உன்னிடம்

This entry is part of 41 in the series 20040729_Issue

மாலதி


—-

புகார்களைப் போட்டுவிட
பெட்டியில்லாத இடம்
மத்யஸ்தத்துக்கு அழைக்க
யாரையும் வரவிடாத இடம்

பேச்சையும் பார்வையையும்
மேலெழுத்திட்டுப்
பதிவில் நிறுவாத இடம்
குறைவில்லாத அன்பு
ஹீலியம் போல்
மேல் தளும்பும் இடம்

நேரங்களைக் கொன்ற இடம்
செத்ததைச் சொல்லவிடாமல்
மொய்த்ததில் சாகுமிடம்
ஓலத்தில் மெளனத்தைக்
கோலத்தில் கருத்துக்களைத்
தெளித்து மணம் பரப்புமிடம்
உன்னிடம் என் கொள்ளிடம்
கன்னி கஸ்தூரி கரைந்து
காணாமல் போகுமிடம்
உன்னையும் தொலைத்துக்
காணாமல் போக்குமிடம்

என் பொருளை நானே
திருடுமிடம்
பொன் புதையலைப்
புழுதியாய்ப் பொகடுமிடம்

இழந்த உலகங்களை
ஈடு கட்டிச் சிரிக்குமிடம்
அந்தப் புல்லிடம் சிலிர்க்கும்.
கண்ணிடம் கொள்ளும்
தூக்கம் போல்.

மாலதி
[மரமல்லிகைகள் 2003] தொகுப்பில்

====
malti74@yahoo.com

Series Navigation