இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

மஞ்சுளா நவநீதன்


***

கொலம்பியா வெடிப்பு – கல்பனா சாவ்லா

ஆகாயவெளி ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அங்கிருப்பவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் உணவை அளித்துவிட்டு திரும்பி வரும்போது, டெக்சாஸ் மானிலம் மீது கொலம்பியா விண்கப்பல் சிதறியிருக்கிறது. உயிரிழந்த எழுவரில் ஒருவர் இஸ்ரேலியர். ஒருவர் இந்தியர். கல்பனா சாவ்லா டாக்டர் பட்டம் பெற்றவர். கர்னாலில் படித்து நாசாவில் பணிபுரியும் அளவு உயர்ந்தவர். தானியங்கி இயந்திரங்களைச் சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர். ஏற்கனவே விண்வெளிக்கப்பல்களில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர். கர்னால் ஊரே இவருக்காக சோகம் காத்தது. அனுதாபங்கள். இவருடைய முன்மாதிரி பல இந்தியர்களுக்குத் தூண்டுகோல் ஆகியுள்ளது என்பது செய்தி.

***

பரிதி இளம்வழுதி சிறை

தமிழ் நாட்டுச் சட்டசபையின் வீரதீர சாகச நாடகங்களின் தொடர்ச்சியில் இன்னொரு அங்கம். நமக்குத் தகுதியான ஆள்கள் தான் நமக்கு பிரதிநிதியாக வருவார்கள். எந்தவித வெட்கமும் இல்லாமல் நடந்த குதிரை வியாபாரத்தில் பிளவுண்ட த மா க, பா ம க வை முன்னிறுத்தி ஜெயலலிதா கட்சியினர் காட்டும் அலங்கோலம் இது.

நம்முடைய ஜனநாயகத்தை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிற ஜெயலலிதா போன்றவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

****

சாத்தான் குளம் இடைத் தேர்தல் : காங்கிரசுக்கு என் ஓட்டு

கருணாநிதி சாத்தான் குளம் இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால் மத்தியில் பா ஜ க கோபித்துக் கொள்ளும். உள்ளூர் பா ஜ கவிற்கு இருக்கிற நூற்றுச் சொச்சம் வாக்குகள் எப்படியும் அ தி மு க-விற்குத்தான் விழும் என்ற விவேகத்தில் எழுந்த முடிவு போலும் இது.

இடைத்தேர்தல் என்ற பெயரில் எல்லா அமைச்சர்களும் கூடாரமடிப்பதும், அனல் பறக்க வெட்டிப் பேச்சுப் பேசுவதும், பலப் பரீட்சை என்ற பெயரில் வீரம் காட்டுவதும், ஆளும் கட்சி தோற்றால் ஆளும் கட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதும், ஆளும் கட்சி வென்றால் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் கூச்சலிடுவதும் எந்த விதப் பயனுமற்ற ஒரு காரியம்.

முன்னால் எந்தக் கட்சி வென்றதோ அதன் பிரதி நிதியை சத்தம் போடாமல் சட்ட சபை உறுப்பினர் ஆக்கிவிட்டால் செலவும் மிச்சம். இடையில் உறுப்பினர் கட்சி மாறியிருந்தாலோ அல்லது, சுயேட்சை வெற்றி பெற்ற இடம் காலியானாலோ, வெற்றி பெற்றவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சட்டசபை உறுப்பினர் ஆகும் நடைமுறையினைச் சட்டபூர்வமாய் ஆக்கலாம்.

***

பங்களாதேஷ் குடிமக்களை இந்தியா திருப்பி அனுப்ப முயற்சி

பங்களாதேஷ் முஸ்லீம்களை இந்தியா திருப்பி அனுப்ப முயற்சி செய்கிறது. இதற்கு பங்களாதேஷ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. அவர்கள் எங்கள் குடிமகன்களே அல்ல, என்பது முதல் இது முஸ்லீம் எதிர்ப்பு முயற்சி என்பது வரையில் பலவிதமாய் வாதங்கள் எழுந்துள்ளன. பங்களாதேஷ் குடிமக்கள் இந்தியாவிற்குள் வந்து வாழ்வதை பங்களாதேஷ் அரசாங்கம் மறுத்து வருகிறது.

முன்பு பாகிஸ்தானியர்கள் எல்லைதாண்டி வந்தபோது கொல்லப்பட்ட சமயம் பாகிஸ்தான் அரசு இவர்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது.

பங்களாதேஷ் குடிமக்கள் இந்தியாவில் இருந்தால் அவர்களை திரும்ப அனுமதிப்பது தான் முறை. எந்தக் காரணத்திற்காக இந்த மக்கள் பங்களாதேஷிலிருந்து இங்கு வந்தார்களோ, இன்று பங்களாதேஷில் அந்தப் பிரசினை இல்லை. இவர்கள் ஊடுருவலால் ஏற்கனவே அஸ்ஸாமில் பெரும் பிரசினை முளைத்ததுண்டு.

இப்போது அரசாங்கமும் , பங்களா தேஷ் ராணுவமும் சேர்ந்தே இந்தச் செயலைச் செய்கிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் செய்து கொண்டிருப்பதை பங்களாதேஷ் எல்லைப் புறத்திலும் செய்வது இவர்கள் நோக்கமாக இருக்கலாம். பங்களா தேஷ், பாகிஸ்தான் சமீபத்தில் உறவு பேணத் தொடங்கியிருப்பதன் தொடர்ச்சியாய் இது நடக்கிறது போலும்.

இது பற்றிய எச்சரிக்கை தேவை.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி பிப்ரவரி 4, 2001

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

மஞ்சுளா நவநீதன்


****

தொடரும் துயரம்

குஜராத்தின் துயரம் தொடர்கதையாகிறது. மேலும் சில நில நடுக்கங்கள் அங்கே வந்துள்ளன. உலகெங்கிலுமிருந்து உதவிகள் வந்து குவிகின்றன. இந்த உதவிகள் உரியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பது தான் நமது கவலை.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று, இந்தத் துயரங்களுக்கிடையே திருட்டுச் சம்பவங்கள் நடப்பது கேட்டு மனம் பதறுகின்றது. அதே சமயம் ஊர் பெயர் தெரியாத பலரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் செய்தியும் கேள்விப் படுகிறோம்.

****

அ தி மு க : தேர்தலில் நிற்க விருப்பமா , கொட்டு பணத்தை

அதிமுக சார்பாகத் தேர்தலில் போட்டியிட மனுக் கொடுப்போரிடம் வசூல் வேட்டை மிக ஜரூராக நடக்கிறதாம். கணக்கிற்கு வந்த பணமே இரண்டு கோடியை இரண்டு நாளில் எட்டிப் பிடித்து விட்டதாம். இது சட்ட பூர்வமாய்ச் சரியானதா என்று தெரியவில்லை. இப்படிப் பணத்தை முதலிலிருந்தே வாரி விடுபவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பணம் பண்ணாமல் இருப்பார்களாம். இது தான் எப்படி என்று எனக்குப் புரியவில்லை.

++++

புஷ் போட்ட சட்டமும் இந்தியாவிற்கு பாதிப்பும்

புஷ் ஆட்சிக்கு வந்த வுடன் செய்த இரண்டு காரியங்கள் மிகவும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. ஒன்றூ : கருக்கலைப்புச் செய்யும் அமைப்புகளுக்கு அமரிக்க நிதி உதவி கிடையாது என்று அறிவித்தது. இன்னொன்று அரசாங்கத்தின் பிரதம நீதித்துறை செயலாளராக( அமைச்சராக) ஜான் ஆஷ்க்ராஃப்ட் என்பவரை நியமித்தது.

புஷ் வெற்றி பெற கிரிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன. தன் கிரிஸ்தவ நம்பிக்கையையும், அதன் துணையுடன் ஆட்சி செய்ய எண்ணும் தன் விருப்பத்தையும் புஷ் கூறித் தான் வந்திருக்கிறார். கிரிஸ்தவ அமைப்புகளின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது கருத்தடை முயற்சிகள் சட்டபூர்வமாய் இருக்கக் கூடாது என்பது. உயிரைக் கொல்லும் உரிமையை மனிதனுக்கு அளிப்பதற்கு ஒப்பானது, கருக்கலைப்பு என்பது அவர்களின் எண்ணம். எனினும், இதே குழுவினரில் மரண தண்டனையைச் சட்ட்ட விரோதமாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பவர்கள் சிலரே. இதில்லாமல் டார்வின் கோட்பாடுகளைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கக் கூடாது, பள்ளிகளில் மதப்பிரார்த்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டும் , அரசுப் பள்ளிகளில் படிக்க விரும்பாத மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் – பெரும்பாலான தனியார் பள்ளிகள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப் படுவது — ஆகும் செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும், சீனாவில் கிறிஸ்தவ மதம் பரப்புவதற்குச் சுதந்திரம் அளிக்கும் வரையில் அந்த நாட்டுடன் கொண்ட வர்த்தக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற சில கோரிக்கைகளும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். இதில் எந்த விதமாய் அமெரிக்க அரசு செயல் படும் என்பதினைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜான் ஆஷ்க்ராஃப்ட் ‘பெந்தெகோஸ்டே ‘ என்று பெயரில் அழைக்கப் படும் கிரிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பொது வாழ்க்கையில் மதத்தின் இடத்தை மிகத் தீவிரமாய் இடம் பெறச் செய்வார் என்று அவர் நியமனத்துக்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பெண்கள் போராடிப் பெற்ற உரிமையான சட்டபூர்வமான கருக் கலைப்பு, மற்றும் குடும்பக் கட்டுப்பாடு உரிமைகளை அவர் பறித்துக் கொள்ளக் கூடும் என்று பல பெண்கள் அமைப்புகள் அச்சப் படுகின்றன.

****

தனித்தமிழ்நாடு இயக்கங்களை தடை செய்யச்சொல்லி கருணாநிதி கோரிக்கை

காலஞ்ச்சென்ற காலத்தில் சங்கரா சங்கரா என்பது போல கருணாநிதி கேட்டிருக்கும் விஷயம், காலந்தாழ்ந்து வந்தாலும் வரவேற்கத்தக்கதே.

கருணாநிதியின் இந்தக் கோரிக்கை, திராவிட இயக்கம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்பதைச் சுட்டுவதாய் இருக்கிறது. ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு ‘ என்ற கோஷத்தைத் தாண்டி, பிரிவினைவாத இயக்கங்கள் தடை செய்யப் பட வேண்டும் என்று கோருகிற வரையில் வந்திருக்கும் இந்தப் பாதையில், பல மைல் கற்கள் இருக்கின்றன. ஆட்சிக்கு வந்தபின்பு, பிரிவினை கோருவது தேசத் துரோகக் குற்றமென்று சட்டம் இயற்றப் பட்ட பின்னர், அண்ணா பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டார். அப்போதும் கூட , பிரிவினை கோருவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன , கோரிக்கை மட்டும்தான் கைவிடப் பட்டிருக்கிறது என்றார். இப்போது அந்தக் காரணங்கள் பலவும் ஒவ்வொன்றாய்ச் சீர் செய்யப்பட்டு விட்டன.

இந்தியாவின் பொருளாதாரமையங்கள் மகாராஷ்டிரம், குஜராத், சென்னை, ஹைதராபாத், பெங்களூர் என்று பலவாறாக வேறு வேறு திசைகளில் உள்ளன. இப்போதும் ஒரு சில காரணங்கள் உயிருடன் இருக்கலாம். ஆனால் பிரிவினை இல்லாமலேயே இவற்றைச் சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வளரும் வகையில் உள்ளது. அவர்கள் அன்று கேட்டதும் தவறல்ல. இவர்கள் இன்று கேட்பதும் தவறல்ல. ஜனநாயக நடைமுறைகளின் விரிவாக்கம், ஒவ்வொரு கிராமமும், நகரமும், மாநிலமுமாக விரிவடையும்போது, தனி ஆட்சி கோரிக்கை வலுவிழந்து விடுகிறது. அப்போதும் சரி, இப்போதும் சரி பெருவாரியான மக்கள் இந்தக் கோரிக்கையின் பின்னால் அணி திரளவே இல்லை என்பது பிரிவினைவாத கோட்பாட்டாளர்களுக்கு கசப்பான உண்மை. சில வேலையில்லாத அரசியல் வாதிகளும், பிரிவினை வாதத்தின் ‘வீர தீர ரொமாண்டிஸிஸத் ‘தில் ஏதோ அர்த்தம் இருப்பதாய்க் கற்பனை செய்து கொண்டுள்ள தமிழ் வாத்தியார்களும்தான் இருக்கிறார்கள். வீரப்பனைத் தமிழ்ப் போராளி என்று இனம் காண்கிற கோணல் போக்குகள் எந்த மரியாதைக்கும் பொருத்தமானவை அல்ல. இன்று மக்கள் தி மு க, பா ம க போன்ற கட்சிகள் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டு வைத்திருப்பதும், திராவிடர் கழகம் அ இ அ தி மு க – வுடன் இணைந்து போராடுவதும் இந்திய மைய நீரோட்டத்தின் வலிமையையும் , உண்மையையும் பறை சாற்றுவதாகவே அமைகிறது.

***

சேடப்பட்டி முத்தையாவின் ஆவேசம்.

சேடப்பட்டி முத்தையா பற்றி எழுதினாலே ஒரு தேவையற்ற விஷயம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், அவர் மன்னார்குடிக் கும்பல் என்று சசிகலா குடும்பத்தினரை இப்போது சாடுவதும், ஜெயலலிதா கூப்பிட்டவுடன் ‘அம்மா ‘ என்று போய்க் காலில் விழுவதும் பார்த்து அலுத்துவிட்டன என்று யாருக்காவது புரிந்தால் சரி.

***

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போடி அருகில் இருக்கும் பரமசிவன் கோவிலைச் சார்ந்த முனீஸ்வரன் கோவிலில் துப்புரவுப் பணி செய்யும் போது மிகப்பழமையான ஒரு முதுமக்கள் தாழியையும் அதற்குள் எலும்புகளையும் கண்டெடுத்துள்ளார்கள்.

அகழ்வாராய்வும் தொல்பொருள்துறையும் தமிழக மக்கள் அறிவுப் பூர்வமாக அணுகாத துறைகள். நமது ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடியின் ‘ ஆதாரங்களை இது போன்ற விஷயங்களில் தேடுகின்றோமே தவிர, அவைகள் அறிவியற் பூர்வமாக அணுகவேண்டிய விஷயங்கள், இவைகளில் நமது வரலாற்றை உண்மை இருக்கிறது அது சில நேரங்களில் கசப்பானதாகக் கூட இருக்கலாம் என்ற உணர்வுகளோ இருப்பதில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அகழ்வாராய்வுத் துறையும், மொழியியலும், பண்டைய இலக்கிய ஆராய்வும், பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், பிரச்சாரத்துக்குமே பயன்படும் வகையில் செய்யப்பட்டன என்பது என்ற பின்புலத்தை கொண்டே இன்றைய மதிப்பீடுகளை எடை போடவேண்டும்.

ஆனால், நம்மிடம் இருக்கும் பல விஷயங்களும், பல கலாச்சாரக் கூறுகளும், அரசியல் சிந்தனைகளும், பிரிட்டிஷ் கண்டுபிடிப்புகள் என்ற உணர்வே இல்லாமல் அவற்றை அணுகுவது ஆபத்தானது.

**

திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் எம்ஜியார் கோவில் – சுதாகரன் அடிக்கல் நாட்டுவிழா

Mythology என்னும் இந்தியர்களின் பொழுதுபோக்கில் எம்ஜியார் எப்போதுமே பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். மதுரையிலிருந்து பலபேர் இருமுடி கட்டிக்கொண்டுவந்து (மதுரை அனுப்பானடியில் எம்ஜிஆருக்கு கோவில் இருக்கிறது) சென்னையில் இருக்கும் அவர் சமாதிக்கு வந்து கும்பிட்டுவிட்டுப் போகிற எம்ஜியார் பக்தர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

மேற்கண்ட எம்ஜியார் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் எம்ஜியார் பக்தர்கள் ‘பார். எம்ஜியாரை வைத்து அரசியல் செய்யும் ஜெயலலிதா எம்ஜியாருக்கு கோவில் கட்டினாரா ? நமது குட்டி எம்ஜியார் சுதாகரன்தான் எம்ஜியாருக்கு கோவில் கட்டுகிறார் ‘ என்று பேசிக்கொண்டதாக தினகரன் இதழ் தெரிவிக்கிறது.

வேண்டும்தான் நமக்கு.

***

ஜெயங்கொண்டம் அருகில் முந்திரிக்காட்டில் பலூனுடன் எலக்ட்ரானிக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஜெயங்கொண்டம் முந்திரிக்காடு பலவிஷயங்களுக்குப் பெயர் போனது. இப்போது அங்கு ராட்சத பலூனுடன் எலக்ட்ரானிக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் கூட கிராமங்களில் புரளியும் பீதியும் கிளம்பிக்கொண்டிருக்கிறது.

தட்ப வெப்பம் அறிவதற்கும், வானிலை நிலவரம் அறிவதற்கும், காற்றின் மேல்மண்டலவேகம் அறிவதற்கும், இன்னும் உளவு வேலைக்கும் பல பலூன்கள் அதனுடன் சில கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டு வருவது பழைய பழக்கம். இது போன்ற அறிவியல் வேலைகள் பற்றி நமது வெகுஜனப் பத்திரிக்கைகள் எழுதாமல் இருப்பதால் சாதாரண அறிவியல் வேலைகள் கூட புரளிக்கும், பீதிக்கும் காரணமாகி விடுகின்றன.

வெகுஜனப்பத்திரிக்கைகள், மக்கள் மொழியில் அறிவியலைக் கொண்டு செல்லவேண்டும். மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அறிவியல் அறிவு இல்லையேல் நமது எதிர்காலம் நரகம். அறிவியல் விஷயங்கள் தொடர்ந்து மக்களிடம் செல்ல, மக்கள் அறிவியல் விஷயங்களில் பங்கு பெற, சாதாரண விஷயங்களில் எவ்வாறு அறிவியல் அறிவு துணை செய்கிறது என்ற விஷயங்களை பரப்ப வேண்டிய முக்கியமான கடமை தமிழக வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு இருக்கிறது.

யாரும் அறிவியல் பற்றி படிக்க விரும்புவதில்லை என்பது ஒரு காரணமாக இருக்க முடியாது. இப்படிச் சொல்வது, பொதுமக்கள் சுவாரஸ்யமாக படிக்கும் அளவுக்கு அழகாக எழுதாத பத்திரிக்கைகளையே குற்றம் சாட்டுகிறது.

**

இறுதியில் ஒரு நல்ல காரியம் பற்றி.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் குஜராத் பூகம்ப நிவாரணநிதிக்கு காசோலை அனுப்புபவர்களுக்கு காசோலை கமிஷன் தொகை இல்லை என்று அந்த வங்கியினர் தெரிவித்துள்ளார்கள்.

பாராட்டவேண்டிய விஷயம்.

**

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்