பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

முனைவர் துரை. மணிகண்டன்



உலக இலக்கியங்களில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. நடுவன் அரசால் செம்மொழி தகுதி பெற்ற ஒரு மொழியாகும். இத்தகு சிறப்புப் பெற்ற மொழியில் பல இலக்கிய காலங்களில் பல்வகையான இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் பக்தி இலக்கியம் என்பதும் ஒன்று. இதனைத் தனிநாயகம் அடிகளார் “ஆங்கிலம் வணிகத்தின் மொழியென்னும், இலத்தீன் சட்டத்தின் மொழியென்றும், கிரேக்கம் இசையின் மொழியென்றும் செருமன் தத்துவத்தின் மொழியென்றும் பிரஞ்சு தூதின் மொழியென்றும் இத்தாலி காதலின் மொழியென்றும் கூறுவது ஒருபுடை ஒக்குமெனின் தமிழை பக்தியின் (இரக்கத்தின்) மொழியானால் பொருந்தும்.” என்று தமிழைப் பக்தி மொழியென்று கூறுவார்.
இத்தகைய சிறப்புப் பெற்ற பக்தி இலக்கியப் பாடல்களில் எண்ணிலடங்கா இலக்கிய கூறுகளும் வாழ்வியல் தத்துவங்களும் பரவி விரவிக்கிடப்பது அனைவரும் அறிந்த உண்மையே. இறுப்பினும் இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான சூழலைப் பக்தி இலக்கியம் பதிவு செய்துள்ளதா என்பதை வெளிக்கொணரும் விதத்தில் பக்தி இலக்கியத்தில் மனிதவள மேம்பாடுகள் என்ற தலைப்பில் கூறும் கருத்துக்களை இக்கட்டுரையில் காண்போம்.
மனிதவள மேம்பாடு
ப+மிப்பந்தில் மனித இனம் மட்டுமே ஆறாவது அறிவை பெற்றுத் திகழ்கிறது. இத்தகைய சிறப்புப் பெற்ற மனித இனம் பலவழிகளில் நன்மையையே முன்னிலைப்படுத்தி செல்கிறது. மேலும் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுத் திகழ மனிதனுடைய எண்ணம் விரிவடைய வேண்டும். அதற்கு மனிதவளம் உயர்வானதாக இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் கல்வித்தரம், ஆண் பெண் சமத்துவம், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள் ஆகிய அனைத்துத் தகுதிகளையும் உடையனவே மனிதவள மேம்பாடு என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவிக்கிறது.
மனிதவளமேம்பாடும் பொருளாதாரமும் பின்னிப் பினைந்தவை என்று கே.சீனிவாசன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
மனிதவள மேம்பாட்டு நிலவரத்தைப் பொறுத்தவரையில் உலக நாடுகளில் 127வது இடத்தை இந்தியா வகித்து வருகிறது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அறிக்கைத் தெரிவிக்கின்றது.
இம்மனிதவள மேம்பாடுகள் குறிப்பிட்டுள்ள கூறுகளைப் பக்தி இலக்கியங்களில் மிகுதியாக காண முடிகின்றது.
கல்வி
அறிவை திறக்கும் திறவுகோள் கல்வி எனலாம். கல்வி கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இன்றல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பே நமது சங்க இலக்கிய புலவர்களும் மன்னர்களும்; வலியுறுத்தியுள்ளார்கள். இக்கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் பக்தி இலக்கியப் பாடல்கள் பதிவு செய்துள்ளன.
திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பெரிய கடல் போன்றது. அதனை நுகர நுகர பேரும் புகழும் கிடைக்கும் என்று வலியுறுத்துகிறார்.
“கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும்”
என்றும்,
“கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை”…
என்று கல்லாதவன் இவ்வுலகில் மிகக் கீழான உயிரைவிட மோசமானவன் என்கிறார். எனவே கல்வி என்பது மிக முக்கியமாகக் கருதப்பட்டது.
திருமூலர் கல்லாதவனைப் பழித்து ஒதுக்குகிறார்.
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாதே
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லாராம்
கல்லாத மூடர் கருத்தறி யார்களே”
என்று கல்லாதவர்களின் இழி செயலையும் அவர்களோடு இணைவதால் ஏற்படும் தீமைகளையும் விளக்கிக் கூறுகிறார்.
ஒரு நாட்டில் கற்றவர்கள் அதிகம் இருந்தால் அந்நாடு வறுமையிலிருந்து மீண்டுவிடும். அறிவு ஞானம் பெற்றுவிடும் என்பதை,
“கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி” என்று திருவிசைப்பா கூறுகின்றது. இது போன்றே அருணகிரிநாதர்
“அழித்துப் பிறக்க வொட்டா அயில்வே லவன் கவியை
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரிமூண்டதென்ன”
என்று மனித பிறப்பில் செய்ய வேண்டியது கல்வி கற்றுக் கொள்வதே என்று கூறுகிறார். இவையாவும் மனிதவள மேம்பாட்டிற்கான கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களாகும்.
ஆண் பெண் சமத்துவம்
ஒரு நாட்டில் ஆண் பெண் சமத்துவம் சரியாக இருந்துவிட்டால் அதுவே மனிதவளம் அடைந்த நாடாகக் கூறுகின்றனர். அந்த வகையில் ஆணுக்கு என்ன உரிமைகள்? என்ன நடைமுறைகள் இருந்தனவோ அவையெல்லாம் பெண்களுக்கும் பக்தி இலக்கியம் வழங்கியுள்ளன. சைவத்தில் காரைக்கால் அம்மையார் மூத்தவர்களாகவும் மற்ற அடியவர்களால் மதிக்கக் கூடியவர்களாகவும் இருந்துள்ளார். வைணவத்தில் ஆண்டாள் என்பவள் ஆண்களுக்கு நிகராக இறைவனைத் தன் கணவனாக எண்ணிப் பாடியுள்ளார். இஃது அன்றைய கால ஆணாதிக்க போக்கில் பெண்களும் சமமாக இருந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
சிவபெருமான் தன் உடலில் ஒரு பாகத்தைப் பெண்ணாகவும் ஒரு பாகத்தை ஆணாகவும் வைத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார். இதுவே பின்பு தோன்றிய பாரதி, பாரதிதாசனுக்கு இறைவன் குருவாக விளங்கியுள்ளதையும் இதன் மூலம் காணலாம்.
மாணிக்கவாசகர் தன்னையே ஒரு பெண்ணாக நினைத்துப் பாடும் தன்மையும் திருவாசகம் வெளிப்படுத்துகிறது.
“தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால்வெள்ளை நீரும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந் தூதாய்க் கோத்தும்பீ”
என்று பாடுகின்றார்.
இதன் மூலம் ஆண் பெண் சமத்துவம் பக்தி இலக்கியத்தில் மேலோங்கியிருந்ததை காணமுடிகின்றது.
சுற்றுச் சூழல்
மனிதவள மேம்பாட்டிற்குச் சுற்றுச் சூழல் மிகக் முக்கியமானவையாகும். நாட்டில் தூய்மையான நிலப்பகுதிகள் இன்று மிகக் குறைவு. மரக்கன்றுகள் இப்பொழுதுதான் நடப்படுகின்றன. பக்தி இலக்கிய காலங்களிலும், பாடல்களிலும் அன்று சுற்றுச்சூழலை யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் சுற்றுப்புறங்கள் தூய்மையாகவும், நல்ல மரங்கள், செடி, கொடிகளாலும் இயற்கை வளங்கள் மிகுந்து இருந்ததுதான் காரணமாகின்றன.
தேவாரப் பாடல்களில் பெரும்பான்மை இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழல்களையும் பற்றியே உள்ளன. குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, இராமேஸ்வரம் என பாடல் பெற்றத் தளங்கள் அனைத்தும் இயற்கை எழில் கொண்டவையாக இருந்துள்ளன.
“வெண்நிறத்த வரையோடு அலர் உந்தித்
தென்நிறத்த புனல்பாய் திருப்பத்தூர்.”
(தேவாரம்-2898)
என்றும்
நெய்தல் ஆம்பல், கழுநீர் மலந்தூங்கும் (2899)
என்றும்,
‘மான்பாய, வயலருகே மரமேறி
மந்திபாய, மடுக்கள் தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கடல்
மொட்டலருந் திருவையாறே”…
என்று திருவையாற்றின் சுற்றுப்புறச் சூழலையும் அழகாக தம் பாடல்களில் பாடியுள்ளார். எனவே சுற்றுச் சூழல் அன்று இயற்கையாலும் மனிதர்களாலும் காக்கப்பட்டு வந்துள்ளன.
சுகாதார பணிகள்
தூய்மையாக இருக்கும் பகுதிகள் இல்லாமல் ஒரு சில இடங்களில் தூய்மையற்றதாக இருந்தால் அதனைத் துப்புறவு செய்து இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது இன்றைய அவசியம். இதனை அப்பர் பெருமான் பல கோயில்களில் செய்துள்ளார். உழவாரப்படைச் செய்து கோயில் பொது இடங்களைச் சுத்தம் செய்து அதனை வழிபடும் தளங்களாக மாற்றியுள்ளார். எனவே அவரை உழவாரப்படை ஏந்திய அப்பர் என்று அழைப்பர். இதனை
“நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
ப+மாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி”
மேலும் காலை மாலை நீராடி இறைவனை வணங்குதல் வேண்டும் என்ற சுகாதார -திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது இப்பக்தி இலக்கியம் என்றால் வியப்பேதுமில்லை. இதனால்தான் பலர் ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்துள்ளனர்.
தி;ட்டங்களும் செயல்பாடுகளும்
ஒரு நாடு வெற்றியடைய வேண்டுமெனில் திட்டங்கள் மிகச் சரியாகத் தீட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் செயல்பாடுகளும் சரியானதான இருக்கும். திட்டம் தீட்டாததனால் நாவுக்கரசர் சமண மதம் சென்றார். அங்கிருந்து சைவ சமயத்திற்கு வந்தார். வந்தவர் மகேந்திர வர்ம பல்லவனையும் சைவத்திற்குக் கொண்டு வந்தார்.
ஞானசம்பந்தர் கண்ணில்பட்ட ஊர்களிலெல்லாம் பாடவில்லை. திட்டத்தைத் தீட்டிக் கொண்டு ஒரு சில ஊர்களில் மட்டும் பாடிக் கொண்டு வந்தார். அதனால்தான் கூன் பாண்டியனை சைவத்திற்கு மாற்றினார். எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் அதற்கு திட்டம் மிக மிக அவசியம் அதனைத் தொடர்ந்து தான் செயல்பாடும் நல்லமுறையில் அமையும் என்பதை இவ்விரு நிகழ்ச்சிகளும் சான்றாக அமைந்துள்ளன.
எனவே பக்தி இலக்கியங்களிலும் மனிதவள மேம்பாட்டிற்கான கல்வி, ஆண் பெண் சமத்துவம், சுற்றுச்சூழல், சுகாதார வசதிகள், திட்டங்கள், செயல்பாடுகள் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருமூலர் பாடல்கள் மூலம் ஆராயப்பட்டுள்ளன. இவைபோன்று இலக்கியங்களைப் புதுமையானப் போக்கில் ஆராய்ந்து கட்டுரை வெளியிடுவது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை மிகுந்ததாகும்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1973.
திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி தேவாரப் பதிகங்கள், வைச சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1974
முனைவர். வா.செ. குழந்தைசாமி, உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ், பாரதி பதிப்பகம், சென்னை.
திருமூலர், திருமந்திரம்.
ர்ரஅயn சுநளநயசஉh னுநஎநடழிஅநவெ ழக ஐனெயைஇ டீழழமடநவஇ 2005.
சு. ளூயசஅய “ர்ரஅயn சுநளழரசஉந ஆயயெபநஅநவெ” யுபசய – 2002.
P.P. யுசலய யனெ டீ.டீ. வுயனெழnஇ ர்ரஅயn சுநளழரசஉந னுநஎநடழிஅநவெஇ நேற னுநடாiஇ 1998.

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்