நாடோடி மனம் – பிரம்மராஜன்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

மாலதி


—-

‘எழுதாமலிருப்பது எப்படி ? ‘என்ற தலைப்பில் ஜெயகாந்தனுக்கு சார்பாகவும்

ஜெயமோகனுக்கு எதிர்ப்பாகவும் ஒரு கருத்தரங்கு ஆய்வுத் தாளைப் பாதியிலேயே

கலைத்துவிட்டு பிரம்மராஜன் அவர்களின் நாடோடி மனம் குறித்து நான் எழுத

ஆரம்பித்தது தமிழரின் நல்லதற்கு அல்ல.தம் அகற்பு மற்றும் தமிழ்த்தேசியம்

இதெல்லாமே அவர்களின் முழு நேரத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற

போர்க்கால கட்டம் இது

வேலை மெனக்கெட்டு 29 கட்டுரைகளில் பிரம்மராஜன் அயலெழுத்துச்

சிறப்பையும் ஆங்கில ஐரோப்பிய மற்றும் சர்வதேச எழுத்தாளர்களின்

வாழ்க்கைக் குறிப்பு உள்ளடங்கிய விவரணைகளையும் ‘நாடோடிமனம் ‘ என்ற

புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார் .ஆனாலும் மனிதருக்கு அபார நம்பிக்கை

தமிழ் இலக்கிய வட்டத்தின் மீது. எல்லாரும் தேடிப் பிடித்து புதியதை

அடையாளம் கண்டுகொண்டு படித்து விடுவார்கள் என்று. பல கட்டுரைகளின்

பரிச்சயமான தலைப்புகளைப் பார்த்து புதிய பல விஷயங்களைத் தவறவிடக்கூடிய

வாய்ப்புகள் அதிகம் என்று எனக்குத் தோன்றுகிறது.எனவே தான் இந்தக்

குறிப்பில் நான் முன்னமேயே வெளியிடப்பட்டிருக்கும் ‘பதினைந்து ஐரோப்பிய

நவீன இலக்கியவாதிகள் ‘ பற்றிய விவரங்களை கவனமாகத்

தவிர்த்திருக்கிறேன்.

இது புதுசு கண்ணா புதுசு என்று யார் விளம்பரம் போடப்போகிறார்கள் ? பழசு

படு பழசு என்று இணையம் முதல் இதழ்கள் வரை வல்லானே புல் மேயும் பொல்லாத

பரப்பல்லவா ஊடகம் ?[நேற்று தமிழ்ப்புத்தகம் ஆன் லைன் லிஸ்ட்டைப்பார்த்து

நொந்து போனேன் .எல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டு நூல்கள்! மாய்ந்த

எழுத்தாளர்கள்!அவ்வளவு பேரும் ஒரே குழு!]

காஃப்கா பற்றி இப்படி எழுதுகிறார் பிரம்மராஜன்…-தனது நண்பரும்

இலக்கியவாதியுமான Max Brod என்பவரிடம் காஃப்கா எழுதிய எல்லா

சிறுகதை,நாவல்கள் மற்றும் அனைத்துக் கையெழுத்துப்பிரதிகளையும் தீயிட்டு

எரித்துவிட வேண்டும் என்ற கடைசி விருப்பத்தினை தெரிவித்துச்

சென்றார்.1921ல் காஃப்கா எழுதிய உயிலிலும் இதை அழுத்தமாக

எழுதியிருக்கிறார்..Max Brod அவரது நண்பரின் கடைசி விருப்பத்தைப்

பூர்த்தி செய்திருந்தால் இன்று எவருக்கும் காஃப்கா என்ற முதல்தர நவீனத்துவ

எழுத்தாளனைத் தெரியாமலேயே போயிருக்கும்.[ஆபிதீனுக்குக்

கிடைத்தாற்போல் நண்பர்கள் காஃப்காவுக்கெல்லாம் கிடைப்பார்களா என்ன ?]

ஆஸ்திரிய ஐரோப்பிய நவீனத்துவ நாவல் இலக்கியத்தில் பெயரை நிறுவிய

காஃப்கா காச நோயிலும் அப்பா பயத்திலும் திருமணபீதியிலும்

வாழ்க்கையைக் கழித்தவர்.ஒவ்வொரு படைப்பாளியிலும் ஒரு கலைஞனும் ஒரு

பலிகடாவும் இருப்பதோடு அவனுக்குத் தீராத மனப்பள்ளமும் உண்டு என நம்பினார்

காஃப்கா.அவரே தன் மெலிந்த உடல் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டவர்.

லேசான சப்தங்களைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாத அசாதாரணப்பிறவி.

The judgement கதையை ஒரே இரவில் எழுதி முடித்தவர்.

‘நமக்கு அவசியமான புத்தகங்கள் நம்மீது ஒரு துரதிருஷ்டத்தைப்போலவோ

நம்மை விட நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப்போலவோ

தற்கொலையின் விளிம்பில் நாம் இருப்பதைப்போலவோ மனித சஞ்சாரமே

இல்லாத தூரத்துக் காட்டில் இருப்பதைப்போலவோ நம் மீது

இயங்கவேண்டும்.நமக்குள் உறைந்து கிடக்கும் ஒரு சமுத்திரத்தைப்பிளக்கும்

கோடரி போலவோ பயன்பட வேண்டும். ‘என்று எழுதினாராம் காஃப்கா.இதையே

இப்படியே தான் நான் அனுபவித்தேன் நகரச்சூழலில்,நேர வாகன

நெருக்கடிக்கிடையில்,ஒவ்வொருமுறையும் நூல் நிலையத்தைத்

தஞ்சமடையும்போதெல்லாம்.

மனிதன் பூச்சியாகவும் விலங்கு பேசும் மனிதனாகவும் ஆவதைக் கற்பனை

செய்தவர் காஃப்கா..

காஃப்காவின் இன்னொரு அபிப்பிராயம். இது.

எழுதுதல் என்பது விநோதமானது.மர்மமானது.ஆபத்தானது கொலைகாரர்களின்

வரிசையிலிருந்து தாவித்தப்புவது.மெய்யாக நடப்பதை நிஜமாகப்பார்ப்பது.ஒரு

உயர்நிலைக்கவனம்.இந்த கவனம் எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அந்த அளவு

குறிப்பிட்ட வரிசையின் பிடியிலிருந்து தப்பி சுதந்திரமாய் இருக்கலாம்.

இன்னும் சொல்கிறார் பிரம்மராஜன் காஃப்கா பற்றி–.காஃப்காவின் மொழி

தெளிவானது.அலங்காரங்கள் அற்றது.ஆஸ்திரிய ஜெர்மானிய சட்டவியல்

பிரயோகங்களைக் கொண்டது.ஓரளவு தட்டையாகவும் பல இடங்களில்

சலிப்பேற்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது. மொழி ரீதியான

வாணவேடிக்கைகளுக்காக காஃப்காவைப் படிப்பவர்கள் ஏமாறுவது உறுதி….இது

போன்ற மிக நுட்பமான உள்விரிவுக் காட்டிகள் வாசிப்பவர்க்கு நல்லதொரு

வெளிச்சமும் அயலெழுத்தின் மீதான அணுக்கமும் தருகின்றன.

‘ஒரு இளம் கவிஞன் மீதான விசாரணை ‘ நிறைய சிந்திக்க

வைக்கிறது.தற்காலத்திய மொழிச்சூழலுக்குக் கூடுதல்

தெளிவைக்கற்பிக்கிறது.பல சோப்புக்குமிழிக் கற்பிதங்கள் உடைபட்டுப்

போகக் காரண்மாகிறது.

டி.எஸ்.எலியட்டின் ‘பாரம்பரியமும் தனித்துவத் திறனும் ‘ கட்டுரை

மிகத்தரமாய் சரளமான சிக்கலில்லாத மொழியில்

சொல்லப்பட்டிருக்கிறது. ‘நாடோடி மனம் ‘ புத்தகத்தில் மிகச்சீரிய கட்டுரை

இது என்றால் அதிகம் சொன்னதாகாது.அப்படியே ஆக்டேவியா பாஸின்

‘கவிதையும் வரலாறும் ‘ கட்டுரைத் தமிழாக்கம்.

அமெரிக்க இமேஜிஸ்ட்டும் வித்யாசமான பெண்கவிஞருமான அமிலோவல் பற்றிய

குறிப்பு மற்றும் அவருடைய கட்டுரைத் தமிழாக்கம் சுவையானது.

குழந்தைக்கனவு படிந்ததும் ‘எலி ‘யைப்போல் நகர வாழ்க்கைக்கான பதற்றம்

கொள்வதுமான அந்தோனிபார்த்துசெக் எழுத்தின் நவீனத்துவத்தை நான்கு

கவிதைகளில் சரி பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

கவிஞர்,புனைகதை ஆசிரியர்,நாட்குறிப்பாளர் ,இதாலிய

மொழிபெயர்ப்பாளர்,மற்றும் இதாலிய நாவலாசிரியர் சேஸரே பவேசே

திரும்பத் திரும்ப இலக்கியப்பத்திரிக்கை தொடங்கி நடத்திக்

களைத்தவர்.பெண்கள் சம்பந்தமான அணுகுமுறைகளில் கேவலமாகத் தோற்று

மேலதிகமான விமரிசனங்களையும் சர்ச்சைகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டு

தற்கொலைமுயற்சிகளை சுரம் தலைவலி போல் அவ்வப்போது வரவழைத்துக்

கொண்டவர் இறுதியில் அமெரிக்க நடிகை Constance Dowling வுடனான

உறவுச்சிக்கலால் ஹோட்டல் அறையில் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலை

செய்துகொண்டு முடிந்து போனார்

பெண்ணியத்தை எதிர்கொண்ட ‘Among. women only ‘ ,. ‘Fallen

women ‘ வேசிப்பெண்கள் போன்ற கவிதைகள் அந்தக்காலகட்டத்தில் [1900

களின் முதல் அரை நூறு] மிகத் துணிச்சலான வெளிப்பாடுகள்.இப்போதும் இந்த

வரிகள் பெண்ணியபலம் மற்றும் பலவீனம் குறித்த கூர்மையான மதிப்பீட்டைக்

கத்திமுனையில் செருகி வைத்திருப்பவை எனவே படுகிறது நடுநிலையாளனுக்கு.

வேசிப்பெண்கள்

—-

அவர்களை அப்படி நடத்துவது சரியே.

நிச்சயமாய் அவர்களுக்காகப்பரிதாபப்பட்டு

பின் படுக்கைக்கு அழைத்துச் செல்வதை விட..

….

கருணை எப்போதும் கால வீணடிப்பு.

வாழ்க்கை பெரியது. கருணை அதை மாற்றாது.

மெளனத்தில் உங்கள் பற்களை நறநறத்துக் கடிப்பது மேல்.

….

மேலும் நானழுதேன் பெண்களைப்பற்றி எண்ணும்போது.

….

சிலநேரம் என்னைப்பார்த்தாள்,புகைத்தாள்,நான் பேசவில்லை.

நிச்சயமாய் நான் எண்ணவில்லை ஆனால் என் குருதியில் இன்னும்

உணர்கிறேனந்த ஊடுருவும் பார்வையை.

கடுமையாய் உழைத்து வாழ்க்கையை அது கிடைத்தவாறு ஏற்ற

யாரோ ஒருவரின் ஒரு கண நகைப்பை

….

நீங்கள் ஆயிரக்கணக்கில் பெண்களைக்காப்பாற்ற இயலும்.

ஆனால் நான் பார்த்த

புகைக்கும் அந்த எல்லோரும்….

….

….எப்போதும் இருப்பார்கள்.

இது மிக உக்கிரமான ஆனால் யதார்த்தமாக பெண்ணியத்தை உடைக்கும் பார்வை.

ஆனால் ஏதோ ஒரு அலாதியான விதத்தில் நம்மிடம் நியாமும் இது

கோருகிறது என்பதில் தான் விநோதமே.

சார்லஸ் புக்கோவ்ஸ்கி பற்றிய ஒன்றரைப்பக்க விவரணைக்காக அதில்

அடங்கியிருக்கும் ஓராயிரம் ஊற்றுக்களை மனதில் குபுக்கிடவைக்கும் பிரத்யேகத்

தகவல்களுக்காக மட்டுமே புத்தகத்தை வாங்கிப் படித்து விடலாம் .ஒரு

வாழ்க்கைக்குள் இத்தனை முரணா ?அதுவும் அந்தக் கவிதை அதி அற்புதம்!

.சாராம்சம் எளியதாக இருந்தபோதிலும் சொல்லும் விதம் அழுத்தமாக

இருக்கமுடியும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் கவிதை அந்த ‘அவர்கள் அவர்கள்

எல்லோரும் அறிவார்கள் ‘ என்ற சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் மூன்றரைப் பக்க

கவிதை.

இவான் கோன்ச்சரோவ் பற்றி சொல்லப்பட்டதையும் விட அவருடைய புகழ் பெற்ற

‘ஓப்லமோவ் ‘ நாவலின்கூறுகள் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன,.அந்த நூலைப்

பற்றின அறிமுகம் யாருக்கும் கிடைத்த பாடில்லை என்ற அங்கலாய்ப்புடன்.

இருந்தும் ரஷ்யப் புதின இலக்கியத்தின் மிக முக்கியமான புள்ளிகளும்

நிகழ்வுகளும் கோன்ச்சரோவ் வின் The Precipice நாவலலிருந்து துருக்னேவ்

சில பகுதிகளை உருவிக்கொண்டு விட்டதாக நினைத்து மறுகி கோன்ச்சரோவ்

மனநோய்க்கு ஆளானது உட்பட பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்வ தேச நவீன படைப்பாளிகளைப்பற்றி சற்றுத் தாமதமான அறிமுகம் இந்த

நூல் என்றாலும் பிரம்மராஜனுடைய பழைய அறிமுகங்கள் சரிவரக் கிடைத்திராத

சூழலில் அன்னிய எழுத்து வாசிப்பில் பின்தங்கியிருக்கும் இளம் தேடிகளுக்கு

நாடோடி மனம் உபயோகமாக இருந்தாக வேண்டும்.

கடைசியாக ஆர்தர் கெஸ்லர் பற்றின கட்டுரையில் ‘கெஸ்லரின் 77வயதில்

அவரது மூன்றாவது மனைவியான சிந்த்தியாவுடன் 1983ஆம் ஆண்டு தற்கொலை

செய்து கொண்டார் ‘ என்ற வாக்கியம் வரை ஓட்டமும் தகவல் புதுமையும்

சொற்குறைவும் ஒரே சீராக செல்லும்படி உருவாக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு

நூல் நாடோடி மனம்.

சதாரா மாலதி

[பெங்களூரிலிருந்து]

நாடோடி மனம் – பிரம்மராஜன் [சந்தியாபதிப்பகம்]

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி