‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


உதிரத்தை உணவாக்கி உயிரூட்டிக் காத்தவுயிர்
சதிரத்தில் குழைத்துச் சந்தனமாய் வார்த்தவுடல்
சதிகாரத் தீவாயில் சத்துணவு ஆனதுவே
அதிகாரப் பேயெல்லாம் அலட்சியமாய் இருந்தெனவே
காக்கும் கடவுளுக்குக் கண்குருடு ஆனதுவோ!
ஆக்கும் அதனாற்றல் அழிவைத் தடுக்காதோ!
கொத்திப் பிஞ்சுகளைக் கொன்றனவே தீக்கழுகு
கத்தியும் கதறியும் காதடைத்துப் போனதுவோ!
கருகும் உயிர்க்கொழுந்தைக் கண்மணியாம் குலக்கொழுந்தை
உருகும் மெழுகாக்கி உயிர்குடிக்கும் கோரத்தை
வரலாறு படைப்பதற்கு வளர்ந்துவரும் பிஞ்சுகளை
விறகாக்கும் தீப்பசியை விரைந்து தடுக்காமல்
உறக்கத்தில் இருந்தாரோ! உள்ளமும் கல்லாமோ!
இரக்கத்தின் வடிவமென்று இனியாரை அழைப்போமோ ?
குருதி நெய்யாகி குழவியுடல் விறகாகி
எரியும் தீயழகில் இதயம் இழந்தாரோ ?
எத்தனையோ மதமிருந்தும் எல்லோர்க்கும் இறையிருந்தும்
அத்தனையும் இருந்து ஆனதென்ன இந்நேரம் ?
நீர்ப்பசி தீப்பசி நிலப்பசி நேரும்போது
பார்த்துக் கொண்டிருப்பதா பரம்பொருளின் வேலை ?
சித்தம் கலங்கிச் சின்னாப் பின்னமாகிப்
பித்தாகித் தவிக்கும் பெற்றெடுத்தத் தெய்வங்கள்
கண்இரில் கரைகின்றார் கையெடுத்துத் தவிக்கின்றார்
அன்னாரின் துயர்களைய ஆர்வந்தும் ஆவதென்ன ?
பேறுகால வலிதாங்கி பேர்நிலைக்க ஈன்றோர்க்கு
ஆறுதலாய் யார்குரலும் ஆகாது! உண்மையிது!
நானழுது என்னசெய்ய ? நாடழுதும் ஏதுசெய்ய ?
போனவுயிர் போனதுதான் போக்கில்லை மீட்பதற்கு
கண்இர் அளவுக்கும் காவிரியில் நீரில்லை–(எங்கள்)
கண்இரின் காவிரியோ கடல்தாண்ட வழியில்லை
தண்இர் இருந்திருந்தால் தீத்தாகம் தீர்ந்திருக்கும்
என்னே கொடுமையிது! எமனுக்கே அதிர்ச்சியிது!
அழுது எழுதியதில் ஆதாயம் கவிதைதான்
அழவைக்கும் வரலாறாய் ஆனது கொடுமைதான்
அரசியல் வாதிகளும் அரிதாரம் பூசிகளும்
அரசியல் பேசாத அதிசயம் செய்திதான்
நெஞ்சம் கனத்தோரின் நெகிழ்ச்சி உலகெங்கும்
அஞ்சலியாய்த் தொடர்கிறது அவனி அழுகிறது
இழப்பு! இழப்பு! ஈடற்றப் பேரிழப்பு!
பிழைப்பே அவர்களுக்குப் பிடிப்பற்றுப் போகும்தான்
விழுதுகளை இழந்தோரின் வீடு வெற்றிடம்தான்
எழுந்து நடப்பதற்கு இன்னும்நாள் ஆகும்தான்
முடங்கிப் போகாமல் முன்னேற்றம் காணுதற்குத்
திடமான நெஞ்சம் தீர்வாகக் கிட்டட்டும்
மீண்டு(ம்) புதுவாழ்வு மிகவிரைவில் எட்டட்டும்
மீண்டும் தீநாகம் தீண்டுவது நிற்கட்டும்
கற்பனைகள் கனவுகள் கரியாகிப் போனதினால்
அற்ப ஆசைக்கெல்லாம் அர்த்தமில்லை மானுடமே!
வாழுகிற காலம்வரை வாழுங்கள் இரக்கமுடன்
சூழும் சூதகற்றி சுற்றம் நலம்பேணி
ஆல விழுதுகளாய் ஆழ வேரூன்றி
ஆழத்துயர் அகற்றும் அறப்பணிகள் தொடங்குங்கள்
அர்ப்பணிப்பு நிறைந்ததென அரவணைப்புக் கொண்டதென
அர்த்தப் படுத்துங்கள் அதுதான் வாழ்க்கை
சடங்கன்று வாழ்க்கை சத்தியத்தை நாட்டுங்கள்
தடமாகிப் போங்கள் தழைக்கட்டும் நல்லறங்கள்
—-
ilango@stamford.com.sg

Series Navigation