நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

மாலதி


மேற்கண்ட மொழிபெயர்ப்புநூல் வெளிவந்து சில வருடங்களாகி விட்டன.இப்போது இந்த நூல் குறித்து என்

குறிப்புகள் எந்த வகையில் முக்கியப்படும் என்பதை முன்கூட்டி யூகித்து விடமுடியும் எல்லாருக்கும்.

இந்தப் பதிவின் வீச்சையும் செம்மையையும் பின்அட்டை,பின்இணைப்பு,மொழிபெயர்ப்பாளர் குறிப்பு எல்லாமுமாக

மிகத் தெளிவாக முன் வைத்து விடுகின்றன.

மேலும் இந்த நூல் பலராலும் பேசப் பட்டுவிட்டது.இதன் மூலப்பிரதி படைத்தவரின் அகால மரணமும் , பிரதியில்

விழுந்திருக்கும் அவர் வாழ்நாள் சுய பதிவுச் சாயல்களும் , இந்த எழுத்துக்குத் தனி வகையான சோக, மர்ம

முலாம் பூச்சைத் தேய்த்து விட்டுப் போயிருக்கின்றன.மொழிபெயர்ப்பாளரோ எனில் தேர்விலேயே தனித்துவத்தை

நிலைநாட்டுகிற ,போராளித்தன்மை அணிந்த, பூரண பூஷ்வா மறுப்புக் கோட்பாடுடைய ,சீரிய எழுத்துக்காரர்.

இங்கு என் விமரிசனம் எப்படி முக்கியமாகிப் போகிறது என்றால் புரட்சிகளில் நம்பிக்கை வைக்காத ,அமைதி[போலி] விரும்பிகளையும் எப்படி இந்த நூல் வளைத்துப்போட்டு விழுங்கக்கூடும் என்பதை நிறுவுகிற தன்மையதாய் என் கருத்து முனைப்பெடுப்பதை கட்டுரை மையம் கொள்கிறபடியில் தான்.

நியதிகளும் நியதிகளல்லாதவைகளும் நியதிக்குட்படுவது நியதிகள் மேலிடுகிற, சரிகிற, காலகட்டங்களில் தாம். வன்முறை நேசிக்கப்படுவதும் தேசியங்களும் மார்க்கங்களும் வெறுக்கப்படுவதும் காலதோஷங்களால் தாம். எண்பது பேர் சார்பில் , பதினெட்டுபேர் மேலெழுந்து இரண்டு பேரை கசக்கிப்பிழிந்து சாகடிக்கும்போது, இரண்டு பேர் செய்வது தீவிர வாதமா, பதினெட்டு பேரினது தீவிர வாதமா என்பது சர்ச்சைக்குரிய கேள்வி.

மேற்படி பதினெட்டு பேர் யார் சார்பில் செயல்படுகிறார்கள் ? எந்த சுய நோக்கத்தில் ? அதில் எண்பது பேரின் ஆக்கம் தாக்கம் என்ன ? போன்ற விவரங்கள் எல்லாம் எந்த ஒரு பிரச்னை பூமியிலும் வெட்டவெளிச்சமாக்கப் படுவதில்லை.

வெவ்வேறு தீவிரவாதங்கள் வெவ்வேறு விதமான அணுகுமுறையை வேண்டி நிற்கின்றன.வெவ்வேறு விதமான தீர்வுகளை யாசிக்கின்றன. தீவிரவாதத்தின் ஒரு பக்கப் பார்வையை ஒளியேற்றி பல இலக்கியங்கள் ஏற்கனவே உலகில் தோன்றி யிருக்கின்றன.அவற்றுள் ‘Mothers and Shadows ‘என்ற நூல் அதன் கதை சொல்லித் தன்மை வயத்தால் மிக முக்கியமானது.

பெண்ணுணர்வுகளின் மிகத் துல்லிய மூலைகளை விளக்கு வைத்து விரிக்கிறது இந்தப் பதிவு. வன்முறை விட்டுவைக்கும் வெறுமையை இதையும் விட நேர்த்தியாகச் சொல்லிவிட முடியுமா என்க்ிற வியப்புக்கு வாசகனை உந்தித்தள்ளி விடுகிறது,அநாயாசமான ஒழுக்கு நடையில்.

தன்னியல்பில் சிந்தனையை ஓடவிட்டிருப்பது எழுத்தாளரின் மிகப் பெரிய வெற்றி. அதாவது முடிவை நோக்கிப் பறக்காத எழுத்து.இன்னின்னவற்றைச் சொல்லியாகவெண்டும் என்ற முன் தீர்மானங்களொடு செதுக்கிச் செதுக்கி வெட்டப்படாத முழுநீள சிந்தனை. தானாக வந்து விழுகிறசெய்திகள்.

அன்னைகளும் நிழல்களும் என்கிற அசல் தலைப்பு கூட ஒரு விதத்தில் பொருந்தும். பூர்ஷ்வா அமைப்புகளிலிருந்து பரணுக்குக் குடி போகும் எலினாவும் அன்னை தான்.

விட்டைத் துடைத்துத் துடைத்து துப்புறவாக வைத்துக் கொள்ளும் டோல்ரஸின் அம்மாவும் அன்னை தான். காக்கா போல் கறுப்பு உடையுடன் மருமகளைப் பார்த்துப் போகும் என்ரிக்கின் அம்மாவும் ….நடிகை ஐரீனுக்குள் வயிற்றைச் சுருட்டி யிழுக்கும் பீதியாய் அன்னை உணர்வு. மனசால் தாய்மை கொண்ட லூயிசாவும் அதே.

இதில் ‘நிழல்களின் உரையாடல் ‘ என்பது மொழிபெயர்ப்பாளர் தந்த தலைப்பு.புரட்சி வடிவமும் , பூர்ஷ்வா தன்மையும், பாதிக்கப்பட்ட பாவப்பட்டதுகளும், மொண்ணையான பொது ஜனமும், நிர்த்தாட்சண்யமாக நீதி மறுக்கப் பட்ட நம்பிக்கைகளும், நிழல்களாய் பரஸ்பரம் பேசுவதே கதை.

இதோ புரட்சி பேசுகிறது

—-

எண்பது பேரின் நலனுக்காக உழைக்கிறதாகச் சொல்லிக்கொண்டு சுரண்டல் செய்கிற பதினெட்டு பேரை நாங்கள் இரண்டு பேர் எதிர்க்கிறோம். எங்கள் குரல் கேட்கப் படவேண்டுமென்று வெடிமருந்துகளுடன் சேர்ந்து பேசுகிறோம். எங்களைத்தான் தீவிரவாதிகள் என்கிறார்கள். நாங்கள் செய்வது தப்பு என்றால் அந்தப் பதினெட்டு பேர் செய்வதென்ன ?எங்கள் புரிதலைக் கேட்டுக் கொள்ள எண்பதுபேர் தயாராயிருந்தால் நாங்கள் எண்பத்திரண்டு பேர் ஆகிவிட மாட்டோமா ?அந்த ஏக்கத்தில் தான் நடந்தது ‘நிழல்களின் உரையாடல் ‘.

எங்களில் ஒருத்தி டோல்ரஸ்.கெட்ட வீச்சம் அடிக்கிற டோல்ரஸ்.உஷ்ணத்திலும் பிளேஸருக்குள் கை விட்டுக் கொண்டு உலாவுவாள். நயமில்லாத அசைவுகளை உடைய டோல்ரஸ். என்ன எழவுக்காகவோ கவிதை எழுதிய டோல்ரஸ்.வெறுப்பை உமிழும் பார்வை உடைய டோல்ரஸ். 28 வயதில் அழிந்து போனவள். தீர்த்துக் கட்டப் பட்டு விட்டவள்.

நாங்கள் கண்களைப் பயன்படுத்தத்தெரியாதவர்கள்.ரயிலில் தலையைக் கொடுப்பது போல புரட்சி நடவடிக்கைகளுக்கு எங்களை ஒப்புக் கொடுத்தவர்கள்.உரையாடலுக்குப் பதிலாக செயல், தனி மனித இன்பத்துக்குப் பதிலாக கூட்டு ஒழுக்கம், இது தான் நாங்கள் கண்டது.கலாச்சாரமும் அழகுணர்வும் எங்களைக் கடந்து போய் விட்டன. சமையல் அறையிலோ குளியல் அறையிலோ குழந்தையைப் படுக்க வைக்கத் தயாராயிருப்போம். கீழே ஒரு எண்ணுடன் முழுமுகமாகவோ பக்கவாட்டுத்தோற்றமாகவோ குற்றவாளிகளைப் போல நாங்கள் தொலைக் காட்சியில் காட்டப்படுவோம். அப்போது எங்களை எங்கள் பெற்றோரே அடையாளம் கண்டு பிடிக்க முடியாது.எங்களைத் தெருவில் யாரும் நேராகப் பார்த்துப் பேசுவதில்லை. பஸ்ஸில் காணும் நண்பர் கண்ட நிமிடமே பேயைக் கண்டது போல செய்தித் தாளுக்குள் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். அழைத்துப் பேசி விட்டோமானால் உயிர் போகிற பயத்தில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வார்கள்.

செடி வகைப் பட்டியல் போல வகை வாரியாகப் பிரித்து அனுபவித்த சித்திரவதை முறைகளைச் சொல்லக் கூடியவர்கள் நாங்கள்.சொல்லும்போது கண்ணைச் சிமிட்டி விடவோ குரலை உயர்த்தி விடவோ மாட்டோம். சில நினைவுகளைப் பகிரும்போது சன்னல் வழியாக வெளியில் குதித்து விடமாட்டோமா என்கிற தூண்டுதலைக்கூட எங்களால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் ஏதோ வகையில் எப்போதும் எங்கள் எல்லாருக்கும் உயிர் வாழ்தல் முக்கியம். சாவு நெருக்கத்தில் இருக்கும்போது தான் வாழ்தலின் ஆவல் மேலிடும் போலும்.

டோல்ரஸ் வயிற்றில் ஆறுமாதக் குழந்தையுடன்நிர்வாணமாக மல்லாந்து படுத்து கர்ப்பத்தை ஏறி மிதித்ததைத் தாங்கிக் கொண்டவள் நினைவிழக்கும் வரை.அதிக நேரம் கழிவறைகளில் செலவு செய்பவளாகவாவது வாழத் தீர்மானம் செய்து கொண்டவள். கசப்பான சிடு சிடு தொனியுடன் கூடவும் பாசத்தை யாசித்துப் பெறவே ஐரீனின் வாசலில் மீண்டும் மீண்டும் வந்து நிற்பவள்.

நாங்கள் வியாதியஸ்தரைப்போல பிறரால் ஒதுக்கப்படுகிறவர்கள். ப்ளாக்யுடா போன்ற முன்னாள் தீவிரவாதிகளாலும் நிராகரிக்கப் படுகிறவர்கள்.

ஏனெனில் அரசின் நல் வாழ்வுச்சொர்க்கத்தை நிராகரித்தோம் நாங்கள். இன்னொரு முறை தேர்வின் வாய்ப்பு தரப்பட்டாலும் நிராகரிக்கவே செய்வோம்.

சீருடையை வெறுக்கிறோம். தேசபக்திப் பாடலைப் பாட விரும்பாததைச் சொல்லியும் வைக்கிறோம். கிலோகிலோவாக ஆட்டிறைச்சியும் மலைமலையாக இத்தாலியப் பணியாரமும் உள்ளே தள்ளீயபடி கால் பந்தையோ தேசியக்கொடியையோ பற்றிப் பொங்கி வழிந்து நுரை தள்ள எங்களுக்குக் கட்டிவரவில்லை, வெற்றி

பெற்ற வர்களுக்கே யான சமூக அந்தஸ்து எங்களுக்கு இல்லாமல் போகட்டும்.

ரத்தத்தின் நெடியும் சாம்பலான எலும்பின் நெடியும் உள்ள கெட்ட ஆவிகள் உலவும் சுடுகாடுகளை சுவீகரித்து விட்டோம் நாங்கள். பிரார்த்தனையைக் கேட்க யாருமில்லை என்பதை கன கச்சிதமாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

எங்களைக் கொள்ளை கொடுத்துவிட்டு வெள்ளைக்குட்டையுடன் அலையும் ஆயிரமாயிரம் சோகத்தாய்மார்களின் அலைபாய்தலுக்குக் காரணமானவர்கள் நாங்களல்ல. ‘ அவர்கள். ‘ எனினும் குற்ற மனப்பான்மையின் சிலுவையை , இருந்தும், இறந்தும் பின்பும் சுமந்தபடி நாங்கள்.

அழகு,வசதி,ஒய்யாரம் – பூர்ஷ்வா அமைப்பு பேசுகிறது

—-

மங்க்பஸில், சேயிபா, யூகலிப்டஸ்மரங்கள், ப்யூன்ஸ்கார், தோட்டவீடுகள்,மரச்சிற்பங்கள்,திரைச்சீலைகள், மெத்தென்ற தரைவிரிப்புகள்,எல்லாவற்றிலுமா எங்கள் ஒய்யாரம் இருக்கிறது ?எங்கள் அசைவுகளில்,லாகவத்தில், அசைவுகளில், மெழுகுபொம்மைப் புன்னகையில், அது பீறிடுகிறது. எங்களைச் சுற்றின மரங்கள், எங்கள் சேகரங்கள், எங்கள் கார்,புத்தகங்கள்,புகைப்படங்கள்,தங்கநிறக்கூந்தல், தரைபெருக்கும் மொசுமொசுப்பான தோல்கோட்டு, கழிப்பறை கோப்பையின் மேல் அமர்ந்தபடி பார்க்கக்கூடிய சலவைக்கல் அலமாரி, வாசனைத்தைலங்கள், சையாமீஸ் பூனை,எங்கள் நடனம், எங்கள் லாகிரி, வெளிச்சம், சோபாக்கள், ரத்தச்சிவப்பு காலுறை, உயர் குதிகால் செருப்பு, குட்டைப்பாவாடை, குமுறும் பிதுங்கும் அழகு,இளமை…இறுதியை மறுக்கும் எப்போதைக்குமான இளமை, சொட்டுச்சொட்டாய்ப் பருகப்படும் காப்பி, எங்கள் நாகரிக போதை எல்லாவற்றிலும் இருப்பது எங்களின் அந்தஸ்து அது எங்கள் பணத்தால் வாங்கப்பட்டதோ, குடும்பவழி கொடுக்கப்பட்டதோ ,அல்லது எங்கள் அழகு,மென்மை வழி பெறப்பட்டதோ மட்டுமன்றி, மேலும், அத்தனைக்கும் சேர்த்து வெகுமதியானது. அது, எங்களுடையது. ஐரீனும், எலினாவும், விக்டோரியாவும், லூயிஸாவும், இப்படியான வெகுமதியை அடைந்தபின்பும் எப்படி புரட்சிக் காற்றில் தங்கள் கூந்தலை அலையவிட்டார்கள் ? விக்டோரியாவின் தங்கநிற முடியை அடி கவ்விச் சுருட்டி ‘அவர்களி ‘ன் நெட்டித்தள்ளலில் முடக்கியது எது ? புன்னகையோடு பிரியத்தெரியாத ஐரீன் வயிற்றுக்குள் புகுந்த பயத்தின் பெயர் பிள்ளைப் பாசமா கலக நேசமா ?சம்பந்தமேயில்லாமல் லூயிசா ஏன் ஜாமீன் எடுப்பதும் ஜெயில் ஆஸ்பத்திரிகளை விஜயம் செய்வதும் மட்டுமே உப தொழிலெனக் கொண்டு தன் உல்லாசத்தொழிலின் வருமானத்தை யெல்லாம் புரட்சிக்கு தாரை வார்க்கிறாள் ?வசதி புரட்சியோடு பேச்சு வார்த்தை நடத்துவது வினோதம். புரட்சிக்கு வசதிக்கான ஏக்கமும் , வசதிக்கு புரட்சி குறித்த குற்றமனப்பான்மையும் இருந்து விடுகின்றன. ஒன்றோக்கொன்று ஆதாரமாகவும் ஆகாரமாகவுமிருக்க எப்போது கற்றுத்தேர்ந்தன இவை ?

இதோ ஐரீன் கூறுவது,டோல்ரஸிடம்- ‘காலம் முழுவதும் எளிமையான வாழ்க்கையை சாத்தியப்படுத்த உழைத்துக்கொண்டு , வருடம் முழுவதும் அழுக்குத்தெரியாமல் இருக்க அழுத்தமான நிறங்களில் உடையணிந்து கொண்டு, இருந்தவர்களை, வேலை பார்க்குமிடத்தில் உடை பாழாகாமலிருக்க மேலங்கி அணியும், உன் அப்பாவை, நிறம் வெளுத்த ஹவுஸ்கோட் அணியும் உன் அம்மாவை என்னால் பார்க்கமுடிகிறது. நீ பயணிக்க விரும்பிய எல்லைகளை எப்படி குறுக்கியிருப்பார்கள் என்று கற்பனை செய்யமுடிகிறது. இத்தனைக்கும் மீறி கவிஞராக ஆனதற்காக, வார்த்தைகளையும் துக்ககரமான மர்மமான நிலப்பரப்புகளையும் கண்டுபிடித்ததற்காக ,அவற்றை விடாப்பிடியாக உன் திசையில் , வாழ்வென்ற பாலைவனத்தில் உன்னுடன் கூட இழுத்து வந்ததற்காக உன்னை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது ‘.

வாழ்நாள் முழுவதும் சேகரித்த நாகரிகப் பழக்கங்களால் காயடிக்கப்பட்ட, புரட்சி உணர்வே உந்தாத ஐரீனின் அந்தரங்கம், ஏழ்மையின் ஆரம்பங்களிலிருந்தும் ,புரட்சிமகனின் வெறுமையான முடிவுகளின் கற்பனைகளிலிருந்தும் ஊற்றெடுத்து டோல்ரஸைச் சீராட்டுகிறது. கொசுவங்கள் நிறைந்த பூப்போட்ட ஷிபான் உடையின் மடிப்புகள் பிரிந்து பிரிந்து கூடும்படி நடக்கிற லூயிஸாவும் இப்படி ஒரு விதமாகத்தான் புரட்சியாளரின் நம்பக மாகிறாள். என்ரிக்குக்காக மண்டை சிதறிப் போகும்படி ஓலமிட்ட டோல்ரஸுக்கும் மே தினச்சதுக்கத்தில் வெள்ளை ஸ்கார்ப் அணிந்து தன் இரு உள்ளங்கைகளிலும் மகள் விக்டோரியாவின் புகைப்படத்தைப் பொதித்துக்கொண்டு அதன் மேல் கவிழ்ந்து கொண்ட எலினாவுக்கும் பெரிய வித்யாசமில்லாமல் போகிறது. வசதி, ஒய்யாரம் அந்தஸ்து அனைத்தும் பாசாங்கை தூக்கி எறிந்து உணர்வு வழி புரட்சியை அணைக்கிறது. அதோடு ஓடி வடிகால் நாடுகிறது.

அடக்குமுறை பேசுகிறது

—-

அலட்சியம், அலட்சியம் தான் எங்கள் ஆயுதம். எதையும் அலட்சியம் செய்தே உணர்வில் மிதப்பவர்களைக் கேள்விக்காளாக்குவோம். தங்களைத்தாங்களே புரிந்துகொள்ளமுடியாதபடி குழப்புவோம். அவர்களே வெட்கப்படும்படி அவர்களின் சகாக்களின் ஈமச்சடங்குகளை ஏறக்குறைய கொண்டாட்டங்களாகவே நடத்துகிற அதீத போக்குக்கு எங்கள் அலட்சியம் அவர்களை இட்டுச்செல்லும். விக்டோரியா எங்கள் எந்த லிஸ்ட்டிலும் இருக்கவில்லை. அந்தப் பெயரை எங்கள் ஆட்சியோடு சம்பந்தப்படுத்தி என்னாகவெண்டும் எங்களுக்கு ? எல்லா பெயருமே அப்படியில்லை. சில பேர் மிகத்தேவை எங்களுக்கு. முகங்களும், எண்களும் தான். நாங்கள் தான் சொன்னோமே! ‘இன்னொரு பிணம் உங்கள் கையில் கிடைக்க விட மாட்டோம். ‘ ஆம்… பேரும் எண்ணும் தொலைக்காட்சி உருவமும் தான் கிடைக்கலாம் உங்களுக்கு. தஸ்தாவேஜுகளோடு மனிதர்களையும் தேடி எங்களிடம் வராதீர்கள். உயிருடனோ பிணமாகவோ மனிதர்களை த் தேடி வராதீர்கள்.

பொதுஜனம் ஒளிகிறது

—-

சதுக்கத்தைக் கடந்து செலவதில்லை பொது ஜனம். வங்கிகுமாஸ்தாக்கள் ஒளிந்துகொண்டார்கள். கேபில்டோவில் மூலையில் குழுமும் கூட்டம் பதுங்கியது. நாள் தவறாமல் மத்தியானத்தில் திருச்சபை வழிபாட்டுக்குப் போகும் பாதிரிமார்களும் அவர்களால் ஆசிர்வதிக்கப்படும் கீழ்ப்படிந்த கூட்டமும் வீட்டுக்குள் அடைந்தார்கள். ,உள்ளிருட்டில் அல்லது பின்பக்கக் கதவு வழியே வெளியேறி வேறெங்கோ!சதுக்கத்தின் விளிம்பில் இருக்கும் சட்ட ஆலோசகரின் அலுவலகத்தில் முக்கியமான தஸ்தாவேஜுகளில் கையெழுத்துப் பெறவரும் மக்கள் எங்கோ சிறைப்பட்டுப் போனார்கள். சுலபத்தில் கூட்டு உடன்படிக்கைக்கு உட்படாத குழப்பமான மக்களை எதுவோ காற்றில் கரைய விட்டுவிட்டது. இப்படியும் கூடவா ஒரு பயப் பிராந்தியை கண்மூடித்தனமாக ஜனங்களின் அறிவில் விதைத்து விட முடியும் ? அல்லது சொற்களால் வர்ணிக்கமுடியாத துக்கத்தை நேரில் பார்க்க திராணியின்றி கூட்டம் வெள்ளைக் குட்டையணிந்த பெண்களைத் தவிர்த்ததோ ? துக்கத்துக்குத் தங்களை வாரிக் கொடுத்துவிட அபாக்கியப் படாதவர்கள், திருப்தியுற்ற பிரஜைகள் தாங்கள் என்று உரத்த குரலில் ஒளிவிடங்களிலிருந்து முழங்குகிறார்களோ ?தங்கள் நேர்த்தியான கால்களை க் கண்ணீரால் சேறுபட்ட சதுக்கத்தில் வைக்கத்தயங்கும் கோழைகளோ ? அவர்களும் இரவில் தூங்குவது உண்டா ? குற்ற உணர்ச்சியின்றி தூங்க முடிகிறதா ?

பாவப்பட்டவர்கள் பேசவில்லை

—-

பேச வார்த்தைகளே இல்லை அவர்களுக்கு. ஆந்த்ரேயின் தகப்பனார், என்ரிக்கின் அம்மா எல்லாரும் அதிகம் பேசுவதில்லை. மே தினச்சதுக்கத்தின் அம்மாக்கள் போல ‘எங்கே ? எங்கே ? ‘ என்று கதறுவதில்லை. கடந்த பல வருடங்களில் மிகச் சரியாக நடந்து கொண்டவர்கள். தங்கள் குழந்தைகளைத்தண்ணீர் தெளித்து விட்டுவிட்டவர்கள். வாழ்நாள் முழுவதிலும் மேற்கொண்ட கட்டாய கடின உழைப்பினால் குவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களாலும் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளாலும் ஓய்வுக்காலத்திட்டங்களாலும் போஷித்துப் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட தம் பிள்ளைகளுக்கு , உயிரைத்துச்சமாக மதித்து ஆபத்துடன் விளையாடும் உரிமையை வேண்டா வெறுப்பாகத்தர விதிக்கப் பட்டவர்கள். டோல்ரஸின் அப்பாவுக்கு த் தன் வாழ்வின் ஒரே இன்பமான காப்பி அருந்துவதையும் சகாக்களுடன் சேர்ந்து விளையாடுவதையும் துறக்க நேர்ந்தது.

நாச காரியங்கள் ஒவ்வொன்றாக நிகழ ஆரம்பிக்கும் வரை எத்தனையோ வருங்களாகத்தவறாமல் சால்டேர் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டங்களில் கலந்துகொண்ட டோல்ரஸின் அம்மா அந்த அமைப்பு உறவை முறித்துக் கொண்டாள். ஆக்டோபஸ் மாதிரிக் கை கால்களை வீட்டுக்குள் முடக்கிக்கொண்டாள். ஜன்னல் கதவுகளைத் திறந்துவிடாமல் சூரிய ஒளியையோ நதிக்காற்றையோ உள்விடாமல் அனுமதி மறுத்து 20வால்ட் வெளிச்சத்தில் நடமாடிக்கொண்டு துணிக்கால் செருப்புகளைத்தேடியவாறே வாழ்கிறவள். பாவப்பட்டவள். மூன்று நாளைக்குப் பிறகு அப்பாவின் சாவை மகளுக்கு அறிவிக்கிறவள். அக்கம்பக்கம் உதவ கணவனைச் சிதையில் ஏற்றியவள்.

நிழல்கள் பேசி முடிந்தபின் ,செயல்பாடுகள் தேய்ந்தபின், மிச்சமாய் ஒன்றுமேயில்லை,…ஒன்றுமேயில்லை.

—-

—-

எல்லாமே சூன்யத்தில் முடிந்து போகின்றன. இந்த முடிவுக்காக இப்படி ஒரு ஆரம்பம் தேவை தானா ? பதினைந்து முதல் இருபத்தைந்து வரை வயதுள்ள ஜீவன்கள் அர்ப்பணமாகலாமா ? அவ்வளவு தகுதி வாய்ந்ததா அந்த ஆகுதி ? வாய்ந்ததெனில் சூன்யம் முடிவாகலாமா ? பொறுக்கலாகாதா வருடங்கள் சில. அடியடியாக முன்னேறலாகாதா மானுடம் ? அழிவு எதை வைக்கும் ஈவாக ? இருந்தும் அழிபடுவது ஏன் ? எந்த உன்னதத்துக்கு ? கேள்விகளே காலம் முழுக்கவும் நிற்கப்போகின்றன.

கதவு தட்டல்கள் கேட்கின்றன.

—-

புதிய கோடாங்கியில் பிரசுரமானது

malathi_n@sify.com

Series Navigation

மாலதி

மாலதி