உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கண்ணன் பாஸ்கரன்உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே — கம்பர்
விளக்கம்:
எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும்,
அவற்றைக் காப்பதுவும், பின் அழிப்பதுவும் ஆகிய
அளவற்ற விளையாட்டுகள் புரியும் அவரே (கடவுள் ) எங்கள் தலைவர்.
அத்தன்மை வாய்த்த இறைவனிடமே நாங்கள் சரணாகதி அடைகிறோம்.

ஏறக்குறைய இதே சரணாகதி நிலையை அமெரிக்க காங்கிரஸ், மற்றும் வெள்ளை மாளிகை ஆகஸ்ட் மாத இறுதியில் அடைந்திருந்தன. இதில் அலகிலா விளையாட்டுடைய சர்வ வல்லமை படைத்த கார்ப்பரேஷன்கள் சத்தமில்லாமல் சிரிக்கின்றன. ஆகஸ்டு மாதம் கோடை இடைவேளை எடுத்துக் கொண்டு பிரதிநிதிகள்-அவை உறுப்பினர்கள் தத்தம் தொகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள உள்ளூர் பிரச்னைகள் மற்றும் தற்சமயம் விவாதத்தில் இருக்கும் மசோதாக்கள் பற்றி மக்களிடம் விளக்குவது, மற்றும் அடுத்த தேர்தலுக்கு வியூகம், நிதி சேர்த்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார்கள். பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுவதால், உள்ளூர் மக்களிடம் எப்போதும் ‘நமக்கேத்த ஆள்’ என்ற பெயரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை எனில் அவருக்கு டேமேஜ் அதிகம். இந்த ஆகஸ்ட் இடைவேளையில் மக்களிடம் விவாதிக்கப் பட்ட முக்கியமான, அல்லது ஒரே விஷயம், சுகாதாரத் துறை சீர்திருத்தம்தான். சுருக்கமாக, ‘விருப்பப்படும், மற்றும் பாவப்பட்ட மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரசாங்கம் வழங்கும் மருத்துவ இன்சூரன்ஸ்’. இது, கொள்ளை லாபப் அடித்து எல்லோரையும் சுரண்டும் தனியார் இன்சூரன்சுக்குப் போட்டியாக வரும். இதில் சேர வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை. Fedex, ups போன்ற டீலக்ஸ் சர்வீஸ்கள் உண்டு. நிதி குறைந்தவர் அரசாங்க போஸ்ட் ஆபிஸ் போகலாம். யாரும் கட்டாயப் படுத்தப் போவதில்லை. மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகள் எல்லாம் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கசக்கிப் பிழிவதனால், இதய நோய், கேன்சர் போன்ற பெரிய வியாதிகள் வந்த எத்தனையோ பேர் மஞ்சள் கடுதாசி கொடுத்து திவால் ஆகி இருக்கிறார்கள். ஒபாமாவின் தாயாரும் இன்சூரன்ஸ் வசதி இல்லாமல் புற்று நோய்க்கு சிகிச்சை செய்ய இயலாமல் இறந்தவர். பாவப்பட்டவரகளுக்கு மருத்துவ வசதி தர ஒபாமா விரும்புவதற்கு இதுவும் காரணம்.

தம்முடைய கொள்ளை லாபத்தில் சிறு பகுதி அரசு-இன்சூரன்ஸ் வந்தால் பாதிக்கப்படும் என்பதால், இந்த பகாசுரக் கம்பெனிகள், முன் எப்போதும் இல்லாதவகையில், திரைக்குப் பின்னால் காரியங்கள் செய்து கொண்டிருக்கின்றன. lobbying செலவு மட்டுமே ஒரு நாளைக்கு 1.4 மில்லியன் டாலர் ஆவதாகக் கணக்கு. இந்தக் கார்ப்பரேஷன்களிடம் காசு வாங்காத அரசியல்வாதிகள் யாருமில்லை. கட்சிப் பாகுபாடின்றி இந்தத் திட்டத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மைனாரிட்டி வலதுசாரிகள் எல்லா அரங்குகளிலும் கலவரம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால், தமிழக கட்சித் தொண்டர்கள் எல்லாம் பள்ளி மாணவர்கள் போல் இருக்கிறார்கள். எந்தவொரு விவாதத்துக்கும் தயாரில்லை. பெருங்கூச்சல் போடுவது, மற்றும் பயமுறுத்துவதன் மூலம் மீடியா முழுவதையும் தம் பக்கமே திருப்பி உள்ளனர். அசம்பாவிதம்தானே மீடியாவுக்கும் வேண்டும். இதன் பின்னணியில் பெரும் சர்ச்சுகள் வேறு. துன்பப்படும் பிறருக்கு உதவி செய்யக் கூடாது என்பது பைபிளின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்று தெரியவில்லை. பெருகும் நிர்ப்பந்தங்களால், நல்ல ஒரு திட்டத்தை டெமாக்ரட் செனேட்டர்களே ஒரு வழியாக நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை படைத்த நிதி நிறுவனங்கள் இந்தக் காலாண்டில் திடீரென்று பில்லியன் கணக்கில் லாபம் காட்டியிருக்கிறன. இரண்டு மாதங்கள் முன்னர்தான் தொடர் நஷ்டங்களால் திவால் நிலையில் இருந்தவை இப்போது அரசாங்கப் பணத்தில் என்ன பித்தலாட்டம் செய்தனவோ தெரியவில்லை, லாபம் காட்டுகிறார்கள். உடனே கூச்சம் எதுவுமின்றி அவற்றின் நிர்வாக அதிகாரிகள் மில்லியன் கணக்கில் போனஸ் எடுத்துக் கொண்டார்கள். யார் என்ன விமர்சனம் செய்தாலும் இவர்களுக்கு உறைப்பதே இல்லை. இந்த லாபத்தின் உள்ளடி விவகாரங்களை அடுத்த வருடம் யாராவது ஆராய்ச்சி செய்து புத்தகம் போடும்போது இந்த நிறுவனங்கள் இன்னும் பல மோசடிகள் செய்து மக்களுக்கும் அரசுக்கும் நாமங்கள் பல சார்த்தி இருப்பார்கள்.

சென்ற மாதம் விவாதிக்கப்பட்ட மற்றொரு முக்கிய விஷயம் ராணுவ காண்ட்ராக்டர்கள் முறைகேடுகள் பற்றியது. ராணுவ தளவாடங்கள் தனியார் மூலம் வாங்குவது தெரியும். ராணுவ வீரர்களே ஒப்பந்த காண்ட்ராக்டர்களாக இருப்பதை உலகில் வேறெங்காவது பார்த்திருக்கிறோமா? விருப்ப ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் நடத்தும் நூற்றுக் கணக்கான கம்பெனிகள் ஒப்பந்த வீரர்களை சண்டைக்கு சப்ளை செய்கின்றன. காசு கொடுத்தல் கொலை செய்யும் கூலிப்படைகள், ஆனால் மிலிட்டரி என்ற முகமூடி ( blackwater என்று google செய்யவும் ). முதலில் ராணுவத்தில் சேர்ந்து, அரசாங்க செலவில் பயிற்சி பெற்றுப், பின்னர், வீரர்கள் விரைவில் இந்தக் கம்பெனிகளுக்குத் தாவி விடுகின்றனர். அமெரிக்க ராணுவத்தை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகம். எந்த ராணுவ கமாண்டருக்கோ, சட்டத்துக்கோ இவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். இந்தக் கூலிப் படையினர் போர்முனையில் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் ராணுவத்தின் தலையில் விழும். ஆப்கன் தூதரகத்தில் இவர்கள் (ArmorGroup ) நடத்திய ஆபாசங்களைப் பொறுக்க மாட்டாமல் அங்கே வேலை செய்யும் ஒருவரே தகவல் மற்றும் படங்களை இது பற்றி ஆராயும் ஒரு தனியார் குழுவுக்குத் தந்து விட்டார். விஷயம் சிக்கலாவதை அறிந்த வெளியுறவுத் துறை சிலரை மற்றும் வேலை நீக்கம் செய்தது. ஏற்கனவே பலமுறை இது போல் அவர்கள் மேல் புகார் வந்தாலும், விஷயம் வெளியே தெரியாததால் அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கு பதில் ‘லேசான’ எச்சரிக்கையுடன் நீட்டிக்கப் பட்டது. பணம் படுத்தும் பாடு.

அமெரிக்கத் தேர்தல் முறையையே மாற்றிவிட்டு, மக்களை மேலும் செல்லாக் காசாக்கி விடும் ஒரு முடிவை சுப்ரீம் கோர்ட் இந்த வாரம் அவரசரமாக எடுக்கும் போலிருக்கிறது. தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு, தனி நபர் கொடுக்கும் நிதிக்கு சட்டப்படி ஓர் அளவு இருக்கிறது. கார்ப்பரேஷன்கள் நேரடியாகப் பணம் கொடுக்க முடியாது. இதை எதிர்த்துப் போடப்பட்ட ஒரு வழக்கு, வெகு நாட்களாகத் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று, இருக்கிற வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் கார்ப்பரேஷன்களுக்கு விதிக்கப் பட்டிருந்த கட்டுபாட்டை நீக்கி விடும் என்று தெரிகிறது. விளைவு, விபரீதத்துக்கும் அப்பால்! அளவற்ற கார்ப்பரேட் பணம் தேர்தலில் பாய்ந்தால், நேரடியாகவே செனேட்டர்கள், ஜட்ஜ்கள், ஜனாதிபதி, உள்ளிட்ட பதவிகளுக்குத் தெரிவு செய்து விடுவார்கள். மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் பெரிய இடைவெளி, இன்னும் பெரியதாக, நிரந்தரமானதாகவே அமைந்து விடும்.

Series Navigation

கண்ணன் பாஸ்கரன்

கண்ணன் பாஸ்கரன்