எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

ஏ.தேவராஜன்



எத்தனை பொய்களைப் பட்டியலிட்டால்
என் பாவங்கள் கழிக்கப்படும் என்று
வீதி தோறும் நிர்வாணத்துடன் திரிகையில்
இந்த உடல் மட்டும்
அதிகம் கணக்கில் கொள்ளப்பட்டன

என் பிறப்பின் தொடக்கம்
ஒவ்வொரு படியிலும்
குறைந்த பட்சம்
ஒரு பொய்யென
ஒரு பித்தலாட்டமென
என் உடல் முழுக்க
நெளிகின்றன

அவை
பழக்கப்பட்ட புழுக்களாய்
என் குருதி உறிஞ்சி
கொழுத்திருக்கின்றன

என்னை விட்டகலாதவையென
அவை பிரகடனப்படுத்தும்போது
நழுவிச் செல்ல விழைகிறேன்

இந்தக் கண்ணீரில்
மூழ்கித் தத்தளிப்பதென்பது
உச்ச வலியாய்ப்படுகிறது

அதனால்…
கூவிக் கூவி என்னைக் காட்டுகிறேன்
முழுக்கத் திறந்து

அகண்ட விழிகளுடன்
அவர்கள் பார்ப்பதில்
பாவக் குளியல் நிகழுமென
நம்பிக்கொண்டிருக்கையில்
ஒவ்வொருவரின் கண்ணிலும்
அசூசை ததும்பி வழிகிறது

வார்த்தைகளில் கிடைக்காத
விமோசனத்தால்
பாவத்தின் சாயல்
மேன்மேலும் கொளுந்துவிட்டெரிகிறது

தாவரங்களுக்கிடையில்
ஒண்டிக்கொள்வதிலும்
பெயர் தெரியாப் பூச்சிகளின் முகமன்களும்
ஒரு ஞானியின் தொடுதலுக்கு நிகராக
உணர்த்தப்படுகையில்
மனிதர்களினின்று விலகி நிற்பதில்
அவர்களின் பாவங்கள்
என்னிலும் கொடூரமானவையாய்
அச்சங் கொள்ளச் செய்கின்றன

மிகத் தெளிவாய்ப்
பெரும் பாவத்துடன்தான்
வாழ வேண்டியிருக்கிறது

– ஏ.தேவராஜன்

Series Navigation

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்