மெய்மையின் மயக்கம் – 6

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

சோதிப் பிரகாசம்


கேள்வியும் பதிலும்

கதைகளையும் கவிதைகளையும் படிப்பதனால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று தமது ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறுவதற்கு ஜெய

மோகன் முற்பட வில்லை; மாறாக, ஒரு மறு கேள்வியினை அவர் கேட்டாராம்; அந்தக் கேள்வியோ, இன்றும் சரியானது என்று அவர் கருதுகின்ற ஒரு பதிலாக அமைந்து விட்டு இருந்த ஒரு கேள்வியாம்; பெருமைப் பட்டுக் கொள்கிறார் ஜெய மோகன்!

இன்றும் என்றும் சரியானதாக இருந்திடக் கூடிய அன்றைய பதில்களைப் பற்றிப்

பின்னர் நாம் பார்க்கலாம். ஆனால், தங்களின் முந்திய கருத்துகளை வலியுறுத்திட முனைகின்ற பிந்திய பெரியவாள்களின் மேதாவித் தனத்தினால் பிந்திய தலை முறைகளின் வாசகர்களுக்கு நேர்வனவோ குழப்பமும் சிக்கலும்தாம்!

கார்ல் மார்க்ஸ் கூட இதற்கு விதி விலக்கு அல்லர் என்றால், சூழ் நிலைகளுக்கு ஏற்பக் கருத்துகளை மாற்றிக் கொண்டு ஆக வேண்டும் என்று வாதிட்டுத் தமது வெற்றிக் கொடியினை நாட்டிக் கொள்வதில் வல்லவராக இருந்தவர் லெனின் எனலாம்.

ஜெய மோகனின் மறு கேள்விக்கு நாம் வருவோம்:

பல் வேறு வண்ணங்களில் உடைகளை மனிதர்கள் அணிந்து கொள்கிறார்களே, எதற்காக ? உடையின் வேலையைச் செய்வதற்கு எந்த ஒரு துணியும் போதுமே!

இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதற்குதான் ஜெய மோகனின் ஆசிரியருக்குத் தெரிந்திட வில்லையாம்; பரிதாபமாக இருக்கிறது நமக்கு!

வரலாற்று ஆய்வு, மொழி ஆய்வு, என்று எல்லாவற்றின் உள்ளும் மிகவும் எளிதாக நுழைந்து விடுகின்ற நம் தமிழ்ப் புலவர்கள்தாம் மார்க்சியம் போன்ற சமுதாய அறிவியல்களைப் படித்துப் பார்ப்பது இல்லை என்றால், இயற்கை அறிவியல் ஆசிரியர்களும் கூட வேறு எவற்றையும் படித்துப் பார்ப்பது இல்லை போலும்!

எப்படியும், ‘ஆறாம் வகுப்பு ஆசிரியருக்கு ஆறாம் வகுப்பு அறிவு; எட்டாம் வகுப்பு ஆசிரியருக்கு எட்டாம் வகுப்பு அறிவு ‘ என்று கூறிய எம். எஸ். மரிய ஸ்தனிஸ்லாஸ் அவர்கள்தாம் இங்கே என் நினைவுக்கு வருகிறார்.

கேள்வியின் உள்ளடக்கம்

தமது ஆசிரியரின் கேள்வியினைச் சரியாக ஜெய மோகன் புரிந்து கொண்டு இருந்தாரா ? என்பதுதான் நமது முதல் கேள்வி; ஆசிரியரின் கேள்விக்கு விடை இறுக்கின்ற ஒரு பதிலாக ஜெய மோகனின் மறு கேள்வி அமைந்து இருந்ததா ? என்பது இரண்டாவது கேள்வி!

கதை-கவிதைகளைப் படிப்பதனால் மாணவர்களுக்கு அறிவு வளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடப் போவது இல்லை என்னும் அடிப்படையில் அமைந்து இருந்ததுதான் ஜெய மோகனது ஆசிரியரின் கேள்வி. எனவே, கதை-கவிதைகளினால் ஏற்பட்டு விடுகின்ற ‘அறிவுப் பயன் ‘ என்ன என்பதுதான் அவரது கேள்வியின் உள்ளடக்கம்.

இந்த உள்ளடக்கத்தினைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமும் ஜெய மோகன் முற்பட்டிட வில்லை என்பது அவரது ஆசிரியரின் கேள்வியினை அவர் எதிர் கொண்ட பான்மையில் இருந்தே நமக்குத் தெரிந்து விடுகிறது.

ஏனென்றால், தமது ஆசிரியரின் அறியாமையைப் பயன் படுத்தி, தமது அறிவாண்மையின் வெற்றியாகத் தமது அறியாமையை நிலை நிறுத்திக் கொள்கின்ற நோக்கத்தினைத் தவிர வேறு எந்த ஒரு நோக்கமும் அவரது மறு கேள்வியில் காணப் பட வில்லை. எட்டாம் வகுப்பு மேதாவிகளிடம் இத் தகு பான்மைகள் காணப் படுவதில் பெரிய வியப்பும் எதுவும் இல்லை.

ஜெய மோகனின் ஆவேசம்

‘கதை-கவிதைகளைப் பற்றி அதிகமாகப் பேசுகின்ற ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சி ஏற்படுகின்ற வாய்ப்பு மிகவும் குறைவு ‘ என்றுதான் நான் எழுதி இருந்தேன்; கதை-கவிதைகளை யாரும் படித்திட வேண்டாம் என்றோ அல்லது அவற்றினால் எந்தப் பயனும் இல்லை என்றோ நான் எழுதிட வில்லை; நான் எழுதி விடுவதால் மட்டும் அவற்றைப் படிக்காமல் யாரும் இருந்து விடப் போவதும் இல்லை.

எனது கருத்தினை ஏற்றுக் கொள்வதா அல்லது குப்பை மேட்டில் வீசி எறிந்து விடுவதா ? என்பது வாசகர்களின் விருப்பம். ஆனால், ஏற்றுக் கொள்வது என்றாலும் சரி அல்லது புறக்கணித்து விடுவது என்றாலும் சரி, அதற்கு ஒரு காரணத்தை அவர்கள் வகுத்துக் கொண்டு ஆக வேண்டும். இல்லை என்றால், ஒரு மூட நம்பிக்கையாக மட்டும்தான் அது நிலை நின்றிட முடியும்.

இப்படி ஒரு மூட நம்பிக்கையாகத்தான் எனது கருத்துகளை ஜெய மோகன் எதிர்த்துக் கொண்டு வருகிறார் என்பதற்கு அவரது ஆவேசமே ஒரு சான்று—-அதுவும், ஆதாரம் எதையும் கூறிட முடியாத ஓர் ஆவேசம்!

கதை-கவிதைகளைப் படிப்பதனால் மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடுவது இல்லை என்று கூறிக் கொண்டு வருபவர்கள் அனைவரும் வயிற்று வாதிகளாம்; இந்த வயிற்று வாதத்தினை ஒவ்வொரு தளத்திலும் அவர் தோற்கடித்து ஆக வேண்டுமாம்; ஏனென்றால், கதை-கவிதைகளை மனிதர்கள் படித்திட வில்லை என்றால் அவர்களின் அறிவு மழுங்கிப் போய் விடுமாம்; நமது சிந்திக்கும் திறனையும் கூட நாம் இழந்து விடவும் நேர்ந்து விடுமாம்!

நன்றாகத்தான் இருக்கிறது விளம்பரம்—கதை-கவிதைகளின் விற்பனை விளம்பரம்! ஆனால், கதை-கவிதைகளின் வாசிப்பினால் நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற அறிவு வளர்ச்சி என்ன என்பதை இவர் விளக்கிக் காட்டிட வேண்டாமா ? சரி, நாட்டை நாம் விட்டு விடுவோம்; கதை-கவிதைகளின் வாசிப்பினால் தமக்கு ஏற்பட்டு இருக்கின்ற அறிவு வளர்ச்சிதான் என்ன என்பதையாவது விளக்கிக் காட்டுவதற்கு இவர் முற்பட்டு இருந்து இருக்க வேண்டாமா ?

கதை-கவிதைகளை நாம் படித்திட வில்லை என்றால் எதையும் பரிசீலித்துப் பார்க்கின்ற பக்குவத்தை நாம் இழந்து விடுவது மட்டும் இன்றி, வெறுமனே ‘தெரிந்து கொள்ளுகின்ற எந்திரங்களாக ‘வும் நாம் மாறி விட நேர்ந்து விடுமாம்—நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார் ஜெய மோகன்!

அப்படி என்றால், ‘தெரிந்து கொள்வது ‘ என்றால் என்ன ? என்று விளக்கிக் காட்டு வதற்கு இவர் முன் வந்து இருக்க வேண்டாமா ?

ஒரு பக்கம், நமது அறிவு வளர்ச்சியில் அக்கறை கொண்டு, இடை விடாமல் கதை-கவிதைகளைப் படித்துக் கொண்டு நாம் வந்தால் நமது அறிவினை நாம் வளர்த்துக் கொண்டு விட முடியும் என்று நமக்கு ஆலோசனை கூறி விட்டு, மறு பக்கம், கதை-கவிதைகளுக்கு அப்பால் நாம் சென்று விடுகின்ற பொழுது, ‘தெரிந்து கொள்ளுகின்ற எந்திரங்களாக ‘ நாம் மாறி விடுகிறோம் என்று நம்மை ஜெய மோகன் வசை பாடுவதற்குக் காரணம், புனைவு இலக்கியப் போதையில் அவர் மயங்கிக் கிடப்பதுதான் என்பதால், அவரது வசையினை நாம் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தெரிந்து கொள்தல்

வெறும் படிப்பு அல்ல, ‘சிந்திக்கும் படிப்புதான் தத்துவம் ‘ (திங்கிங்க் ஸ்டடி ஆஃப் திங்க்ஸ்) என்று ஹே:கல் கூறுகிறார்; அப்படி ஏதேனும் ஒரு வரையறையையாவது ஜெய மோகன் வகுத்துக் கொண்டு இருக்கிறாரா ? என்றால், அணுவளவும் இல்லை.

மெய்மையின் மயக்கமாக அமைந்து விடுகின்ற ஒரு போதையினைத்தான் கதை-கவிதைகளினால் மனிதர்களுக்கு வழங்கிட முடியும் என்று ‘வாழ்க்கையின் கேள்விகள் ‘ : 15-ஆவது அதிகாரத்தில் நான் எழுதி இருக்கிறேன். தவறாமல் இதனை ஜெய மோகன் எதிர் கொள்வார் என்னும் நம்பிக்கையில்தான் அதன் இரண்டாம் பதிப்பிற்கு ஓர் அணிந்துரையினை எழுதிடுமாறு ஜெய மோகனை நான் கேட்டும் கொண்டேன்; கலை-இலக்கியம் பற்றிய எனது கருத்துகளைக் காட்டமாக எதிர் கொள்ளுமாறு அவருக்கு நான் வேண்டுகோளும் விடுத்தேன்.

எதிர்க் கருத்துகளை வரவேற்பது—-அவற்றை மூடி மறைத்திடாமல் வீதிக்குக் கொண்டு வந்து போரிட்டுத் தீர்ப்பது—-நிலை நிறுத்தப் படுகின்ற எதிர்க் கருத்துகளைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வது—-என்கின்ற எனது பான்மைதான் இதற்குக் காரணம்.

ஏனென்றால், காலங் காலமாக வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற அறிவு வளர்ச்சியின் ஒரு தொடர்ச்சிதான் நாம் வளர்த்துக் கொண்டு இருக்கின்ற நமது அறிவே ஒழிய, நாமாக மட்டும் கண்டு பிடித்து வைத்து இருக்கின்ற நமது சொந்தச் சொத்து அல்ல என்பது ஒவ்வொரு மார்க்சிய வாதிக்கும் தெரியும்.

எனினும், எதிர்க் கருத்துகளை மூடி மறைத்து விட்டுத் தமது சொந்தக் கருத்துகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கு முற்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்ற மேதாவிகள், குறிப்பாகக் கதை-கவிதை வாதிகள், ஏராளமாக நாட்டில் இன்னும் இருந்து கொண்டுதான் வருகிறார்கள் என்பதுதான் நமது பண்பாடு—-குறிப்பாக, ஸ்தாலினிசப் பண்பாடு!

அதே நேரத்தில், தங்கள் வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன் படுத்தி, தங்களுக்குத் தெரியாத கருத்துகளைக் கூட தெரிந்தவை போல எழுதிக் காட்டி, போலியான கருத்துகளை நிகழ் காலத் தலை முறையினர் இடையே விதைத்துக் கொண்டும் வருங் காலத் தலை முறையினருக்கு என்று விட்டு வைத்துக் கொண்டும் வருகின்ற குற்ற வாளிகள் இவர்கள் என்பதுதான் மிகவும் கொடுமையானது ஒரு விசயம்!

எப்படியும், கதை-கவிதைகளைப் பற்றி ‘வாழ்க்கையின் கேள்விகளில் ‘ நான் எழுதி இருந்த கருத்துகளையும் வாதங்களையும் தொட்டுக் கூட பார்க்காமல்தான் தமது அணிந்துரையினை ஜெய மோகன் எழுதி இருந்தார். சரி, போகட்டும்!

ஆனால், தெரிந்து வைத்துக் கொள்ளுகின்ற ‘எந்திரங்கள் ‘ என்று நம்மை வசை பாடுகின்ற ஜெய மோகன், எதையும் தெரிந்து வைத்துக் கொள்ளாத ஒரு ‘மனிதராக ‘த் தம்மைக் கருதிக் கொள்கிறாரா ? என்பதுதான் நமக்குத் தெரிய வில்லை.

அறிவுப் பயன்

கதை-கவிதைகளைப் படிப்பதனால் அல்லது ‘வாசிப்பதனால் ‘ மனிதர்களுக்குக்

கிடைக்கின்ற ‘தனிச் சிறந்த ‘ ‘அறிவுப் பயன் ‘ என்ன ? என்றால் எதுவும் இல்லை.

ஏனென்றால், கதை-கவிதைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்கின்ற

அறிவினை, நேரடியான வாழ்க்கை அனுபவங்களில் இருந்தோ அல்லது வேறு வாசிப்பு மூலங்களில் இருந்தோ யாரும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஓர் எடுத்துக் கட்டாக, எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்வதற்கு முன்னரே

தாங்கள் காண்பனவற்றில் இருந்தும் கேட்பவனவற்றில் இருந்தும் ஏராளமான

விசயங்களைக் குழந்தைகள் தெரிந்து கொள்கின்றன. அதே நேரத்தில், ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்து இராத விசயங்களைச் சுற்றிப் புனையப் படுகின்ற கதைகளையும் கவிதைகளையும் யாராலும் சுவனிக்க முடிவதும் இல்லை.

எனவே, கதை-கவிதைகளைப் படித்து விடுவதனால் மனிதர்களின் அறிவு வளர்ந்து

விடுகிறது என்று கூறுகின்ற எந்த ஒரு வாதமும் ஏற்பு உடையது அல்ல என்பது தெளிவு.

அப்படி என்றால், கதை-கவிதைகளினால் மனிதர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று நாம் கூறி விட முடியுமா ? என்றால், அதுதான் முடியாது.

கலைப் பயன்

பயன் அற்ற வாசிப்பு என்று புனைவு இலக்கிய வாசிப்பினை எள்ளி நகை யாடுகின்ற ஒரு பான்மை ஜெய மோகனது ஆசிரியரின் கேள்வியில் ஒளிந்து கிடக்கிறது என்பது உண்மைதான்.

ஜெய மோகனது ஆசிரியர் மட்டும் என்ன, பாடப் புத்தகங்களைத் தவிர வேறு

எதையும் தாம் படித்தது இல்லை என்று ஜீவாவின் மகளிடம் கூறிய மருத்துவர்—- சுய சிந்தனை உள்ளவர்களுக்குக் கதை-கவிதைகளைப் படித்திட வேண்டிய தேவை இல்லை என்று கூறி, கதை கேட்கின்ற பருவத்தைத் தாண்டி வந்திடாதவராக வேத

சகாய குமாரைக் கண் சிமிட்டிக் காட்டி, அப்படியே ஜெய மோகனைக் கிண்டல் அடித்த பேராசிரியர்—-ஆகியோரது பான்மை கூட இதே பான்மைதான் ஆகும்.

கதைகளையும் கவிதைகளையும் படித்திட விரும்பாதவர்களாக இவர்கள்

இருக்கலாம். அதற்காக, கதை-கவிதைகளினால் எந்தப் பயனும் இல்லை என்று

யாரும் கூறி விட முடியாது.

எத் அனையோ கதைகளை எவ் அளவோ மனிதர்கள் உலகு எங்கும் வாசித்துக்

கொண்டு வருகிறார்களே, எந்தப் பயனும் இல்லாமல்தானா ?

திரைப் படங்களையும் தொலைக் காட்சித் தொடர்களையும் அவ் அப்போது மனிதர்கள் பார்த்துக் கொண்டு வருகிறார்களே, ஒரு வகையில் அதுவும் ஒரு வாசிப்பு அனுபவம்தானே! இந்தக் காட்சி அனுபவத்திற்கும் வாசிப்பு அனுபவத்திற்கும் இடையே அப்படி என்னதான் பெரியது ஒரு வேறுபாடு ?

பொருத்தமாகப் பொய் சொல்பவர்கள் கூட கதைஞர்கள்தாம் என்பது போல, அண்டை-அயல் வீடுகளுக்குள் அத்து மீறி உற்றுப் பார்ப்பது—ஒட்டுக் கேட்பது—- மற்றவர்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது—-கூடி அமர்ந்து அவற்றைப் பற்றிக் கிசு-கிசுப்பது—-முதலிய அனைத்து அனுபவங்களும் கூட ஒரு வகையான கதை-வாசிப்பு அனுபவங்கள்தாம் ஆகும்!

இந்தக் கலை அனுபவத்தினைத்தான் ஜெய மோகன் மறந்து விட்டார். எனவேதான், திரைப் படங்களை அவரது ஆசிரியர் பார்ப்பது இல்லையா ? என்று அவரைக் கேட்பதற்கு அவர் தவறி விட்டார். பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் தாம் படித்தது இல்லை என்று கூறிய மருத்துவரிடம் ஜீவாவின் மகளும், கதை கேட்கும் பருவம் பற்றிப் பேசிய பேராசிரியரிடம் வேத சகாய குமாரும், இந்தக் கேள்வியினைக் கேட்டு இருந்து இருக்கலாம்.

ஏனென்றால், திரைப் படங்களைப் பார்க்காமல் நிச்சயம் அவர்கள் இருந்து இருக்க முடியாது; எனவே, கதைகளின் போதையினை அனுபவித்துப் பார்க்காதவர்களாகவும் அவர்கள் இருந்திட முடியாது.

ஆக, கடவுள் நம்பிக்கையினால் பயன் என்ன ? என்று கேட்பது போன்ற ஒரு

கேள்விதான் புனைவு இலக்கியங்களினால் பயன் என்ன ? என்று கேட்கின்ற ஒரு கேள்வியும் ஆகும் என்பதில் ஐயம் இல்லை. கூடவே, கடவுள் நம்பிக்கை தருகின்ற ஒரு போதை மயக்கத்தினால் மனிதர்களுக்கு எப்படி ஓர் ஆறுதல் கிடைக்கிறதோ, அப்படி, கதை-கவிதைகளின் வாசிப்பினாலும் மனிதர்களுக்கு ஓர் ஆறுதல் கிடைத்திடத்தான் செய்கிறது என்பதிலும் ஐயம் இல்லை.

இனி, நாம் அணிகின்ற உடைகளின் வண்ணங்களைச் சுட்டிக் காட்டித் தமது ஆசிரியரை மிரள வைத்த ஜெய மோகனின் வண்ணங்களுக்குள் நாம் நுழைவதற்கு முன்னர், ஜெய மோகனின் ‘தெரிந்து கொள்ளும் எந்திரங்கள் ‘ பற்றிச் சிறிது நாம் பார்ப்போம்.

23-06-2004

(தொடரும்)

(ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்