கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

தமிழ்மணவாளன்

நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி

உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை
உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின் சுவாசமென்பது மனஎழுச்சியின்
மாற்றுச் சொல்வடிவம் தான். கவிமனத்திற்கு எண்ணங்களூம், உணர்வுகளும் கவிதைகளாக பரிணாமம் கொள்வது இயல்பானதே. எனவே தான் கவிதையின்
படைப்புத்திறனை விடவும், நம்பகத்தன்மை கவிமனத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது: இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

‘பெருவெளி எல்லைகளற்றது. குறுக்குக் கோடுகளற்றது. சுதந்திரமானது.விடுதலையின் பஞ்சுப் பொதி நிரம்பியது.வார்த்தைகளுக்கு அவசியமற்ற
மௌனத்தை அப்பிக் கொண்டிருப்பது. எடையற்றுப் பறத்தலைச் சாத்தியமாக்குவது’.

ச. விசயலட்சுமி எழுதிய ‘பெருவெளிப்பெண்’ கவிதைத் தொகுப்பிற்கு தமிழச்சி தங்கபாண்டியன்
எழுதிய முன்னுரையிலிருந்தே மேற்சொன்ன வரிகள்.

பெண் எழுத்து பல்வேறு விசாலமான பகுதிகளில் பரவி வியாபிக்கத் தொடங்கியிருக்கும் முக்கியமான காலகட்டத்தில்
ச.விசயலட்சுமியின் ‘பெருவெளிப் பெண்’ கவனம் கோர்கிறது.

பெண்ணியம் அல்லது பெண் எழுத்து என்பது வாழ்க்கையின் எதார்த்தமான நிகழ்வுகளில் கூட நேரும் சங்கடங்களில் தொடங்கி,வாழ்வையே
கேள்விக்குள்ளாக்கும் மிகப்பெரும் இன்னல்களைப் பேசுவது வரை நீள்கிறது. நெருங்கிய நட்பின் இறுதி அஞ்சலியில் கூட பங்கேற்க முடியாத சோகம்
பெண்ணென்பதால் நேருமெனில் இருப்பின் மீதான கேள்வியை எதிர் கொள்ளவியலும்.

நடுத்தரக் குடும்பங்களில், வறுமைச் சூழல் வாய்க்கும் வீடுகளில் கணவன் மனைவிக்குள் எழும் பிரச்சனைகள்,
பிஞ்சு உள்ளங்களில் மிகப்பெரிய சோகத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. அதுவும்,குடிப்பழக்கம் உள்ள ஆணாக இருக்கும் பட்சத்தில்
சொல்லவே வேண்டாம்: சூழலின் தாக்கம் மேலும் மோசமாகிவிடுகிறது. சமூகத்தின் கணிசமான பகுதி இப்படியான விதத்தில் அமைந்திருக்கிறது என்பதே கசப்பான
உண்மை. மனைவியை, குடித்து விட்டு வந்து துன்புறுத்துகிற- அடிக்கிற போதெல்லாம் சின்னப் பிள்ளைகள் வீட்டின் மூலையில் ஒளிந்து கொள்கிற அவலம்

அப்பன் மீசை பார்த்து என்
அடி வயிறு கலங்கும்
அது கை அருவா மாதிரி

என வெள்ளந்தியாய் பதிவாகும் கவி மனத்தின் இயல்பான வெளிப்பாடு வாசிப்பில் காட்சியாகி கலங்க வைக்ககூடியதாகும்.
பெண் என்பவள் வெறும் போகப் பொருளல்லள். அவள் இரத்தத்தாலும் உணர்வாலும் உருவான மனுஷி. அவளும் அனைத்து விதமான
ஆசாபாசங்களும் இருப்பவள். வெற்று உடம்பின் மேய்ச்சலாய் மாறிப் போகும் ஆண்களின் பார்வையை

உடல் மேயும் விழிகளே
எம் உயிர் துடிப்பைச்
சுவாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
என்னும் நேரடியான வேண்டுகோளை வைக்க நேர்வதென்பது பெண் படைப்பாளியின் மனவெளிப்பாடாக மட்டுமன்றி சராசரிப் பெண் கடக்கவியலாமல் தவிக்கும்
மனச்சோகமாகவும் அறிய முடியும்.

பத்து நிமிட பயண தூரம்
செல்பேசிக் கையோடு
பேசி கொள்கிறோம்
மாதம் ஒருமுறை
ஒரு சில நிமிடங்கள்
என்பது வாழ்வின் பரபரப்பையும், சந்திப்பைத் தவிர்க்கும் மனித மனத்தின் வெறுமையையும் பேசுவது, எதிர்காலத்தில் -மீள்சுழற்சியில் பண்பு நிலை
மாறிடும் வேளையில்- தற்கால மனோபாவம் பற்றிய நிதர்சனத்தை அதிருப்தியோடு எதிர் கொள்ளக்கூடும்.

அனைவரின் ஆட்டத்திற்கும்
ஆடும் இது
ஒரு முறையேனும்
தன்னைத்தானே
அசைத்துக் கொண்டதுண்டா?
வென தஞ்சாவூர் பொம்மையை குறித்த கேள்வியின் இலக்கு எது வென நகர்வது பல தளங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்தியத்தை உள்ளடக்கியத்தாகும்.

கவிதையாக்கத்தில் தொன்மத்தைப் பயன்படுத்துவது பல நவீன கவிஞர்களும் செய்து பார்க்கும் யுத்தி தான்.

பாஞ்சாலிக்கு உதவிய
கண்ணபிரான் நையாண்டிக்குள் சிக்கி
கொடுக்கத் துணிகிறான்
இராமன் அளித்த
பரீட்சையை

எதையும் மீள் பார்வைக்கு உட்படுத்துவது சாத்தியமே:அவசியம் கூட. சமூகம் தொடர்ந்து -(சமூகம் என்பது ஆண்கள்தான்)- அளிக்கும் ஆதிக்க
நெருக்கடியில் கண்ணனை மட்டுமல்ல எந்த ஆணையும் பொருத்திப் பார்க்கவே யத்தனிக்கும். எனக்கு ‘பரீட்சை’ என்னும் சொல் சரியாவென்று தோன்றுகிறது.
இராமன் இழைத்ததை பரீட்சையாய் எவ்விதம் கொள்ளவியலும்.

சுட்டு விரல் நீட்டி
மட்டுப்பட்டவள் என்றதும்
மனச்சான்று மறுத்து
சந்தேகத்தை அங்கீகரித்த
இராமன்

இராமனின் செயல்பாடென்பது பெண்ணின் மீதான வன்முறை என்னும் கருத்தோடு, பெண்ணின் அபயக் குரல் கேட்டு உதவிய கண்ணனின் மனமும்
அவ்வாறாகிப் போயின், பெண்ணுக்கு சந்தேகத்தின் பேரால் நேரும் சிக்கலின் தீவிரம் அல்லது மாறாக அதனுள் சிக்காதிருக்க அவள் மேற்கொள்ள வேண்டிய
செயல்பாடுகள் குறித்த இடர்பாடுகளையும், போலிக் கட்டமைப்பையும் உணரமுடியும்

அடுத்தவர் வண்டியில்
அவசரத்திற்குச் சென்ற தருணத்தில்
தொடங்கிய பிணக்கு
எதில் போய் நிறைவுறும்

அது பிணக்கில்லை:சீக்கு. எப்படி நிறைவுறும்?. அடுத்தவர் வண்டியில் செல்வது வசதி கருதியோ அல்லது இயல்பாகவோ அமையும் பட்சத்தில் ஏற்பதற்கு
கவிதை சொல்லிக்கே உடன்பாடில்லை போலும். ‘அவசரத்திற்கு சென்ற தருணம்’ என்கிறார். கருத்து முன் வைப்பில் ஒரு பாதுகாப்பு.
சில சமயங்களில் சுய பாதுகாப்பு எதிராளிக்கு போலி வலிமையை தந்து விடக்கூடும். எப்படியிருப்பினும், அன்றாட வாழ்வில் தொடரும்,
எதிர்கொள்ளவேண்டிய இக்கட்டுகள் எளிய நிகழ்வாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு என்பதும், அந்த நட்பு காதலாய் மாறும் தருணம் எது என்பதை அறிவதும்
கவித்துவமாய்,
எனக்குள் நீ பதியனிடப்பட்டது அறியாமல்
வெறும் கருத்தொற்றுமை
மட்டுமேயென எண்ணியிருந்தேன்
என் மனதுக்குள்
பூபூக்கும் தருணங்களிலும்
முள்குத்தும் முனகலிலும்
நீயே தெரிய
கங்காரு குட்டியாய்
உன்பாதுகாப்புக்குள்
நான்
என்னும் காதல் மனத்தின் இயல்பு புரிந்து கொள்ளக்கூடியதே. கங்காருக்குட்டியாய் அன்பின் பிடியில் அடைக்கலம் தேடுவது காதலைக் கௌரவப் படுத்துவதாகும்.
அது ஆணுக்கும் பெண்ணுக்கும் போதுவானதாக இருக்கவேண்டும். பெண்ணின் குரலாய் மட்டும் போய்விடக்கூடாது.

ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் காதல் தவிர்த்த நட்பு இராதா என்ன? இன்றைய வாழ்முறைச் சூழலில்
நுட்பமாகவும் அவசியமாகவும் பேசப்படவேண்டிய பகுதி.

உடல் தவிர்த்த
உணர்வுகளின்
ஒளிவுகளற்ற
பரிமாற்றத்தில்
உயிர்த்தெழுகிறது
பால் தகர்த்த நட்பு

‘தகர்த்த’ என்னும் சொல்லில் ஆணுக்கும் பெண்ணுக்குமான சுவர் தகர்க்கப்பட்டு கம்பீரமான நட்பை கட்டமைக்கிறது.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக ‘வழிந்தோடும் விசும்பல்’ என்னும் கவிதையை குறிப்பிடுவேன்.

அரச மாளிகையின் அந்தப்புரத்தில், சுகித்துக் கிடப்பதாய் ஊரார் கருதும் இராணிகளுக்குள்ளும், வெப்பமும் வேதனையும் விரவி கிடப்பதைப்
பேசும் கவிதை. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல்,

விழாக்கோலம் கொண்ட
இராசபுதனக்
கோட்டைகளின் கம்பீரமோ
புகைப்படமெங்கும்
மீசை முறுக்கியபடி

எனமுடியும்.

இப்படியாக பல கவிதைகளை மேற்கோள் காட்ட ஏதுவாக தொகுப்பு அமைந்திருப்பது முதல் தொகுதியை வழங்கியிருக்கும் விசயலட்சுமிக்கு
வெற்றியென்றே சொல்லவேண்டும்.

உன் உறுப்பை எழுதாதே
உரிமையை எழுதாதே
உணர்வை எழுதாதே
வளைந்தே கிடப்பதுதான்
வீச்சரிவாள் என்பார்கள்
என எதிர்வரும் விமர்சனத்துக்கும் எதிர்வினை ஆற்றி,

குத்தகைவிட்ட யோனி மீட்டு
மீண்டும் உயிர்த்தெழுவேன்

எனவெழுதும் போது தீவிரப் பெண்ணியக் குரலைப் பதிவு செய்த நிறைவு ஏற்பட்டிருக்கக்கூடும். வெளிப்பாட்டுரிமை கவிஞருக்குரியது.
ப்ரயோகிப்பது தவறில்லை: அதே வேளை ப்ரயோகத்தின் அவசியம் குறிப்பிட்ட இடத்தில் தேவையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும்
கவிஞருக்கே உரியது. கவிதைக்கு வெளியே ஒரு சொல் கொண்டிருக்கும் பொருளும் தீவிரமும், கவிதையில் வெளிப்படுத்தும் பொருளும்
தீவிரமும் வெவ்வேறாக செயல்படும் சாத்தியம் வாசகதளத்தில் உருவாகக்கூடியதே.

ஆணாதிக்கத்தின் மீதான விமர்சனத்தையும்,சில சமயத்தில் வேண்டுகோள்களையும் முன்வைக்கும் பல கவிதைகளைக் கொண்டிருக்கும் தொகுப்பில்
சில கவிதைகள் கருத்தை வலியுறுத்தி விட முயலும் தீவிரத்தில், கவித்துவத்தின் நெருக்கத்தைத் தவறவிட்டிருக்கின்றன. கவிதை பற்றி நான்
கொண்டிருக்கும் வாசகத்தன்மை, நழுவிப் போன சில இடங்களை உணரவைக்கின்றன.இருக்கட்டும்.அவை தொடர்ந்த கவிதைப் பயணத்தில் கடந்து
செல்லத்தக்கவையே.கவிஞரின் முதல் தொகுதி, நேர்மையான பெண்ணியக்குரலோடு ,எதார்த்தமான நடைமுறைச் சிக்கல்களை பதிவு செய்திருப்பது
மகிழ்ச்சிக்குரியது.இவரின் தொடர்ந்த செயல்பாடு சில இலக்குகளை அடையும் என்னும் நம்பிக்கையிருக்கிறது .வாழ்த்துக்கள்.

வெளியீடு: மித்ரா ஆர்ட்ஸ்&கிரியேஷன்ஸ்
32/9 ஆற்காடு சாலை
சென்னை 600 024

Series Navigation