பாத்திரம் அறிந்து….

This entry is part of 45 in the series 20030302_Issue

கோமதி நடராஜன்


குனிந்து கொண்டே போக
நீ தயார் என்றால்,உன்னைக்
குட்டிக் கொண்டே இருப்பவனைக்
குறை கூறாதே.
ஏமாந்து கொண்டே இருப்பதற்கு,
நீ தயார் என்றால் எப்பொழுதும்,
ஏமாற்றிக் கொண்டே இருப்பவனை
ஏசாதே.
பணிந்து கொண்டே போவதற்கு
நீ தயார் என்றால்,தலையில்,
ஏறிக் கொண்டே இருப்பவனைத்,
தூற்றாதே.
அனுசரித்துக் கொண்டே போவதற்கு
நீ,தயார் என்றால்,அதில் ஆதாயம்,
அடைந்து கொண்டே, இருப்பவனை
எள்ளாதே.
பாத்திரம் அறிந்து பிச்சையிடு
குணம் அறிந்துக் கொட்டிக் கொடு.
தருவது எதுவானாலும்,பெறுபவரின்
தரம் பார்த்துத் தந்துவிடு.
இட்டது வீணாகாமல்,
தந்தது,தவறிப் போகாமல்,
சேருமிடம், சென்று சேரட்டும்,
தந்தவனும் பெற்றவனும் ,
தரமானத் தராசுத் தட்டு போல்,
ஏற்ற இறக்கம் இன்றி,
இனிதே செல்லட்டும்.
சமமாக நின்று,
சந்தோஷமாக வாழட்டும்.
ஏமாந்தோம் என்ற ஆதங்கம் எதற்கு ?
ஏமாற்றினான் என்ற,அங்கலாய்ப்பு எதற்கு ?

ngomathi@rediffmail.com

Series Navigation