ஆழிப்பேரலை

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ப.மதியழகன்,கடலுக்கடியில் பூகம்பம்
கண்களை கசக்கிப் பார்க்கிறோம்
உண்மையில் ஆளுயர அலை
எழும்பி வருகிறது ஆழ்கடலிலிருந்து
கருமை நிற ராட்சச அலை
கவ்விச் செல்கிறது மனிதர்களை
சமுத்திர ராஜனுக்கு
ராஜ்ய வெறிபிடித்தது
தனது எல்லைகளைக் கடந்து
புவியரசனின் ஆளுகைக்குள் நுழைந்தான்
கடலோரம் முழுவதும்
சடலங்களின் குவியல்
காற்றலைகளெங்கும்
கண்ணீர் வாசம்
கடலன்னையின் தயவால் வாழும்
மீனவ கிராமமெங்கும்
தண்ணீரில் மூழ்கின
குழந்தைகளென்றும், பெண்களென்றும்
பாராமல்
கடலரசன் ஆடிய ருத்ரதாண்டவத்தால்
வீதிகளெல்லாம் பிணக்காடுகளாயின
அப்பாவி மனிதர்களின்
அபயக் குரல் கேட்டு
காப்பாற்றுவோர் எவருமில்லை
ஆயிரமாயிரம் பேர் உயிரோடு
ஜலசமாதி ஆயினர்
அது முதற்கொண்டு
சுனாமி என்ற
ஆழிப்பேரலையைக் கண்டு
ஆசிய கண்டமே
அச்சம் கொண்டது
அந்த
இயற்கை பேரிடரின் போது
இறந்தவர்களின் ஆன்மா
சாந்தி அடைய
நாமனைவரும் பிரார்த்தனையை
ஏறெடுத்திடுவோம்.

Series Navigation