இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்

This entry is part of 47 in the series 20110430_Issue

வே.சபாநாயகம்.


———————

1. மௌனிக்கு அவரது வீடே உலகம். எனக்கோ உலகமே வீடு. நான் ஒரு
கிராமத்துக்காரன். என் அனுபவத்தில் கால்வாசியைக்கூட நான் இன்னும்
எழுதி முடிக்கவில்லை.

2. மௌனி குறைவாக எழுதியதால் அவர் எழுத்தில் அடர்த்தி அற்புதமாய்
அமைந்திருந்தது. நான் நிறைய எழுதுவதால் நீர்த்துப்போன எழுத்துக்களை
எழுதுகிறேன் என்பது நகரத்தில், தனிமையிலிருக்கிற சித்தம் போக்கு சிவன்
போக்கு மனம் படைத்தவர்களின் சிந்தனையாக இருக்கலாம். மக்கள் திரளோடு
சேர்ந்திருக்கிற எவருக்கும் இந்த ஆபத்து இல்லை.

3. எழுத்தாளனாக வேண்டும் என்ற பொறி என்னுள் இளமையில் எப்போதுமே
நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. கிடைத்த சந்தர்ப்பங்களும், அங்கீகாரங்களும்
என்னை மேலும் முன்னேற ஊக்குவித்தன. 1964ல் இலங்கையில் இலக்கியம்
சித்தாந்தரீதியில் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். முற்போக்கு இலக்கியம்,
‘இழிசனர் இலக்கியம்’ என விவரிக்கப்பட்ட நேரம். அவ்வேளையில் முற்போக்கு
இலக்கியத்தின் குரலாக என் முதல் நூல் ‘யோகநாதன் கதைகள்’ பவ்கலைக்
கழகத்திலேயே வெளியிடப் பெற்றது. இந்த அங்கீகாரம் என்னை வலுப்படுத்தியது.

4. நான் அரசியல் மூலம் இலக்கியத்துக்கும் இலக்கியத்தின் மூலம் அரசியலுக்கும்
அறிமுகமானவன். என்னைப் பொறுத்தவரை இல்லக்கியமென்பதே மறைமுக
அரசியல்தான். இதில் ஒளிவு மறைவு வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.

5. எனக்கு வயது தெரிந்த காலத்திலிருந்தே சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக்
குரல் கொடுத்து வந்திருக்கிறேன். எழுதி வருகிறேன். இதுதான் என் இலக்கிய
சித்தாந்தம். என் எழுத்துக்களும் என் சித்தத்தையே பேசுகின்றன.

6. சமூக ஒடுக்குமுறை, அதிகாரத்துவ மமதை – இவ்விரண்டுமே ஒட்டு மொத்தமான
சமுதாய மாறுதல் மூலமே அழிந்து போக முடியுமென்று நான் எண்ணுகிறேன்.
இவற்றுக்கு எதிராக என் எழுத்தை ஒரு ஆயுதமாகக் கொள்வதை என் தார்மீகக்
கடமையாக உணர்ந்து எழுதி வருகிறேன்.

7. என் எழுத்து பற்றி எனக்கு தீர்க்கமான தீர்மானமுண்டு. நான் சகல ஒடுக்குமுறை
களையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என்
எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம். என் சுவாசம். 0

Series Navigation