினதும் நல்லெண்ணத்தை அவனால் சம்பாதிக்க முடிந்திருந்தது.

ஒரே தொழிலகத்தில் கூட வேலை செய்யும் பரமலிங்கம் மட்டுமே அவனது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே வடிகாலாக இருந்தார். அந்தப் பழக்கம் நாளடைவில் அவர் குடும்பத்தவரின் கவனத்தையும் அவன் கவர்ந்து கொள்ள உதவியாயிருந்தது.

அயல் ஊரவன் என்பது மட்டுமன்றி அவன் இனிய பண்புகளும் புத்திசாலித்தனமும் கூட அவனை அக் குடும்பத்துடன் இணைத்து வைத்திருந்தது. ஆணும் பெண்ணுமாய் அவன் வயதொத்த இரு பிள்ளைகளும் பெற்றோருமாகிய அழகிய குடும்பம் அது. அவர்களைத் தவிர கனடாவில் வேறுசொல்லிக் கொள்ளும் படியான உறவு எதுவும் அவனுக்கில்லாமல் இருந்ததும் அவன் அவர்களுடன் அதிகமாக ஒட்டி உறவாட வழி கோலியிருந்தது.

ஊரில் இருந்த தனது தாய்க்கும் தங்கைக்கும் கூட அவர்களைப் பற்றி அவன் விரிவாக எழுதியிருந்தான். அவன் அன்னை எழுதும் கடிதங்களில் கூட அவர்களைப் பற்றி விசாரிக்கும் அளவு அந்த நட்பு இறுகிக் கனிந்திருந்தது.

02

ஆனால் அந்த நட்பே இப்படியொரு பிரச்சினையைத் தோற்றுவிக்கும் என்று அவன் எண்ணிக் கூடப் பார்த்திருக்கவில்லை. அவன் வீட்டு விலாசத்தை பரமலிங்கம் கேட்ட பொழுது நட்பு ரீதியாக சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு அவன் முகவரியைக் கொடுத்திருந்தான்.

ஆனால் அவர் ஏன் கேட்டார் என்ற காரணம் இப்போது தான் அவனுக்குப் புரிந்தது. இந்த நட்பை உறவாக இறுக்கிக் கொள்ளும் ஆவல் இருப்பதை அம்மாவின் கடிதத்தைப் பார்த்த போது தான் அவன் விளங்கிக் கொண்டான்.

வாழ்க்கையில் எந்தச் சந்தோசத்தையும் கண்டிராத அம்மா தனது கடமை நிறைவேற்றமாகவும் சந்தோஸமாகவும் இதைப் பற்றிக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால் அவன் மனம் பற்றி அவள் எதுவும் எண்ணாதது தான் அவனுக்கு கோபமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

மாற்றுச் சம்பந்தமாக அல்லது தங்கையின் திருமணத்திற்கு உதவி செய்வதாகவும் கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கும் இத்திருமணம் உதவும் என்றும் அவர்கள் கூறியதாக பல பல காரணங்களை அம்மா அடுக்கிக் கொண்டே போனாள். முடிந்தால் தானும் வந்து இவர்களுடனேயே தங்கும் தன் ஆசையையும் வெளியிட்டிருந்தாள்.

வாழ்க்கையில் நிம்மதியையோ சந்தோஸத்தையோ இது வரை அனுபவித்திராத அம்மாவின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போய் கொண்டிருந்தது. அவள் முகம் வந்து போன அடுத்த கணம் தோன்றி மறைந்த இன்னுமொரு முகம்……. அவள்…… அவன் மனம் நிறைந்த ப்ரியம்வதா.

ஓ…….. அவள் நினைவே அவன் மனதெங்கும் சந்தோஸ ஊற்றுக்களை திறந்து விடப் போதுமானதாக இருந்தது. அவன் துன்பத்திலும் துயரத்திலும் அடிபட்டிருந்த போது ஒளடதமாய் அவள் இருந்தாள். அவள் அண்மையே அவனுக்கு நிம்மதியையும் துணிவையும் தந்தது.

03

எத்தனை கனவுகள்……… வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள்……… எவையும் எதிர்பார்ப்பது போல் எப்போதும் இருப்பதில்லையா ?…… கனடாவில் காலுான்றி தங்கைக்கும் நல் வாழ்க்கை அமைத்து ……….. அம்மாவையும் ப்ரியம்வதாவையும் தன்னுடன் அழைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில் எதனையும் நிறைவேற்றிக் கொள்ள விடாது பல தடைகள்…….

அகதி அந்தஸ்து ஏற்றுக் கொள்ளப் படாத அவதி நிலை. காலம் கரைந்து கொண்டிருந்தது. நினைத்தது போல் உழைப்பதும் கடினமாயிருந்தது.

இந்த நிலமையில் இப்படியொரு நெருக்கடி. வாழ்க்கையின் வினோதங்களைச் சில வேளைகளில் அவனால் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயித்துக் கொள்ள முடியாத சமூகச் சூழலில் அவன் வாய் அடிக்கடி முணு முணுத்துக் கொள்ளும். நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்……….. இதற்கு என்ன அர்த்தம் ?……..

கேள்வி ஆகி விட்ட வாழ்க்கையில்……… வாழ்க்கை பற்றிய நம்பிக்கை எங்கிருந்து வரும். மனமே ஒரு குப்பைக் கூடை ஆகிவிட்டது போன்ற பிரமை. நிறைவேறாத நடக்காத ஆசைகள் எல்லாம் குப்பைகள் தானே. மனதில் நிறைந்திருக்கும் குப்பைகள் தான் எத்தனை …….. எத்தனை……….

அவன் இன்னும் குழம்பித்தான் போயிருந்தான். என்ன எழுதுவதென்று தெரியாது எழுதி எழுதி கசக்கி எறிந்து கொண்டிருந்தான். எங்கும் குப்பைகள்…..குப்பைகள்………

Ssathya06@aol.com

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்