• Home »
  • »
  • தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!

தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!

This entry is part of 34 in the series 20101128_Issue

ரசிகன்



மழை
தன் முதல் முத்தத்தினை
உச்சரிப்பதாய் தொடங்குகிறது
அவள் பிரவேசம்!

பின்னிரவுகளின் விடியலை
பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய
மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்!

விடாப்பிடியான அன்பில்
ஊடல் கூடல் என்பதாக
இரவு நனைக்க
விட்டது தொட்டது எல்லாமே காதல் தான்!

காதல் எத்தனித்த ஆண்மையிடம்
ஒரு புன்னகையை காட்டி
வழிமறிக்கும் பெண்மையில்
சமுத்திரத்தையே குடித்துவிட்ட பொழுதுகள்
பரவசம்!

ஒரு தேவதை கதையில்
பிசாசு வருவதை எவரும் விரும்புவதில்லை…
நானும் விரும்பவில்லை…

ஆனால் காலம்…
அவள் பிரிதலுக்கு
ஒரு மௌனம் காட்டி
உயிரை வழியனுப்புதலில்
சமுத்திரத்தையே மூழ்கடித்த கண்ணீர்
விஷரசம்!
தானே மறந்துபோயும்
வருகை பதிவேட்டை
பூர்த்தி செய்ய மறப்பதில்லை நினைவுகள்!

போகுற போக்கில் தாகம் தீருமென்ற
காட்டாற்று தண்ணீராய்

இந்த நினைவுகளின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை…
கதவு திறந்து தானிருக்கிறது!

– ரசிகன்

Series Navigation

ரசிகன்