முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

க.ப. அறவாணன்


முன்னைத் துணைவேந்தர்

இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்

முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்

ஆரியர் வரலாறு: பாகம் ஒன்று

மதிப்புரை

ஆய்வு அறிஞர் சோதிப் பிரகாசம் புதிய நூல்களைப் படைப்பதிலும், அவற்றில் புதிய சிந்தனைகளை வழங்குவதிலும் சொல்லின் வேரைப் புதுவதாகப் புனைவதிலும் புதுக் கோணத்தில் தமிழ் மொழி ஆக்கம் செய்வதிலும் வல்லவர். பொதுவுடைமை, திரவிடம், வாழ்க்கை, மனம், முதலாயின பற்றி இவர் முன்பே எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் மேற்கண்ட மொழிவை வழி மொழியும்.

ஆரியர் வரலாறு, (பாகம் ஒன்று மற்றும் இரண்டு) எனும் முகப்பை ஏந்திய இந்நூல்களும், முன் நூல்களைப் போல புதுக் கருத்தின; புது நோக்கின; புது விளக்கங்களை ஏந்தியன.

ஆரியர் யார் ? எம் மொழியர் ? எத்தகையர் ? எங்கிருந்து வந்தவர் ? தமிழர்க்கும் அவர்க்கும் என்ன தொடர்பு ? என்பன பற்றி யெல்லாம் வெகுவாகப் பேசப் படுவனவற்றையும் எழுதப் படுவனவற்றையும் தவறானவை என்று இந்நூல் மூலம் நிறுவுகிறார். ஆரியர் நாம் நினைத்திருப்பது போல உயர்ந்தோர் அல்லர்; முதல் குதிரைப் படையினர் அல்லர்; தமக்கெனத் தனி நாடோ இடமோ உடையவர் அல்லர். இக் கருத்தை நிரல்பட நிறுவுகிறார்.

இந்நிறுவுதலுக்காக நூலாசிரியர் மாக்ஸ் முல்லர், ஹெச். ஆர். ஹால், பி.டி. சீனிவாச ஐயங்கார், குணா, பி.எஸ். உபாத்தியாயா முதலானோர் எழுதிய நூல்களை ஆழப் பயின்றுள்ளார். கற்பனையான ஆரியக் கோட்பாட்டை முன் மொழிந்து, தம் நூல் மூலம் பெரிதாகப் பரப்பிய மாக்ஸ் முல்லர் கருத்தின் சாரத்தைத் தொகுத்து அளித்து அக்கு வேர், ஆணி வேராக ஆராய்கிறார்.

சோதிப் பிரகாசத்தின் தனித் தன்மையாகக் கருதத் தக்கது, திரவிடப் பற்றுள்ள தமிழ்ப் பொதுவுடைமையாளியாக எழுதுவதும் இயங்குவதும் ஆகும். தமிழ்த் துறைக்கு அப்பாற்பட்ட இவ் அறிஞர் தமிழ்ச் சொற்களுக்குப் புதிய வேர் மூலம் கண்டு, பொறுத்தமுற விளக்குவது புதுமையிலும் புதுமை. தமக்கெனச் சில புதிய சொல்லாட்சிகளை ஆளுவதும் இவர்தம் தனி ஆளுமையைக் காட்டுவதாகும்.

ஆரியர் வரலாறு பற்றிப் புதிய நோக்கிலும் போக்கிலும் நூல் எழுதியுள்ள அறிஞர் சோதிப் பிரகாசம் நம் பாராட்டுதலுக்கு உரியர்.

ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு

மதிப்புரை

ஆய்வு அறிஞர் சோதிப் பிரகாசம் அரிதின் முயன்று உருவாகியுள்ள ஆரியர் வரலாறு (பாகம் இரண்டு) புதிய செய்திகளின் பெட்டகமாகத் திகழுகிறது. ஆரியர் தொடர்பாக நாம் இதுவரை கொண்டிருந்த கருத்துகள் அனைத்தையும் அவர்தம் ஆய்வின் மூலம் பிழையானவை என்று நிறுவுகிறார்.

ஆரிய இனம் தனி இனம் அன்று; சிறந்த பண்பாட்டிற்கோ, நாகரிகத்திற்கோ உரிய இனமும் அன்று; ஆரிய இனக் கலப்பால் தமிழர் புதுப் பண்பாட்டையோ நாகரிகத்தையோ பெற்று விட வில்லை; தமிழர் ஆரியர்க்கு முன்பே, ஆரியரை விடவும் சிறந்த பண்பாட்டையும் சிறந்த நாகரிகத்தையும் உடையவராக இருந்தனர்; தம் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தமிழரே உலகின் பிற இடங்களுக்குக் கொண்டு சென்றனர்; பரப்பினர். ஆரிய இனம் என்பது ஒரு கட்டுக் கதை. ஆரிய எனும் சொல் உழுதல், மதிப்புக்குரியவர், மேலானவர், முதலான சொற்களுக்கு உரிய எந்தப் பொருளையும் குறிக்க வில்லை. அரியவர் என்பதுதான் ஆரியர் என்ற சொல்லின் பொருள்.

ஆரியர் பற்றிய தம் கருத்தை வெற்று ஊகங்களின் அடிப்படையில் சோதிப் பிரகாசம் நிறுவிட வில்லை. புகழ் பெற்ற ஆய்வாளர்கள் ஹால், வில் டியூரான், முதலானோர் எழுதிய நூற்களைப் பயின்று இவ் ஆய்வை நிகழ்த்தி உள்ளார். ஆரியர் ஒரு மொழிக்கே உரிய தனி இன மக்கள் அல்லர் என்பது இவர்தம் ஆய்வு முடிவு. இவரைத் தனிச் சாதியினராகவும், தனி மதத்தினராகவும் கொள்ளுதலும் குற்றம் என்பது இவர்தம் கருத்து. மதக் குருக்களைக் குறிப்பதற்காக வழங்கப் பெற்று வந்த ஒரு பொதுப் பெயர்தான் ஆரியர். அதற்கு மேல் இச்சொல்லிற்குத் தனி முதன்மை எதுவும் இல்லை.

சோதிப் பிரகாசம் எழுதிய நூலை வாசிப்போர்க்குக் கிடைக்கும் சிறப்பு நன்மைகள் பல; அவற்றுள் குறிப்பாகக் குறிக்கத் தக்கவை:

1. அவருடன் சேர்ந்து நாமும் பல நூல்களைக் கற்கலாம்

2. அவருடன் சேர்ந்து சொற்களுக்கு உரிய வேர்ப் பொருளைப் புதிது புதிதாக அறிந்து மகிழலாம். அவ்வாறு மகிழ்ந்த ஓரிரு சொற்கள் வருமாறு:

தந்தைக்கு அடிச் சொல் அந்தை என்பது.

ஃபார்ஸ் ஃபார்ச்சுனாவுக்கு அடிச் சொல் பருதி என்பது.

டோரியருக்கு அடி சொல் திரையர் என்பது.

இப்படிப் பல சொற்களுக்குப் பாவாணர், அருளி ஆகியோரிடமிருந்து வேறுபட்டு, புது விளக்கங்களைப் புகலுகிறார்.

ஆக, இவர்தம் நூலைப் பயில்வார் நன்மைகள் பலவற்றை எய்துவர் என்பது உறுதி.

இயேசு பிறந்த நாள்

25-12-2003

க.ப. அறவாணன்

Series Navigation

க.ப. அறவாணன்

க.ப. அறவாணன்