இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

சின்னக்கருப்பன்


பாரதீய ஜனதா கட்சி தற்போது தமிழகமெங்கும் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று போராடி வருகிறது. பொதுவாக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடத்தும் கூட்டங்களில் அந்த கூட்டத்தை நடத்தும் பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் கூட இருக்கமாட்டார்கள். இதனால் இல கணேசன் போன்றோர்கள் எங்கே கூட்டம் இருக்கிறதோ அங்கே சென்று சொற்பொழிவாற்றுவார்கள். சமீபத்தில் இல கணேசன் ஏதோ ஒரு கோவில் பஜனை கூட்டத்தில் சொற்பொழிவாற்றுவதை யூடியூபில் பார்த்தேன். ஆனால் தற்போதைய பாஜக நடத்தும் போராட்டத்தில் சென்னையில் கூட ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். இதனை பார்த்து பாஜகவினரே அதிர்ந்திருப்பார்கள். பொதுவாக அதிமுக திமுக கூட்டங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அந்த போராட்டம் படு தோல்வி என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் பாஜக நடத்தும் போராட்டத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தால் பாஜகவை பொறுத்தமட்டில் அது மாபெரும் வெற்றியாகத்தான் இருக்கும்.

நாகர் கோவிலில் நடத்திய பாஜக பொதுக்கூட்டத்தில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பொன் ராதாகிருஷ்ணனின் சொந்த தொகுதி அது. ஆகவே பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியில் ஓரளவு திரண்டாலே அவர்களால் அங்கே லட்சத்துக்கும் மேலானவர்களை காட்டிவிட முடியும். பொதுவாக திமுக அதிமுக ஆகியோர் நடத்தும் மாபெரும் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆட்கள் வருவார்கள். நாகர்கோவிலில் அப்படி நடந்தாற்போல தெரியவில்லை.

பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது இஸ்லாமிய மாணவர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பதை வரவேற்கிறோம். ஆனால் கிறிஸ்துவர்கள் எந்த விதத்திலும் கல்வியில் பின் தங்கி இருக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே ஏழையாக இருக்கும் ஒரு இந்து மாண்வருக்கு உதவித்தொகை அளிக்கப்படுவதில்லை. மதசார்பற்ற அரசு இவ்வாறு மத ரீதியாக ஓட்டு வங்கியை குறி வைத்து கல்வி உதவித்தொகை அளிக்கிறது. சிறுபான்மையினருக்கு உதவித்தொகை அளிப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் இந்து மாணவர்களுக்கும் அதே உதவித்தொகையை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த கோரிக்கை சிறுபான்மையினத்தைச் சார்ந்த பெற்றோர்கள் கூட சக இந்தியர்களது இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

##

காஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு தெருக்களில் கலவரம் நடக்கிறது. கலவரம் செய்பவர்கள் இறந்தால்தான் நமக்கு நல்ல விளம்பரம் என்று அதனை நடத்தும் பிரிவினைவாதிகள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இந்திய அரசும், உமர் அப்துல்லா முதன்மந்திரியாக இருக்கும் காஷ்மீர் அரசும் இந்த போராட்டத்தை சந்திக்க திறனில்லாமல் வளர விட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் பிரச்னை பெரியதாக ஆகிவிட்டது என்று காரணம் காட்டி, காஷ்மீர் சம்பந்தமாக பாகிஸ்தானுடன் பேசுவதற்கு காரணத்தை இந்திய அரசாங்கமே உருவாக்கிகொண்டிருக்கிறதோ என்று அஞ்சும் அளவுக்கு திறனற்றதாக இந்திய அரசின், காஷ்மீர் அரசின் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் இருக்கின்றன.

50 பேர்கள் காஷ்மீர போலீஸால் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். ஆனால் செய்யப்படுவதோ, இந்திய ராணுவம் காஷ்மீரிகளை சுடுகிறது என்று உலகெங்கும் பிரச்சாரம். காஷ்மீர போலீஸில் காஷ்மீரிகளை தவிர வேறு யாரும் இல்லை. ஆனால் நடக்கும் பிரச்சாரமோ இந்திய ராணுவம் கொல்கிறது என்று. இதனை எதிர்கொள்ளக்கூட இந்திய பத்திரிக்கைகளிலோ தொலைக்காட்சிகளிலோ அக்கறை இல்லை.

##

கேரளாவில் ஒரு கிறிஸ்துவ பேராசிரியரது கையை வெட்டியதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள அரசு பொங்கி எழுந்து பலரை கைது செய்து, FI என்ற இஸ்லாமிய தீவிரவாத கட்சியை தடை செய்ய வேண்டும் என்பது போல பேசுகிறது. முதல்வர் அச்சுதானந்தன் கேரளாவை இஸ்லாமிய நாடாக ஆக்க பிஎஃப் ஐ திட்டமிட்டு மதமாற்றம் செய்கிறது என்று பேசி காங்கிரஸின் கடும் எதிர்ப்பையும், முஸ்லீம் தீவிரவாத கட்சிகளின் கடுங்கோபத்தையும் எதிர்கொண்டுள்ளார்.

இதில் வினோதம் என்னவென்றால், கிறிஸ்துவ பேராசிரியரின் கையை வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளவர் முன்னரே ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரது கையை வெட்டி பிறகு கொலை செய்திருக்கிறார். அதற்காக சும்மா கைது செய்து பிறகு விட்டுவிட்டது இதே கம்யூனிஸ்டு அரசு. ஆனால் இப்போது வெட்டப்பட்டிருப்பது இன்னொரு சிறுபான்மையினரது கை. அதெப்படி சும்மா இருக்கமுடியும்? ஏற்கெனவே, முவட்டுப்புழாவில் கிறிஸ்துவர்களை முஸ்லீம்கள் கடைகளில் எதுவும் வாங்கக்கூடாது என்று சர்ச் ஆணையிட்டிருக்கிறதாக தெரிகிறது.
http://news.rediff.com/report/2010/jul/12/is-the-church-in-kerala-boycotting-muslim-shops.htm
பிரச்னை முற்றுவதற்கு முன்னால், அரசு உடனே இறங்கி ஆட்களை கைது செய்து சர்ச்சை குளிர வைக்க வேண்டிய நிலை. ஆனால் இந்துத்வ தொண்டர்களுக்கு ஆதரவாக பலமான அமைப்பு இல்லை என்பதால், சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் போலிருக்கிறது. ஆனால் பெரிய பிரச்னை என்னவென்றால், ஒரு சிறுபான்மை கிறிஸ்துவரது கை வெட்டப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கமான மனித உரிமை காவலர்களான வி ஆர் கிருஷ்ணய்யர், சிவிக் சந்திரன், அ மார்க்ஸ் போன்றோர் குரலை காணவில்லை. அல்லது நான் தான் படிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

##

Series Navigation