தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

மன்னார் அமுதன்


”எழுதுவது மாத்திரம் ஒரு எழுத்தாளனுக்குரிய பண்பல்ல. முதலில் அவன் நல்ல வாசகனாக இருக்க வேண்டும். இது அவனுடையது. அது இவனுடையது என்று படைப்புகளை ஓரங்கட்டும் இலக்கிய அரசியல் அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றல்ல. எழுத்து அல்லது படைப்பு என்பது வளர்ச்சியடையக் கூடிய இயங்கியல் தன்மை கொண்ட ஓர் உயிரியாகும். படைப்புகளுக்கும் பரிணாம வளர்ச்சியுண்டு. இவ்வாறான ஓர் அடிப்படையில் தான் நாமும் நமது இளம் படைப்பாளிகளை நோக்க வேண்டி இருக்கிறது. விமர்சனம் தான் எமக்குத் தேவை.. விசனம் அல்ல” எனும் ஆசிரியர்களின் காத்திரமான வரிகளுடன், சமூகம் நோக்கிய பல இளம் இதயங்களின் உணர்வுகளைச் சுமந்து வந்துள்ளது இருமாத கவிதையிதழான மரங்கொத்தி.

உருதுக்கவிஞர் உமர்கையாமின் சாதனைக் குறிப்போடும், சில கவிதைகளோடும் தொடங்கும் ஆக்கங்கள் வாசித்து முடித்த பின்னும் நெஞ்சில் நிழலாடும் சில உணர்வுகளை விட்டுச் செல்கிறது.

”காயங்கள் மீதமாகிப் போன
காலங்களைக் கண்டு அஞ்சுகிறேன்” எனத்தொடங்கும் இனியெந்த அர்த்தங்களும் இராது எனும் எல்.வசீம் அக்ரமின் கவிதையில் ஏக்கங்கள் விரவிக் கிடப்பதை காணலாம்.

சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன எனும் தியத்தலாவ ரிஸ்னாவின் கவிதை சமூக அவலங்களினால் தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பிரதிபலிக்கிறது.

“எனை சூழவுள்ளவர்களின் சுவாசக்காற்றினை
உள்ளீர்க்கிறேன்!
நரமாமிச வாடை எனை நடுநடுங்கச் செய்கிறது!”
…….
…….
அப்போது என் இதயம் மட்டும்
பரிதாபமாக எனை நோக்கி தலை திருப்புகிறது – ஓ
அதற்குத்தான் என்னால்
எத்தனை ஏமாற்றங்கள்” என மனித இதயத்திற்கு சமூகம் தரும் ஏமாற்றங்களைக் கூறுகிறார்.

உலகின் முதல் உறவு நிலையாகவும், இன்று வரை நம் இதயங்களை அன்பால் உறையச்செய்யும் உறவாகவும் இருப்பது காதல். உறவுகளை மலரவும் செய்யும், கசங்கவும் செய்யும் காதல், காதலைச் சார்ந்ததல்ல; காதலர்களைச் சார்ந்தது. இதனைக் காட்டுவதாக அமைகிறது இஸ்ஹாக்கின் கசங்கிப் போன உறவுகள்.

நீ என் காதலுக்கு
முத்திரையிட்ட நாளில் இருந்து
நான் என் நித்திரையை விற்று விட்டேன்…

எனும் வரிகளோடு காதலின் வலியைப் பாடுகிறார் இஸ்ஹாக்.

ஒப்பாரிப் பாடல்கள் தாலாட்டைப் போலவே ஆழமான கருத்தைக் கூறுபவை. இன்றைய சமூகத்தில் ஒப்பாரியும், தாலாட்டும் மறைந்து விட்டன. தாலாட்டு வளரும் குழந்தையைப் பற்றிய தாயின் கனவுகளை மழலையின் மனதில் பதியச்செய்யும் ஒரு பெருமுயற்சியாகும்.

ஒப்பாரியானது ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் வாழ்ந்தான், எவர்க்கெல்லாம் ஈந்தான், மக்கள் மனங்களில் இறப்பினும் வாழ்வான் என அமரத்துவம் எய்தியவரின் வாழ்க்கைச் சிறப்பைக் கூறுவனவாக அமையும். தமிழகத்தின் பல கிராமங்களில் நான் கண்ட ஒரு விடயம் “ஒலிபெருக்கி வைத்து ஒப்பாரி வைப்பது”. ஒப்பாரி வைப்பதற்கென தனியான ஆட்களும் உள்ளார்கள். இவர்கள் அமரரின் பெருமைகளையும், இழப்பையும் பாடி இழப்படைந்தவர்களைத் தேற்றுவர்.

இவ்வகையில் பைஸாத்தின் ”கொளராத பாத்துமா” வட்டார வழக்கு மொழிநடையில் எழுதப்பட்டுள்ள ஒப்பாரிக் கவிதையாகும்.இக்கவிதை பெருமைகளை மட்டுமின்றி, சில பணம் படைத்தவர்களின் இழிசெயலை

”ஒரு கொத்து நெல்லையும்
ஓசியில கொடுக்கமாட்டாரு
ஓம்புருசன் மொதலாளி
ஓடோடி வந்திருக்காரு
ஒம்புருசன் மையத்துக்கு
ஒரு புடி மண்போட
கொளராத பாத்திமா கொளராதே
அவர் பிள்ளைகள் இருக்கானுகள் கொளராதே” எனும் வரிகள் மூலம் படம் பிடித்துக்காட்டுகிறார்.

மண்னை நேசிக்கும் ஒரு விவசாயியின் இழப்பால் ஒரு குடும்பம் அடையும் துன்பங்களையும், மனைவியின் ஆற்றாமையையும் விளக்குவதாக அமைந்துள்ளதுடன் நம் மண்ணின் குடும்பக்கட்டமைப்பையும் விளக்குவதாக அமைதுள்ளது.

பருவங்கள் சொன்னவை பலகோடி, பாட முடிந்தவை பலகோடி என மொழியும் பாயிசா ஆதம்பாவா தனது ”பருவம்” கவிதையில் பருவத்தினால் பாதிக்கப்படும் இளமை பற்றிப் இவ்வாறு பாடுகிறார்,

இளமை இங்கிதமாய்
இதமாக வருகிறது
இறைவா! காப்பாற்று
…..
….
இளமையின் துடிப்பில் மயங்கிக் கிடப்போரைப் பார்த்து
“இது உன் தப்பில்லை
பருவத்தின் தப்பு
இள வயதின் குற்றம்.” என்று பருவத்தைச் சாடுகிறார்.

அடுத்ததாக அமைந்துள்ளது மினி பாவாடை எனும் தலைப்பிடப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதையாகும். இக்கவிதை ரிட்சர்ட் நிருடு பி. என்பவ்ரால் (ஆப்பிரிக்கா-உகண்டி) 1946 ல் எழுதப்பட்டு பின்பு புட்டு எம்.ப்பதியால் “வானக்கறுமை கொல்லோ” எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கவிதையில்

“காண்பதின்
பிறப்பில்
கற்பனையின் மரணம்” எனும் வரிகள் எத்தனை கற்பனைக்கும், நிதர்சனத்திற்கும் எவ்வளவு தூரம் என்பதை அழகாக விளக்குகிறது.

கற்பனையில் வாழ்ந்து மனிதன் கற்பனையிலேயே மரணிக்கவே விரும்புகிறான். கற்பனையை அடையும் முயற்சியில் அவன் வெல்லும் போதே தோற்றும் போகிறான். முகமூடியணியாத உண்மைகள் எப்பொழுதும் கசப்பாகவும், புறத்தோற்றத்தில் அருவருப்புமாகவே உள்ளது.

“நதி நாய்களின் வாய்களில்
மனித எழும்புகளும்
மண்டை ஓடுகளும்
கெளவப்பட்டிருக்கிறது….” என நீண்டு செல்லும் எம்.எல்.எம்.அஸாறுதீனின் ”நாய்கள் போல குரைக்கும் நதி” பேரவலத்தின் சாட்சியாக ஓடுகிறது.

மேலும் எம்.வை.புஸ்றாவின் காதல் மற்றும் காதல் புதிய பரிசோதனை, நேர்மறை உணர்வுகளைத் தூண்டும் காதலை பாடுகிறது. ஏ.எல். ரிபானாவின் பட்டமரம் கவிதை தோற்றப்பிழைகளை எடுத்துக் கூறுவதுடன், முதிர்வின் பின்னும் பல பொருட்களின் பயன்பாட்டை விளக்குகிறது.

”நாங்கள் நிறை போட்டி சந்தையிலே
நிர்பவாணத்தினை
விற்கிறோம் ஆடைகள் வாங்க” எனத் தொடங்கும் கவிதை, பரத்தைகளை நோக்கும் சமூகத்தின் பார்வையைச் சாடுகிறது. ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயம் தம் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள மட்டும் எவ்விதப் பேதமுமின்றி வரிசையில் நிற்கும், பரத்தைகளின் வீட்டின் முன். உணவிற்காய் உடலை விற்கும்

“நாங்கள் சாக்கடைகள் தான்
ஆனால் சாதி மத பேதமற்ற
சமத்துவத்தினைப் போதிக்கும்
போதைப் புத்தர்கள்” என்று சமத்துவம் போதிக்கிறார் எம். பைசார் அபூபக்கர் தனது ”மறக்க முடியாதவர்கள்” எனும் கவிதையில்மேலும் உவப்பற்ற உலகம் (ஏ.எல்.ஐயூப்,) இதயம் மட்டும் திறந்து (தோப்பூர் சப்றி), வறுமையின் வரைபடம் (நெளபாத்), அமைதி அல்லது ஆட்கொல்லி & வெயில் முறித்த செழுமை(எஸ்.நுஹா), ஹஷீம் ஷாபிக்கின் சந்தேகங்கள் என 20க்கும் மேற்பட்ட கவிதைகளையும், பல கட்டுரைகளையும் தாங்கிய கனதியான சிறு இலக்கிய இதழாக வெளிவந்துள்ளது மரங்கொத்தி.

மரங்கொத்தியின் அடுத்த இதழ் டிசம்பர் முதல் கிழமையில் வெளிவரவுள்ளது இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக அமைந்துள்ளது.

Series Navigation

மன்னார் அமுதன்

மன்னார் அமுதன்