பார்வை

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

இராம வயிரவன்



மெல்ல
இமை திறந்து
உருள்கின்றன கருமுத்துக்கள்

குறுக்கே
முளைத்த
கண்ணாடிச் சுவர்கள்
நிறங்களைக்
கூட்டி வந்தன

பாய்ச்சப்படும் கதிர்களின்
நிரம்பி வழியும்
நம்பிக்கைகளின் பிடியில்
நீண்டு விரிகிறது
எனக்கான பார்வை

காணப்படு பொருள்
கண்வீச்சில்
எறிந்து சாம்பலாகிறது

பிசுபிசுத்த
மூளை மடிப்புக்கள்
சாம்பலை ஊள்வாங்கி
நோபல் விஞ்ஞானியாய்
ஊடுறுவி
பகுத்துச் சிதைத்து
பெரிதாய்ச் சாதித்த களைப்பில். .
தலை வலிக்கிறது

‘எப்படி பார்க்க வேண்டும்?’

விலகிப் பார்த்த போது
சூரியன் விண்மீனாகி
பதில் சொன்னது

‘மூளையால் பார்க்காமல்
இதயத்தால் பார்’


rvairamr@gmail.com

Series Navigation

இராம. வயிரவன்

இராம. வயிரவன்

பார்வை

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

ரேணுகா விசுவலிங்கம்


அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.அல்லியும் இன்னும் முடிக்காமல் இருக்கும் வேலைகளை அழகாக ஒரு புறமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மறுநாள் முக்கியமாகச் செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் மேஜையின் முன்பக்கம் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாரானாள். நாள் முழுவதும் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதனால் அவளுக்கு அடிக்கடி தலைவலி வரும். அன்றும் அவள் தலைவலியுடன் போராடிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதுவும் அவள் பொது விரைவு ரயில் வேறு எடுத்துச் செல்லனும். அந்த ரயிலில் வரும் கூட்டத்தை நினைத்துப் பார்த்தாலே போதும் தலைவலி பல மடங்கு அதிகரிக்கும்.அந்த கூட்டத்தை முந்தி அடித்து போக அவசரஅவசரமாகக் கிளம்பினாள். பக்கத்து மேசையில் ஜெனிப்பர் இன்னும் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன ஜெனி ?இன்னும் கிளம்பவில்லையா ? உனக்குத் தான் மணி ஐந்தாச்சுனா மூளையே வேலை செய்யாதே.எப்போடா வீட்டிற்கு ஓடலாம்ன்னு ஐந்தரை ஆகும் வரை அந்த கடிகார முள்ளையைப் பார்த்துக்கொண்டிருப்பே.என்ன இன்றைக்கு மேடம் பொறுப்பா வேலை பார்க்கிற மாதிரி தெரியுது ?” கிண்டலாகக் கேட்டாள் அல்லி.

அல்லியைப் பார்த்து முறைத்தாள் ஜெனி.”எல்லாம் என் நேரம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் பொறுப்புதான் முக்கியம்ன்னு நினைச்சு செய்தேன் பாரு.என்னைச் சொல்லனும். சின்னதா ஒரு தப்பு பண்ணிட்டேன் அதுக்கு நம் தலை இப்படியா டோஸ்ட் விடுறது.டோஸ்ட் மட்டுமா விட்டார் இன்றைக்கே இது கொடுத்தாகனும்னு கெடு வேறு. அதனால் நானே இங்கே டென்ஷனில் வேலை பார்க்கிறேன் உன்க்குக் கிண்டலா இருக்கு. போடா. முதலில் இடத்தைக் காலி பண்ணு.

“ஓ…இன்றைக்கு ஜெனிப்பர் அவர்களுக்கு நம் பிரியமான தலையின் தரிசனம் கிடைத்ததோ ?  அதனால் தான் இன்று காலை மேனஜர் அறையிலிருந்து வெளியே வரும் போது முகம் கருத்து இருந்ததோ. என்ன ஆச்சுன்னு கேட்கலாம்னு இருந்தேன் ஆனால் எனக்கே தலைக்குமேல் வேலை அதான் விட்டுட்டேன். இதான் சமாச்சாரம்மா.இங்கே பார் ஜெனி நிறைய கம்பனிகளின் கணக்கு வழக்குகள் எல்லாம் நம் கைகளில் தான் இருக்கு. அவற்றை ஒழுங்கா சரி பார்ப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதனால் நாம் தான் ஒழுங்கா தப்பில்லாமல் சரி பார்க்கனும். இதனால் தான் எனக்குத் தலைவலின்னு ஏதாவது வந்தாலே போதும்…அந்த கணக்குப் பார்ப்பதை அப்படியே ஒதுக்கிவைச்சுருவேன். அப்போ எனக்கு எதைப் பார்த்தாலும் தப்பா தெரியும்.அந்த விவகாரமே வேண்டாம்னு தான் இருப்பேன்.சரி சரி…நீ வேலையைப் பாரு. நாம் அரட்டை அடிப்பது தலைக்குத் தெரிந்தால் உன் கதி அவ்வளவு தான்.நான் கிளம்பறேன்.ரயிலில் கூட்டம் கூடிறபோது.சே…அதை நினைச்சாலே எரிச்சலா இருக்கு.கார் ஓட்டலாம்னு பார்த்தா என் அப்பா எங்கே விடுறாங்க.அவங்க உயிர் போல அந்த காரைப் பாதுகாக்கிறாங்க.ஆமாம்…அதை மட்டும் நான் ஓட்டினேன் பாதி நேரம் இது என் அப்பா கார் இது என் அப்பா கார்ன்னு நினைச்சு டென்ஷனில் நானே எங்கேயாவது போய் மோதிருவேன்.”

ஜெனி கொல்லென்னு சிரித்தாள்.

“இதெல்லாம் தேவை இல்லைன்னு தான் வீணா போன ரயிலின் கூட்டத்தில் அடித்துப் பிடித்துப் போகிறேன்.அந்த கூட்டத்தைக் கூட தாங்கிக்கலாம் ஆனால் இந்த ஆண்களின் பார்வையைத் தான் தாங்க முடியலே.”

“அது என்ன பார்வை டா ?”

“ம்ம்ம்…காம பார்வை.”

ஜெனி மீண்டும் சிரித்தாள்.

“சிரிக்காதே.அப்ப்பா…பார்த்தா உர்ன்னு பார்ப்பாங்க.பெண்ணைப் பார்க்காத மாதிரி.முறைத்தாலும் அசையாத மானிடர்கள். இப்படித் தான் அன்றைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன்.ஒரு ஆடவன் வந்து உட்கார்ந்தான் எதிர் புறத்தில்.திருவிழாவில் தொலைந்து போன பையன் மாதிரி ஒரு பார்வை.அந்த பார்வையை என் மீது வைத்தது தான் நான் இறங்கும் வரை எடுக்கவே இல்லையே.

“ஐயோ டா” ஜெனி சிரித்தாள்.”நீ என்ன பண்ணே ?”

“என்ன பண்ண முடியும் ? பார்த்தால் பாரத்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன். சரி டா.நேரம் ஆகுது.நான் கிளம்பறேன்.நாளைப் பார்ப்போம்.பை.”

“பை”

****

“நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஆர்ச்சர்ட்.”

கூட்டம் அன்று அதிகமாக இருந்தது. அல்லி சலித்துக் கொண்டாள்.கடிகாரத்தை அடிக்கடி பார்த்தாள் கொண்டாள். பக்கத்தில் இடித்துத் தள்ளிக் கொண்டிருந்த கூட்டத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்றபோதுதான் அவள் அவனைப் பார்த்தாள். அவன் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பதைப் பார்த்தாள். அவள் முகம் கருத்துப் போனாள். அவன் பார்க்க அவளை விட இளையவனாகவும் இருந்தான். அவள் பின்பக்க பிடியை இறுக்கிப்பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் திரும்பி நின்றாள். அப்போதும் அவன் பார்வை அவள் மேல் தான் இருப்பதை உணர்ந்தாள். ஆனால் அவளால் அந்த கூட்டத்தில் என்ன செய்ய முடியும் ? தலைவலியின் அவதி வேறு. இதற்கு மேல் பக்கத்தில் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த சிசு வேறு. எப்போடா அவள் இறங்கும் இடம் வரும் என்று நெருப்புமேல் நிற்கிற மாதிரி இருந்தாள்.

அல்லி அப்போப்போ அவன் பார்க்கிறானா என்று ஜாடையாகப் பார்த்தாள். அவர்களின் கண்கள் சந்தித்தன.உடனே தலையைத் திருப்பிக்கொண்டாள். என்னன்னவோ எல்லாம் நினைத்தாள்.

“பார்க்க என்னை விட இளையவனாக இருக்கிறான்..சே…கலிகாலம் ரொம்ப கெட்டுப் போச்சு. நல்ல வேளை நான் இறங்கும் இடம் வந்துவிட்டது.”

தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் வழி விடுங்க எனத் தள்ளிக் கொண்டு எப்படியோ வெளியேறினாள். வெளியேறியவுடன் மேலே நிமிர்ந்து பார்க்கையில் அவன் அங்கு நின்றான். இவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.அவன் பக்கத்தில் வந்தான்.

“நீங்கள் அல்லி தானே ?”

அல்லியின் கண்கள் விரிந்தன. “அக்கா நான் தான் டினேஷ். உங்கள் சிண்டா துணைபாட வகுப்புகளில் படித்த ஒரு மாணவன். நியாபகம் இருக்கிறதா அக்கா ?’

அல்லி”ஓ மை காட்!டினேஷ் ராஜாராமன் ?”

அந்த இளைஞன்  புன்னகைத்தான்.

“மை காட்.5 வருடங்களில் எப்படி மாறிவிட்டாய்.அடையாளமே தெரியவில்லை.நான் வேறு யாரோன்னு நினைச்சுட்டேன்.ஐ யம் ஸாரிடா..!”

“சாரி அக்கா.ரயிலில் உங்களைப் பார்த்தேன். நீங்கள் தானான்னு செக் பண்ண உங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். தப்பா இருந்தால் மன்னிச்சிருங்க அக்கா. உங்களைப் பார்த்தவுடன் உங்கள் கூட பேசியே ஆகனும்னு தோனுச்சு. நான் என் ஓ-நிலை கணக்குத் தேர்வில் மிகவும் சிறப்பாகச் செய்தேன். இந்த வெற்றிக்குக் காரணம் நீங்கள் தான் அக்கா. மிக்க நன்றி.”உணர்ச்சி பொங்க பேசினான்.

அல்லி மெய் சிலிர்த்துப் போனாள். இதை இவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. புன்முறுவலுடன் “அப்படி எல்லாம் ஏதும் இல்லை.உன் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் முக்கிய காரணம்.நீ நன்றாகச் செய்தாய் எனக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சரி இப்போது நீ என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் ?

“தேசிய சேவை முடித்துவிட்டேன்.அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லப் போகிறேன்.அங்கே மனோத்தத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது.”

“அப்படியா ?உனக்கு என் வாழ்த்துக்கள்.நல்ல படியா படி.சாரி டா.உன்னை முறைத்து முறைத்துப் பார்த்ததற்கு பட் நிஜமாகவே உன்னை அடையாளம் கண்டுக்க முடியலே.ரொம்பவும் மாறிவிட்டாய்.ஆமாம் உன் கூட படித்த மாலதி, தீபன் அப்புறம் அந்த துறுதுறுன்னு இருப்பானே விஜயன்.அவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்.”

“தீபனும் என்னுடன் சேர்ந்து படிக்க வருகிறான்.மாலதி பற்றி எனக்குத் தகவல் இல்லை.விஜயன் இங்கே சட்டம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது.”

“விஜயனுக்கு ஏற்ற துறை தான்.யப்பா…என்னம்மா பேசுவான்.வீட்டுவேலை செய்யாமல் இருந்ததற்கு எத்தனை விதமான காரணங்கள்.நினைச்சுப் பார்த்தால் சிரிப்பா வருது.எப்படியோ எல்லாம் நன்றாகக் இருக்கிறார்கள்.அவர்களைப் பார்த்தால் நான் கேட்டதாச் சொல் சரியா ?ஓகே டினேஷ் உன்னைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.என்க்கு நேரமாச்சு.நான் கிளம்பனும்.யு டேக் கேர் ஓகே.ஆல் தி பெஸ்ட்.”

அவனும் சிரித்துக்கொண்டு விடைபெற்றான்.

****

ஜெனி வாய்விட்டுச் சிரித்தாள்.

“என்ன சிரிப்பு ?”

“அப்புறம் ?”

“என்ன அப்புறம்.அசடு வழியாத குறைதான் எனக்கு. டேக் கேர்ன்னு சொல்லி கிளம்பிட்டேன்.”

“ இல்லை..நேற்று உனக்குத் தலைவலியா இருந்ததா அதான் பார்த்ததை எல்லாம் நீ தப்பு தப்பா கணக்குப் போட்டே பார்த்திருக்கே. பாவம் உன் முறைப்பில் அந்த பையன் எப்படி பயந்தானோ.”

“அதெல்லாம் ஒன்றும் இருக்காது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் ஜெனி. எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்காதுன்னு நல்லா புரிந்து கொண்டேன். இப்போ நேற்று நீ திட்டு வாங்கினாய் தானே ?”

“அய்ய்…அதை ஏன் திரும்ப நியாபகப்படுத்திறே”

“கேளு டா. உன் பார்வைக்கு நீ உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் வேலைதான் முக்கியம் என்று எண்ணி செய்த பொறுப்பாகத் தெரிந்தது ஆனால் நம் தலையின் பார்வைக்கு நீ கவனக் குறைவால் செய்த தவறாகத் தெரிந்தது. அதன் விளைவு நீ திட்டு வாங்கியது. இதை நாம் தான் புரிந்து கொள்ளனும். இனி நான் தப்புக் கணக்குப் போட மாட்டேன்.”

“நீ சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. அப்போ அந்த திருவிழாவில் தொலைந்து போன பையன் மாதிரி ஒருவன் பார்த்தானே ?அது ?”

“அதுவா ?அது…மே..பி அவன் பார்வைக்கு.. நான் அவனது காதலி மாதிரியோ மனைவி மாதிரியோ இருந்தேனோ என்னவோ. யாருக்குத் தெரியும்.

”இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

மேனஜர் அறையிலிருந்து உறுமும் சத்தம் கேட்டது.

“ஸ்ஸ்ஸ்…சரி சரி..நம் தலையின் பார்வை நம் மீது இருக்கு. அவர் பார்வையே சரியில்லை… ஒழுங்கா வேலையைப் பார்ப்போம்.” இருவரும் மீண்டும் “கொல்” என்று சிரித்தனர்.

~ முற்றும் ~

padavarascal@hotmail.com

Series Navigation

ரேணுகா விசுவலிங்கம்

ரேணுகா விசுவலிங்கம்