நாற்பது வருட தாபம்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

அ.முத்துலிங்கம்


ஸீனத் அமன் நடித்த ‘யாதோங்கி பாரத் ‘ என்ற இந்திப் படம் வெளிவந்தபோது சக்கை போடுபோட்டது. அதைத் தொடர்ந்து நாலு தமிழ் படங்கள் அதே செய்தியை வெவ்வேறு கோணத்தில் தந்து வெற்றிபெற்றன. அந்த படங்களில் வருவதுபோல ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது. அதுவும் சமீபத்தில், கனடா வந்த பிறகு. அதை எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனென்றால் எழுத்தாளர்களுக்கு அப்படி ஓர் அபகீர்த்தி உண்டு. அவர்கள் உள்ளதை பெரிசாக்குவார்கள்; இல்லாததை இட்டுக்கட்டி நிரப்புவார்கள். ஆனால் அப்படியே நம்பிவிடும் ஒரு சிலருக்காகவாவது நான் இதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

கனடா வீதிகளில் இப்படிப்பட்ட காட்சியை காண்பது அபூர்வம். சேலை உடுத்திய அம்மையார். அதற்குமேல் ஆண்களுக்காக உற்பத்திசெய்யப்பட்ட ஒரு பழைய மேலங்கியை அணிந்திருந்தார். பனியோ, வெய்யிலோ அவர் காலை பதினொரு மணியளவில் நடந்துபோகிறார். ஒரு மணி நேரம் கழித்து திரும்புகிறார். குழந்தைகளை பள்ளிக்கூடம் அழைத்துப் போகவில்லை; கையிலே சாமான்கள் வாங்கும் பையுமில்லை. உலாத்தப் போவதாகவும் தெரியவில்லை. அதுதான் புதிராக இருந்தது.

பனித்துகள் விழும் ஒரு காலையில் நானும் மனைவியும் இவரை தற்செயலாக எங்கள் வீட்டு வாசலில் சந்தித்தோம். என் கண்ணில் முதலில் பட்டது அவருடைய சப்பாத்துகள்தான். குளிரை தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்காத மட்டரகமான சப்பாத்து. கதகதப்பு கொடுப்பதற்கென்று கோட்டின் உள்ளே அடைத்துவைத்த வாத்து இறகுகள் எல்லாம் பகிரங்கமாக வெளியே வரத் தொடங்கியிருந்தன.

பார்க்க என்னவோ செய்தது. அவரை உள்ளே அழைத்தோம். மறுப்பு கூறாமல் உடனேயே சம்மதித்தார். கோட்டையும், சப்பாத்துகளையும் கழற்றியதும் ஒடிந்துபோய் தோற்றமளித்தார். சிலந்தி வலைபோல முகத்திலே சுருக்கங்கள். கால்கள் நாரையின் கால்கள்போல மெலிந்து காணப்பட்டன. ஒரு பக்க கணுக்கால் வீங்கிப்போய் இருந்தது.

ஒரு சீனப் பெண்மணி ரெய்க்கி முறையில் இலவசமாக சிகிச்சை கொடுக்கிறாராம். அங்கேதான் தினமும் அவர் போய் வருகிறார். இந்த ரெய்க்கி என்பது 18ம் நூற்றாண்டில் ஜப்பானியர்கள் கண்டுபிடித்த நோய் தீர்க்கும் முறை. அயனவெளிக் கதிர்களின் சக்தியை குவித்து உடம்பிலே செலுத்துவதுதான் வைத்தியம். கால் வீக்கம் கணிசமாக குறைந்துகொண்டு வருகிறது என்றார்.

இவர் யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றபின் இங்கே தற்போது மகளுடன் வசிக்கிறார். அரச படைகளின் தாக்குதலில் இருந்து ஒரு முறை தான் தனியாக பள்ளிக்கூடத்தையும், பிள்ளைகளையும் காப்பாற்றியதைப்பற்றி கூறினார். பிறகு வழமைபோல இவரைத் தெரியுமா, அவரைத் தெரியுமா என்று கேட்டு இரண்டு பொதுக் குடும்பங்களை கண்டுபிடித்துவிட்டோம்.

‘என்னுடைய தம்பியும் ஆசிரியர்தான். பேர் பரம்சோதி ‘ என்றார்.

‘அப்படியா. எனக்கும் maths பரம்சோதியை பல்கலைக்கழகத்தில் தெரியும். சுதுமலை ஊர், ‘ என்றேன்.

‘ஐயோ, அவர்தான். அவர்தான் என்ரை தம்பி. ‘

பரம்சோதி என்னோடு படித்தவன். பல்கலைக்கழகத்தில் நான் வேதியியல் எடுத்தால் அவனும் எடுத்தான்; கணிதம் எடுத்தால் அவனும் எடுத்தான்; பெளதீகம் எடுத்தால் அவனும் எடுத்தான். நான் போன வகுப்புகளில் எல்லாம் அவனும் இருந்தான். எங்கள் கிளாஸில் நூறு பேர்களுக்கு மேலே. ஆனபடியால் எனக்கு இவனுடைய பேரும் தெரியாது, பேசியும் பழக்கமில்லை. முகம் மட்டும் பரிச்சயமாயிருந்தது. நாங்கள் அதிசயமான முறையில் வெளியேதான் சந்தித்துக் கொண்டோம்.

மாஜெஸ்டிக் தியேட்டரில் அப்போது ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. மூன்று மணி மாட்னிக் காட்சிக்கு மர்லின் மொன்றோ நடித்த The Seven Year Itch ( ஏழு வருட நமைச்சல் அல்லது ஏழு வருட தாபம் – எப்படியாவது சொல்லிக்கொள்ளலாம் ) என்ற படத்தை போட்டார்கள். பல நாட்களாக இது ஓடியது. பல நாட்களாக நானும் இதை பார்க்கவேணும் என்று பிளான் போட்டு வைத்திருந்தேன். பிரச்சினை என்னவென்றால் மூன்று மணிக்கு கணிதப் பாடம். கணிதவியல் பேராசிரியர் கடுமையானவர். அதுமட்டுமல்ல, ஒரு வகுப்பை தவறவிட்டால் தவறவிட்டதுதான். பிறகு அதைப் பிடிக்கமுடியாது. ஆனால் மர்லின் மன்றோ படத்தை விரைவில் மாற்றி விடுவார்கள் என்று ஆதாரபூர்வமான செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஒரு நாள் துணிச்சலாக கிளாஸ் கட் அடித்துவிட்டு படம் பார்க்கப்போய் டிக்கட் கியூவில் நின்றேன். பார்த்தால் எனக்கு முன்னால் பரம்சோதி.

என்னைப் பார்த்து சிரித்தான். அப்படியே இருவரும் பக்கத்து பக்கத்தில் இருந்து பார்த்தோம். பில்லி வைல்டர் எடுத்த படம். மர்லினின் புகழ் உச்சியில் அப்போது இருந்தது. ஏழு வருடம் மணமுடித்த கணவனை விட்டுவிட்டு மனைவியும், மகனும் விடுமுறையை கழிக்க போய்விடுகிறார்கள்.கணவன் மான்ஹட்டன் பலமாடிக் கட்டிடத்தில் தனிமையாக இருக்கிறான். அதே கட்டிடத்தின் மேல் வீட்டில் மாடல் அழகி மர்லின் மன்றோ. ஒரு தக்காளிக் கன்றை இவன் தலையிலே போட்டு அறிமுகம் ஆரம்பமாகிறது. அவளுடைய அழகும், பேதமையும், முட்டாள்தனமும் இவனை கிறங்கடிக்கும்.

பரம்சோதி பார்ப்பது நாலாவது தடவை. எனவே அடுத்த சீன் என்னவென்று நான் தலையைப் பிய்த்து ஊகிக்க தேவையில்லை. தியேட்டரில் இருந்த அத்தனை சனத்துக்கும் தெரிவதற்கு பத்து செக்கண்ட் முந்தியே எனக்கு அதை சொல்லிவிடுவான். இதிலே மர்லின் ஒரு கட்டத்தில் ரோட்டிலே நிற்பாள். ரோட்டின் கீழே இருந்து வெப்பக் காற்று வென்ற் வழியாக மேலே அடிக்கும். அப்பொழுது அவளுடைய ஆடை, அவள் இரண்டு கைகளாலும் எவ்வளவு அமத்தியும், மீறிக்கொண்டு மேலே பறக்கும். உலகப் புகழ் பெற்ற இந்தக் காட்சி முடிந்ததும் தியேட்டரில் அரைவாசி சனம் எழும்பி போய்விடும்.

அன்றிலிருந்து பரம்சோதியும் நானும் அடிக்கடி சந்தித்து உற்ற நண்பர்களானோம். அப்பொழுது ஒரு விஷயம் கண்டுபிடித்தேன். இவன் கணிதத்தில் விண்ணன். எங்கள் syllabus பாடங்களை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த லெவலையும் செய்தான். ஆனால் இருக்கும் நேரத்தை எல்லாம் கணிதத்துக்கும், ஆடையை அமத்திப்பிடிக்கும் மர்லின் மன்றோவுக்கும் ஒதுக்கிய படியால் மற்றப் பாடங்களுக்கு அவனிடம் போதிய நேரம் இருக்கவில்லை.

நான் அவனுடன் Maths படிக்க தீர்மானம் செய்தேன். நான் தங்கிப் படித்த அறையில் இருந்து அவனுடைய இடம் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. கடைசித் தேர்வுக்கு ஒரு மாதம் இருந்தபோது இருவரும் சேர்ந்து மும்முரமாகப் படிக்கத் தொடங்கினோம்.

இரவு பத்து மணிக்கு என்னுடைய சைக்கிளில் புறப்படுவேன். 37ம் வீதி, வெங்காயக் கோபுர மசூதியை தாண்டியதும், தன் பெயரை மாற்றிவிடும். அந்த இடத்தில்தான் அவனுடைய வீடு இருந்தது. அவன் அறையில் வீட்டுக்கார அம்மா சுவரில் அலங்காரத்துக்காக பாடம் செய்யப்பட்ட மானின் முகத்தையும், அதன் கொம்புகளையும் கொழுவியிருந்தார். விளிம்பு சற்று ஒடிந்த மண் கூஜாவில் தண்ணீர். நாற்பது வாட் பல்பு ஒன்று கூரையில் இருந்து ஒரு வயரில் நேராக கீழிறங்கி நாங்கள் அவசரமாக எழும்பும் சமயங்களில் தலையில் இடித்தபடி ஒளி கொடுக்கும். தேடும் சொல்லை இலகுவாகக் கண்டுபிடிக்க விளிம்பிலே நகம்போல வெட்டி a,b,c,d எழுத்துக்கள் பதித்த அருமையான ஆங்கில அகராதி.

இவ்வளவு சகாயமும் இருக்க குறையேது. மூன்று மணி நேரம் படித்துவிட்டு இரவு ஒரு மணிக்கு திரும்புவேன். சைக்கிள் கைப்பிடியில் பிரம்பில் செய்த சாமான்கூடை தொங்கும். அதற்குள் மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்திருப்பேன். அந்த நேரத்தில் ரோட்டு எனக்கு மட்டும் போட்டதுபோல நிம்மதியாக ஒரு சனம்கூட இல்லாமல் இருக்கும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு புறப்பட்ட நீலமான நட்சத்திர வெளிச்சத்திலும், கூடையிலே இருந்து புறப்பட்ட மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் அந்த இருட்டில் பாதை கண்டுபிடித்து என் அறைக்கு வந்து சேருவேன்.

பரம்சோதியிடம் ஒரு குணம் இருந்தது. ஒரு கணிதத்தை எடுத்தால் அதை முடிக்காமல் அடுத்ததுக்கு போகமாட்டான். நாங்கள் கடந்த பத்து வருட கேள்வித்தாள்களை சேகரித்து ஒவ்வொன்றாக செய்வோம். சிலது எட்டாமல் போகும். நான் விட்டுவிட்டு அடுத்ததுக்கு போய்விடுவேன். ஏனென்றால் இங்கே நேரம் முக்கியம். ஒரு கணிதத்தோடு மட்டும் போராடிக் கொண்டிருந்தால் மற்றவற்றை செய்யமுடியாது. இது அடிமட்ட முட்டாளுக்குகூட தெரியும். பரம்சோதி அப்படி அல்ல. தன்மானம் முக்கியம். எடுத்த கணிதத்தை முடிக்காமல் அடுத்ததற்கு போகமாட்டான்.

இந்த நாட்களில் பரம்சோதிக்கு ஒரு பெரும் சங்கடம் ஏற்பட்டது. ஒரு நாள் அவனைத்தேடி நான் வந்தபோது அவனுடைய அறை சாமான்கள் எல்லாம் முறையாகக் கட்டப்பட்டு வாசலிலே கிடந்தன. வீட்டுக்கார அம்மாள் சிங்கள மனுசி. இரண்டுமாத வாடகை கொடுக்காததால் பரம்சோதியை வெளியேற்றிவிட்டாள். அப்படியும் அவள் கோபம் ஆறவில்லை. அங்குமிங்கும் உலாத்தியபடி பெரிதாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.

எனக்கு கண்டி அரசன் கூத்தில் கீர்த்திசிங்கன் ‘மாட்டேனென்று சொல்லிவிட்டாளோ – எனை மணக்க மாட்டேனென்று சொல்லிவிட்டாளோ ? ‘ என்று குரலெடுத்து பாடியபடி மேடையில் நாலு பக்கமும் தலைதெறிக்க ஒடும் காட்சிதான் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு தீயணைப்பு வண்டியின் மணிச்சத்தம்போல நிறுத்தாமல் உறுமினாள். பரம்சோதி ஒரு வாகை மரத்துக்கு கீழே அதை முட்டிக்கொண்டு நின்றான். ஒரு பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன் பாதுகாப்பான வளையிலிருந்து துரத்தப்பட்ட எலிக்குஞ்சுபோல நடுங்கிக்கொண்டு நின்றது எனக்கு பொறுக்க இயலாமல் போனது.

நான் சைக்கிளை நிற்பாட்டக்கூட இல்லை. அப்படியே என்னுடைய ஒன்று விட்ட அண்ணர் வீட்டுக்கு விட்டேன். அவர் அரசாங்கத்தில் பெரிய அதிகாரி. அவர் வந்து சிங்களத்தில் ஏதோ பேசினார். ஓர் அரச சேவகன் செய்வதுபோல வீட்டுக்காரி இரண்டு அடி பின்னால் நகர்ந்தார். பரம்சோதி பத்து நாட்களுக்கிடையில் முழு வாடகையையும் கட்டிவிடுவானென்று உறுதியளித்தார். சாமான்கள் எல்லாம் கயிற்று முடிச்சுடன் திரும்பவும் உள்ளே போயின. அன்று இரவும், நாங்கள் ஒன்றுமே நடக்காததுபோல செத்துப்போன மான் கொம்புகளுக்கு கீழே உட்கார்ந்து நீண்ட கணிதப் புதிர்களுக்கு வெகுநேரமாக விடைகள் தேடினோம்.

எங்கள் பரீட்சையில் தெரிவுகள் இருக்கும். பத்து கேள்விகள் கொடுத்து எட்டுக்கு மாத்திரம் விடை எழுத சொல்வார்கள். இதிலே நேரம் மிக முக்கியம். ஒரு கேள்விக்கு இத்தனை நிமிடங்கள் என்று கணக்கு. அதற்குள் முடியாவிட்டால் அதை விட்டுவிட்டு அடுத்ததற்கு போய்விடவேண்டும். கொடுத்த கேள்விக்கு பொருத்தமான சூத்திரங்களை எழுதி செய்முறைகளையும் விளக்கிவிட்டாலே பாதி மதிப்பெண் நிச்சயம். சில கணிதக் கேள்விகளுக்கு விடையையும் கொடுத்திருப்பார்கள். அந்த விடை கிடைக்கும் பாதையை காட்டினாலே சரி, உங்களுக்கு முழு மதிப்பெண்ணும் கிடைத்துவிடும்.

சிலவேளைகளில் வகுப்பில் நாங்கள் ஒரு தாளில் நாலு பக்கமும் சூத்திரங்களை எழுதி நிறைத்துவிட்டு அதற்குள் இருந்து வெளிவரமுடியாமல் திணறுவோம். பரம்சோதி அந்த சூத்திரங்களை ஒரு கணம் உற்று நோக்குவான். பிறகு அதில் இரண்டு சூத்திரங்களை மொத்தமாக அடித்துவிடுவான். தேவையில்லை. மீதி சூத்திரங்களை வைத்து நாலே நாலு வரிகள் எழுதுவான். ஒரு டொல்ஃபின் மூக்கிலே பந்தை எடுத்து லாவகமாக நீந்தி வருவதுபோல எளிமையாகவும், இலகுவாகவும் விடையை எடுத்து தருவான்.

சோதனைக்கு முதல் நாள். அம்மா சிறுவயதில் சொல்லித் தந்ததுபோல பத்து மணிக்கே நான் படுக்கைக்கு சென்றேன். அது பெரும் கனவுகள் உற்பத்தி செய்யும் இரவாக இருக்கும்.

ஒரு பளிங்குத் தரை. அதற்கு மேல் மரத்தினால் செய்த பிரமிட் கோபுரம். பாரமான இரும்புக் குண்டு ஒன்றை அதன் உச்சியில் வைக்கிறார்கள். அது உருண்டு கீழே வருகிறது. பிரமிட்டும் வழுக்கிக்கொண்டு நகருகிறது. அது எவ்வளவு தூரம் நகர்ந்தது ? என்ன வேகத்தில் ?

பில்லியட் மேசையில் பலவித வண்ணப் பந்துகள். வெள்ளை பந்தின் கோணம் இது. சிவப்பு பந்தின் கோணம் இது. இவ்வளவு வேகத்தில் வெள்ளைப் பந்தை சிவப்பின்மீது ஏவினால் அது மூன்றாவது துவாரத்தில் விழுமா, விழாதா ?

விழுந்துவிட்டது. இதோ சத்தம் படபடவென்று கேட்கிறது. யாரோ கதவை அடிக்கிறார்கள். பரம்சோதி வேர்க்க விறுவிறுக்க நிற்கிறான். இரவு ஒரு மணி. இரண்டு நாட்கள் முன்பு நாங்கள் விடை காணமுடியாத ஒரு கணக்குக்கு ( கிடத்தி வைத்திருக்கும் பாதி உருளையில் தண்ணீர் வேகமாக விழுகிறது. அரைவாசி உயரத்தில் அது என்ன வேகத்தில் நிரம்பும் ?) அவன் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டான். அதைத் தர வந்திருக்கிறான். இந்த இரண்டு நாட்களும் அவன் வேறு ஒன்றுமே படிக்கவில்லை என்றான். மூளையை நோக்கிப் பாய்ந்த ரத்தம் எனக்கு பாதியிலேயே நின்று மயக்கம் வந்தது. காரணம் காலையில் எங்களுக்கு வேதியியல் பரீட்சை.

நாங்கள் இரவிரவாகக் கண்விழித்து படித்து, ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி, அனுமானித்த உத்தேசக் கேள்விகள் ஒன்றுமே வரவில்லை. அந்த வருடம் யாரோ சொந்த மூளையை பாவிக்கும் பேராசிரியர் ஒருவர் கேள்வித் தாள்களை தயாரித்திருந்தார். பரீட்சை மறுமொழி வந்தபோது பரம்சோதி இரண்டு பாடங்களில் தோல்வி. ஆனாலும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு. இன்னொரு வருடம் அவன் திருப்பி படிக்கவேண்டும்.

நான் மேல் படிப்பில் மூழ்கிவிட்டேன். படிப்பு, பரீட்சை, வெளி நாட்டு வேலை என்று வாழ்க்கை வேகமாக திசைகளை மாற்றிவிட்டது. இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். பிரம்புக் கூடையில் மெழுகுவர்த்தி எரிய நடு நிசியில் இரண்டு மைல் தூரம் என்னைத் தேடிவந்தபோது அந்த வெளிச்சத்தில் பரம்சோதியை பார்த்ததுதான் கடைசி. அதற்கு பிறகு அவனை நான் காணவே இல்லை.

அந்த அம்மையார் எங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். இள வயதில் என்னுடன் படித்த நண்பனின் அக்கா. மூச்சுவிட வெளியே வரும் திமிங்கிலம்போல எதோ ஓர் அசைவுக்காக நான் காத்திருந்தேன்.

‘அப்ப உங்களுக்கு முத்துலிங்கத்தை தெரியுமா ? என்ரை தம்பியும் அவரும் நல்ல சிநேகிதர்கள் ? ‘

நான் மனைவியைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள். இருவரும் அவரைப் பார்த்தோம். ஏதாவது விளையாடுகிறாரா ?

‘நாந்தான் அந்த முத்துலிங்கம் ‘

‘நீங்களா ? ‘

அவர் என்ன எதிர்பார்த்தாரோ தெரியாது. ஆனால் அதிர்ச்சியடைந்துவிட்டார். நான் அடைந்த அதிர்ச்சியிலும் பார்க்க கூடியதாக இருந்தது.

‘படிக்கிற வயதில் ஏதோ போகிற போக்கில் என் பெயரை பரம்சோதி சொல்லியிருப்பார். அதற்கு பிறகு தொடர்பே இல்லை. எப்படி நாற்பது வருடத்திற்கு பிறகும் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் ‘ என்றேன்.

‘அவன் ஒரே தம்பி. அவனை படிப்பிக்க காசு கட்டியது நான்தான். படிப்பு முடியும்வரை உங்கள் பேரைத்தானே உச்சரித்தபடி இருந்தான். அது எப்படி மறக்கும். ‘

மெதுவாகக் கேட்டேன். பதில் நல்லாயிருக்காது என்ற பயம் கூடிவிட்டது.

‘இப்ப பரம்சோதி எங்கே ? ‘

‘யாழ்ப்பாணத்தில் இரண்டு கிழமைக்கு முன்னால்தான் மோசம் போயிட்டான். ‘

அந்த அம்மா தன் வீங்கிப்போன கணுக்கால்களை பார்த்தபடியே இருந்தார். அவருடைய தோள் எலும்புகள் நாடியை மறைத்தன. புருவங்களுக்கு இடையில் புடைத்துப்போன நீல நரம்புகள். ஒரு கண்ணில் மட்டும் ஓர் உருண்டை உண்டாகி மெதுவாக இறங்கியது.

யாரோ கண்ணுக்கு புலப்படாத ஒருத்தர் அவரை அவசரப்படுத்தியதுபோல திடாரென்று எழுந்தார். ‘நான் வாறன் ‘ என்று கூறிவிட்டு குவியலாகக் கிடந்த மேலங்கியை எடுத்து மாட்டினார்.அப்பொழுது ஒன்றிரண்டு இறகுகள் விடுபட்டு பறந்தன. ஒரு காலில் ஒன்றைப் போட்டு, வீங்கிப்போன மறு காலில் சிரமத்துடன் மற்றக் காலணியை அணிந்துகொள்ள அவருக்கு சற்று நேரம் எடுத்தது.

ஆட்கள் நடமாட்டத்தில் ஏற்கனவே கெட்டியாகிப்போன பனிக்கட்டி பாதையில் நடக்காமல், புல் தரையை மூடியிருந்த பனியில் சப்பாத்துகள் புதைய விறுவிறென்று நடந்துபோனார். வேகமான பாதாள ரயிலில் ஒரு ஸ்டேசனில் ஏறி அடுத்த ஸ்டேசனில் சட்டென்று இறங்கியதுபோல இந்த விவகாரம் சீக்கிரத்தில் முடிந்தது. அந்த அம்மையாரிடம் கனிவு காட்டும் விதமாக அவருடைய இறகு தள்ளும் மேலங்கியை எடுத்து தந்திருக்கலாம், அல்லது காலணியை வசதியாக போட உதவி செய்திருக்கலாம் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது.

amuttu@rogers.com

திண்ணை பக்கங்களில் அ முத்துலிங்கம்

  • பேய்களின் கூத்து
  • அருமையான பாதாளம்
  • நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
  • யானை பிழைத்த வேல்
  • வீணாகப் போகாத மாலை

    அ முத்துலிங்கம் பற்றி

  • வளவ துரையன்

    Series Navigation

  • அ.முத்துலிங்கம்

    அ.முத்துலிங்கம்