காய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

விக்ரமாதித்யன் நம்பி-நா. முத்துக்குமார்


காற்றே
சாரல் காற்றே
குளிர்சாரல் காற்றேஎ
சேர்த்து வை
இவனையும் துணைவியையும்

முற்றத்துப் பெளர்ணமியை
மீண்டும் கொண்டு வா

எறும்பூரும் சுவர்களை
நடுநெற்றியில் நிறுத்து

எதற்காக

சேர்ந்திருந்தோம்
பிரிந்து இருக்கிறோம்

கூடி வாழ்ந்ததில்
கொள்ளை சந்தோஷம்

தனித்திருப்பதில்
மனவருத்தம்

வருத்தமும் மகிழ்ச்சியும்
வரும் போகும்

இவ்வேளை
காய்ந்துகொண்டிருக்கும்
இவ்வெய்யிலிடம்
யார் போய் சொல்வது

தேள்களை
உதிர்த்து உதிர்த்து
ஓட்டுக்கூரைகள்
தேய்ந்து போய்விட்டன

புலம்பாதே
புகார்பேசாதே

மழை பெய்கிறது
மரம் செடிகொடிகள் தழைக்கின்றன
பசுக்களின் மடியில்
பால் கட்டுகிறது
ஆற்றிலும் வாய்க்காலிலும்
புதுவெள்ளம் பாய்கிறது
பிறகென்ன பெண்ணே

கொஞ்சம் சோறும்
வற்றல்குழம்பும் அப்பளமும்
போதும் அதிகம்

பொருள்தேடி
பிரிந்து இருந்தது துன்பம்

கிழிந்த இரவுகளில்
எதைக்கொண்டு தைப்பது
இவன் ஓயாத தனிமையை

ஆதிமுதல்வியை
பார்த்திருந்தால் பேசமாட்டாய்

எல்லாம்
நேராகும்

மகாமேருவுக்கு
பட்டு சாற்றுவோம்

*******************************

Series Navigation

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி