கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

நாக இளங்கோவன்


அன்பின் கலைஞருக்கு,

20-12-03 அன்று நீங்கள் அறிவித்த முடிவு ஓரளவு

எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான் என்றாலும்

வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் அய்யமில்லை.

‘பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்

எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் ‘

என்ற நாலடியாரின் ஈரடிகளை ஒத்த பா.ச.க உடனான

உறவு உடைந்து போனதில் தமிழ் உள்ளங்களுக்கு

பெரும் மன நிறைவு என்று மகிச்சியோடு உங்களிடம்

பகிர்ந்து கொள்கிறேன்.

தி.மு.க என்ற இயக்கத்தின் 11 இடங்கள் அவர்களின்

ஆட்சிக்கு இடைஞ்சல் தராமல், நாகரிகமான

உறவுக் கட்சியாக இருந்ததால் அவர்களுக்கு

அதன் அருமையைப் பற்றி அவர்கள் கவலைப்பட

வில்லை போலும். எனினும், பா.ச.கவின் நம்பகத்தன்மை

அற்ற கூட்டணி உறவுகளை அம்பலத்திற்கு அருமையாக

கொண்டுவந்திருக்கிறீர்கள்.

கவிழ்க்கப் பட்ட பா.ச.க, மீண்டும்

ஆட்சியைப் பிடித்த உடன், அ.தி.மு.கவிடம்

இப்படியெல்லாம் செய்யலாமா என்ற சின்னச் சிணுங்கலுடன்,

தங்கள் கள்ள உறவை புதுப்பித்துக் கொண்டனர்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த முதல் சட்ட மன்றக் கூட்டத்திலேயே

நேர்மையில்லாமல் அதையும் சொல்லிக் காட்டினர்.

திரு.வெற்றிகொண்டான் ஒரு முறை தன் மேடைப்

பேச்சில், ‘அ.தி.மு.க கோயிலில் சோறு போட்டதும்

பா.ச.க உடனே போய் பந்தியில் உட்கார்ந்து கொண்டது ‘

என்று அவர் பாணியில் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை

என்பதைக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பா.ச.க

நாட்டு மக்களுக்கு உணர்த்திக் காட்டியது.

நீங்கள் அடிக்கப் பட்டபோது பா.ச.க, ‘இப்படியும்

செய்யலாமோ ? ‘ என்று வேடிக்கை பார்த்து, விரிவுரை

ஆற்றினார்களே ஒழிய, வேறொன்றும் இல்லை.

தானாடாவிட்டாலும் தசைஆடியது என்பார்கள்!

இன்றும் தசை ஆடிக் கொண்டுதானிருக்கிறது தமிழருக்கு.

ஏனெனில், இது வெறும் அரசியல் பகை அல்ல.

இது இனப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பதுதான் உண்மை.

கனகவிசயன் கல் சுமந்ததற்கு பதிலடியாகத்தான் நீங்கள்

தாக்கப் பட்டதும், கண்ணகி சிலை காணாமல் போனதும்.

வரும் காலங்களின் வரலாற்றில் இந்தப் பகை மாறாத

வடுவாக இருந்து கொண்டே இருக்கும்.

எல்லோரும் சொல்வதைப் போல், இது, (அதாவது

உங்களை அடித்தது) அ.தி.மு.க அரசின் அராசகப் போக்கு

என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லிக் கொண்டிருந்து,

உண்மை மறைந்து போவதற்குக் காரணமாக இருக்க வேண்டாம்.

இது அ.தி.மு.க மற்றும் பா.ச.க என்ற இரு கட்சிகளின்

கள்ள உறவின் பிள்ளை என்று நாடு எப்பொழுதோ அறிந்து

கொண்டிருக்கிறது. உங்களை அடித்ததில் பா.ச.கவிற்கும்

பங்கு உண்டு.

அதற்குப் பின் தமிழகத்தில் நடந்த செயல்பாடுகள்

பலவற்றை எண்ணிப் பார்க்கிறோம்.

பல தமிழர்கள் கடுஞ்சிறை தள்ளப்பட்டதைத் தமிழர்கள்

‘தமிழ் இன உணர்வை, திராவிட உணர்வை அழிக்கும்

முயற்சி ‘ என்றே பார்க்கிறார்கள். நீங்கள் அடிக்கப் பட்ட போது

வேடிக்கை பார்த்த பா.ச.க, அதே போல்தான் வைகோ,

போன்றோர்கள் மேல் ஏவிவிடப்பட அடக்கு முறையையும் பார்த்துக் கொண்டிருந்தது.

பா.ச.க, அ.தி.மு.க என்ற இரு இந்துத்துவ சக்திகள் இணைந்துதான் உங்களை அடித்திருக்கிறது.

இந்து நாளிதழின் மேல் அடக்கு முறை ஏவிவிடப்பட்ட

உடனேயே பா.ச.க அரசு கொதித்தெழுந்து மாநில

அரசிடம் இருந்து அறிக்கை கேட்டது. ஆனால்

திமுக மற்றும் பல மாநில எதிர்க்கட்சிகள் (மத்தியில்

ஆளுங் கட்சிகள்) எவ்வளவோ பா.ச.க அரசுக்கு எடுத்துச் சொல்லியும்

அது அவர்களின் சிந்தையைத் தொடவில்லை.

தற்போது தமிழக மக்கள், தி.மு.க காங்கிரசுடன் கூட்டணி

வைக்கும் என்றும், பா.ச.க அண்மையில் வெற்றி பெற்று இருப்பதனால் இப்பொழுது

வெளியே வரலாமா என்றும், அரசியல் என்றால் சந்தர்ப்ப கூட்டுகள்

என்றும் பலர் பல மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தாது தமிழ்நாட்டிற்கு பயன் தரும்

முடிவுகளையே எடுப்பீர்கள் என்று மக்கள் நிச்சயம் நம்புவார்கள்.

பா.ச.க வட மாநிலத் தேர்தலில் தோற்றிருந்து, தி.மு.க வெளியேறியிருந்தால்,

சந்தர்ப்ப வாத கூட்டணி மாற்றம் என்று பலர் பேசியிருக்கக் கூடும்.

ஆனால், பா.ச.க வலுவாகி இருப்பதாகக் கருதப் படுகின்ற

சூழலில், அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன

இருவாரங்களில் நீங்கள் வெளியேறியிருப்பது மிகவும்

பாராட்டத்தக்கது மற்றும் போற்றத் தக்கது.

தமிழக அரசியல் கணக்குகள் வேறு என்பதை

தமிழகத்து பா.ச.கவிற்கு இப்பொழுது புரிந்து கொண்டிருக்கும்.

முரசொலி மாறன் அவர்களால் ஏற்பட்ட கூட்டு,

அவர் மறைவுக்குப் பின்னர் முடிந்து விட்டது

என்று சொல்வோரும் உளர். ஆனால், முரசொலி

மாறன் அவர்கள் இன்று அமைச்சராகவே இருந்திருந்தால்

கூட, இந்த முடிவைத்தான் நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று நிச்சயம் கூறமுடியும்.

தத்துவார்த்தமாகப் பார்த்தோமெனின்,

கள்ள உறவுகள் என்றைக்குமே எதிலுமே ஆபத்தானவை.

நல்ல உறவின் நடவடிக்கைகளை சமாளிப்பதை விட

கள்ள உறவின் நடவடிக்கைகளை சமாளிப்பது கடினம்.

வெளிப்படையாகச் சொன்னால் பா.ச.கவின் நடத்தை

இரவில் கணவனுடனும் பகலில் எதிர்வீட்டுக் காரனிடமும்

பயனடையும் பெண்ணின் நிலையொத்தே இந்த இரண்டரை ஆண்டுகளில் இருந்தது.

இதில் இருக்கும் ஆபத்தை விட, அந்தப் பெண்ணை (பா.ச.கவை)

எதிர்வீட்டுக்காரனிடமே போக விட்டு விட்டால்

எந்த நேரத்தில் எதில் நஞ்சு வைத்துக் கொடுப்பாளோ என்று

அஞ்சாமல் இருக்கலாம் அல்லவா ? அந்த வகையில்

தமிழர்கள் அ.தி.மு.க, பா.ச.க கூட்டணி நிகழ்ந்து, தொலையட்டும் என்றுதான் கருதுவார்கள்.

எது எப்படியிருந்தாலும், பா.ச.கவினர், காரியம் முடிந்தவுடன்

தி.மு.கவை சீண்டி, எப்படியாவது சீக்கிரம் கூட்டணியை விட்டுத் துரத்தி,

பின்னர் பிறருடன் கூட்டு சேர்ந்து கொண்டாட்டம் போடலாம்

என்று இருந்தவர்களை, மிக மிக நேர்த்தியுடன்,

யார் அதைக் குறை சொன்னாலும் அசைந்து கொடுக்காமல்,

ஆப்பசைந்து சிக்கியது போல் பா.ச.கவினரைத் தமிழகத்தில் வைத்திருந்த

திறனைக் கண்டு உம்மைப் போற்றுகின்றேன்.

இந்த அரசியல் சூக்குமம் வருங்கால அரசியலாருக்கு

இலக்கணமாகும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

அரசியல், தேர்தல் என்பன கூட்டணிகளாலேயே

பார்க்கப் படுகின்றன என்ற போதும், ஏற்கப்படாத,

பயன் விளையாத, பாதகங்கள் செய்த கூட்டணிகளுடன்

தி.மு.க சேர நேர்ந்த போதிலும், தி.மு.கவின் போர்க் குணமும்

கொள்கைப் பிடிப்பும், முழுமையான பயனைப் பெற்றுத்தராவிடிலும்

இன்றும் வற்றாமல் இருப்பது ஒரு ஆறுதலாகவே இருக்கிறது.

அதற்காக மட்டுமே உங்களின் பால் அனைவருக்கும் அன்புண்டு.

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும், இயக்கமும், அதன்

தலைவரும் சந்தித்திராத இன்னல்களை தி.மு.கவும் நீங்களும்

சந்தித்து இன்னல்களைப் புறங்காண வைத்த பல பெருமைகளுக்கு

உரியவர் நீங்கள் என்பதில் தமிழக மக்களுக்கு அய்யமில்லை.

இனி ஏற்படும் தி.மு.க கூட்டணிகள் தேர்தலை மட்டும்

குறிவைத்து இல்லாமல், தேர்தலுக்குப் பின்னர், திராவிட

தமிழ்க் கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவும்

அமைய வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு

நிறைவேற வேண்டும். குறைந்த பக்கம், தமிழர்களுக்கு

எதிரான செயல்களைச் செய்யாமலாவது இருக்க வேண்டும்.

காவிரிக்கரைத் தமிழர்களில் இருந்து, மலேசியா போன்று

உலகவாழ் தமிழர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் பல

இன்னல்கள் இருக்கின்றன. மாலத்தீவுகளில் கூட இன்னல்கள்.

அவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டின் நிலை கண்டு கவலை கொண்டு ஆதரவற்ற நிலையில்

அல்லாடுகிறார்கள் என்பதை நாம் தொடர்ந்து படித்து வருகிறோம்.

ஏனெனில் பாதிக்கப் படுவது தி.மு.கவாக இருந்தால் அது நேரடியாக

தமிழகத்தை மட்டுமல்ல பல நாட்டுத் தமிழர்களையும் முழுவதுமாக பாதித்து விடுகிறது.

ஆகையால் அடுத்த கூட்டணி என்பதும் கவனமாகப் பார்க்கப் படவேண்டியவ ஒன்று.

பா.ச.கவினர் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக இருந்தார்கள்

என்று சொன்னாலும், காங்கிரசார் எப்படிப் பட்டவர்கள்

என்றும் நீங்கள் அறீவீர்கள். 1996 தேர்தலில், கூட இருந்த

த.மா.காவினர் பின்னர் பல நேரங்களில் அ.தி.மு.கவிற்கு

ஆதரவாகத்தான் இருந்தனர். பா.ச.க அளவிற்குக் கட்டுப்பாடற்று

இல்லாவிடிலும், அவர்களும் இதற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

பா.ச.க அதிமுகவுடன் சேர்ந்து பல சூழ்ச்சிகளை செய்திருக்கிறது

திராவிட இயக்கங்களுக்கு என்பது எவ்வளவு உண்மையோ,

அதே போல பேராயக் கட்சியினரும், (காங்கிரசு) அதிமுகவுடன்

சேர்ந்து கடந்த 90களில் பெரும்பழிகளையும், செயின் கமிசன்

போன்ற பல கடும் இடர்களையும் செய்தவர்கள்.

1991 ல் உங்களால் வளர்த்துவிடப்பட்ட ஆர்.வெங்கட்ராமனால்

தி.மு.க ஆட்சி அநாகரிகமாகக் கலைக்கப் பட்டுவிட்டதை

யாரும் மறந்து விடமுடியுமா ? 1996-2000 ஆட்சியில் கிளப்பி விடப்பட்ட

சாதி மதக் கலவரங்கள் எத்தனை என்பதை மறந்து விட

முடியுமா ? எத்தனை ‘ஆட்சிக் கலைப்பு ‘ மிரட்டல்கள்

என்பதை மறந்து விட முடியுமா ? ஒன்றே ஒன்று தெரிகிறது:

யார் யாருக்கெல்லாம் தி.மு.க நாகரிகத்தைக் காண்பிக்கிறதோ

அவர்களெல்லாம் தி.மு.கவிற்கு எதிராகவே வேலை செய்கிறார்கள்.

அந்த வகையில் அண்மையது பா.ச.க உறவு. ஆகையால்,

பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டிய கட்டாயம் தி.மு.கவிற்கு

இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆக, பேராயக் கட்சியோ, பா.ச.க வோ எதுவாக இருந்தாலும்

அது அதிமுகவுடன் கூட்டணி வைத்து அரசியல் நாணமற்று

பல கொடுஞ்செயல்களை தமிழர்களுக்கும் திமுகவிற்கும் செய்வதுதான் வரலாறு.

எத்தனைக் கூட்டணிச் சதிகள் நடந்தாலும் அதில் மீண்டு

வருவது திமுகவிற்கு ஒரு பெரிய செயலல்ல என்றாலும்,

அதில் ஏற்படும் உளைச்சலும், காலவிரயமும்

தமிழர் நலன் பலவற்றை பின் தங்கச் செய்து விடுகின்றன.

அச்சத்தையும் மடைமையையும் தமிழர்களிடம் வளர்க்கின்றது.

சிலம்பிலே இளங்கோவடிகள், வானத்து அரவுகளுக்கு

அஞ்சி, திங்கள் பூமிக்கு வந்து விட்டதோ பெண்வடிவில்

என்று ஒரு அழகான உவமையைக் கையாண்டிருப்பார்.

இராகு மற்றும் கேது என்பன அவ்வரவுகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அந்த இராகுவும் கேதுவும் தமிழர் பூமிக்கு வந்ததுபோல் பேராயக் கட்சியும்,

பா.ச.கவும் இங்கு ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

பேராயக்கட்சி பாதகம் செய்தால், அடுத்த இந்திய தேசியக்

கட்சியுடன் கூட்டு சேரும்போது, தமிழர்களுக்கு ஒரு

நிம்மதி வருவதும், அந்தப் பாதகத்தை பா.ச.க செய்தால்

பா.ச.கவிற்கு பேராயக் கட்சி பரவாயில்லை என்று எண்ணுவதும்

தமிழர்களுக்கு ஒரு தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருந்து வருகிறது.

ஆனால், இரண்டினாலும் இன்னல்கள்தானே ஒழிய

வேறேதும் இல்லை. இந்த இரண்டில் எது ஆண்டாலும்

தமிழர் எதிர்ப்பு சக்திகள் தங்கள் கரங்களைக் கூப்பிக்

கொண்டுபோய் தமிழர்களுக்கு எதிரான முனையல்களில்

திருப்பி விடுவதை தமிழகம் கண்கூடாகக் கண்டு வருகிறது.

ஆகவே, அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய கலைஞர் அவர்களே,

வரும் கூட்டணி, பேராயக் கட்சியையும், பா.ச.க வையும்

தவிர்த்தே இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆவல்.

ஆகவே, பேராயக்கட்சி, பா.ச.க, என்ற இரண்டையும் தவிர்த்த

உங்கள் தலைமை அனைத்து 40 தமிழ்த் தொகுதிகளையும்

கைப்பற்ற வேண்டும் என்ற அவாவையும் வாழ்த்துக்களையும்

இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கான

வியூகத்தை நீங்கள் வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

‘அப்படியே, அரசியல் காரணங்களால், ஏதோ ஒன்றுடன்

கூட்டணி ஏற்பட்டாலும், அது உங்களின் முடிவாகையால்

அம்முடிவும் எமக்கு ஏற்புடையதே என்றும் உளமார தெரிவித்துக் கொள்கிறேன். ‘

‘கருணாநிதியையே அடித்து விட்டோம், நீ என்ன ? ‘ என்றவாறு

இந்துத்துவ சக்திகள் சூறையாடியிருக்கின்றன. எத்தனைக் கொடுமைகளை

நாங்கள் பார்த்துக் கொண்டு இன்னும் பொறுமையாக இருப்பது ?

72ல் பிளப்பு என்ற சதி; 76ல் மிசாக் கொடுமை; 84, 87, 91ல்

தலைவர்கள் மறைந்தபோதெல்லாம் தி.மு.கவினர் அடிவாங்கி

பொறுமையே காத்தனர். 91ல் ஆட்சி கலைப்புச் சதி. பின்னர் பெரும் வீண்பழி;

96-2000ல் பல இடர்கள். 2001ல் தமிழகத்தின் தலைமை அடையாளமான உங்களின் கரங்கள் காவற்துறையால் கன்றிப் போனது; கண்ணகி சிலை ஒளிப்பு; தொடர் நெருக்கடிகள்.

அத்தனையையும், சனநாயகம், நாகரிகம் என்ற பெயரில் மிக மிக

மென்மையாக சமாளித்து வருகிறீர்கள். தமிழகத்தின் சிந்தனைச்

சழக்கான ‘சோ ‘ அண்மையில் குமுதத்தில் தந்த பேட்டியினை

நினைவு படுத்திப் பாருங்கள். ‘ம.தி.மு.க தலைவர் வை.கோ

கைதான போது மக்களிடம் எந்த எதிர்வினையும் இல்லை;

அதனால் மக்கள் கைதை ஆதரிக்கிறார்கள் என்று கருத்து சொல்லியிருக்கிறார் ‘.

அநாகரிகம், அநீதி, கொடுமை நடக்கும்போது, அதை மென்மை

மற்றும் நாகரிகமாகக் கையாண்டால் மக்கள் மத்தியில் நல்ல பெயர்

கிடைக்காது என்பதைத்தான் ‘சோ ‘ சுட்டிக் காட்டியிருக்கிறார் அல்லது தமிழர்களின்

இயலாமையைக் கேலி செய்திருக்கிறார் என்று கருத இடம் இருக்கிறதல்லவா ?

உங்களின் முயற்சிகள் என்றும் தொடர வேண்டும்;

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

வையம் நடுநடுங்க வெந்தணல் ஒன்று விரைந்து வளர்தல் வேண்டும்.

உங்களின் உழைப்பிற்குத் தமிழகத்தில் கணக்கிலா தேவைகள்

உள்ளன. மீண்டும் இந்த மண்ணில் மறுமலர்ச்சி ஏற்பட

போர்முனையில் நிற்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி. வணக்கம்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

elangov@md2.vsnl.net.in

Series Navigation