ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

ஜியோஃப்ரே ஹெர்ட்


யுத்தத்தை நியாயப் படுத்துதல்

அமெரிக்கா ஈராக்கினுள் உடனே நுழையமுடியாது என்பதால், தாக்குதலுக்கு ஒரு நியாயமான காரணத்தை கற்பிதம் செய்ய்த் தொடங்கியது. இந்த் நியாயப் படுத்தல் ஒவ்வோர் நிலையிலும் அமெரிக்காவின் அவசரம் பற்றியும், பொய் பற்றியும் தெளிவாக்கியுள்ளது. ஈராக் அல் கைதாவுடன் சேர்ந்தது என்ற முதல் பொய். பிறகு அல் கைதாவிற்கு ஆயுதங்கள் தருகிறது ஈராக் என்று ஒரு பொய். ஈராக் தன் அண்டை நாடுகளுக்கு ஆபத்து என்று அடுத்த பொய். ஈராக்கின் அதிபர் சதாம் உசேனின் குரூர ஆட்சி பற்றி அடுத்த காரணம். ஐ நா ஆயுத இன்ஸ்பெக்டர்கள் அறிக்கை பற்றி மேலும் குறிப்புகள் வெளியாயின.

ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்காவின் காரணங்கள் மிகப் போலியானவை என்று ஓவொரு நாளும் நிரூபணாமகி வருகின்றன. ஐ நா ஒப்புதல் அளிக்காவிட்டாலும் ஆக்கிரமித்தே தீருவேன் என்ற அமெரிக்காவின் குரல், ஐ நா பற்றிய அமெரிக்காவின் அலட்சியம் பற்றி தெளிவாய்க் காட்டுகிறது.

ஐ நாவின் ஆயுத இன்ஸ்பெக்டர்கள் ஐ நா கட்டுப்பாடுகளை ஈராக் மிகச் சொற்பமே மீறியிருக்கிறது என்று கூறியுள்ளனர். உதாரணமாக – தொழில் நுட்பம் மிக உயர்ந்திராத ராக்கெட்டுகளில் 20 சதவீதம் பாய்ச்சல் தொலைவை அதிகரித்திருக்கிறார்கள் என்பது அதில் ஒன்று. பேரழிவு ஆயுதங்கள் எதுவும் ஈராக்கில் இல்லை. காலின் பாவல் வட ஈராக்கில் உள்ள ஒரு கிராமம் அச்சுறுத்தும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்றனர். ஆனால் அந்த கிராமம் பற்றிய செய்தி தவறு என்று பிறகு வரே ஒப்புக் கொண்டார்.

‘நியூஸ்வீக் ‘(பிப் 24) புஷ் அலுவலர்கள் ,ஈராக்கிலிருந்த வெளியேறிய லெப்டினண்ட் ஜெனரல் ஹுசேன் கமால் 1995-ல் ஈராக் விஷ் வாயுவை(Nerve gas)யும், ஆந்த்ராக்ஸ் துகளையும் டன் கணக்கில் உற்பத்தி செய்துள்ளது என்று சொன்ன செய்தியும் , காலின் பாவல் ஐநாவிற்கு பிப் 2-ல் தந்த உரையில் அடக்கம். ஆனால் இந்த உற்பத்திப் பொருட்கள் அழிக்கப் பட்டுவிட்டன எனாறு கமால் சொன்னதை இவர்கள் விட்டு விட்டனர். ஒரு மாணவனி ஆய்வு ஏடு ஒன்றிலிருந்து பெறப்பட்ட செய்திகள் தான் பிரிட்டிஷ் ரகசிய ஆவணம் என்ற பெயரில் வெளியாயிற்று.

ஈராக் மக்களின் மனித உரிமைகள், ஜனநாயகம் இன்மை பற்றியும் அமெரிக்கா கவலை தெரிவித்தது. ஆனால் இந்தக் கவலைகள் எப்போதுமே அமெரிக்க ஆக்கிரமிப்புக் காரணம் ஆக வில்லை என்பது வரலாறு. க்டமாலா, சிலி, நிகரகுவா பற்றி யோசித்துப் பாருங்கள். இங்கு சட்ட பூர்வமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட , ஜனநாயகத் தலைவர்களை கவிழ்த்து, யுத்தம், உள்நாட்டுக் கலவரம், பட்டினி, ஊழல், சர்வாதிகாரம் , படுகொலைகள் இவற்றிற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது. மிகச் சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் உதாரணமும் இருக்கிறது. அதற்கு முன்னிருந்த ஜனநாயகத் தலைவர்களைத் துரத்தியபின்பு கொலைகார தாலிபன்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது அமெரிக்கா தான்.

சதாம் ஹுசேஎன் 15 வருடங்கள் முன்பு குர்துஇனத்தவர் மீது ரசாயன ஆயுதங்களை வீசியபோது அந்த ஆயுதங்களைத் தந்தது அமெரிக்கா தான். இப்போது பாதுகாப்பு அமைச்சராய் உள்ள டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் – இன்று ஈராக்கை கடுமையாய் விமர்சிப்பவர் – அன்று ஈராக்கைக் குற்றம் சொல்லாமல் ஈரானைக் குற்றம் சொன்னார். அந்தக் காலத்தில் சதாம் ஹ்உசேன் அமெரிக்காவின் நண்பர் என்பது கருத்து. ஈரானின் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு ஈராக் மாற்று என்று கருதியது.

ஈராக்கின் சதாம் ஹ்உசேனை விட மோசமான கொடூரங்களை, பலாத்காரங்களை, சித்திரவதைகளை நிகழ்த்திவரும் நாடு அல்ஜீரியா.இதுவரையில் 200000 பேர் மரணமுற்றிருக்கின்றனர்.பல்லாயிரம் பேர் ஊனமுற்றிருக்கின்றனர். இன்று அல்ஜீரியாவின் ஐ நா ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்கா ஆயுதங்களை அளித்து வருகிறது. ‘இண்டிபெண்டண்ட் ‘ ஏட்டில் எழுதி வரும் ராபர்ட் ஃபிஸ்க் இதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்காவின் மனிதாபிமான அக்கறை இப்படிப் பட்டது தான். (ஃப்ரான்சும் கூட இதேபோல் அல்ஜீரியாவை தாஜா செய்கிறது. ஆனால் மனிதாபிமான வேடம் போடுவதில்லை.)

இந்தோனேசியாவையும், முஸ்லீம்கள் பெருவாரியாய் உள்ள தேசம் என்பதால் அமெரிக்கா விலைக்கு வாங்க முற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாடுகளை பயன்படுத்தி ராணுவத்தை விரிவுபடுத்தி வருகிறது.

வெனிசுலா

ஈராக்கின் மீது உலகின் கவனம் குவிந்திருக்கும்போது, அமெரிக்கா வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு – பணக்காரர்களைக் கொண்டு- செய்ய முயன்று வருகிறது. ஏப்ரலில் சிறிது காலம் இந்தக் கவிழ்ப்பு நடந்தது. ஆனால் பொது மக்கள் ஜனநாயகத் தலைவர் சாவேசுக்கு ஆதரவு அளித்து பெரும் போராட்டங்கள் நடத்தியதால், கவிழ்ப்பு பின்னடைவு பெற்றது. இந்தக் கவிழ்ப்புக்குக் காரணமாய் இருந்தவர்கள் அமெரிக்க உதவியுடன் இப்போதும் கலவரங்கள் உண்டுபண்ணுகிறார்கள். அமெரிக்க நலன்களுக்காக பாடுபடுகிறார்கள். அரசுக்குச் சொந்தமான வெனிசுலாவின் எண்ணெய் வளங்களின், அமெரிக்காவிற்கு அருகிலேயே இருப்பதால், இவை மீது அமெரிக்கக் கம்பெனிகள் குறியாய் இருக்கின்றன.

ஈராக்கில் ஜனநாயகம் என்று குரலும் அதே சமயம், வெனிசுலாவில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்ப்பது – இதில் உள்ள முரண்பாட்டை பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏப்ரலில் ஆட்சிக் கவிழ்ப்புச் செய்தவர்களை புஷ் விழுந்தடித்துக் கொண்டு அங்கீகரித்தார். அதில்லாமல் வெனிசுலாவில் சீக்கிரம் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார். சாவெஸ் முறையாக தேர்தலில் வென்றவர் என்ப்தையும் மறைத்து இந்த நாடகம். அப்படி சீக்கிரம் தேர்தல் அது வெனிசுலாவின் சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும்.

அமெரிக்கா வெனிசுலாவில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் அங்கிருந்த தம் பணியாளர்களை ‘தேசிய வேலைநிறுத்த ‘த்திற்கு ஆதரவாக தொழிற்சாலைகளைப் பூட்டி வைத்தது. அமெரிக்காவில் இப்படி நடக்க முடியுமா ? உருகுவேயின் சட்டமன்ற உறுப்பினர் ஹேசே நயர்டி , உருகுவேவின் ஆதரவையும் வெனிசுலாவின் கிளர்ச்சிக்காக் புஷ் நாடினார் என்று வெளிப்படுத்தினார். சேவஸ் நிர்வாகத்தை ச்சிர்குலைக்க உருகுவே உதவ வேண்டும் என்று கோரினார் புஷ். 1973-ல் சிலி நாட்டில் அமெரிக்கா நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை – ஜனநாயக முறையில் தேர்வு பெற்ற அலண்டே படுகொலையை- ஞாபகப் படுத்துவது இது என்றார் அவர்.

சேவஸ் ஆட்சிக்கு எப்போது ஆபத்து வரும் என்று தெரியவில்லை.

யுத்தச் செலவு

அமெரிக்க ஆக்கிரமிப்பு மிகுந்த செலவு வைக்கும் என்றும், எண்ணெய் வளம் அந்த அளவு திரும்ப பெஆற முடியாது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருதும் போது, இந்த கருத்து மாறுதல் அடைகிறது.

மூன்று முக்கிய விZயங்கள் உள்ளன:

ஒன்று – அமெரிககா மற்ற நாடுகளை செலவைப் பகிர்ந்து கொள்ள அழைக்கும். ஏனெனில் அந்த நாடுகளின் பொருளாதாரமும் இந்த யுத்தத்தில் இணைந்துள்ளது. 1991 வளகுடா யுத்தத்திற்கு ஜப்பானும், சவூதி அரேபியாவும் பெரும் உதவி புரிந்தன.

இரண்டாவது — அமெரிக்காவிற்கு யுத்தச் செலவுகள் மிகச் சொற்பமே. எல்லா தளவாடங்களும் அமெரிக்கா ஏற்கனவே வாங்கியவைதானே. புது தளவாடங்களும் , ஆயுதங்களும் வாங்க வேண்டிய அவச்சியமே அமெரிக்காவிற்கு இல்லை. ஆனாலும் இவற்றை வாங்க ஒப்பந்தங்களும் தயாராகிவிட்டன. இதனால் மிகுதியான செலவு அமெரிக்காவிற்கு இல்லை.

மூன்றாவது — யுத்தத்தினால் அமெரிககவிற்கு ஏற்படும் செலவு டாலர்கள் எண்ணெய் வாங்கச் செலவழிக்காதவை. இந்த் டாலர்களை எப்படித் திருப்பும் அமெரிக்கா ? மேலும் டாலர் நோட்டுகளை அச்சடித்துத்தான். இதேபோல் தான் உற்பத்திப் பொருள்களை அமெரிக்கா வாங்க நேரிடும்போது, டாலர்கள் வெளியே சென்று அமெரிக்காவின் வர்த்தக வலிமையைக் கூட்டுகின்றன.

யுத்த செலவு அமெரிக்காவிற்கு மிகுதி அல்ல- யுத்தம் இல்லாவிடின் அமெரிக்காவிற்கு ஏற்படும் இழப்பைக் கணக்கில் கொண்டால். டாலர் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணெய் தவிர்த்த வேறு வழி காணும் வரையில் இந்தக் கணக்கு தான் அமெரிக்காவிற்கு.

அமெரிக்காவின் இணைபிரியாத இரண்டு தோழர்கள்

ஏன் ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் அமெரிக்காவின் ஈராக் கொள்கையை இப்படி ஆதரிக்கின்றன ?

ஆஸ்திரேலியாவிடன் ஏராளமான டாலர் ரிஸர்வுகள் இருக்கின்றன. இந்த டாலர் ரிசர்வைக்கொண்டுதான் அது அமெரிக்காவுடன் பெரியதாக வியாபாரம் செய்துவருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பில் வீழ்ச்சி என்பது ஆஸ்திரேலியாவின் கடனை குறைக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் டாலரும் மற்ற பணத்துக்கு எதிராக குறைய ஆரம்பிக்கும். டாலர் என்பது உலகத்தின் வியாபாரப் பணமாக இருப்பதால், அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தத உறவு (free trade with US) கொண்டால், அமெரிக்காவுக்கு டாலரால் கிடைக்கும் வளமையில் தானும் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று ஆஸ்திரேலியப்பிரதமர் ஜான் ஹோவர்ட் கனவு காண்கிறார். எண்ணெய் வியாபாரத்தில் ஒரு கணிசமான பங்கை யூரோ எடுத்துக்கொள்ளுமேயானால் அந்தக்கனவுக்குப்பிரயோசனம் இல்லை.

பிரிட்டன் இன்னும் யூரோவை தன்னுடைய பணமாக ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து யூரோ பெட்ரோலிய வியாபாரத்துக்குள் புகவிடாமல் தடுத்துவிட்டால், டோனி பிளைர் பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் ஜனாதிபதிகளுக்கு முக்குடைப்பு கொடுத்துவிட்டு யூரோ பிரச்னையை கிடப்பில் போட்டுவிடுவார். அதே நேரத்தில் யூரோ-ஜோன் எனப்படும் யூரோ புழங்கும் பகுதிக்குள் பிரிட்டன் வரவேண்டுமென்றால் இன்ன இன்ன பிரிட்டனுக்குச் சலுகை கொடுக்க வேண்டும் என்று டோனி பிளைர் அதிகமாகக் கேட்பார். உலக எண்ணெய் வர்த்தகத்தின் தலையாய பணமாக யூரோ ஆகாதபோது, ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து பிரித்துக்கொண்டு ஐரோப்பாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளவும் கூடும்.

மறுபுறம், எண்ணெய் வர்த்தகத்தில் டாலரின் முக்கியத்துவத்தை அமெரிக்கா நிலை நிறுத்த முடியவில்லை என்றால், யூரோ வெகு வேகமாக வலிமை பெற்று முக்கியத்துவம் அடையும். அப்போது பிரிட்டன் யூரோ கிளப்புக்குள் தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி கெஞ்சிக்கொண்டிருக்கும்.

எதிர்ப்பு

அமெரிக்காவின் திட்டங்களுக்கு எதிராக இருக்கும் காரணங்கள் தெள்ளெனத் தெரிபவை. அமெரிக்கா ஏற்கெனவே உலகத்தின் மிக வலுவுடைய நாடு. அது உலகப் பொருளாதார வியாபாரத்தை டாலர் மூலம் முழுமையாக ஆக்கிரமிக்கிறது. அது ஈராக்கின் பெட்ரோலியத்தையும், மத்தியக்கிழக்கில் ஒரு நிரந்தர ராணுவத்தளத்தையும் மைத்துக்கொண்டால், அதன் வலிமை பல மடங்கு பெருகும்.

ஏற்கெனவே எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், முக்கியமாக அரபு நாடுகள், நடப்பதை தெளிவாகக் காண்கின்றன.

பிரான்ஸ் ஜெர்மனி நாடுகள் ஐரோப்பிய ஒருங்கிணைவின் நோக்கத்தோடு ஐக்கிய ஐரோப்பாவை உருவாக்கி உலகத்தில் அது நேர்மையாகப் பெறக்கூடிய இடத்தையும், ஈரோ பணத்தை உலகத்தின் பண்டமாற்று பணமாக உருவாக்கவும் முனைந்து, இதுவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டிருந்த இடத்தை பிடிக்க முனைகின்றன. இவையே ஈராக்குடன் முதலில் ஈரோ பெட்ரோலிய பண்டமாற்று வியாபாரத்தை துவக்கின.

ரஷ்யா ஆழமான பொருளாதார சிக்கலில் இருக்கிறது. தெற்கு காஸ்பியன் எண்ணெய் வயல்களிலிருந்து மாபெரும் குழாய்களை ஆஃப்கானிஸ்தான் வழியாக தெற்கே எடுத்துச் சென்றால், ரஷ்யாவின் நிலை இன்னும் மோசமடையும் என்பதையும் அது அறிந்தே இருக்கிறது. இன்றைக்கு காஸ்பிய எண்ணெய் வயல்களின் எண்ணெய் வடக்கு முகமாக செல்கிறது. அதனை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ரஷ்யா ஏற்கெனவே தன்னுடைய எண்ணெய் உற்பத்தியை சீர்படுத்துவதில் இறங்கியிருக்கிறது. இந்த எண்ணெயை யூரோவுக்கும் இன்னும் கொஞ்சத்தை அமெரிக்காவுக்கும் விற்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது. இன்று பெட்ரோலியம் டாலரில் விற்கப்படுவதால் ரஷ்யாவுக்கு ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய் வளத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், இது சந்தையை திருகி வளைத்து ரஷ்யாவுக்கு ஏராளமான பிரச்னையையும் துயரத்தையுமே அளிக்கும். கூடவே ரஷ்யாவுக்கு ஈராக்கின் எண்ணெய் வளத்தில் ஒரு கண் உண்டு. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துவிட்டால் அதுவும் தொலைந்தது. ஏற்கெனவே முழங்காலிட்டு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ரஷ்யா, ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மைல் நீளம் குழாய் போட்டால் சுத்தமாக காலி என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு தீர்வு ?

மேற்கண்ட நிலைமை, அமெரிக்கா ஏன் தீவிரமாக போருக்குச் சென்றது என்பதை விளக்குகிறது. அதே வேளையில், போர் தவிர வேறு தீர்வுகளும் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா தான் ஆக்கிரமிக்கும் பொருட்களை வியாபார ரீதியில் ஐரோப்பாவுடன் பகிர்ந்து கொள்ள இயலுமா ? நடப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை. ஆனால், ஐரோப்பா அமெரிக்காவுடன் மல்லுக்கட்டி அப்படி ஒரு தீர்வை உருவாக்க இயலும். காலம்தான் பதில் சொல்லும். ஐரோப்பா ஒரு பெரியமனிதத்தனமாக விலகிக்கொண்டு, மனித உரிமைகளைப் பற்றிய நீண்டகால நோக்குடன், பெட்ரோலியத்தை அமெரிக்காவிடம் விட்டுவிட்டு சாதாரண ஈராக்கியர்களுக்கு பாதுகாப்பும், வெனிசுவெலாவில் ஜனநாயகத்தையும் உத்தரவாதம் செய்யமுடியுமா ?

இதைவிட இன்னும் ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையை ஐரோப்பா எடுக்கலாம். பெட்ரோலியத்துக்கு மாற்றாக இருக்கும் புதிய மூலங்களில் (சூரியசக்தி, அணுத்துறை, கடலிலிருந்து மின்சாரம் போன்ற) தொழில்நுட்பங்களில் செலவு செய்து எண்ணெய் மீதான சார்பை குறைத்துக்கொண்டு ஈரோவுக்கு மாற்றாக விற்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்து உலக பொருளாதார வியாபார சாய்வை மாற்றலாம்.

இது எல்லோருக்கும் நலன் பயக்கும் ஒரு நல்ல விளைவாக இருக்கும்.

**

(முற்றும்)

ஜியோஃப்ரே ஹெர்ட் அவர்கள் மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர். சுற்றுச்சூழல், மனித உரிமைகளில் ஆர்வமுள்ளவர்.

Geoffrey Heard (c) 2003

http://www.globalpolicy.org/nations/sovereign/dollar/2003/03oil.htm

gheard@surf.net.au

Series Navigation

ஜியோஃப்ரே ஹெர்ட்

ஜியோஃப்ரே ஹெர்ட்

ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 1

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

ஜியோஃப்ரே ஹெர்ட்


ஏன் ஜார்ஜ் புஷ் ஈராக்குடன் யுத்தமிட்டே தீருவேன் என்று பிடிவாதமாய் இருக்கிறார் ? ஈராக் மேற்கொள்ளும் சாதகமான நடவடிக்கைகளையும் என் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நிராகரிக்கிறது ? ஈராக்குடன் போரிடாவிட்டால் அமெரிக்காவிற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைக் கணக்கில் கொண்டால் தான் இது புரியும். ஈராக் யுத்தம் உண்மையில் உலகின் பொருளாதாரத் தலைமை அமெரிக்காவிடமா அல்லது ஐரோப்பாவிடமா என்பது பற்றிய யுத்தமே.

புஷ் நிர்வாகம் பெரும்பொய்களும், மிகைப்படுத்தல்களும் , தவறான தகவல்களையும் அளித்து ஈராக் யுத்தத்தை நியாயப் படுத்தியுள்ளது. பிரிட்டன், ஆஸ்திரேலியா என்ற இரண்டு ஆதரவாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு, கேட்பவர்கள் முட்டாள்கள் என்ற திடமான எண்ணத்தில் , தன்னுடைய நிலைபாட்டை மாற்றி மாற்றிச் சொல்லியிருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர்களை லஞ்சமாய் அளித்து ஐ நா வாக்குகளைப் பெற மோசடி செய்துள்ளது.

ஐ நா பாதுகாப்பு கவுன்சில் இஈராக் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு அளிக்காத போது, ஐ நா தீர்மானம் இல்லாமலேயே ஈராக் மீது போர் தொடுத்துள்ளது. ஐ நாவின் சட்ட அமைப்பைப் பற்றிக் கவலைப் படாமல், ஐநா தீர்மானங்களை மீறிப் போருக்குப் போயுள்ளது.

I

ஏன் இப்படி அவசரம் ? அவசியம் ? விசித்திரமான விஷயம் தான்.

புஷ்ம் அவர் நிர்வாகமும் சதாமை விரட்டிவிட்டு, ஈராக்கை ஆக்கிரமிக்க பல உந்துதல்கள் உள்ளன. ஆனால் மிக முக்கிய காரணம் மறைக்கப் பட்டுள்ளது . மிக எளிமையான காரணமே அது. அந்தக் காரணம் எண்ணெய் வர்த்தகத்தில் பயன் படும் நாணயமாற்று பற்றியது. இந்த நாணயமாற்றின் எதிர்காலமே உலகின் பொருளாதாரத்தை எதிர்காலத்தில் யார் கட்டுப் படுத்துவார்கள் என்பது பற்றிய கேள்வி – ஐரோப்பிய யூனியனா ? அல்லது அமெரிக்காவா ?

இந்தப் போராட்டத்தின் ஒரு முனை தான் ஈராக் யுத்தம். எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாலர் தான் மையச் செலாவணி நாணயமாய் இருந்தது. ஆனால் 1999-ல் ஈராக், இதை விட்டு யூரோக்களில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது. அதனால் ஈராக்குக்கு லாபம் கிடைத்தது. அமெரிக்கா ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்தால், யூரோ வலுவிழக்கும். அமெரிக்கா உலகின் பொருளாதாரத்தில் அசைக்கமுடியாத மேலாண்மை பெறும்.

உலக மேலாண்மைக்காக நவீன காலத்தில் நடக்கும் பெரும் ஆக்கிரமிப்பு இதுவே. ஆஸ்திரேலியாவும், பிரிட்டனும் அமெரிக்காவின் வெற்றியில் சில லாபங்கள் அவர்களுக்குக் கசியக் கூடும் என்று கணக்கிடுகிறார்கள். ஃப்ரான்சும் ஜெர்மனியும், ஐரோப்பிய வலிமையின் ஊற்றுக்கண்ணாகக் காட்சி அளிக்கிறார்கள். ரஷ்யா ஐரோப்பாவுடன் இணையக் கூடும், ஆனால் அதை விலைக்கு வாங்கவும் வழி உண்டு. சீனா, ஐரோப்பாவின் கையிருப்பு அதிகமாவதைத் தான் இப்போது விரும்பும். சீனாவின் வர்த்தகம் வளர்ந்து, இந்த வளர்ச்சியில் தானும் பங்கு பெற்று லாபம் அடையவும் விரும்பும்.

இணையத்தில் ஒரு விவாதம்

ஆனால் பொது ஊடகங்களில் இது பற்றி எங்குமே விபரங்கள் காணமுடியாது. ஆனால் பல முக்கியஸ்தர்களுக்கு இது புரிகிறது. சமீபத்தில் டாலர் மதிப்பு சரிவு இதன் விளைவு தான். வியாபாரிகள் யுத்தங்கண்டு அஞ்சுகிறார்களா ? அவர்கள் யுத்தம் இல்லை என்றால் தான் பயப்படுவார்கள். மைய நீரோட்ட ஊடகங்களில் இது பற்றிய மெளனம் இருந்தாலும், இணையத்தில் இது விவாதிக்கப்படுகிறது. ‘ஆசியா டைம்ஸ் ‘ என்ற இணைய ஏட்டில் ஹென்ரி லியு கடந்த ஜ்ஊன் மாதம் இது பற்றி எழுதினார். சியரா டைம்ஸ் என்ற சுற்றுச்சூழல் இதழில் டபிள்யூ கிளார்க் என்பவர் ‘ வரும் ஈராக் யுத்தத்தின் உண்மையானகாரணங்கள்: பெசப்படாத உண்மைகள் பற்றிய பொருளாதா மற்றும் புவியியல் ஆய்வு ‘ என்று எழுதிய கட்டுரை பல இணைய தளங்களில் இடம் பெற்றது.

இந்த விவாதம் எண்ணெய வர்த்தகத்தின் அமெரிக்க டாலர் கொண்டுள்ள மேலாண்மை எப்படி பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது பற்றியதல்ல- அந்தச் சரிவு நிகழும் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அந்தச் சரிவு எந்த அளவு ஆழமாய் இருக்கும் என்பது தான் விவாதப் பொருள். மிக மோசமான பாதிப்பு என்றும், சர்வநாசம் என்றும் பலவாறாய் பலரும் கூறுகிண்ரனர். அமெரிக்காவின் பொருளாதாரம் தரை மட்டமாகிவிடக் கூடும்.

எண்ணெய் டாலர்கள்

எண்ணெய் வர்த்தகத்தில் பயன்படும் செலாவணி நாணயமே உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும். எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 1971 முதல் அமெரிக்க டாலர்களில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. (தங்கத்துடன் நாணயங்களின் நிகர்மதிப்பு இணைந்தது கைவிடப்பட்ட பின்பு இது.)

மற்ற நாடுகள் எண்ணெய் வாங்க டாலரைச் சேமிக்கத் தொடங்கினால், அமெரிக்காவிற்கு பெரும் வர்த்தக சாதகம் இது. இதனால் அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றுவிடுகிறது.

பொருளாதார கூட்டமைப்பு என்ற முறையில் ஐரோப்பிய யூனியன் தான் இதற்கு மாற்று அளிக்கவல்லது உலகச் சந்தையில் ஒருங்கிணைந்து பேரம் பேசத்தான் யூரோ உருவாக்கப் பட்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன்

இன்னமும் முழுமையாக யூரோவுடன் இணையவில்லை. பிரிட்டனிலும் , பிற பகுதிகளிலும் தேசப் பற்று என்ற போர்வையில் பல பிளவுவாதங்கள் யூரோவைக் கவிழ்க்கத் தயாராய் இருக்கின்றன. உலக நாடுகள் டாலர் இருந்தால் தான் எண்ணெய் வாங்க முடியும் என்ற நிலை இருக்கும் வரையில் இந்த டாலர் மேலாதிக்கம் தொடரும்.

1999-ல் ஈராக்- உலகின் இரண்டாவது பெருமளவு எண்ணெய் வைப்பு உள்ள நாடு ஈராக் – யூரோவில் வர்த்தகம் செய்ய முன்வந்தது. அமெரிக்க ஆய்வாளர்கள் எகத்தாளமாகச் சிரித்தனர் – ஈராக் பிச்சைக் காரனாகிவிடும். ( அதாவது யூரோவை வைத்து எந்த பொருளும் வாங்க முடியாது – பயனற்ற நாணயத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ஈராக்கால் என்பது ஆய்வாளர்களின் கருத்து. – மொ பெ) ஆனால் எச்சரிக்கை மணிகள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. யூரோவின் மதிப்பு உயரத் தொடங்கியது. ஈரான் தன்னுடைய எண்ணெயையும் யூரோவில் விற்கலாமா என்று எண்ணத் தலைப் பட்டது. வெனிசுலா- என்ணெய் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள நாடு வெனிசுலா- இதைப் பார்த்து நாடுகளுடன் பண்டமாற்று முறையில் எண்ணெய் வர்த்தகத்தில் இறங்கியது. அமெரிக்காவின் பிரியமான எதிரி கியூபா உட்பட, பலநாடுகள் இது போல் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்கின.ரஷ்யாவும் யூரோவில் விற்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்தது.

டாலரின் இரும்புப் பிடியில் எண்ணெய் இல்லாததால், டாலரின் மற்ற வர்த்தகங்களும் நலியத் தொடங்கின. இது பரவினால் , உலகவர்த்தகத்தில் அமெரிக்க மேலாண்மை பலவீனப் பட்டுவிடும் என்பது தெளிவாயிற்று.

டாலர் எப்படி மதிப்புப் பெறுகிறது ?

இதனைக் கற்பனை செய்யுங்கள் : நீங்கள் பெரும் கடன்காரர்களாய் இருக்கிறீர்கள் மில்லியன் டாலர் கணக்கில் காசோலைகளை வினியோகித்திருக்கிறீர்கள். கார், பெரிய வீடு , சுற்றுலா என்று கடனின் கொழிக்கிறீர்கள்.

உங்கள் காசோலை ஒரு காசு பெறுமானம் கூட இல்லாத வெற்றுக் காகிதமாய் இருக்கலாம். ஆனால் அந்தக் காசோலை எதுவுமே வங்கிக்கு வருவதில்லை; என்று கற்பனை செய்யுங்கள். ஆனால் பெட்ரோல்/ எரி வாயு வர்த்தகர்களிடம் உங்கள் ஒப்பந்தப்படி அவர்கள் உங்கள் காசோலையைத்தான் மதிப்பார்கள். பெட்ரோலுக்கு விலையாகப் பெறுவார்கள். இதன் விளைவு எல்லோருமே உங்கல் காசோலையை வாங்கப் போட்டி போடுவார்கள். உங்கள் காசோலையை சேமித்து வைக்கத் தொடங்குவார்கள். உங்கள் காசோலையை சேமித்து வைத்திருப்பதால் அதையே உபயோகித்து மற்ற பொருட்களையும் வாங்குவார்கள். அதாவது நீங்கள் தரும் காசோலை கறிகாய் வாங்க, கறி காய் விற்பவர் பெட்ரோல் வாங்க, பெட்ரோல் விற்பவர் பழம் வாங்க என்று சுற்றிச் சுழ்ன்று வருகிறது. உங்கள் வங்கிக்கு உங்கள் காசோலை வருவதே இல்லை.

நீங்கள் கடன் காரர் தான் ஆனல் உங்கள் காசோலை வங்கிக்கு வராததால், நீங்கள் பணம் தரவேண்டிய அவசியம் இல்லை. அதாவது உங்கள் காசோலையைக் கொடுத்து நீங்கள் வாங்கிய பொருள் உங்களுக்கு இலவசமே.

இது தான் அமெரிக்கா முப்பது வருடங்களாக அனுபவித்து வந்த சலுகை. உலக வர்த்தகத்தின் பலன்களை அது கிட்டத்தட்ட இலவசமாகவே அனுபவித்து வந்திருக்கிறது. அதன் கடன் பெருகி வந்திருக்கிறது. அதனால் டாலர்களை அச்சிட்டு வந்திருக்கிறது. – அதாவது மேலும் காசோலைகளை வினியோகித்து வந்திருக்கிறது. அமெரிக்கா பொருளாதார மேலாண்மை பெற்றதில் வியப்பே இல்லை.

திடாரென்று ஒரு நாள் ஒரு பெட்ரோல் வர்த்தகர் மற்ற ஒருவரின் காசோலையை வாங்கிக் கொண்டு வியாபாரம் செய்யப் போகிறார் என்றால், வேறு சிலரும் அது நல்லதே என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். இது பரவத் தொடங்கினால் உங்கள் காசோலை வங்கிக்கு வரும் . ஆனால் உங்கள் வங்கிக்கணக்கில் போதிய பணம் உங்களுக்கு இல்லை. ஒரே குழப்பம் தான். உங்கள் பாடு திண்டாட்டம் தான். காசோலை எழுதக் கூடிய மற்ற ஆட்களை நீங்கள் பயமுறுத்த முடியாது, ஏனென்றால் உங்களைப் போலவே அவனும் வஸ்தாத் தான். ஆனால், உங்கள் காசோலையை ஏற்க மறுத்த ஆளை அடித்து, பயமுறுத்தலாம்.

இது தான் இப்போது அமெரிக்கா ஈராக்கில் செய்வது.

அமெரிக்காவின் தடுமாறும் பொருளாதாரம்.

யூரோ கிளப்பிவிட்ட தீ பரவும் முன்பாக ஈராக் மீது யுத்தம் தொடங்கிவிடவேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். ஈரான், வெனிசுலா, ரஷ்யா இணைந்து யூரோவில் எண்ணெய் விற்பனை பெருமளவில் தொடங்கிவிட்டால், உலக வர்த்தகத்தின் முதன்மை பெறுவதற்கு ஐரோப்பாவிற்குத் தடை ஏதும் இல்லை. மற்ற நாடுகள் டாலரை விற்று, யூரோ வாங்க வேண்டி வரும்.

அமெரிக்கா அச்சிட்ட டாலர்களும், அமெரிக்கா எழுதிய காசோலைகளும் வீடு திரும்பும் அதாவது அமெரிக்கா அந்த மதிப்பைத் தரவேண்டியிருக்கும் – டாலரின் மீது சுமத்தப்பட்ட மதிப்பின் பிரமைஅகலக்கூடும். அமெரிக்காவின் பொருளாதார நிலை மோசமாய்த்தானிருக்கிரது – கடன் அதிகம் -28 கோடி

அமெரிக்கர்களில் ஒவொருவரின் மீதும் 12000 டாலர் சுமை உள்ளது. இந்தோனேசியாவும், அர்ஜெண்டினாவும் வீழ்ச்சி பெற்ற போது இருந்த நிலையை விட இது மோசமானது.

பெட்ரோலியம் தயாரிக்கும் நாடுகளின் அமைப்பும் முழுக்க முழுக்க யூரோவிற்கு மாறிவிடவில்லை (அப்படி மாறினால் அதுவும் லாபகரமானதே, அமெரிக்கா கட்டாயப் படுத்தும் நிபந்தனைகளையும், சுமத்திய க்டன்களையும் தவிர்க்க முடியும்) ஆனாலும் அமெரிக்கா மீது அழுத்தம் மெள்ள மெள்ள அதிகரிக்கும். யூரோவில் வர்த்தகம் நடந்தால் உடனடியாய் நிகழ்பவை இவை.

* ‘ஐரோப்பிய அமைப்பில் ‘ இணையத் தயங்கி நிற்கும் நாடுகள், அமைப்பில் சேர முன்வரலாம். இது யூரோவை இன்னமும் வலுப்படுத்தும். இதனால் எண்ணெய் விற்கும் நாடுகள் யூரோவின் பக்கம் சாய்வது துரிதமாகலாம்.

* அமெரிக்க டாலர்கள் அமெரிக்கா நோக்கித் திரும்பலாம். அதனால் அமெரிக்க டாலரின் மதிப்புக் குறையும். அமெரிக்க வங்கிகளின் கையிருப்பு நாணயமாற்றும் , போதுமானதாய் இல்லாமல் இருக்கும்.

* சந்தையின் எதிர்வினை மோசமாகக்குட்டுமெனில் டாலரின் மதிப்பு இன்னமும் வீழ்ச்சியடையும்.

அமெரிக்கத் தீர்வு

யூரோ தரும் சவால்களை அமெரிக்கா எதிர் கொண்ட விதம் ஊகிக்கத்தக்கதே. வெளிப்படையாய்ப் போரிட்டது.

அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பினால் நான்கு முக்கிய லட்சியங்களை அமெரிக்கா சாதிக்க விரும்புகிறது.

* அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஈராக் மீண்டும் டால்ர்களில் மட்டும் எண்ணெய் வியாபாரம் செய்ய ஆர்ம்பிக்க வேண்டும்.

*மற்ற எண்ணெய் வர்த்தகர்களுக்கு மிகத் தெளிவாக டாலர் வட்டத்தில் இருக்கவேண்டும் என்று மிரட்டலையும், ஏச்சரிக்கையையும் தெரிவிக்க வேண்டும். ஈரான் இப்படியொரு செய்தியை ஏற்கனவே அமெரிக்காவினால் பெற்றுவிட்டது. ‘தீய சக்திகள் ‘ என்று அமெரிக்க வர்ணித்த நாடுகளின் பட்டியலில் ஈரான் – ஈரான் பல விதங்களில் ஜன்நாயகம் மேற்கொண்டு, மதவெறியை விட்டு ந்கர்ந்திருக்கிறது என்றாலும் – இடம் பெற்றது நினைவிருக்கும்.

* உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளம் அமெரிக்காவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

* அமெரிக்கா இஎண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் படைகளை இருத்திக் கொள்ள முடியும். பிரிட்டனும் , ஆஸ்திரேலியாவும் துணை போவார்கள். நம்பமுடியாது துருக்கி, சமாளிக்க முடியாத இஸ்ரேல், அல் கைதாவின் பிறப்பிடமான- அமெரிக்க எதிர்ப்பு உணர்வு பெரிதும் உள்ள- சவூதி அரேபியா போன்ற நாடுகளைத் தவிர்த்து அந்தப் பகுதியில் இயங்க முடியும்.

* ஐரோப்பிய யூனியனுக்கும், யூரோ நாணயத்திற்கும் இது பெரும் பின்னடைவாய் இருக்கும். இன்றைய நிலையில் அமெரிக்காவின் டாலர் மதிப்பிற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஒரே நானயம் யூரோதான்.

* ஈராக்கிலிருந்து வெனிசுலாவில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டங்களில் ஈடுபட இது உதவும். அமெரிக்க நண்பனாக ஒரு சர்வாதிகாரியை வெனிசுலாவில் நியமித்து வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்யலாம்.

டாலரை உபயோகித்து வர்த்தகம் செய்தாக வேண்டிய கட்டாயம் மீண்டும் உலகிற்கு ஏற்பட்டால், அமெரிக்கா பொருளாதார ரீதியாகவும், ராணுவரீதியாகவும் பெரும் சக்தியாய் வலுப்பெறும்.

ஜனாதிபதி புஷ் அமெரிக்க வாழ்முறையைப் பாதுகாப்பது என்பது பற்றிப் பேசினார். இது தான் வர கூறிய வாழ்முறை.

(அடுத்த இதழில் முடிவுறும்) **** ஜியோஃப்ரே ஹெர்ட் அவர்கள் மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர். சுற்றுச்சூழல், மனித உரிமைகளில் ஆர்வமுள்ளவர். Geoffrey Heard (c) 2003 http://www.globalpolicy.org/nations/sovereign/dollar/2003/03oil.htm

gheard@surf.net.au

Series Navigation

ஜியோஃப்ரே ஹெர்ட்

ஜியோஃப்ரே ஹெர்ட்