என்றாலும் கவிதையே

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

நட்சத்திரவாசி


பதினைந்து வருடமாக
நானும் பார்த்துகொண்டிருக்கிறேன்
அந்த இற்றுப் போன் கிளையை
ஒடிந்து விழவும் இல்லை
முறித்து எடுக்கவும் இல்லை
பலசமயமும் மனைவி
விறகு எரிக்க இல்லை
என்ற போதும்
அந்த மரத்துக்கு
இற்று போன கிளை
என்னவோ கொள்ளை
அழகு தான்.

மழை காலங்களில்
எறும்புகள்
தானியங்களை
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து வேறெங்கும்
கொண்டு செல்வதை தவிர்த்து
வேறு வேலை ஏதேனும் வேலை உண்டோ?

பூக்களின் வாசத்தை கண்டும்
காணாமலும் போய்க்
கொண்டிருக்கிறது
ஒரு வண்டு
என்னை சமன்குலைய
செய்யும்
உத்தேசத்துடன்

மௌனமாய் உதிர்ந்து
விழுந்து கொண்டிருக்கிறது
ஓர் ஆலிலை
கார்டூன் நெட்வொர்க்கில்
டோமுக்கு பயந்து
ஓடும் ஜெர்ரிக்கு
அது பயன்படக் கூடும்
என்பதை தவிர்த்து
வேறென்ன யோசிக்க முடிகிறது
இப்போது?

ஆடு கரையும் போது
ஏன் கரைகிறது என்று
நினைக்காமலில்லை
என்றாலும்
கரைந்து விட்டு தான்
போகட்டுமே என்பதான
மனசை போலொரு
மனசா உனக்கு?

இரவில் எழுப்பச் சொல்லி
ஒரு நட்சத்திரம்
உறங்கி போனது
நட்சத்திரங்களை பற்றி
யாரும் கவலை
கொள்வதில்லை என்ற போதும்
நடத்திரம் என்றோ
விண்மீன் என்றோ
எப்படி வேண்டுமானாலும்
அழையுங்கள்
ஆனால்
பகற்பொழுதில் காட்டச்சொல்லி
தொந்தரவு தராதீர்

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி