ஞானோதயம்

This entry is part of 12 in the series 20001112_Issue

ரகுநாதன்


‘காஞ்சனா ‘ ‘

பதிலில்லை.

‘கமலா ‘ ‘

பதிலில்லை.

‘ரத்னா ‘ ‘

பதிலில்லை.

‘ரங்கா ‘ ‘

பதிலில்லை.

அவன் சோர்ந்து போனான். ஒன்றா, இரண்டா ? எத்தனை கதவுகள் ‘ ஓங்கி ஓங்கித் தட்டி, அவன் முஷ்டி கூட வீங்கிவிட்டது.

அதோ, ரத்னாவின் வீட்டு மாடியில் விளக்கு எரிகிறது ‘ அவள் தூங்கியிருக்க மாட்டாள் ‘

‘அதோ காஞ்சனாவின் வீட்டுக்குள் காற்சிலம்போசை கேட்கிறது. அவள் தூங்கியிருக்க மாட்டாள் ‘

அதோ ரங்காவின் வீட்டுக்குள் பேச்சுக் குரல் கேட்கிறது. ஆண் குரல் ‘……..அவளும் தூங்கவில்லை ‘

அதோ கமலாவின் வீட்டுக் கதவு திறக்கிறது. புதிதாக ஒரு ஆசாமி நுழைகிறான். சிரிப்பு கலகலக்கிறது. அவளும்……. ‘

அவனுக்கு உடம்பெல்லாம் பற்றி யெறிந்தது. சப்த நாக்குகளையும் சுற்றிச் சுழலும் அக்னியைப் போல், உடம்பெல்லாம் கனன்று கொழுந்துவிட்டுக் கொதிப்பது போல் இருந்தது.

அவன் மனசில் ஒரே எண்ணம்: கலவி ‘ உடம்பில் ஒரே நெருப்பு: காமம் ‘

அவர்கள் ஏன் கதவைத் திறக்கவில்லை ? ஒரு காலத்தில் அவர்கள் அவனது இதழ் அமுதுக்காக, எச்சில் தம்பலத்துக்காக, இனிய வார்த்தைக்காகத் தவம் கிடக்கத்தான் செய்தார்கள். அந்த அமுதம் இன்று கசந்து விட்டதா ? அந்த ஆனந்தம் இன்று அழிந்துவிட்டதா ?

‘ஏன் என்னை அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள் ‘ ‘

அவன் துடித்தான்.

அவன் ரோகி ? குஷ்டரோகி ‘ அவனோடு கலந்து அவர்கள் அந்த ரோகத்தைத் தாங்களும் பெறத் தயாராயில்லை. குஷ்டரோகியொடு கூடிக் குலவுவதா ? ஆனால்… ஆனால், அந்த ரோகமே அவர்கள் தந்த வரப் பிரசாதம் தானே ‘

கொடுத்த தானத்தை திரும்பப் பெற்றால் என்ன ? அவனிடமிருந்து அவர்கள் பணம் பெறவில்லையா ? வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், கோமேதகம், மரகதம் எல்லாம் பெறவில்லையா ? இதையும் பெற்றுக்கொண்டால் என்ன ? இல்லை. அவர்கள் பெற்ற சாமானைத் திருப்பித் தரவும் மாட்டார்கள்; கொடுத்த நோயையும் திரும்பப் பெறமாட்டார்கள் ‘ அப்படித்தானா ?

இல்லை. இல்லை, இப்போது பணம் கொடுத்தால், அவர்கள் அவனைக் கலப்பதற்குக் கூசமாட்டார்கள். அவனையா கலக்கிறார்கள் ‘ அவன் தரும் பணத்தை ‘ நாய் விற்ற காசு குரைக்குமா ? பணம் தந்தால் பிணத்தையும் ‘…. அவர்கள் தாசிகள் ‘ வேசிகள் ‘…

ஆனால் பணத்துக்கு அவன் எங்கே போவது ? கை முதலைக் கொள்ளைக் கொடுத்துத்தான் அவன் காலமெல்லாம் அந்தச் சுகத்தை அனுபவித்தான். ஆனால், ஆசை, இருபதிலும் அறுபதிலும் குறையாத அந்த ஆசை, இன்றுமட்டும் இற்று விட்டதா ?

அவனுக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: ஒரு பெண். ஒரு சதைப் பிண்டம். இல்லை……பிறந்த இடம் நோக்கும் பேதை மனசுக்கு ஒரு சாந்தி; கறந்த இடம் நோக்கும் கண்ணுக்கு ஒரு திருப்தி ‘

அவன் உடம்பெல்லாம் கொதித்தது. என்ன பண்ணுவதென்று தெரியாமல், அந்த வீட்டு முன்னால், அந்தத் தெருவிலே, நாயும் படுத்துறங்கும் அந்தத் திண்ணையிலே கிடந்தான். இந்திரன் கண்களைப்போல் உறுத்தும் தொழும்புப் புண்களின் நமைச்சல். வேள்வித் தீயாய் நிமிர்ந்தெரியும் காமாக்கினி. அவன் நிலை கொள்ளாமல் புரண்டு கிடந்தான்.

அவனை யாரும் அழைக்கவில்லை.

இல்லை. அதோ யாரோ அழைக்கிறார்கள் ?………

நிலவொளியில் தூரத்தில் தெரியும் கோபுர கலசத்திலிருந்து கண்டாமணி ஓசை ஒலித்தது; வயல்வெளியை, வான வெளியைத் தாண்டி நீந்தி அலையலையாய் வந்த அந்த ஓசை அவனை ‘வா வா ‘ என்று அழைத்தது ‘

‘என் வேகும் உள்ளத்துக்கு அந்தக் கோயிலாவது சாந்தியளிக்குமா ? என் உடலைத் தகிக்கும் காம நெருப்பு, அந்த கண்ணுதலின் கருணையால் அணைந்துவிடுமா ? இனி எனக்குக் கோயில்தானா கதி ? அங்காவது சாந்தி கிடைக்குமா ? ‘

அவன் மனம் அல்லாடியது.

கண்டாமணி ஓசை ‘வா வா ‘ வென்று அழைத்தது.

‘வருகிறேன், வருகிறேன் ‘ என்று அவன் உள்ளம் கூவியது.

அவன் எழுந்திருந்து வயல் வெளியின் ஊடாக ஓடினான்; காலடியில் நத்தைக் கூடுகள் நொறுங்கின; நீர்ப் பாம்புகள் நசுங்கின; கதிர்த் தாள்கள் காலை யறுத்து ரத்தம் குடித்தன.

அவன் ஓடினான்; கண்டாமணி ஓசை ஒலித்துக் கொண்டே இருந்தது ‘

2

இதுதான் கோயில்.

அவன் ஓடிவந்த பெருமூச்சு இரைக்க நின்றான்; நிமிர்ந்து கோபுரத்தைப் பார்த்தான்: உச்சியிலே விளக்கெரிந்தது. அந்த நிலவொளியின் பகைப்புலத்தில் கோபுரம் மோகினித்தேவு போலத் தோன்றியது.

‘சே ‘ இதென்ன கற்பனை ‘ ஆண்டவன் சந்நிதியைத் தேடி வந்த இடத்திலுமா இப்படி– ? ‘

அவன் கோவிலுக்குள் சென்றான்.

முன் மண்டப முகப்பில் ஒரே கூட்டம். ஒளிமயமான மேடையில், ஜாஜ்வல்யமாக வெட்டி மினுக்கி, மின்னல் தெறிக்கும் பட்டுப் பாவாடை கட்டி ஒரு பெண் நடனமாடிக் கொண்டிருந்தாள். முன்னே திருநீறு நிறைந்த சிவநேசர்கள் அந்த அபிநயத்தில் ஆத்மார்த்தம் கண்டு கொண்டிருந்தார்கள் ‘

அவன் அவளைப் பார்த்தான் ‘

‘வா வா ‘ என்று அபிநயிக்கும் பிஞ்சு விரல்கள் ‘ செம்பஞ்சு தீட்டிய பாதத்தின் நாக படம் போன்ற நளினம் ‘ கடைந்தெடுத்த திருமங்கிலியச் செப்பைப்போல் திரண்டு குவிந்த கச்சிறுக்கு ‘

‘இதென்ன இது. என் மனம் மீண்டும் அல்லாடுகிறதே ‘ இதென்ன கோயிலா, விபசார மடமா ? ‘

அவன் அங்கிருந்து ஓடினான்.

மேலப் பிரகாரத்தில் பெளராணிகர் கதை படித்தார். ‘சிற்றினப வேட்கையில் தீயும் மனசுக்கு, அந்தக் கதா காலட்சேபமாவது புண்ணிய வசனமாகக் காதில் விழுந்து சாந்தி தராதா ? ‘ என்று அவன் கருதினான்.

ஆனால், அவரோ சிவபெருமான் பார்வதியைக் கலந்து, அதனால் ஏற்பட்ட கொதிப்பை சரவணப் பொய்கையிலே, கார்த்திகைப் பெண்களின் கண்காணிப்பிலே விட்ட கதையை…..

‘அட, தெய்வமே ‘ சரவணபவா ‘ இதென்ன இது ‘ கோயிலும் சிற்றின்பம்தானா ? சிற்றின்பப் பிரசாரம்தானா ? ‘

அவன் மீண்டும் ஓடினான்.

பக்கத்தில் முருகனின் திருக்கோயில் இருந்தது. அவன் அங்கு நுழைந்தான்.

அவன் சென்ற சமயம் புரோகிதர் சிலைகளைக் கழுவி, புத்தாடை புனைந்து கொண்டிருந்தார்.

அவன் கண் முருகனிடம் நிலைக்கவில்லை. பக்கத்திலே குறுஞ்சிரிப்பு குமிழிட, சாயாத கொம்பு இரண்டும் வல்லீட்டியைப் போலக் கண்ணை உறுத்த, ஓடிந்து விழப் போகும் இடையை தாங்க, தன்னையறியாமலே கை நீளும்படிச் செய்யும் ஒயில்காட்டி நிற்கும் அந்தக் கானக் குறத்தியிடம், வள்ளியிடம் அவன் பார்வை நிலைத்தது.

‘அந்தச் சிலை மட்டும் உயிருள்ள யுவதியாக இருந்தால் ?— மீண்டும் அந்த எண்ணம் ‘ அந்த நெருப்பு அவியாதா ? ‘

அவனுக்கு அங்கு நிற்கக் கொள்ளவில்லை வெளியே ஓடிவந்தான்.

எதிரே விநாயகப் பெருமான்–விக்நேஸ்வரர் இருந்தார் ‘ ‘ஆண்டவா ? என்னைக் காப்பாற்று ‘ ‘ என்று அவன் உள்ளம் இரங்கிற்று. ஆனால், விநாயகப் பெருமானைச் சுற்றி வரையப்பெற்ற அந்தச் சித்திரங்கள்…….

அவை அவன் கண்களை உறுத்தின.

அசுரர்களின் பிறப்பை ஒடுக்க எண்ணி, அரக்கியின் கருவாயிலைத் தன் துதிக்கையால் பந்தம் செய்து கொண்டிருந்தார் அந்த விநாயகர்; அவர்தான் உச்சிட்ட விநாயகர் ‘

‘இதென்ன இது ? தம்பியும் அப்படி ‘ அண்ணனும் இப்படியா ? இந்தத் தெய்வமா பிரம்மச்சாரி ? எந்தத் தெய்வமுமே எனக்குச் சாந்தி தராதா ? நான் இப்படியே வெந்து நீறாக வேண்டியதுதானா ? ‘

அவன் மீண்டும் ஓடினான்.

ஆனால், கோயிலில் எங்கு திரும்பினாலும் இதே காட்சிகள். இதே சிலைகள். இதே சிற்பங்கள்.

அதோ மன்மதன் கரும்பு வில்லை வளைத்து அம்பு எய்கிறான்; எதிரே ரதி கிளி வாகனத்தில் கச்சை மறைத்த துணி நெகிழ்ந்து சரிய, நெற்றிக்குத் திலகம் இடுகிறாள் ‘

அதோ இரு காதலர்கள். வரிசை வரிசையாக காதல் காட்சிகள் ‘ ஆலிங்கன வகைகள் ‘ ராஜக்கிரீடை; காம உத்சவம்; காதல் நாடகம் ‘

‘இதென்ன கோலம் ‘ இதுவா கோயில் ? இங்கேயா நான் சாந்தியைத் தேடி வந்தேன். இதைவிட, ஒரு தாசியின் மடியில் சாந்தி கிடைக்குமே ‘ அட தெய்வமே ‘ ‘

அவன் ஒன்றும் புரியாமல் கண்ணை மூடிக்கொண்டு மூலஸ்தானத்துக்குள் ஓடினான். ‘கடவுளே ‘ என்னைக் காப்பாற்று. என் காமப் பசியைக் கொன்றுவிடு. நீதான் கதி. நீதான் சரண் ‘ என்று வெறிபிடித்துக் கத்தினான்.

கண்களைத் திறந்து மூல பிதாவை ஏறிட்டுப் பார்த்தான்.

ஆனால், அங்கு மூல பிதாவே லிங்க உருவாய் நின்றார் ‘

அவன் தலை கிறுகிறுத்தது;

மறுகணம் அவன் கால்கள் அங்கு தரிக்கவில்லை. ஓடியே வந்தான். கோயிலைவிட்டு, மூலஸ்தானத்தைவிட்டு முருகக் கடவுளைவிட்டு, விநாயகப்பெருமானைவிட்டு ஓடியே வந்துவிட்டான்.

அப்போது கண்டாமணி ஓசை அவனை அழைக்கவில்லை.

3

அவன் வீட்டுக்கு வந்தான்.

கதவு திறந்தே கிடந்தது.

அவன் மனம் கட்டுத்தறி இழந்த காளையைப் போலத்தான் இன்னும் துள்ளியது. அதை அடக்க அவனால் முடியவில்லை.

‘நெருப்புத்தான் நெருப்பை அணைக்கும் தனிமையில் வேகும் தன் உடல் நெருப்பை, வான மண்டலத்தின் சுடு நிலாவாவது அணைக்கட்டும் ‘ என்று நிலா முற்றத்துக்குச் சென்றான்.

அங்கு அவன் கண்ட காட்சி–

நிலா முற்றத்தில் மாதவிப் பந்தலின் நிழலிலே துகிலாய், அவள் படுத்திருந்தாள். குங்குமம் தீட்டிய மார்புக்குவடு, சக்கரவாகப் பட்சிப்போலத் தெரிந்தது. அவிழ்ந்து தொங்கும் கருமேகக் கூந்தல் நிலவொளியில் அருவிபோல மின்னிற்று. கண் மலர்கள் குவிந்திருந்தன; இதழ்கள் குவிந்திருந்தன. அதில் குறுஞ்சிரிப்பு. ஆனந்தக் கனவோ ? அல்லது கடந்த கால அனுபவத்தின் நினைவில் வெடித்த நகையோ ?

அவன் அவளையே பார்த்தான்.

அவன் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பெண்: ஒரு பெண்ணின் சதைப் பிண்டம். பட்சியை வாவென்றழைக்கும் பழுத்த மாம்பழத்தின் மோகனம் ‘

அவன் கைகள் விறைத்துத் துறுதுறுத்தன. உடம்பு விண்ணென்று தெறிந்தது. கண்களின் ரத்தம் பாய்ந்து, ரேகைகள் துடித்தன; நெற்றிப் பொருத்துகள் புடைத்தன.

அவன் ஓடித்தாவினான்; அங்கு சொகுசாக ஆனந்த சயனம் பண்ணும் அந்தப் பெண்ணை, அந்தப் பெண் உடம்பை அள்ளி யெடுத்தான்; அணைத்தான்; ஆரத்தழுவினான் ‘

இதழ் ஈரம் பரிவர்த்தனையாயிற்று.

அவள் விழித்துக் கொண்டாள். திடுக்கிட்டு எழுந்தாள்; திகைத்தாள்.

அவள் கண்டத்திலிருந்து ஒரே வார்த்தைதான் வெடித்து விழுந்தது:

‘தம்பீ ‘ ‘

அவன் காதில் அது விழவில்லை. அவன் மனம் அதைக் கேட்கவில்லை; அணைத்தான் ‘ முயங்கித் தழுவினான் ‘

‘தம்பீ ‘ ‘

அவள் கத்தினாள்

அதோ அவள் அழைக்கிறாள். அவன் காதில் அது விழவில்லை. ஆனால், அந்தக் குரலுக்கு மேலாக எங்கிருந்தோ மீண்டும் நிலவொளியைக் கீறிக்கொண்டு, பனிப் படலத்தின் புகை மூட்டத்தைப் பிளந்துகொண்டு அந்தக் கண்டாமணி ஓசை வந்தது; வந்து அவனை அழைத்தது ‘

அவன் விழித்துக் கொண்டான்.

‘தம்பீ ‘ ‘

அந்தக் குரலும் இப்போது கேட்டது. கண்டாமணி ஓசையும் கேட்டது.

‘தம்பீ ‘ இதென்ன காரியம் ? ‘ என்று அவள் கேட்டாள்; அதே கேள்வியை அவன் மனம் முந்திக் கேட்டு விட்டது.

அவனால் அங்கு நிற்கமுடியவில்லை; கண்டாமணி ஓசையின் அழைப்பை உதற முடியவில்லை. ஓடினான்; பதிலே பேசாமல் ஓடினான்; அவளை ஒரு முறைகூட நிமிர்ந்து பார்க்காமல் ஓடினான்.

நிலவு மேகச் சேற்றில் அமிழ்ந்துவிட்டது. தெருவிலே ஒரே இருள். அவன் மனசிலும் இருள். அந்தக் கண்டாமணிதான் அவனுக்கு வழி சொல்லிற்று. ஓடினான்.

இருளில் எங்கோ ஒரு கழுதை கத்துவதை அவன் கேட்டான்.

அதைத் தொடர்ந்து இரு குரல்கள் எங்கோ வார்த்தைகளை இருளில் தேங்கவிட்டன.

‘கிளம்பு. கழுதை கனைக்குது. நல்ல சகுனம் ‘ ‘ என்றது முதற் குரல்.

‘இல்லையடா ? அது கத்தி தொலைக்குது ‘ ‘ என்றது பதிற்குரல்.

அந்தக் கழுதையின் சத்தமும், இந்த மனிதக் குரல்களும் அவனுக்கு ஞனாசிரியனின் தோன்றாத் துணைப் போத வாசகமாக, வேத கோஷமாக ஒலித்தன.

அவன் மணியோசை வந்த திக்கை நோக்கி, கோயிலை நோக்கி ஓடினான்.

4

‘முருகா ‘ ‘

அவன் கத்திக்கொண்டே ஓடினான். அவன் குரல் எதிரொலித்துத் திரும்பி வந்தது.

கோயிலின் முன் கதவு திறந்து கிடந்தது.

‘கந்தா ‘ ‘

குரல் எதிரொலித்தது; இரண்டாம் கதவும் திறந்தே கிடந்தது.

‘சண்முகா ‘ ‘

குரல் எதிரொலித்தது; மூன்றாம் கதவும் திறந்த கிடந்தது.

‘வேலவா ‘ ‘

‘சரவணபவா ‘ ‘

‘கார்த்திகேயா ‘ ‘

எல்லாக் கதவுகளும் திறந்தே கிடந்தன; எல்லாக் குரல்களும் எதிரொலித்தன.

மூலஸ்தானம் நெருங்கிய போது, அவன் ஓடிவந்த வேகத்தில் படிதட்டி விழுந்தான்; அவன் பிரக்ஞை அவனைக் கைவிட்டது.

மயக்கம் தெளிந்து எழுந்த போது அவன் கண்டத்திலிருந்து பின் வரும் நாதம் எழுந்தது:

அளக நிரை குலைய விழி குவியவளை கலகலென

அமுத மொழி பதறி யெழ அணியாரம்

அழகொழுகு புளகமுலை குழைய இடை துவளமிக

அமுத நிலை அது பரவ அதிமோகம்

உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனும்

உறுகபடம் அதனில் மதி அழியாதே…….

அவன் பாடினான். அவன் பாடியது திருப்புகழ்; அவன் அருணகிரி ‘

Series Navigation