லா.ச.ரா

This entry is part of 45 in the series 20071108_Issue

க்ருஷாங்கினி


மிகுந்த வேலைப்பாடுடைய கண்ணாடிக் கிண்ணத்தில் எளிதில் தளும்பிச் சிதறும் திரவத்தை ஏந்தியபடி சிறு பாதையில் நடக்கும் மகிழ்சியும், பயமும், ததும்பும் அனுபவத்துடன் பரவசத்தோடு மாமாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். எளிமையாய் பழகி, வீட்டில் ஒருவராகி விட்டார் மாமா, அவர் இல்லம் செல்ல எப்போதும் உரிமை உண்டு. நாகராஜன் இல்லாமல் செல்ல எனக்கு தைரியம் இல்லாத ஒரு சில படைப்பாளிகளில் லா.ச.ரா வும் ஒருவர். தனியே சென்றால், கேட்கப்படும் முதல் கேள்வி, ‘என்ன நாகராஜனை சமைக்க விட்டு விட்டீர்களா? அல்லது நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்ளவா?’என்பார். நானும் சொல்வேன் ‘இரண்டிற்குமாக’ என்று.

கரிச்சான் குஞ்சு, லா.ச.ரா, எம்.வி.வி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேர்த்தி மிக அற்புதமான காட்சி. யாரையும் அழிக்கவோ, அல்லது அறுத்துக் கூறு போடவோ, திட்டமிடுதலோ ஏதுமற்ற இலக்கிய அரசியல் பேசப்படும். சிறுகதை உருவான விதம், அதில் முன்னரே பேசிக் கொண்டு இருந்த கருவைப் படைப்பாக்கும் போது ஏற்பட்ட மாறுதல்கள், அல்லது பலவீனங்கள் என விவாதிக்கப்படும். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த சக படைப்பளிகளின் படைப்புக்கள் பற்றியும் பேசப்படும்.

பெரிய வீடும், வீட்டின் கடைசியில் சமையல் அறையும், நிறையப் பைகளும், முற்றங்களும் கடந்து முன் வாசலில் பேசப்படும் இலக்கிய சொற்கள் பயணப்பட்டு அதே ஒலியுடன் என்னை வந்து அடையாது. சமையல் அறையை நோக்கிச் செல்லும் முன்னரே நான் சொல்லிவிடுவேன். நான் வந்த பிறகு பேசுங்கள் தயவு செய்து. பேச்சின் ருசியில் விஷயங்கள் வெளிப்பட்டால், நாகராஜன் என்னிடம் ஒலிநாடாப் போல சொல்ல வேண்டும் என, என் இரு காதுகளையும் கழட்டி இவரிடம் ஒப்படைத்துவிட்டு– சமைப்பதற்குகாதுகள் எதற்கு?–உள் புகுவேன்.

மொழி என்பது எல்லோரும் பேசும் தமிழ் என்று சொன்னாலும், ஒவ்வொரு மனிதனுடையதும் தனித்தனி சொற்கோர்வையைக் கொண்டதாக இருக்கும். அவற்றின் அடிநாத உண்ர்ச்சி வெவ்வேறானவையாகத்தான் இருக்கும். வட்டார மொழி, ஜாதி மொழி, மத மொழி, கல்வி மொழி, பொருளாதார மொழி, என எல்லவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் மனிதனின் மொழி இருந்தாலும், அவற்றுள்ளும் உட் பிரிவு உண்டு. எனவேதான் என்னால், முதன் முதலில் பேசும் எவருடைய மொழியையும் முழுதாக உள்வாங்கியதாக ஏற்க முடிவதில்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் பழைய நண்பர்களின் மொழி சற்றே புதிதாகத் தான் தோன்றும். படைப்பிலக்கிய மனிதர்களில் அவர்களில் எண்ணமும், அது சொற் கோர்வைகளாக ஆவதும் ஒரு மாய வித்தையைப் போன்றதுதான். எனவேதான் படைப்பவர்களுடன் நேரில் கலக்க மிகுந்த ஆர்வம்.

லா.ச.ரா வுடன் பழகப் பழக, அவரின் மொழி என்ன சொல்கிறது அல்லது என்ன சொல்வதற்காக சொல்லப்படும் சொற்கள் அவை என்பது ஒவ்வொரு சமயமும் வளர்ந்து கொண்டு வரும் என்னிடம். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமாக வெட்டி வெட்டி ஒட்டப்பட வெவ்வேறு அடுக்குகளாகத்தான் காணக் கிடைக்கும். அவர், தெய்வம் என்ற நிலையிலிருந்து பெண்ணுக்கும், பெண் என்ற நிலையிலிருந்து தெய்வத்திற்கும், உணர்வுகளை மனிதர்களுக்கும், மனிதர்களை உணர்வுக்கும், குடும்ப உறவுகளை முறுக்கியும், முறுக்கியதை சில சமயம் சடாரென்று அதிர்ச்சி தரும் படி வெட்டியும், சுற்றிச் சுற்றி வலை பின்னி எடுத்துச் செல்வார். பெசும் பொழுது அவைகளின் சில துளிகள் நமக்குக் கிடைக்கும்.

கொஞ்சம் தயக்கமும், கொஞ்சம் பயமுமாக என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை கேட்ட போது (1997) உடனே சம்மதித்தார். ஒலி நாடாவில் பதிவு செய்து கொடுத்து என்னை எழுதிக் கொண்டு வரும்படியும் கூறினார்.

ஒரு நாள் மாமா கட்டிலில் அமர்ந்திருக்க, நான் எதிரில் அமர்ந்தபடி மரணங்கள், தான் சந்தித்த அல்லது எதிர்பட்ட என்று தொடர்ந்து கொண்டிருந்தது உரையாடல், அச்சிறு அறையில். அந்த அறையின் ஜன்னலின் எதிரில் மற்றொரு ஜன்னல். இந்த ஜன்னலுக்கும், அந்த ஜன்னலுக்கும் இடையில் சில அடிகள் நிலமும், ஒரு சுற்றுச் சுவரும். அடுத்த வீடு என்ற அடையாளமுமாக இருந்தது. கை எட்டிப் பிடித்துவிடும் தூரத்தில் ஜன்னலின் கம்பிகள். அந்த ஜன்னலிலிருந்து வெளிப்பட்ட, பதறிய ஓலம் எங்களையும் வந்து அடைந்தது. என்ன என்றறிய முடியாத கலவரம். ஊகத்திற்குள் ஏதும் அகப்பட வில்லை. லா.ச.ராவின் கடைசி மகன், ஸ்ரீகாந்த்- எப்போதும் எல்லோருக்கும் உதவி செய்பவன், கடைசிவரை, ஏறக்குறைய பத்தாண்டு காலம், சில சமயம் உடல் நலத்துடனும், சில சமயம் குன்றியும் இருந்த தன் தந்தையை, கண்டிப்புடனும், அன்புடனும் ஒரு குழந்தையைப் போல கவனித்து வந்தவன்-அடுத்த வீட்டு மாடிக்கு சென்றுஅதிர்ந்து, உறைந்து வீடு திரும்பினான்.

அதற்குள், பதறி வந்த ஓலம் இழப்பின் அலறல் கொண்ட அழுகையாக மாறத் தொடங்கிவிட்டிருந்தது. அதே ஜன்னல் வழியாக எங்களையும் எட்டி இருந்தது. கதவு திறக்கப் படாமல் உடைக்கவும் பட்டிருந்தது. அங்கு தொங்கிக் கொண்டிருந்த உடலைக் கீழிறக்க ஆட்களின் உதவி அவசியமாக இருந்தது. எங்கள் ஜன்னலில் அருகில் இருந்த ஜன்னல் கதவுகள் திறந்தபடியே இருக்க உள் பக்கம் மெல்லிய துணி அசைந்து கொண்டிருந்தது. முப்பது வயது இருக்கும். இளம் பெண்ணின் உடல். கீழிறக்கப்பட்டது. உடல் உயிரற்றுப் போனதற்கான காரணம் வீட்டிலிருந்த பெரியவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அழுது கொண்டிருக்கும் அவளின் குழந்தைக்கோ, அவளது அம்மா மற்றும் அப்பாவுக்கோ, மாமனார் மாமியாருக்கோ, அலுவலகம் சென்றிருக்கும் கணவனுக்கோ கண்டுபிடிக்க முடியாததாயிருந்தது. உணவுக்குப் பின் அறைக்குள் நுழைந்தவள் நிரந்தர உறக்கத்தை அப்பிக் கொண்டது ஏன்? மதிய வேளை; எல்லாப் பொருட்களுமே கனம் கூடி, வெயிலின் அடி ஆழத்தில் எல்லாம் ஊன்றி நடப்பட்டவைகள் போல நெட்டுக் குத்தாய் ஜடமாய், நின்று கொண்டிருந்தன. ஆறடிக்குச் சற்றே குறைவான உயரமும், திடகாத்ரமான உடலும் கொண்டிருந்தவள். ஏறக்குறைய லா.ச.ரா, தி.ஜா.வின் படைப்பில் வரும் பெண்ணை முன்னிறுத்தும் அந்த உடல் சரித்து கீழிறக்கப்பட்டது. தளர்ந்த உடலில் சூடும் இருந்தும் உயிர் மீட்டப்பட முடியாமல் போனது. கீழ் தளத்துக்குக் கொணர படிகளின் வளைவுகளில் உடலை மடிக்க முடியாமல் இருந்தது.

இதற்குள்ளகவே ஜன்னலின் எதிரில் அமர்ந்திருந்த லா.ச.ராவுக்கும் எனக்கும் இடையில் திறந்திருந்த எதிர் ஜன்னலின் விளிம்பில் கசிந்து பரவி, காற்றின் வழியே வழிந்து இவ்வறையை அடைந்த மரணமும், மரணக் குறிப்புகளும் பரவி ஒரு துளை வழியே வெளியேறிய நீரைப் போல அந்த அறையை நிரப்பி மூச்சு முட்டச் செய்தது. இவரின் முகத்தில் பெரும் துக்கம். எனக்கும்தான். நீண்ட நாள் பழகிய துக்கம் அவர்களுக்கு. அலுவகத்தில் இருந்த கணவனுக்கு என்ன சொல்லி வீட்டுக்கு அழைக்க? ஸ்ரீகாந்த், உடலைக் கீழிறக்குவதற்கு உதவி, அனைவரையும் தேற்றி, அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி, பின் வீடு வந்த கணவனை அதிர்ச்சியிலிருந்து மீட்டெடுத்து, மருத்துவரை அழைத்து வந்து என சுழன்று சுழன்று உதவினான். இடையிடையே ஏன் இப்படி, ஏன் இப்படி என்று அரற்றிக் கொண்டே. தனது குழந்தைக்கு தீராத நோய் என்று மருத்துவர் சந்தேகிக்கிறார் என்பது காரணம் என்று தெரிய வந்த போது இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா? நோய்க்கு மருத்துவத்தில் குணம் சாத்யப்படாத ஒன்றா? என லா.ச.ரா கூறிக் கொண்டு இருந்தார்.

லா.ச.ராவின் உடலைப் பார்க்க நான் செல்லவில்லை. மறுநாள்தான் சென்றேன். மாமா எப்போதும் படுத்திருக்கும் கட்டிலையும் பார்த்தேன். வீடுகள் மாற்றப் பட்டாலும், இருக்கும் பொருட்கள், ஏற்கனவே இருந்த வாசனைகள், பொருட்கள், பேச்சுக்கள் என நம்மை அருகாக்குகிறது.

கலைமாமணியும், வயதான காலத்தில், காலம் தாழ்த்தித்தான் கிட்டியது. ஞான பீடம் பெற தகுதியுள்ளவன்தானே நான்? என்ற தீர்மானமான உண்மையை சந்தேகமாகக் கேட்டார்.

ஸ்ரீகாந்தைப் பார்க்கத்தான் முடியவில்லை. இன்னமும் அப்பா கட்டிலில் படுத்திருக்கிறார் என்றான். லா.ச.ராவின் மற்ற பிள்ளைகளில் ஒருவர் என்னிடம், ‘நாங்கள் எல்லோரும் வெளி இடத்தில் இருக்குகிறோம். அப்பாவை ஸ்ரீகாந்திற்கு நேர்ந்துவிட்டிருக்கிறோம்’ என்றார்.

குடும்பம், குடும்ப உறவுகள் இவற்றின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் லா.ச.ரா. எழுத்தாளர்கள் என முதல் தடவை வரும் எவரையும் விசாரிப்பார், முதல் கேள்வியாய் ‘என்ன செய்கிறீர்கள்’ என்று. ஏறக்குறைய அனைவரும் தமது படைப்பின் பிரிவையே கூறுவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை என. ஆனால் அவர் உடனே பதில் கூறுவார்’ அது சரி பொழப்புக்கு?’ என்று எதிர் கேள்வி கேட்பார். எழுத்தால் மட்டுமே வாழ இயலாது என்றும் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்றும் கூறுவார். பலருக்கு அவரின் முதல் கேள்வி எரிச்சல் கொடுக்கக் கூடும். நிரந்தர வருமானமில்லாமல் எழுத்தை நம்பி குடும்பத்திற்கு துன்பம் கொடுக்கக் கூடாது என்று எண்ணுபவர்.

லா.ச.ரா. இறந்த செய்தி அறிந்தவுடனேயே முதல்வர் அவருக்கு அளித்த இரண்டு லட்சம் ரூபாய் அவரின் மனைவிக்கு பெரும் ஆறுதலாய் இருந்திருக்கும். ஆனால், அவர் உயிருடன் இருக்கும் போதே ஞானபீடம் வந்திருந்தால் லா.ச.ரா மனம் குளிர்ந்திருப்பார். விருதுகளுக்குப் பின்னால் செல்லுபவர் இல்லை. ஆனாலும் அது தனது எழுத்துக்குக் கிடைத்த மதிப்பாக கருதி இருப்பார்.

‘தாம்பரம் வரை செல்ல வேண்டும், சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என கணவர் இறந்த துக்கத்தின் இடையிலும் அவரின் மனைவி கூறியது, எப்போதும் அவரைத் தேடி வரும் நண்பர்களுக்குப் பெருமையுடன் உணவும், தேநீரும், காபியுமாய் உபசரித்து அனுப்பும் அவர்களின் குடும்பமும் எழுத்தின் மதிப்பை உணர்ந்து இருக்கிறது என்பதை உணர்த்தியது.

என் சிறுகதைத் தொகுப்பிற்கு லா.ச.ரா. அளித்த முன்னுரையிலிருந்து, ” ஒன்று சொல்வேன், இந்தப் புத்தகத்தின் விஷயக் கூறே உடல் என்று சொல்லலாமா? காலத்தின் கூற்றில் உடல் படும் வேதனை, இழிவு, அதனால் மனத்தின் சரிவு, இச்சரிவினாலேயே மேலும் சரியும் உடல்……….”


nagarajan63@gmail.com

Series Navigation