எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

நரேந்திரன்


தற்போது உலகமெங்கும் வெளியாகி, மிகுந்த சர்ச்சையுடன் (முக்கியமாக அமெரிக்காவில்) வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ஆஸ்திரேலிய-கம்-ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான மெல் கிப்ஸனின் (Mel Gibson) ‘The Passion of the Christ ‘ திரைப்படம் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று நினைக்கிறேன்.

அதற்கு முன் கொஞ்சம் அக்கப்போர்.

ஆஸ்திரேலியர்களின் mental toughness உலகப் பிரசித்தி வாய்ந்தது. இன்றைய ஆஸ்திரேலியர்கள், இங்கிலாந்தின் முன்னாள் ‘குற்றப் பரம்பரை ‘யில் வந்தது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது கடினமான aussie outback வாழ்க்கை முறை காரணமாகக் கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் அவர்களின் மன உறுதி உண்மையிலேயே சிலாகித்துச் சொல்லப் பட வேண்டிய ஒன்று.

இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சுகளைப் பார்த்தாலே இது நன்றாகத் தெரியும். தோற்கும் நிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை யாராவது ஒரு ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் ‘தனியொரு ஆளாக ‘ நின்று போராடி வெற்றி பெற வைப்பார். எல்லோரும் பலமுறை பார்த்து, அனுபவித்திருக்கிறோம். அதே சமயம், நமது இந்திய ஆட்டக்காரர்கள் இதற்கு நேரெதிர் மனநிலை படைத்தவர்கள். தோற்கிற மேட்ச்சிலும் தோற்பார்கள். ஜெயிக்கிற மேட்ச்சிலும் தோற்று விட்டு வருவார்கள். அவ்வளவு தாராள மனம் படைத்தவர்கள் நமது ஆசாமிகள். என்ன செய்ய ?

ஆஸ்திரேலியர்களின் கரடு முரடான மன உறுதியைப் போலவே அவர்கள் பேசும் ‘அவுஸ்திரேலியனும் ‘ கரடு முரடானது. தனித்தன்மை வாய்ந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்டுப் பழகக் கொஞ்சகாலம் பிடிக்கும். அமெரிக்கா வந்த புதிதில், ஆஸ்திரேலிய கம்பெனியான Ernst & Young-இல் கொஞ்ச காலம் பணிபுரிய சந்தர்ப்பம் கிடைத்தது. என்னுடைய ஃப்ராஜெக்ட்டில் சில ஆஸ்திரேலியர்களும் இருந்தார்கள். சமயங்களில் அவர்களுடன் நடத்தும் சம்பாஷணைகள் என்னை மண்டை காய வைக்கும். உதாரணத்திற்கு ஒன்று,

‘Morning Pete! ‘

‘Gidday Mate! ‘ (Good Day Friend).

‘Do you know where can I find George ? ‘

‘Oh! George went to Houston TO DIE!!! ‘

புதிதாகக் கேட்பவர்கள் தடுமாறிப் போவார்கள். ‘பீட்டனுக்கு பொறி கலங்கிப் போச்சோ ? ‘ என்று. ஆங்கில ‘Today ‘, அவுஸ்திரேலியனில் ‘To die ‘ ஆக மாறிப் போயிருப்பது போகப் போகப் புரிந்துவிடும்.

அக்கப்போர் அவ்வளவுதான் சாரே!

passion n. – the sufferings of Jesus, beginning with his agony in the garden of Gethsemane and continuing to his death on the cross என்கிறது Webster ‘s New World College Dictionary. மெல் கிப்ஸனின் ‘The passion of the Christ ‘ திரைப்படம் சந்தேகமில்லாமல் இதனை அப்படியே பிரதிபலிக்கிறது என்பது என் எண்ணம்.

சென்ற வாரம் திரையிடப்பட்ட இத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது. குறிப்பாக யூதர்களின் எதிர்ப்பைக் கொஞ்சம் அதிகமாகவே. நியூயார்க் போன்ற நகரங்களில் இத் திரைப்படம் திரையிட்ட தியேட்டர்களின் முன்னால் பெருமளவிலான யூதர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களின் எதிர்ப்பிற்கான முதல் முக்கியக் காரணம், இத் திரைப்படம் யூத எதிர்ப்புணர்வை உலகெங்கிலும் அதிகப்படுத்தும் என்பது.

இரண்டாவது காரணம். மெல் கிப்ஸனின் தகப்பனாரான Hudson Gibson.

Hudson ஒரு Anti-Semitic எனப்படும் யூத எதிர்ப்பாளர். ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப் பட்ட இனப் படுகொலையான ஹோலகாஸ்ட்டின் காரணமாக இறந்து போன யூதர்களின் எண்ணிக்கையை, அவர்கள் அனுபவித்ததாகக் கூறப்படும் துன்பங்களை, ‘அதிகப் படுத்திக் கூறப்பட்ட ஒரு பொய் ‘ என்று வெளிப்படையாகச் சொன்னவர் அவர். அதுமட்டுமில்லாமல், 1960களில் வாடிகனின் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்பட்ட reform-களை, ‘பணக்கார யூதர்கள், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடத்தப்பட்ட ஒரு நாடகம் ‘ என்றும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கிறார். எனவே, அவரது மகனான Mel Gibsonக்கும் அதே எண்ணங்கள் தான் இருக்கும் என்பது அந்த எதிர்ப்பாளர்களின் அனுமானம். நிலைப்பாடு.

பிறப்பால் கத்தோலிக்கரான மெல் கிப்ஸனும், வாடிகன் reform-களை ஏற்றுக் கொள்ளவில்லை. கலிபோர்னியாவில் இருக்கும் மாலிபுவில் தனக்கென சொந்தமாக ஒரு சர்ச் கட்டியிருக்கும் கிப்ஸன், அங்கு நடத்தும் பிரார்த்தனைகள் அனைத்தும் இலத்தீன் மொழியிலேயே செய்ய வேண்டும், செய்யப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆங்கிலத்தில் செய்யப்படும் பிரார்த்தனை சரியானதல்ல என்பது மெல்லின் வாதம். அதைத் தவிர அவர் வித்தியாசமாக, யூத எதிர்ப்பாக எதையும் சொல்லி விடவில்லை. செய்து விடவில்லை.

ஒரு திரைப்படத்தைப் பார்க்காமலேயே அது தங்களுக்கு எதிரானதுதான் என்று அனுமானிப்பது தவறானது என்ற வகையில் அவர்களின் நிலைப்பாடு தவறானது என்பது என் கருத்து. இந்தத் திரைப்படம் யூதர்களுக்கு எதிரானது அல்லவே அல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

வனாந்திரத்தில் மறைந்திருக்கும் இயேசு கிறிஸ்துவை, யூத இனத்தவரான யூதாஸ் கரியோத்து காட்டிக் கொடுப்பதில் துவங்கி, அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, பின் உயிர்த்தெழுவது வரையிலான நிகழ்வுகளைக் கோர்வையாகக் காட்டுகிறது The Passion of the Christ திரைப்படம். ஒரு யூதர் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த வரலாற்று நிகழ்வு உலகக் கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. அதற்காக அவர்கள் எல்லா யூதர்களையும் வெறுப்பார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இயேசுவே ஒரு யூத இனத்தவர்தான் என்பதுவும் உலகக் கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்ததுதானே. இந்தப் படத்திற்கு எதிராக எழுந்திருக்கும் சர்ச்சை தேவையற்றது.

இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார் ரசித்த போப் ஜான் பால். இதை விட அங்கீகாரம் வேறொன்றுமில்லை.

மற்றபடி இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்கிடமாகவோ, சொல்லிக் கொள்ளும்படியாகவோ ஒன்றுமே இல்லை. தமிழ்நாட்டு கத்தோலிக்க மிஷனரி பள்ளிகளில் படித்தவர்கள் குறைந்த பட்சம் நாலே முக்காலரைக்கால் தடவைகள் ‘கறுப்பு வெள்ளையில் ‘ பார்த்துப் பழகிய அதே பைபிள் நிகழ்வு. ஒரே வித்தியாசம், The Passion… வண்ணத்தில் எடுக்கப் பட்ட ‘ரத்த விளாரியான ‘ மெல் கிப்ஸன் version. பல இடங்களில் மெல் கிப்ஸன் நடித்த Mad Max, Lethal Weapon போன்ற ரத்த மயமான வன்முறைப் படங்களை நினைவு படுத்துவதாகவும் இருக்கிறது என்பது என் எண்ணம்.

இயேசு கிறிஸ்துவாக நடிக்கும் நடிகர் மிகச் சிரமப்பட்டு நடித்திருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறார். ‘சைக்கோ ‘த்தனமானவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கும் ரோமானியப் படை வீரர்கள் இயேசு கிறிஸ்துவை படம் முழுக்க அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். பிரம்பால், சாட்டைகளால், இன்னபிற கொடிய ஆயுதங்களால் ஒருவர் மாற்றி ஒருவராக. கிறிஸ்துவானவரின் முதுகுத் தோல் உரிந்து, சதை சதையாக பிய்ந்து தொங்குகிறது. அடிப்பவர்களின் முகம் மற்றும் கைகளில் ரத்தம் சிதறுகிறது. முதுகில் அடிக்க இடமில்லாத போது, அவரைத் திருப்பிப் போட்டு மார்பிலும், வயிற்றிலும் அடிக்கிறார்கள். எங்கும் ரத்தம். ரத்தம். ரத்தம்.

அன்னை மரியாளாக நடித்த யூத நடிகைக்கு, இத்தாலிய முகம். சோகமான அதே சமயம் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க முடியாத மெழுகு பொம்மை போன்ற முகம். தன் மகனான இயேசுவை ரோமானியர்கள் மிருகத்தனமாக அடிக்கும் போது, யாரோ மூன்றாவது மனிதருக்கு நடப்பது போலப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் அன்னை ?

தேவ குமாரனான இயேசு கிறிஸ்து, மானிடர்களின் பாவங்களுக்காக சிலுவை சுமந்து நடக்கையில் கீழே விழுவதும், ரோமானியர்கள் அவரை அடிப்பதும் சலிப்பூட்டக் கூடிய வகையில் மிகவும் நீளமாகக் காட்டப்படுகிறது. பார்க்கின்ற நமக்கே, அவரை விரைவில் சிலுவையில் அறைந்து இந்தக் கொடுமையை நிறுத்த மாட்டார்களா என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. பார்ப்பவர்கள் அவ்வாறு நினைக்க வேண்டும் என்பதே கூட இயக்குனரின் எண்ணமாக இருக்கலாம்.

மெல் கிப்ஸன் என்ற இயக்குனருக்கு இந்தப் படத்தில் வேலையே இல்லை. பைபிளில் எழுதி இருப்பதை நேரடியாக படமாக்கியிருக்கிறார். அவ்வளவுதான். இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத் தக்க ஒரே அம்சம், கதாபாத்திரங்கள், ஆங்கில சப்-டைட்டிலுடன், இறந்து போன மொழிகளாகக் கருதப்படும் அராமாய்க் (Aramaic) மற்றும் இலத்தீன் மொழிகளில் பேசுகிறார்கள் (ஏன் ஹீப்ரு இல்லை ?). அங்கங்கே ‘சோயா சோயா ‘ அரபியும் இருந்ததாக நினைவு.

கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளான Ash Wednesday அன்று வெளியான இத் திரைப்படம், உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. முதல்நாள் வசூல் ஏறக்குறைய 28 மில்லியன் யு.எஸ். டாலர்கள். திரையிடப்பட்ட ஐந்து நாட்களில் 117.5 மில்லியன்களை வாரிக் குவித்திருக்கிறது இத் திரைப்படம். இந்த வெற்றியை மெல் கிப்ஸனே எதிர் பார்த்திருக்க மாட்டார். The Passion… படத்தைத் தயாரிக்க அவருக்கு ஆன செலவு வெறும் 25 மில்லியன் டாலர்கள் மட்டுமே. இப்படத்திற்கு எழுந்துள்ள அனாவசிய சர்ச்சை அவருக்கு நல்ல விளம்பரம்.

No doubt, Mel is a one happy producer dancing towards his bank.

கடைசியாக ஒன்று.

குழந்தைகளை இந்தப் படத்திற்கு அழைத்துப் போகாமலிருப்பது நல்லது.

ஏகப்பட்ட ரத்தம். வன்முறை.

****

‘ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டார் என்று அர்த்தமாம் ‘ (மாற்கு 16:34 – புதிய ஏற்பாடு).

Gidday Mate!

****

narenthiranps@yahoo.com

(எதிர்கால வாசகர்களுக்காக சில தகவல் பிழைகள் சரி செய்யப் பட்டுள்ளன. – திண்ணை குழு)

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்