நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

வ.ந.கிாிதரன் –


ஓரணை தானேயென்று இருந்து விட
இவளால் முடியவில்லை.
விம்பங்களை வழிபடும் மண்ணில்
பூகம்பங்களைப் பற்றி யார்
கவலைப் படுவார் ?
பில்லியனிலொரு துளி
பலருக்கு அந்தச் சிலர்.
மில்லியன் பல கிடைத்தும் பகிரும்
மனது இவளுக்கு. அதனாலிவலெதிர்த்தாள் ?
சொல்லைச் செயலாக்கும் இவளுறுதி
கண்டு நர்மதாவும் தலை சாய்வாள்.
சொல்லேருழவர்களில் நீர் தேங்கும்
வல்லணை தருமிடர் புாிந்து
அணை அணைக்கா நல்லோர்
உழவாிலொருத்தியிவள். அருந்ததி
நீ வாழி!

பேரணை, சிற்றணையெனப் பல்லணை.
ஊர் மூழ்கும். ஆறறிவு புலம் பெயரும்.
ஐந்தறிவென்ன செய்யும் ?மரமழியும்.
மரம் வாழ் உயிரழியும். ஊர்வன,
பறப்பனவெனப் பலவழியும்.
பலரழிந்தும் பாராமுகம் காட்டும்
மண்ணில் பலவழியப் பொறுக்காப்
பாரதப் பெண்ணிவள் புாியும் நவ
பாரதப் போாில் தோற்றது
தர்மமா ? ஆடி அசைந்து
குதித்துக் கலகலத்தோடிய
நர்மதாவின் அழகு கண்டு
அளப்பாிய சுதந்திர தாகம் கண்டு
பொறுக்காத ஆண்மனது
அணைத்திடப் போட்ட திட்டமாவிந்த
அணை. அவளை அணைக்
கூண்டினுள் சிறைவைக்கச்
செய்த பெருஞ் சதியோ ?
சபை நடுவில் பாஞ்சாலி துகிலுாியப்
பொறுக்காக் கண்ணனவன்
அவை நடுவிலுதித்து அபயக்கரம்
தந்து காத்தான். காப்பதற்குக்
கண்ணனில்லாததால் வந்த
கண்ணம்மாவோயிவள்!

அருந்ததி காட்டி மணமுடிக்கும் மண்ணில்
அபலை நர்மதா நிலை கண்டு
இருகரம் நீட்டி வந்த அருந்ததியே
முறையிட்ட உனைச்
சிறை வைத்தார்.சிறப்பிழந்தார்.
கறை தந்தார். ஆயினென்ன ?
கொடியவரணைப்பில் அழியும்
ஊர் வாழ்த்தும்! உயிர் வாழ்த்தும்.
பேர் சொல்லும் நவபாரதத்துப்
பாஞ்சாலிக்காய்க் குரல் தந்த
கண்ணம்மா இவளென்றே!

***

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்