ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

புதியமாதவி


எனக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை.

வரவில்லை என்று சொன்னால் சேதுவுக்கு வருத்தமாக இருக்கும்

கோவில், கொடை, ஆடு, பன்னி பலியிடல்,கிரகாட்டம், இரவு முழுக்கவும் காட்டுக்கத்தல் கத்தும்

மைக் செட் ரிகார்ட் டான்ஸ் .. சே இந்த மக்கள் முன்னேறப் போவதே இல்லை..

சத்தமில்லாமலிருக்க சன்னல் கதவுகளை அடைத்தேன்.

என் நண்பன் எழுதியப் புத்தகம் கையிலிருந்தது.

‘ஆண்டாளின் காதல் ‘ தலைப்பைப் பார்த்துவிட்டு அப்படியே நேரம் கிடைக்கும்போது

படிக்கலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தப் புத்தகம். அவனும் கடிதம் எழுதி எழுதி அலுத்துப் போய்விட்டான்.

சரி இப்போதாவது வாசித்துவிட்டு இரண்டு வரி அவனுக்கு எழுதிவிடவேண்டும் என்று கட்டிலில் வசதியாக

சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். கழுத்துவலி, முதுகுவலி அவஸ்தை வேறு. தலையணையை

எடுத்து வைத்துக்கொண்டு மூக்கு கண்ணாடியைத் துடைத்தேன்.

மாமானார் வந்து எட்டிப் பார்த்தார்.

என்னமா வரலையா.. இவ்வளவு தூரம் வந்திட்டு ஆத்தங்கரைச் சாமி ஆட்டத்தைப் பாக்காம

மாடியிலே உட்காந்திருக்கே ? வா வா..

‘இல்ல மாமா நான் அப்புறமா வர்றேன்.. கட்டாயம் வந்திடுமா.. நம்ம தெருவிலே நுழையும்போதுதான்

சாமிக்கு அருள் ஏறும். அந்த நேரத்தில் மேளக்காரனுக்கு சாமி ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து அடிக்க முடியாது.

நம்ம தெரு முக்குத் திரும்பிற வரைக்கும் பாக்கனுமே நீ..சரி இது யாரு சன்னல் கதவைச் சாத்தி வச்சிருக்கது. ?

சரிம்மா.. எனக்கு நிறைய ஜோலியிருக்கு வரட்டுமா.. ‘

அடைத்து வைத்திருந்த சன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு அவர் தோளில் துண்டை எடுத்து

போட்டுக்கொண்டு போனார்.

புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினேன்.

‘இது கதை என்றால் கதை தான். நிஜம் என்றால் நிஜம்தான்.

கதையிலிருந்து நிஜத்தைக் காட்டும் முயற்சி அல்ல இது.

கதையாகிப்போன நிஜங்களை அதற்கான பின்புலத்துடன் படம்பிடிக்கும்

சின்ன முயற்சி..கறுப்பும் வெள்ளையுமான நிஜங்கள் கதைகளில் எப்படி எல்லாம்

வண்ண ஆடைகளில் வலம் வருகிறார்கள் என்பதைக் காட்டும் சின்ன முயற்சி..

இதுவும் கதை என்றால் கதைதான். நிஜம் என்றால் நிஜம்தான்… ‘

அடேங்கப்பா.. என் நண்பனின் ‘என்னுரையை ‘ வாசித்தப்பின் நிமிர்ந்து உட்கார்ந்து

கொண்டேன்.

சாமி ஆற்றில் குளித்துவிட்டு வந்தாகிவிட்டது..பகல் நேரப் படையல்.. குளித்துவிட்டு

வந்தவுடன் விட்டுவிட்டு ஒலித்தது நாதஸ்வரத்துடம் மேளதாளத்தின் ஒலி.

கொஞ்ச நேரம் கழித்து அமைதி.. இரண்டு நிமிடம் அமைதி..

என்னவாச்சு.. சன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன்.

ஒரு பேய்க் கத்தல்.. ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு அப்படியே என் அடிவயிற்றில்

உதைப்பது போல..என்னதான் விஞ்ஞானம் பேசினாலும் ஒரு வினாடி..

பயம்.. ரத்தமே உறைந்துவிடுவது போல…

எல்லோரும் தெருவில் டாண் டாண் என்று கதவை இழுத்து அடைத்துவிட்டு கோவிலுக்குப்

போனார்கள்..

‘படையல் போட்டாச்சா.. எவ்வளவு நேரமாகும்.. ? ‘

‘அது ஆகும்.. இப்போதான் வடக்குத் தெரு முடிஞ்சிருக்கு… கடைசியிலே தான் நம்ம தெரு.. ‘

அவர்கள் ஆடு, பன்னி பலியிடலைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது புரிந்தது.

சுற்றி இருக்கும் பதினெட்டு ஊரு சனங்களும் வீட்டுக்கு ஒரு ஆடு அல்லது பன்னி

ஆத்தங்கரையானுக்கு நேந்துவிட்டா ..நினைத்துப் பார்க்கவே முடியலை.

சேது சொன்னதுதான் நினைவில் வந்தது. ஒரு வாரத்துக்கு எங்க ஆத்துதண்ணியெ

சிவப்பா மாறி ஆற்றுமணலில் ரத்தவாடையுடன் வட்டமடிக்கும் கழுகும் பருந்தும்.

தனியா போகவே பயமாயிருக்கும்..

சரி நமக்கென்ன எதுவும் நடக்கட்டும். என்று புத்தகத்தைப் புரட்டினேன்.

‘என்னடி ஆண்டாள் எப்படி உன்னால் முடிந்தது ?

உருகி உருகி நீ கொண்ட காதல்.

ஒரு வினாடிக்கூட வாழ்ந்துகாட்டாமல் வீழ்ந்துபோனதில் என்னடி சாதித்துவிட்டாய் ?

யார் உன் சூடிக்கொடுத்த மாலைக்குச் சொந்தக்காரன் ?

ஊரெல்லாம் கூடி உண்மை கேட்டபோது நீ என்னவோ கருவறையில் உன்னையே

வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனைத்தான் கைநீட்டிக் காட்டினாய்.

ஆனால் அவர்கள் ‘ஆண்டவனா உன் அவன் ? ‘

குத்தலாக உன் காதலைக் குற்றமாக்கினார்கள்.

நீ என் அன்று மெளனம் உடைக்காமல் உன்னை உடைத்துக்கொண்டாய் ?

உன் காலடிகள் கருவறையின் பின்பக்கம்.. திறந்து உன் காதலைப் புதைக்கக் காத்திருந்தது

இருண்ட சுரங்கப்பாதை. கடைசியாக உன் சுடரொளி அந்த இருட்டில்..மீண்டும் இருட்டு இருட்டு.. ‘

என்னமா லைட்டைப் போட்டுக்கிட்டா என்ன ? கேட்டுக்கொண்டே பதிலுக்கு காத்திருக்காமல்

மாமியார் வந்து லைட்டைப் போட்டுவிட்டு பாயை விரித்து படுக்க ஆரம்பித்தார்கள்.

மாமியார் தரையில் படுக்கும்போது தான் மட்டும் கட்டிலில் சாய்ந்து புத்தகம் வாசிப்பது

சரியாக இருக்குமா..

ச்சே இந்த வீட்டிற்கு வந்தால் எது சரி எது தப்பு என்று முடிவு செய்வதிலேயே குழப்பம்

வந்துவிடும். நாம் நாமாக இருக்கமுடியாது. அவர்களாகத்தான் இருந்தாக வேண்டும்.

‘இந்தப் பாரு அமுதா..வர்றது ரண்டு நாளைக்கு. வருஷத்தில் ரண்டு நாளு அவுங்க எதிர்ப்பார்க்கிற

மாதிரி இருந்திட்டா என்ன குறைஞ்சிடும்.. என்னோட இஷ்டத்திற்கு உன்னைத்தான் கல்யாணம்

பண்ணிக்கப்போறேன்னு சொன்னவுடன் அவுங்க விட்டுக் கொடுத்தாங்க இல்லே.. நீ ரண்டு நாளு

கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்க கூடாதா.. ? ‘

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஊருக்கு அழைத்து வரும்போதெல்லாம் சேது சொல்வது

வழக்கம். சேது நினைக்கிற மாதிரி மாமா-மாமியார் ஊருப் பழக்கத்துக்குப் பயந்தா வருவதற்கு

விரும்புவதில்லை. அடிக்கொருதடவை ‘இப்போ எல்லா முந்தி மாதிரியா இருக்கு..பள்ளு பறையனுக

துபாய், மலேசியானு போய் ஒவ்வொருத்தனும் போட்டிருக்க வீட்டைப் பாக்கனுமே.. ‘

ஏதாவது சாக்கில் பள்ளூ-பறையனுக வந்தே தீருவார்கள்.

அப்போதெல்லாம் கஷ்டமா இருக்கும். என் அண்ணன் தம்பியை யாரோ அடிக்கிற மாதிரி

வலிக்கும். இதை எல்லாம் சேதுவுக்குச் சொன்னாலும் புரியாது..

மாமியார் படுத்து கொஞ்ச நேரத்திற்குள் எப்படித்தான் தூங்கிப்போனார்களோ.. ?

ஆண்டாள் இப்போது தத்துவம் பேச ஆரம்பித்திருந்தாள்.

‘நீ யாருடன் கலந்துவிட்டாய் ஆண்டாள் ?

ஒளியுடனா ?

இருட்டுடனா ?

ஓளியும் நிஜமில்லை.

இருட்டும் நிஜமில்லை.

குறைவான இருள் ஒளி

குறைவான ஒளி இருள்

ஒன்று குறைந்தால் ஒன்று மற்றொன்றாகிவிடும்.

அப்படியானால் எது நிஜம் ? ‘

என்ன ஆகிவிட்டது என் நண்பனுக்கு. என்ன இது இப்படி ஏதாவது எழுதினால்தான் எழுத்தா ?

இவனுக்கும் எங்கிருந்து வந்தது இந்த மின்னல்நடை ? இதே ரேஞ்சில் இவன் எழுத ஆரம்பித்தால்

எல்லா அவார்டும் இவனுக்குத்தான்..! இதை மறக்காமல் எழுத வேண்டும்!

சேது வேகமாக அறைக்குள் வந்தான். சட்டை எல்லாம் ஒரே வியர்வை. கசங்கல்.

ரிலையன்ஸ் ஷர்டை போட்டுக்கொண்டு கசங்காமல் இண்டிகா காரில் ஏறிப் போகும் என் சேதுதானா இது ?

அந்த சேது நிஜமா ? இதோ இங்கே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கசங்கிய சட்டையுடன்

கண்முன்னே இந்த நிமிடம் நிற்கும் இந்த சேது நிஜமா ? யார் நிஜம் ?

அய்யோ என்ன இது நானும் தத்துவமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன் ?

சிரிப்பு வந்தது..

-என்னடா ஏன் சிரிச்சே ?-

-சும்மாப்பா.. –

-என்னடா இவன் ஊருக்கு வந்தா இப்படி அலையறானேனுதானே சிரிச்சே.. ?-

-ம்ம்ம் அதுவும்தான்.. ஆனா சிரிச்சது அதுக்கில்லே….-

-ஏய் நீ எப்போ அம்மன் ஆண்டாளின் பக்தையானே.-

-சும்மாயிரு சேது..கோவில்லே எல்லாம் முடிஞ்சாச்சா இல்லே இன்னும் சாமி ஆட்டம் பாக்கியிருக்கா ?

-இனிமே தான் சாமியோட நடுச்சாமக்கொடையே இருக்கு. அதுதான் ரொம்ப ஃபெமஸ்.-

-என்ன செய்வாங்க-

-நடுச்சாமத்தில் சாமி இடுகாட்டுக்குப் போவாரு.. தனியாத்தான்..

போய்ட்டு வரும்போது எதுக்கே யாரு வந்தாலும் எண்ணி எட்டே நாளிலே ஆள் குளோஸ்.

இடுகாட்டிலே போய் எலும்பை எடுத்துக்கிட்டு வந்து ஒரு ஆட்டம் ஆடுவாரு பாரு..அந்த நேரத்தில் அருள்வாக்கு

சொல்வதைக் கேட்பதற்குத்தான் நான் நீ னு கூட்டம் அலைமோதும்.. –

இதெல்லாம் பாத்திருக்கியா.. ?-

சொல்லக்கேள்வி..அவ்வளவுதான்! இப்பவும் அதெல்லாம் பாக்க பயமாதான் இருக்கு!

சரியானப் பயந்தாங்கொள்ளிப்பா நீ!

மாமனார் சட்டையைக் கழட்டிப்போட்டுவிட்டு துண்டால் முதுகைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

‘அப்பா.. என்னவாச்சு.. போலீஸ் அது இதுனு தெற்குத் தெரு காரனுங்க ரொம்ப குதிச்சானுகளே.. ‘

நாங்க தெளிவா சொல்லிட்டோம். போலீஸ்க்கிட்டே போனா கொடை பாதியிலே நின்னுப்போயிடும்.

அது எந்தச் சாதி சனத்துக்கும் நல்லது இல்லைனு.

அப்பன் ஆடினச் சாமியை மவன் ஆடறான்.. இது ஒன்னும் புதுசில்லையே இதுக்குப்போயி ஏம்பா

நம்ம தெரு பசங்க வில்லா வளையரானுங்க.

அவனுக சொல்றதிலேயும் ஒரு நியாயம் இருக்குடா. ரண்டு மாசத்துக்கு முந்திதான் இந்த மாடசாமி மவனை

நம்ம தெரு பொண்ணுக்கிட்டே பேசினானு அடிச்சி உதைச்சானுக. பெரிய போலிஸ் கேசு ஆயிடுச்சி..

இப்போ அந்தப் பயலே சாமி வந்துஆடுனா அவனுக்கு எப்படி நம்ம தெரு பொம்பளைங்க மஞ்ச

தண்ணி ஊத்த முடியும்னு கேட்கிறானுவ.

என்னப்பா இது.. ஆடறது மாடசாமி மவனா ? ஆத்தங்கரைச் சாமி தானே ?

ஆரம்பித்துவிட்டது நடுச்சாமக்கொடை. மீண்டும் அதே சத்தம். வயிற்றில் யாரோ அரிவாளால் குத்துவது

போல வலி.. உயிரின் முதுகுத்தண்டை யாரோ இழுத்துப் பிடித்து உடைப்பதுபோல வலி..

ஆண்டாளைப் புரட்டினேன்.

‘சுமங்கலிகள் உன் குங்குமத்தை எடுத்து தன் திருமாங்கல்யத்தில் தொட்டு வைத்துக் கொள்கிறார்கள்.

வாழ்வதற்கு முன்பே வாழாவெட்டியாகப் போன நீ

இன்று வாவரசிகளை வாழவைக்கும் அம்மன்.

உன் கழுத்தில் நித்திய சுமங்கலியின் சாட்சியாய் மஞ்சள் கயிறு!

யார் கட்டியது ?

எடுத்து வீசு..

எந்தக் கோவிலில் உயிருடனேயே உன்காதல் முடிந்து போனதோ அங்கே

யாரை வாழவைக்க நீ இன்னும் கர்ப்பகிரஹத்தில் காத்திருக்கிறாய். ?

உன்னைச் சுற்றி உன் காதல் பாடல்கள்

கடவுள் பாடல்களாய் திருப்பள்ளி எழுச்சி..

உனக்காக உன் சூடிக்கொடுத்த மாலையுடன்

வெளியில் காத்திருக்கும் அவனை அடையாளம் தெரிகிறாதா ? ‘

மேளச்சத்தம் மிக நெருக்கத்தில்.. சாமி நம்ம தெருவிற்குள் வந்துவிட்டதுனு புத்தகத்தை மூடிவிட்டு

சன்னலருகில் வந்து எட்டிப் பார்த்தேன். அவர்கள் தெருவில் நுழையும்போது மட்டும் சாமியின்

ஒற்றைக்கால் மடித்துக் கட்டப்பட்டது.

இனி ஒற்றைக் காலுடந்தான் அவர்கள் தெருவில் சாமியின் ஆட்டம். காலை மடித்துக் கட்டியாதாலோ என்னவோ

குதித்து குதித்து ஆத்தங்கரைச் சாமி அவர்கள் தெருவில் ஆடிக் கொண்டே வந்தார்..

எல்லா பெண்களும் குடத்தில் மஞ்சள் தண்ணி வைத்து சாமியின் தலையில் கொட்டினார்கள்..

சாமி ஒற்றைக் காலுடன் அவர்களுக்கு விபூதிக் கொடுத்து அருள்வாக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒற்றைக்காலுடன் ஆடும் அந்த இளைஞனின் ஆட்டத்தில் ஒரு வெறி.. ஒரு பலி தீர்க்கும் வெறி..

கண்களில் நெருப்பின் துண்டுகள்..அவன் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மேளக்காரன்

கை சோர்ந்து போனான்.

அவனின் அவள் அந்த தெருவில் ஏதொ ஒரு வீட்டின் மாடியிலோ கதவிடுக்கிலோ நின்று

கொண்டு அவன் ஆடுவதைப் பார்த்து அழுதுக் கொண்டிருப்பாளோ என்று எனக்கு

எண்ணத் தோன்றியது.

எங்கள் தெருவில் எல்லா பெரிசுகளும் சாமி அள்ளித்தந்த விபூதியை பயபக்தியுடன் பூசிக்கொள்வதைப்

பார்க்கும்போது அவர்கள் பேச்சுதான் நினைவுக்கு வந்தது.

பள்ளு பறையனுக இப்போ எல்லாம்..!

கால் மடித்துக் கட்டிய வலியின் வேதனைத் தெரியாமாலிருக்க இந்த ஆட்டமா ?

அல்லது வேறு எந்த வலியை மறக்க இந்த வலி மறந்து ஆடுகிறாய் ?

ஆண்டாளின் தோல்வி அருள்தரும் அம்மன்சந்நிதியில் கற்பூர ஆரத்தியாய்..

ஆத்தங்கரையானின் தோல்வி இன்னும் ஒற்றைக்காலுடன் ..உயிரின் வலியாய்..

.

ஆண்டாளின் சந்நிதிக்குப் போகும்போதெல்லாம் இப்போதெல்லாம் ஆத்தங்கரைச் சாமியும்

நினைவுக்கு வந்து ஒற்றைக்காலுடன்.. வெறியுடன் பலிதீர்க்கும் வெறியுடன் என் கர்ப்பஹிரகத்தில்.

அன்புடன்,

புதியமாதவி,மும்பை.

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை