‘நாவலென்பது தத்துவத்தின் சித்திரவடிவம்’ – அல்பெர் காம்யு

This entry is part of 33 in the series 20100822_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா1960ம் ஆண்டு ஜனவரிமாதம் தமது பதிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய சிநேகிதருடன் பாரீஸ¤க்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். வெண்பனிமூடிய சாலை. சாலையின் தன்மை அறிந்து வாகனத்தைக் கவனத்துடனேயே ஓட்டிவந்திருக்கிறார்கள். ஆனால் மரணம் நிதானமிழந்திருந்தது. நிதானத்தோடு இருந்திருந்தால் பறிக்கக்கூடிய உயிரல்ல அது. உடன்வந்த நண்பர் இரண்டுநாட்கள் கழித்து இறந்திருக்கிறார். இந்த மனிதருக்கு எதிலும் அவசரம். இறப்பிலும் அவசரப்பட்டிருக்கிறார். நாற்பத்து நான்குவயதில் இலக்கியத்திற்கான நோபல்பரிசு; நாற்பத்தேழாவது வயதில் பாரீஸ¤க்குச் செல்லும் வழியில் மரத்தில் வாகனம் மோத, மரணம் உடன் சம்பவிக்கிறது. காம்யு விபத்தில் மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி அவரது ஐம்பதாவது நினைவுதினம்.

அல்பெர் காம்யு உலகெங்கும் கொண்டாடப்படுகிற படைப்பாளி. தமிழுக்கு ‘அந்நியன்’ மூலம் அறிமுகமானதொரு பெயர். அவரது படைப்புகளுள் குறிப்பாக பொருளற்ற வாதம்(Absurdism) அல்லது அபத்தவியல் வரிசையில் வந்த அந்நியன்(The Stranger-1942), சிசை·பி புராணம்(The Myth of Sisyphus-1942-), கலிக்யுலா(Caligula-1944)ஆகியனவும்; கொள்ளை நோய்(The Plagu -1947), புரட்சியாளன் (The Rebel-1951), வீழ்ச்சி'(The Fall-1956) நூல்களும்; முற்றுபெறாமல், காம்யு இறந்து பிறகு பதிப்பித்து வெளிவந்த முதல் மனிதன் (The First Man) என்ற படைப்பும் இடைவிடாமல் வாசிக்கப்படுவை, இவற்றைத் தவிர்த்து பல கட்டுரை தொகுப்புகளும், நாடகங்களும், சிறுகதைளும் உள்ளன. அல்பெர் காம்யுவை மையமாக வைத்து பிறர் எழுதியுள்ள நூல்களே ஐம்பதுக்குக் குறையாமலிருக்கலாம் என்கிறார்கள். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அண்மையில் ஆழமான விமர்சனம் மற்றும் ஆய்வு நோக்கில் வெளிவந்துள்ள நூல்கள் மட்டும் ஐந்து.

காம்யு வட ஆப்ரிக்காவில் அல்ஜீரியா நாட்டில் பிறந்தவர். அக்காலத்தில் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த காலனிகளுள் அந்நாடுமொன்று. தந்தை லூசியன் காம்யு ஒயின் வியாபாரத் தரகர் ஒருவரிடம் ஊழியராகப் பணிபுரிந்தார். தாய் காத்ரீன் சிண்ட்டே படிப்பறிவற்ற பெண்மணி. முதல் உலகப்போரில் லூசியன் காம்யு பிரெஞ்சு ராணுவத்திற் சேர்ந்து அகால மரணமடைந்தபொழுது, குடும்பம் மீண்டும் அல்ஜீரியாவிற்குத் திரும்புகிறது. ஏழ்மையான குடும்பம். அங்கே கடைநிலை மக்கள் அதிகம். தமிழ் வழக்கிற்குப் பரிச்சயமான வாக்கியத்தில் சொல்லவேண்டுமெனில் பற்றுபாத்திரம் தேய்த்து காத்ரீன் பிள்ளைகளை வளர்ந்தார். இலக்கியத்திற்கு அடுத்து அல்பெர் மிகவும் நேசித்தப் பெண்மணி, காத்ரீன். காம்யுவின் ‘அந்நியன், ‘இனிய மரணம்'(A Happy Death) ஆகிய புனைவுகளை வாசித்தவர்களுக்கு காத்ரீன், சிண்ட்டே பெயர்கள் நினைவுக்கு வரலாம். தமது மகளுக்குக்கூட காத்ரீனென்று பெயர் வைத்திருக்கிறார்.

‘நாவலென்பது கற்பனை சித்திரங்களால் கட்டமைக்கப்பட்ட தத்துவம்’ என்பது அவர் தரும் விளக்கம். ‘எனது மனம் சொற்கள் வயப்பட்டதன்றி சிந்தனை வயப்பட்டதல்ல’ (Carnet, 1950). கலைஞன் என்பவன் தந்தக்கூட்டுக்குள் தனிமையைத் தேடிக்கொள்பவனல்ல, அவன் பொதுவாழ்வின் துயரங்களையும் மகிழ்ச்சியையும் உரியவகையில் பிறமனிதர்களோடு பகிர்ந்துகொள்பவன் (ஸ்டாக்§ஹொ¡ம் நோபல் உரை, 1957). வீழ்ச்சி’ வெளிவந்தபோது, ‘நூலின் பொருளுக்குகந்த சொற்சித்திரத்தை அமைத்திருக்கிறேன்’ என்று நேர்காணலொன்றில் அளித்த பதிலைக்கொண்டு தாம் தத்துவவாதி அல்ல கலைஞனென்று பிடிவாதமாக அவர் மறுப்பதைப் பார்க்கிறோம். 1938-1941க்கும் இடையில் காம்யு எழுதியிருந்த ஆக்கங்கள் மூன்று: ஒன்று கட்டுரை(சிசை·பி புராணம்);அடுத்தது புனைவு (அந்நியன்); மூன்றாவது நாடகம் (கலிக்யுலா). ஒப்பீட்டளவில் அளவில் மூன்றும் வேறுபட்டிருந்தபோதிலும், படைப்பின் நோக்கத்தை அதாவது உலகின் பொருளற்ற இயல்புகளை முன்னிருத்தும் அவரது அபத்த இயல் சிந்தனைப் பிரச்சாரத்தை அவை முறையாகவே செய்தன. “அம்மா இறந்திருக்கிறாள்! என்றைக்குச் செத்தாள், இன்றா நேற்றா? நான் அறியேன்”, என்பது அந்நியன் புனைகதையின் தொடக்க வரிகள். காம்யு அறிமுகப்படுத்தும் எதிர்த்தலைவன்(Anti hero) மெர்சோ அபத்த இயலின் பிரதிநிதி. தன்மையில் நிகழும் கதைசொல்லலில் கலகக்குரல் உரத்தே கேட்கிறது. ஈரமும், சார்புமற்ற அக்குரல் தொடக்கத்தில் நமக்கு எரிச்சலூட்டியபோதிலும் முடிவில் நமது அனுதாபத்தைப் பெறுகிறது. வாழ்க்கையென்பது திட்டமிடல்களால் ஆனதல்ல தற்செயல்களால் தொடர்வது, அதற்கு பொருள்தேடி அலைவது அர்த்தமற்றதென காம்யு நினைக்கிறார். அந்நியன் – ‘அவன்’ என்ற மூன்றாம் பேர்வழி அல்ல, நீங்களும் நானுமான மனிதக் கும்பல்களுள் வலம் வருபவன். அவன் ‘அவன்’ சார்ந்த சமூகத்துக்கு அந்நியன் அல்லது தனக்குத்தானே அந்நியன். இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டது சிசை·பி புராணம். பொருளற்றவாதமெனும் அவரது சிந்தனையின் நூல்வடிவம். அந்நியனுக்கு முன்பாக வந்திருக்க்கப்படவேண்டிய நூல். காம்யுவுக்கு அது குறித்த வருத்தங்களேதுமில்லை. ‘உங்களுக்குத் தத்துவாதியாக வரவேண்டுமென்ற எண்ணமேதுமுண்டா புனைகதைகளை எழுதுங்கள்’ என்று சொல்கிறவருக்கு இப்படியான விமர்சனங்களேகூட அபத்தமானதுதான். சிசை·பி கட்டுரை மனிதருக்குண்டான அபத்த சூழல்களை அலசுகிறது. கிரேக்க புராணக்கதையை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட கட்டுரை. விதிக்கப்பட்ட தண்டனையின்படி புராணகதையின் நாயகன் ஒவ்வொருநாளும் மலையுச்சிக்கு பாறாங்கல்லை உருட்டிபோகவேண்டும், ஆனால் உச்சியை எட்டுகிறபோதெல்லாம் பாறாங்கல் திரும்பவும் கீழே உருண்டுவருகிறது. மனித வாழ்க்கையில் பல முயற்சிகளுக்கும் அபத்தம் வழங்குகின்ற பதில். ‘உண்மையில் உடனடியாகக் கவனத்திற்கொள்ளவேண்டிய தத்துவ பிரச்சினை தற்கொலையென்றும், வாழ்வதுதான் நோக்கமெனில் அபத்தத்தை அதன் போக்கில் நிறுத்திவிட்டு வாழ்க்கையைத் தொடரவேண்டுமென்றும் காம்யு கூறுகிறார். பொருளற்றவாதத்தின் வரிசையில் மூன்றாவதாக வருவது கலிக்யுலா. இன்றைக்கும் பிரான்சில் ஏதாவதொரு குழு மேடையேற்றிக்கொண்டிருக்கும் நாடகம். கதைநாயகன் கலிக்யுலா உரோமானிய அரசகுமாரன். அவனது சராசரி மனிதவாழ்க்கை சகோதரி டிராசில்லா இறப்பால் முடிவுக்குவருகிறது. அவன் புரிந்தகொண்டது ஒன்றேயொன்றுதான்: ‘மனிதர்கள் அனைவரும் ஒருநாள் இறக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதல்ல’. அவன்மனதிலுண்டான வெற்றிடத்தை வரம்பற்ற அதிகாரத்தினூடாக நிரப்ப முயற்சிக்கிறான். கொடிய அரக்கனாக மாறுகிறான். ‘விதியை அறிய முயற்சித்தேன், இயலாதென்பது புரிந்ததும், எனக்கான விதியை நானே உருவாக்கிக்கொள்வதென தீர்மானித்தேன்’, என்கிறான்.

1947ல் வெளிவந்த ‘கொள்ளைநோய்’ முக்கியமானதொரு புனைகதை. பிரெஞ்சு இலக்கிய விமர்சகர்களின் பரிசினைப் பெற்ற நூல். பதிப்பித்த முதல் நாளிலியே ஒரு இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தனவாம். மத்திதரைகடலையொட்டிய துறைமுகப்பட்டினம் ஒரான்(அல்ஜீரியா). கடந்த நூற்றாண்டில் நாற்பதுகளில் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் டாக்டர் ரியே என்பவர் செத்த எலியொன்றைக் கண்டெடுக்கிறார். தொகுப்புக் குடியிருப்பின் காவலரான மிஷெலும் கட்டிடத்தில் செத்த எலிகள் கிடப்பதைப் பார்க்கிறார். அவருக்கு இது விஷமத்தனங்கொண்ட மனிதர்கள் செய்தகாரியம். அடுத்த சில நாட்களில் ஸ்தாபதனமொன்றின் அறிக்கையொன்று ஓரிடத்தில் 6000 எலிகள் செத்துக் குவிந்திருந்ததைத் தெரிவிக்கிறது. எங்கும் பதட்டம் சூழ்கிறது. மக்கள் புலம்புகிறார்கள். நகர நிர்வாகத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள். அதிசயம்போல செத்த எலிகளின் எண்ணிக்கை மளமளவென்று குறைகிறது. மக்கள் அனைவருக்கும் நிம்மதி. ஆனால் அச்சுறுத்தல் வேறுவடிவில் மீண்டும் நகருக்குள் நுழைகிறது. இம்முறை அங்கொன்று இங்கொன்றென ஆரம்பித்து வேகமாகப் பரவும் கொள்ளை நோய் நகரமக்களின் அமைதி வாழ்க்கையைக் குலைக்கிறது. இங்கே கதைசொல்லியாக டாக்டர் ரியே. கொள்ளை நோய் மன நோய்க்கு ஒப்பானதென்று ஆசிரியர் சொல்கிறார். அபத்தத்தின் மாற்று வடிவாக இங்கே கொள்ளைநோயைச் சந்திக்கிறோம். பல உயிர்களைப் பறிகொடுத்தபின்பு கொள்ளை நோயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். தற்காலிகமாக கொள்ளை நோய் அடங்கிப்போனாலும் திரும்பவும் வரலாம் என்ற திகிலூட்டும் வரியுடன் கதை முடிகிறது. அபத்தங்களை வெல்வது கடினம், வெல்ல நேர்ந்தாலும் அவ்வெற்றிக்கான ஆயுள் குறுகியதென்பது கதைசொல்லும் பாடம்.

1951ல் புரட்சியாளன் என்ற நூல் வெளிவந்தது. நிரந்தரமாக சார்த்ருவிடமிருந்து அல்பெர் காம்யு விலகக் காரணமான நூல். காம்யுவின் ஐந்தாண்டுகால உழைப்பு. புத்தகம் வெளிவந்த உடனேயே இருத்தலியல் வாதிகள், மிகை எதார்த்தவாதிகள், பொதுவுடைமைவாதிகள், கிறிஸ்துவர்களில் ஒரு பகுதியினரென பலரையும் கலவரப்படுத்திய நூல். இடதுசாரி சிந்தனையாளரான காம்யு புரட்சியின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளையும், கடுமையான வழிமுறைகளையும் கண்டிக்கிறார். புரட்சி சில வரையரைகளைக் கொண்டது மட்டுமல்ல, புரட்சியாளனால் அளவிடப்படக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென்பது அல்பெர் காம்யு இந்நூலில் முன்வைக்கும் சிந்தனை.

1956ம் ஆண்டில் வெளிவந்த ‘வீழ்ச்சி அல்லது ‘விழல்’ என்ற நாவல் மிக முக்கியமானதொரு நாவல். அல்பெர் காம்யுவின் நாவல்களிலேயே ‘விழல்’ நாவலே முதன்மையானதென்று நம்புகின்ற கூட்டமொன்றுண்டு. ‘அந்நியனையும்’ ‘கொள்ளை நோயையும்’, கலிக்யுலாவையும், ‘புரட்சியாளனையும் மட்டுமே வாசித்துள்ள எனக்கும் தற்போதைக்கு ‘விழல்’ ஒரு முக்கியமான நாவல். இருப்பியல்வாதிகளை கேலிசெய்யும் வகையில் இந்நாவலுக்கு காம்யு ‘அலறல்'(Le Cri) என முதலில் பெயர் வைத்திருக்கிறார். அதாவது சமூகத்திற்கும், இருப்பியல்வாதிகளுக்கும் எதிரான ‘அலறல்’ என்று பொருள்தரும் வகையில். கடைசியில் ‘விழல்’ என்ற பெயரிலேயே வெளிவந்தது. ‘கொள்ளை நோய்க்கு’ இணையாக விற்பனையில் சாதனை படைத்த நாவல். ழான்-பாப்திஸ்த் கிளமான்ஸ் கதை நாயகன். ஆறு அத்தியாயங்கள். இரத்தக்கண்ணீரில் வரும் கதை நாயகனை நினைவிருக்கிறதா. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதிகொள்வதென்பதேது’ சிதம்பரம் ஜெயராமன் குரல் பின்னணியில் ஒலிக்க…. ராதா, ‘…… எனக்கு நிம்மதியேது’ என கரகரத்த குரலில் சர்வ அலட்சியத்துடன் தமது வருத்தத்தை வெளிக்கொணர்வார். ‘வீழ்ச்சி’ நாயகனும் அப்படியொரு குற்றத்திற்காக நிம்மதியின்றி தவிப்பவர். விரக்தியின் உச்சத்தில் தள்ளாடுபவர். செய்தக்குற்றம் நீரில் மூழ்கிய பெண்ணொருத்தியின் அலறலுக்கு செவி சாய்க்காதது. அவள் நீரில் மூழ்கப் பார்த்திருந்து மனதைத் கல்லாக்கிக்கொண்டு ஒதுங்கி நடந்தது.

ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு மதுச்சாலையொன்றில், இவரைப்புரிந்துகொள்வதில் ஆர்வமற்ற, பதிலுரைக்காத மற்றொரு பிரெஞ்சுக்காரனிடமும், சிலவேளைகளில் தன்னையே முன்னிறுத்தியும் உரையாடுகிற ஒற்றைக்குரல் கடந்தகாலத்தை விவரிக்கிறது. ஐந்து நாட்கள் தொடர்ந்து இருவரும் சந்திக்கிறார்கள். கிளமான்ஸ் பாரீஸில் வழக்குரைஞனாக இருந்திருக்கிறார். சிக்கலற்ற வாழ்க்கை, நிறைய பெண்கள், அவரது கட்சிக்காரர்கள் திருடர்கள், விலைமாதுகளை வைத்து தொழில் புரிபவர்கள். சந்தோஷத்தோடு கழிந்த நாட்கள். தமது வாழ்க்கையையும் தம்மைப்பற்றியும் உயர்வான அபிப்ராயங்கள் அவருக்கு இருந்தன. தொடரும் அவரது ஒற்றைக்குரல்கொண்டு மரணம், சூதாட்டம், நீதிபதிகள், கடவுள் சாத்தான், பொய், புரட்டென்று மனதைச் சங்கடப்படுத்துகிற பிரச்சினைகளை வரிசையாய் அலசுகிறார். இலையுதிர்காலத்தில் ஒருநாள் மாலைவேளையில் பாலமொன்றில் (பாரீஸ்) யாரோ நகைப்பதுபோல இருந்தது. தம்மை யாரோ பரிகசிப்பதுபோல அதை உணர்ந்தார். முதலில் ஒருவித எரிச்சல், யோசித்ததில் வெளிச்சம் கிடைத்தது. அச்சிரிப்பு இவரது அகக் கண்னை திறந்தது. அவருக்குளிருந்த வேறொரு மனிதரைச் எழுப்பியிருந்தது. அகந்தை கரைந்த மனத்துடன் உலகைப் பார்க்கிறார். இப்புதிய மனம் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை அசைபோட உதவுகிறது. மாலைவேளையில் ஒருநாள் இளம்பெண்ணொருத்தி சேன் நதியில் பாய்வதைக் காண்கிறார். குளிரினால் உறைந்துபோனவர்போல என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறார். அவளைக் காப்பாற்றவேண்டுமென இவருக்குத் தோன்றவில்லை. அவள் நீரில் மூழ்கியபோது எழுந்த அலறல்களை அலட்சியம் செய்தவராய் நடக்கிறார். குற்ற உணர்வில் தவிக்கும் கிளமான்ஸ்ஸ¤க்கு தமது இரண்டகம்(duplicity) புரிகிறது. பிறமனிதர்களின் கரிசனையை எதிர்பார்க்கும் மனிதருக்குக் கிடைப்பதென்னவோ ஏமாற்றமும், பரிகாசமும்.

சிந்தனையை வடிவமைப்பதில் புனைகதை உத்தி பலனளிக்கிறதென நம்பும் அல்பெர் காம்யுவுக்கு பெருங்கதையாடல்மேல் தீராதக்காதலுண்டு. தமது கையேட்டில் (Carnets) ‘உத்திகளற்ற நாவலே பெரும்பாலான மனிதர்களை ஈர்க்கின்றன’ என்று தெரிவிக்கிற ஆசிரியர் தமது படைப்புகளில் சிக்கலான பல உத்திகளைக் கையாண்டிருக்கும் முரணை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்நியன் எளிமையாகச் சொல்லபட்ட ஒரு நாவல் வடிவமெனில், ‘விழல்’ ஓர் முதிர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு, ‘முதல் மனிதனை’ வாசித்தவர்கள் ஆலாபனை சுகத்தை அனுபவித்ததாக எழுதுகிறார்கள். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொருவிதம், அல்பெர் காம்யுவுக்கு எல்லா கைவண்ணங்களும் சாத்தியமாகி இருக்கின்றன.

அல்பெர் காம்யு எழுத்தாளரா? தத்துவவாதியா? அவருக்கு, தத்துவத்தைச் சொல்ல நாவலா? நாவலை மேம்படுத்தத் தத்துவமா? என்பதான கேள்விகள் ‘அந்நியன்’ வெளிவந்த காலத்திலேயே பிரெஞ்சு இலக்கிய சூழலில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. காம்யு நாவலாசிரியரில்லை என்கிறவர்கள் ஒன்று இரண்டு மூன்று நான்கென விரல்விட்டு எண்ணிப்பார்க்கிறார்கள். நான்கே நான்கா அப்படியென்றால் நாவலாசிரியர் இல்லை என்பது அவர்கள்தரும் விளக்கம். ‘நோபல் பரிசு திருடப்பட்டதில்லையே’ என்று தமது கடந்தகால நண்பரை பரிகசித்த சார்த்த்ருவின் ஈவிரக்கமற்ற சொற்களையும் இங்கே நினைவுகூர்தல் வேண்டும். காம்யு நோபெல் பரிசுபெற்ற வயதில்தான் பல எழுத்தாளர்கள் எழுத உட்கார்ந்ததையும் அறிவோம். நோபெல் பரிசு பெற்ற குறுகியகாலத்திலேயே விபத்தில் மறைந்த மனிதர் எந்த உலகத்திலிருந்துகொண்டு எண்ணிக்கைக்காக எழுதமுடியும். அவரேகூட தம்மை தத்துவவாதியென சொல்லிக்கொள்ள விழைந்ததில்லை என்றும் பார்த்தோம். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையில் அவரது புனைவுகள் தொடர்ந்து சாதனை புரிந்துவருவதாக பிரெஞ்சு பதிப்பகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நியன் நாவலின் தொடக்கவரிகளை பெரும்பாலான வாசகர்கள் சட்டென்று நினைவுகூர்வதாக பிரெஞ்சு இலக்கிய இதழொன்று சொல்கிறது. காம்யு நாவலாசிரியரா? தத்துவவாதியா? என்ற கேள்விக்கு தேர்ந்த படைப்பிலக்கிய கலைஞன் என்பது பொருத்தமான பதில்.

நன்றி: உயிரெழுத்து

——–

Series Navigation