எல்லோரும் இந்நாட்டு மன்னர்…

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

‘ரிஷி’


மாதம் மும்மாரி பொழிகிறது என்கிறார்கள்
தம் மாளிகையில் சொகுசாய்
செயற்கை மழை பொழியச் செய்தவண்ணம்…

விளைச்சல் அமோகம் என்கிறார்கள்
வேளாண்நிலங்களில் களைபெருக
செயற்கையுரங்களைத் தாராளமாய்த் தூவியபடி….

மேவிய ஆறு பல ஓடும் மண் என்கிறார்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நதிநீர்களைத்
தாரைவார்த்தபடி.

மக்கள் நலவாழ்வு உறுதியாகிவிட்டது என்கிறார்கள்
கட்டணக் கழிப்பறைகளில்
மலசலம் வழிய.

குடிசைகளே இல்லாமல் செய்துவிட்டோம் என்கிறார்கள்
சேரிப்பகுதிகளை நொடிப்பொழுதில் இடித்துத் தள்ளி
காரியம் முடித்தபடி.

மாற்றிட வசதிகள் தரப்படுகின்றன தொலைதூர வனாந்திரங்களில்.
மீண்டும் முதல் எட்டிலிருந்து பட்டுத்தீர வேண்டும்
அனாதரவான மக்கள்.

இருக்கும் வரை மதிக்கப்படாத மக்கள் உயிருக்கு
விபத்தில் இறந்துபோனால் விலைநிர்ணயம் செய்கிறார்கள்.
பேருந்து எனில் சில ஆயிரங்கள்; விமானத்திற்கு சில லட்சங்கள்.

திக்கற்ற மக்களுக்குத் துணை நாமே என்கிறார்கள்
மின்கம்பிவேலிக்குள் பிணைத்துவைத்து
உக்கிப் போகச் செய்தவண்ணம்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே என்றவாறு
முற்றுகையிட்டு அழித்தொழித்துக் கொண்டிருக்கிறார்கள்
மாமன்னர்களும் மகா-மெகாச் சக்கரவர்த்திகளும். 0

Series Navigation

ரிஷி

ரிஷி