கடிதம் – மார்ச் 4,2004

This entry is part of 47 in the series 20040304_Issue

ஆசாரகீனன்


—-

‘சிலுவைராஜ் சரித்திரம் ‘ – நாவல் பற்றிய காஞ்சனா தாமோதரனின் வாசக அனுபவம் படித்தேன். அண்மைக்கால நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவற்றைப் படிக்கும்போது, ‘தமிழை எங்கே நிறுத்தலாம் ? ‘ என்ற கவிதையில் ஞானக்கூத்தன் எழுதிய பின்வரும் வரிகளே நினைவுக்கு வந்து தொலைக்கின்றன:

வேற்று நாட்டுச் சரக்குகளோடு

உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்

தலையில் தலையில் அடித்துக் கொண்டால்

தேவலாம் போல இருக்குது.

இத்தகைய அனுபவத்தை ஏற்படுத்தி தலையில் அடித்துக்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்தாமலும், வாசகனை அச்சுறுத்தி ஒட்டு மொத்தமாக மேல் நாட்டு இலக்கியத்தின் பக்கமோ அல்லது தற்போதைய மோஸ்தரான தமிழ் மரபின் பக்கமோ விரட்டி விட்டுவிடாமலும் எழுதப்பட்டுள்ள படைப்பு ராஜ் கெளதமனின் சிலுவைராஜ் சரித்திரம் என்பதை காஞ்சனாவின் அறிமுகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழில் எழுதப்பட்டுள்ள சொற்பமான நல்ல படைப்புகளில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

பலரையும் நையாண்டி செய்வதாலேயே இந்த நாவலுக்கு நியாயமாகக் கிடைத்திருக்கவேண்டிய கவனம் கிடைக்கவில்லையோ என்று கருத வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புத்தகத்தில் தமிழ் விரிவுரையாளர் வேலைக்கான நேர்காணல் ஒன்றை இப்படி நகைச்சுவையுடன் விவரிக்கிறார் ராஜ் கெளதமன்:

‘ஒங்க விருப்பப் பாடம் எது ? ‘

‘தமிழ் நாவல்கள் ‘

‘தமிழ் நாவலாசிரியர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார் ? ‘

சிலுவை தொண்டைக்குழி வரை ஜெயகாந்தன் வந்து விட்டார். அதுக்குள்ளே சிலுவை ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். ஜெயகாந்தனைப் பழமைவாதிகளுக்குப் பிடிக்காது என்பது தெரியும். எதுக்கு வம்பு ? ‘டாக்டர் மு.வ., அகிலன் ‘.

‘இவர்களைப் பிடிக்க என்ன காரணம் ? ‘

‘காதலையும், ஆண்-பெண் உறவுகளையும் தமிழ் மரபுக்கு ஏற்றபடி கண்ணியமாகச் சித்தரித்துள்ளார்கள். ‘

‘டாக்டர் மு.வ.வின் சிறுகதை ஒன்றைக் கூற முடியுமா ? ‘

‘குறட்டை ஒலி. ‘ அந்த நேரம் பார்த்து அந்த மூணுபேருக்கும் டிபன் காபி வந்ததால், சிலுவையைப் போகலாம் என்று அனுப்பி விட்டார்கள். பாவம், இண்டர்வியூ பண்ணிப் பண்ணிக் களச்சுப் போயிருப்பாங்க!

சிலுவைராஜ் சரித்திரத்தை இதுவரை கட்டுடைக்காமல் விட்டு வைத்ததற்கு தமிழக அறிவு ஜீவிகளுக்கும், கலக அனார்க்கியர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

– ஆசாரகீனன்

aacharakeen@yahoo.com

Series Navigation