பிடிவாதம் (கடிதங்கள்)

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

பாரதிராமன்


சென்னை-78

10-7-94.

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்பல. திரும்பிப் பெற போதிய தபால் தலைவைக்காவிட்டாலும் தங்கள்

அலுவலகம் ‘ திரும்பவும் ‘ என்று தலைப்பிட்ட என் கதையை வருத்தத்துடன் திருப்பி அனுப்பியிருப்பது தங்கள் பத்திரிகையின் மேலான குணத்தைக் காட்டுகிறது என்றாலும் மேலான தர்மத்தைக் காட்டுகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

முன் அனுபவமே இல்லாத முளைத்து மூன்றிலை விடாத சிறுசுகளின் விடலைத்தனமான படைப்புகளை உற்சாகத்தோடு வெளியிடும் தங்களுக்கு அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள என் போன்றோரின் கதைகளைப் படிக்க இந்தத் தமிழ் மண்ணில் ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது என்ற விஷயம் மறந்து போனது வருத்தத்தை அளிக்கிறது. ஒருவேளை என்னுடைய இந்தப் படைப்பு உங்களுடைய ‘உதவி ‘களால் உங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் போயிருக்கலாம். சமீபத்தில் கதைகளைப் பொறுக்கி எடுக்க சிறுசுகளைப் புதிதாக சேர்த்துவிட்டிருக்கிறீஈகளா என்ன ?

திரும்பவும் ‘திரும்பவும் ‘ என்ற கதையை அனுப்பியிருக்கிறேன். திரும்பப்பெற தபால் தலை இணைக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்.உடனே பிரசுரித்து என் அன்பு வாசகர்களின் தாகத்தைத் தீர்ப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

தங்கள்,

எ.ஏ.

சென்னை-81

14-7-94.

அன்புள்ள எ.ஏ.அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் 10-7-94 தேதியிட்ட கடிதமும்,திரும்பவும்அனுப்பப்பட்டுள்ள

‘திரும்பவும் ‘ என்ற தங்களது படைப்பும் கிடைக்கப் பெற்றன. அவை எனது

நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்வைத் தரும் என்று நினைக்கிறேன். கதையைப் பிரசுரிப்பது பற்றி ஒரு செய்தி. எங்கள் பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் இளைஞர்கள். எனவே அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களைக் கொண்டே எழுதவைத்துப் பிரசுரிப்பதில் என்ன தவறு ? அதை எங்கள் கடமையாகவே கருதுகிறோம். எனவேதான் முதியவர்களால் எழுதப்படும் பழையபாணிப் படைப்புகளைத் திருப்பி அனுப்ப நேருகிறது.

நீங்கள் உங்கள் வாசகர்களை…..(அப்படி கணிசமாக யாராவது இருந்தால்) அடைய விரும்பினால் தனியாக தொகுதி ஒன்று போட்டுச் சென்றடையலாமே!

தங்கள்,

ஆசிரியர்.

கலைக்கோள்.

சென்னை-78.

24-7-94/

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம் பல. தங்களது14-7-94 தேதியிட்ட கடிதம் உள்ளூர் கடிதம்தான் என்றாலும் ஒரு வாரம் தாமதித்தே கிடைத்தது ‘திரும்பவும் ‘ என்ற கதையைப் பிரசுரிப்பது பற்றித் தாங்கள் கூறியுள்ள கருத்துகள் யாருக்கும் உடன்பாடாக இருக்க நியாயமில்லை.ஒரு சமுதாயத்தில் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என்று பலதரப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு சாரரை மட்டும், மற்றவர்களை உதாசீனம் பண்ணிவிட்டு, ஆதரித்து நடப்பது நடுநிலையான ஒரு பத்திரிகைக்கு தர்மமாகாது. முதியோர் காட்டிய பாதையில் இளைஞர் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது.

மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி முதியோர் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துவதுதான் தங்களைப்போன்ற ஒரு அனுபவசாலியான பத்திரிகையாசிரியரின் கடமையாக இருக்கவேண்டும்.இதை நான் சொல்லாவிட்டாலும் தங்கள் பத்திரிகையின் கடந்த 24 ஆண்டுகால வளர்ச்சி எடுத்துக் கூறும் என்று தங்கள் பத்திரிகையின் முதல் இதழில் இருந்தே தொடர்ந்து வரும் வாசகனான நான் நம்புகிறேன்.

தனித் தொகுதி போடுவது பற்றிய தங்கள் கருத்தை நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. என்வசம் மேலும் பல கதைகள் உள்ளன. அவற்றையும் அனுப்பிவைக்கிறேன். கலைக்கோள் வெளியிடும் முதல் தொகுப்பாக அவை வெளிவரட்டும்.

நிற்க. ‘திரும்பவும் ‘ என்ற என் கதையைப் பற்றி தங்கள் கடிதம் ஒன்றும் கூறாததால் அது தங்களின் மேலான பரிசீலனையில் இருப்பதையும் கூடிய விரைவில் பிரசுரிக்கப்படலாம் என்பதையும் என்னால் உணரமுடிகிறது. தங்கள் பத்திரிகை திரும்பவும் ஒரு உண்மையான இலக்கியத் தளத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடையாளம் இது என்று நினைக்கிறேன்.

தங்கள்,

எ.ஏ.

சென்னை-81.

31-7-94.

அன்புள்ள எ.ஏ. அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் 24-7-94 தேதியிட்ட கடிதம், என்ன ஆச்சரியம் பாருங்கள், நீங்கள் அதை எழுதிய மறுநாளே எங்களுக்குக் கிடைத்துவிட்டது. இதற்கிடையில் உங்கள் ‘திரும்பவும் ‘ என்ற கதையை எங்கள் ஆசிரியர் குழாம் மீண்டும் பரிசீலித்ததில் அடுத்த இரு மாதங்களில் எங்கள் பத்திரிகையின் வெள்ளிவிழா நடக்கவிருக்கும் சமயத்தில் வெளியிட இருக்கும் சிறப்புமலரில் இன்றைய படைப்புகள் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றன என்ற வித்தியாசத்தைக் காட்டும் விதத்தில் தங்களது கதையைப் பிரசுரிக்கலாம் என்ற முடிவுக்கு ஏகமனதாக வந்துள்ளோம். கதையின் தலைப்பை மட்டும் ‘பிடிவாதம் ‘ என்று மாற்றியிருக்கிறோம். தங்களது பிடிவாதம் வென்றுவிட்டதில் சந்தோஷம்தானே ? சிந்துபாத்தின் பிடிவாதம் தோற்றது போங்கள்!

தங்கள்,

ஆசிரியர்,

கலைக்கோள்.

பி.கு.

தொகுதிகள் பிரசுரிக்கும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

-கணையாழி, நவம்பர்-1994.

***

கணையாழி நவம்பர் 94இதழில் வெளியானது.

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.