செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:

This entry is part of 57 in the series 20060317_Issue

கற்பக விநாயகம்


‘சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத்தோற்றங்கள் ‘ என்று குருஜி கோல்வல்கர், வருணாசிரம தருமத்தை நியாயப்படுத்தி இருப்பதையும், ‘ஒருவரது குலமோ, பிறப்போ அல்ல.இயல்பே வர்ணத்தின் அடிப்படை ‘ என்று அவர் சொல்லி இருப்பதையும், அரவிந்தன் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்துடன், ‘சாதிகள் என்பதெல்லாம் கிடையாது இந்து மதத்தில், வருணாசிரமமே மேன்மையானது ‘ என்றெல்லாம் ஆரிய சமாஜிகள் வாதாடியபோது, அம்பேத்கர், வருணாசிரமத்தின் தன்மைகளைப் பின்வருமாறு தோலுரித்திருக்கிறார்.

‘அப்படி என்றால், ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் ? ‘ என்று கேட்ட அம்பேத்கர், ‘வர்ணமும், சாதியும் எண்ணிக்கையில்தான் 4,400 எனப் பிரிந்திருக்கிறதே ஒழிய, தன்மையில் ஒன்றுதான் ‘ என்றும்,

‘மேலை நாடுகளைப்போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை ? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும், கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருக்கிறான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமையும் கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடுபோல் உழைத்து சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர-பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒரு வாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது ‘ என்றும் வர்ணாசிரமத்தின் தன்மையைத் தெளிவாக்கி உள்ளார் அம்பேத்கர்.

****

நால்வகையான தோற்றம்தான் வர்ணம் என குருஜி புளகாங்கிதம் அடைந்திருக்கலாம். அத்தோற்றங்கள் எவ்வாறு அருவருப்பான செயலைச் செய்யக்கூடும் என்பது, அம்பேத்கரின் சவுதாகர் குளப்போராட்டத்தின்போது உலகிற்கு வெட்ட வெளிச்சமானது.

மராட்டியத்தில் சவுதாகர் குளப்போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிராக நீர் மொள்ளும் போராட்டத்தைத் தொடக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே, ‘இந்துக்கள் ‘, 108 பானைகளில் சாணி, பால், பசு மூத்திரம், தயிர் ஆகியவற்றைக் கொட்டி, பார்ப்பனர்களின் யாகத்தோடு அக்குளத்திற்குத் தீட்டுக் கழித்தார்கள்.

இச்சம்பவம் நடந்த கால கட்டத்தில் மராட்டியத்தில் ஆர் எஸ் எஸ் இயங்கிக் கொண்டுதான் இருந்தது. இச்சம்பவத்தை ஆர் எஸ் எஸ் ஆதரித்ததா ? எதிர்த்ததா ? என்பதை நீலகண்டன் சொல்ல வேண்டும்.

****

தமிழகத்தையே உலுக்கிய கொடிய சாதிக்கலவரங்களில் 1957 சட்டமன்றத்தேர்தலை ஒட்டி நடந்த முதுகுளத்தூர் கலவரமும் ஒன்று.

தேர்தல் காரணத்தை சாக்காக வைத்து, தலித் மக்கள், ஆதிக்க சாதியால் கொடூரமாய்த் தலை சீவப்பட்டு மண்ணில் வீசப்பட்டனர்.

தலித் மக்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். மாதக்கணக்கில் இக்கொலைகள் தொடர்ந்தபோது, மாவட்ட ஆட்சியர் சமாதானக்கூட்டம் கூட்டினார். அதில் தலித் மக்களின் பிரதிநிதியான இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவருக்கு சமமாக உட்கார்ந்து பேசியது பிடிக்காததால், ஆதிக்க சாதியினர் அவரைப் பரமக்குடியில் தலையை வெட்டிக் கொன்றனர். இக்கொலைச் சதி வழக்கில் தேவர் கைது செய்யப்பட்டார்.

இக்கலவரத்தின்போது ஆதிக்க சாதியினர் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளவும், தாம் கொலை செய்யவே புறப்பட்டுள்ளோம் என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் ‘மஞ்சள் ‘ நிற வேட்டியை அணிந்து வந்து போர் நிகழ்த்துவது போன்று செயல்பட்டுள்ளனர். ஒரு கிராமத்தில் தாக்குதல் நடத்தும்போது, தாக்கப்பட்டவர்கள் உதவிக்கு தம் சாதி ஆட்களை அடுத்த கிராமத்தில் இருந்து அழைக்க, வாண வெடிகளை வெடிப்பதன் மூலம் சில ரகசிய செய்திகளைப் பறிமாறி உள்ளனர்.

(ஆதாரம்: சென்னை மாகாண சட்டசபை விவாதங்கள் – காமராஜர் அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதம்)

இக்கலவரத்தில் இந்துக்களில் இரு தரப்பினர் மோதி இருக்கின்றனர். அல்லவா ? இதனைத் தடுத்து ஒற்றுமையை நிலை நாட்ட குருஜி செய்த பணி என்ன ?

‘ஒருவர், மற்றவர்களை விட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் எனக் கருதுவதை ‘ குருஜி ‘வக்கிரம் ‘ என்று கண்டித்திருக்கலாம்.

ஆனால் முதுகுளத்தூர் கலவரத்தினைப் பற்றி குருஜி என்ன கருத்தை வெளியிட்டார் ?

தமிழகம் எங்கும் குறுக்கும், நெடுக்குமாய் பயணம் செய்தவர்தானே அவர்! அவர் இச்சம்பவத்தில் இம்மானுவேல் சேகரனுக்காகக் குரல் தந்தாரா ?

1956 ல் மதுரையில் நடந்த விழாவில், தேவரிடம் பாராட்டுப் பத்திரத்தோடு பண முடிப்பும் பெற்றுக்கொண்டவர் குருஜி.

அடுத்த ஆண்டே ஆதிக்க சாதியினரால், தலித்கள் முதுகுளத்தூரில் படுகொலை செய்யப்பட்டு, எதிர்த்தாக்குதலும் நடைபெறுகிறது.

தலித் தலைவர் படுகொலையில் தேவர் விசாரணைக் கைதியாகிறார். நியாயமாய் குருஜி என்ன செய்திருக்க வேண்டும் ?

‘ஹவாலா ஊழலில் தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் ‘ என்று அத்வானி சொன்னது மாதிரியாவது , ‘தேவர் தந்த பணம் வேண்டாம் ‘ என்று குறைந்தபட்சம் ‘ஸ்டண்ட் ‘ ஆவது அடித்தாரா குருஜி ?

****

காமராஜரின் ஆட்சி இக்கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு நிறுத்தியது. இரு தரப்பிலும் பலரைக் கைது செய்தது.

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதியில் போதிய ஆதாரம் இல்லாததால் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.

அன்றும் சரி, இன்றும் சரி, இந்துத்துவ மக்கள், தேவரைப் புகழ்ந்து ‘தேசீயமும், தெய்வீகமும் ‘ பரவப் பாடுபட்டவர் எனப் பாடுகின்றனர். தேவருடைய சிந்தனையும், ஆர் எஸ் எஸ் இன் சிந்தனையும் ஒத்துப்போவதில் ஆச்சரியம் இல்லை.

பின்னாளில் (1960களில்), அதே காமராஜர், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய் தில்லியில் இருந்தபோது, அவர் ஜன சங்கம் வலியுறுத்தி வந்த ‘பசு வதைத் தடுப்புச் சட்டத்திற்கு ‘ எதிராய்க் கருத்து தெரிவித்தார்.

அதனால் சங் பரிவாரின் சகாக்களான சாதுக்கள், அவரின் தில்லி வீட்டைக் கொளுத்தி, அவரைக் கொல்ல முயன்றார்கள்.

அவர் அன்று மயிரிழையில் உயிர் தப்பினார் என்பது வரலாறு.

****

தமிழகத்தின் மனச்சாட்சியை 1995ல் கொடியங்குளம் தலித் மக்கள் மீதான தாக்குதல் உலுக்கியது. அம்மக்கள் குடிநீர் கோரி வரும் கிணற்றில் மலத்தைப் போட்டு வெறியாட்டம் செய்தனர் ஆதிக்க இந்து சாதியினர். கொடியங்குளம் தாக்குதல் குறித்த வீடியோ படம் ஒன்றை டாக்டர் கிருஷ்ண சாமியின் ‘புதிய தமிழகம் ‘ வெளியிட்டு அக்கொடுமைகளை உலகிற்குத் தெரியப்படுத்தியது. இப்படத்தினைத் தடை செய்ய ஓங்கி ஒலித்த குரல் இந்து தர்மக் காவலர், இராம.கோபாலனிடமிருந்து வந்தது.

கொடியங்குளம் சூறையாடப்பட்டபோது வர்ணாசிரமத்தின் ‘வக்கிரங்களை ‘ எந்த சுயம்சேவக் வந்து கண்டித்தார் ?

ஆதிக்க சாதியினரின் இந்த அட்டூழியங்களை எந்த சுயம்சேவக் கண்டித்தார் ?

****

புதுவை சரவணன் எனும் அன்பர், ‘நல்ல அறிகுறி ‘ என்ற கட்டுரையில், சில தத்துவங்களை உதிர்த்திருந்தார். அவை:

1) ’36 வயதுவரை ஒருவர் எந்த வேலைக்கும் செல்லாமல், திருமணமும் செய்து கொள்ளாமல் இருந்தால் அவர்க்கு நமது சமுதாயத்தில் தறுதலை பட்டம் கிடைக்கும். ‘

–இந்தப்பட்டத்திற்கு நமது முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயரைப் பரிந்துரை செய்கிறேன். அவர் ரொம்ப நாளாகவே திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

2) வல்லரசு நாடு என்ற இலக்கை நோக்கி பாரதம் வேகமாக நகர்வதற்குக் காரணமாய், ‘பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம்தான் வெற்றி பெறும் என 73 சதவீத இளைஞர்கள் கருத்துத் தெரிவித்ததாகக் ‘ குறிப்பிட்டுள்ளார்.

–இப்படிப்பட்ட திருமணங்களால் எவ்வாறு நாம் வல்லரசாக முடியும் என்பதையும், இந்தியா முழுக்க பெரும்பாலான திருமணங்கள், இத்தகையானவையாகவே இருந்தும் ஏன் நம்மால் இன்றுவரை வல்லரசாக இயலவில்லை என்பதையும் சரவணன் விளக்கினால் நமக்கெல்லாம் நல்லது.

3) வல்லரசு நாடு என்ற இலக்கை நோக்கி பாரதம் வேகமாக நகர்வதற்குக் காரணமாய், ‘திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதை 91 சதவீத இளைஞர்கள் தவறு என்றிருக்கிறார்கள். ‘ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

–திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வதைத் தவறென்று சொல்லாத 9 சதவீத இளைஞர்களால், நாம் வல்லரசாகும் நாள் எவ்வளவு தூரம் தள்ளிப்போகும் என்பதையும் கணித்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.

****

அன்பர் ஒருவர், பாரதியாரை நான் சிறுமைப்படுத்தி விட்டதாக அங்கலாய்த்திருந்தார்.

‘மாடனை வணங்கும் ‘ மக்களை ‘மதியிலிகாள் ‘ என்றும், ‘வேதம் ஒன்றே உயர்வான ‘தென்றும் பாரதியார் கருதியது உண்மை.

அது நிச்சயமாய் உழைக்கும் மக்களின் தெய்வ நம்பிக்கைக்கு எதிரானதுதான்.

எனது கருத்தை எதிர்கொள்ள ‘நீலமேகம் ‘ என்ற சாமியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எனது சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் ‘நீல மேகம் ‘ என்ற சொல் ‘கிருஷ்ணனை ‘யே குறிக்கும். அன்பர் குறிப்பிடும் ‘நீலமேகம் ‘ எனும் கிராம தெய்வம், எவ்வூரில் உள்ளதென்றும், அதற்கு சாமியாடி யாரென்பதையும், அக்கோவிலின் ஸ்தல புராணத்தையும் தந்து உதவினால், கள ஆய்வு செய்ய வாய்ப்புக் கிடைத்து, நாட்டார் வழக்காற்றியலுக்கு உதவியதாக இருக்கும்.

எதையும் மெய்ப்பொருள் கொண்டு ஆராய்வதுதானே நல்லது.

****

vellaram@yahoo.com

Series Navigation