போலச் செய்தல் ?

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

பரிமளம்


என் இளமைக்காலம் புத்தகங்களோடும் எம்.ஜி.ஆரின் சினிமாக்களோடும் கழிந்தது. அக்காலத்தில் படித்த புத்தகங்களைப் பிறகு (ஏமாற்றமாக இருக்கும் என்னும் பயத்தில்) படிக்க நான் முயலவில்லை. ஆனால் இளமையில் இவை எனக்கூட்டிய மகிழ்வுகளையும் உண்டாக்கிய கனவுகளையும் மாயை என்று ஒதுக்க என்னால் இயலாது.

என் வாசிப்பு அனுபவத்தின் ஒரு பகுதியை, கிளர்ச்சியை என்னைப் போன்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே இதை எழுதுகிறேன். (எம்.ஜி.ஆரையும் விடுவதாக இல்லை. புத்தகங்களோடு சினிமாவையும் கலப்பது குற்றம் ஆகாது) எவரையும் குறைத்து மதிப்பிடுவதோ, கேலி செய்வதோ என் நோக்கமில்லை.

இலக்கியங்களில் நல்லவை கெட்டவை, உயர்ந்தவை தாழ்ந்தவை, சிறந்தவை சிறப்பற்றவை என்ற வேறுபாடுகள் வாசகருக்கு வாசகர் வேறுபடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வாசகரின் அனுபவமும் வயதும் அறிவாற்றலும் மாற மாற ஏற்கனவே அவரது பட்டியலில் உள்ளவை இடம் மாறிக்கொள்வதும் உண்டு. நம்மை அறியாமலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சிறுவயதில் வாத்தியார் படங்களை விரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மீது தாங்கமுடியாத எரிச்சல் ஏற்படத் தொடங்கியது எப்போது என்று தெரியவில்லை. (சிறுவயதில் வெறுப்பை ஏற்படுத்திய ‘மருத நாட்டு இளவரசி’யை அண்மையில் சன் டிவி ஒளிபரப்பியபோது {திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம் என்று விளம்பரம் செய்திருக்கலாம், மறந்துவிட்டார்கள்} முழுமையாக உட்கார்ந்து பார்க்க முடிந்தது ஒரு அதிசயமே)

வாத்தியாரின் கத்திச் சண்டைப் படங்களுக்கும் (வரலாற்றுப் படங்கள் என்று சொல்பவர்களை விசாரணை இன்றிக் கழுவேற்றலாம்) Errol Flynn படங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றிப் பலர் எழுதியுள்ளனர். The Prince and the Pauper படத்தின் ஒரு சில காட்சிகள் நாடோடி மன்னனில் உள்ளன என்பதையும், Captain Blood ஆயிரத்தில் ஒருவனாக மாற்றம் கண்டதையும் தவிர இருவரின் படங்களுக்கும் வேறு தொடர்புகள் இல்லை. ஆனால் இரண்டு நடிகர்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நடையுடை பாவனைகளிலும், அங்க அசைவுகளிலும் எம்.ஜி.ஆர் Errol Flynn இடமிருந்து நிறைய கடன் வாங்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர் உயரமாக இருந்திருந்தால் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து பிரிந்து போன இரட்டைப் பிறவிகள் என்று தாராளமாகக் (கதை பண்ணியிருக்கலாம்.) கூறலாம்.

கத்தியைச் சுழற்றிச் சண்டை போடுவதில் முதலிடம் வாத்தியாருக்குத்தான்.

_________________

சிறுவயதில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் தேவனும் ஒருவர். ‘துப்பறியும் சாம்பு’ ஐந்து பாகங்களையும் பல முறை படித்திருக்கிறேன் (ஷட்டகர் என்னும் சொல்லுக்கு இன்றுவரை எனக்குப் பொருள் தெரியாது). ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’ நாவலின் நீதிமன்றக் குறுக்கு விசாரணைகள் என் இளம் நெஞ்சில் ஏற்படுத்திய புல்லரிப்புகளுக்கு எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கலாம் (தேவனே! உமக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்). கோமதியின் காதலன், ஜானகி, கல்யாணியின் கணவன், மைதிலி முதலிய நாவல்களைப் படிக்கும்போது எழுந்த என் சிரிப்பொலிகள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இந்த நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்ச்சிகளையும் மனிதர்களையும் இறுதியில் எப்படித்தான் இவரால் ஒன்றாகக் கொண்டு வந்து இணைக்க முடிகிறதோ என்ற கேள்விக்கு எனக்கு விடை கிடைக்காமல் போகவில்லை.

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் நாவலுக்கு Erle Stanley Gardner இன் Perry Mason நாவல்களும், கோமதியின் காதலன் முதலிய நாவல்களுக்கு (‘சி.ஐ.டி.சந்துரு’வையும் இவற்றோடு சேர்க்கலாம்) P.G.Wodehouse இன் நாவல்களும் ஊற்றுக்கண்களாக இருந்திருக்கின்றன என்பதைப் பிற்காலதில் அறிந்தபோது ஓரளவு ஏமாற்றம் ஏற்பட்டது உண்மைதான். ஆயினும் தேவனின் கதை சொல்லும் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதோடு தேவனின் நாவல்கள் தழுவல்கள் இல்லையென்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும். உத்திகளை மட்டுமே அவர் கடன் வாங்கியிருக்கிறார்.

தேவன் நகைச்சுவை எழுத்தாளர் மட்டும் அன்று. அவருடைய ‘மிஸ்டர் வேதாந்தம்’ (என்றுதான் நினைக்கிறேன். இக்கட்டுரையில் நாவல்களின் பெயர்களை நினைவில் இருந்தே எழுதுகிறேன். எனவே பிழைகள் இருக்கலாம். பொறுத்தருள்க) நாவலைப் படித்து விட்டு மாலை மாலையாகக் கண்ணீரும் விட்டிருக்கிறேன்.

______________

எங்கள் ஊர் நூலகத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனுக்கும் சாண்டில்யனுக்கும் கிடந்தது போலவே தமிழ்வாணன் புத்தகங்களுக்கும் வாசகர்கள் தவம் கிடக்க வேண்டும். கிட்டத்தட்ட சுஜாதாவுக்கு முன்னோடி என்று கூடச் சொல்லக்கூடிய தமிழ்வாணன் இப்போது முற்றிலும் மறக்கப்பட்ட ஒரு எழுத்தாளர். இவருடைய சங்கர்லாலும் (இவர் குடிக்கும் தேநீரின் சுவையே சுவை), இவரது மனைவி இந்திராவும், மாணிக்கமும், கத்தரிக்காயும் எனக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்தார்கள். இவர் தன் நாவல்களில் துப்பாக்கியை வருணிக்கும் போது ‘நீல நிறத்தில் மின்னும் துப்பாக்கி’ என்று எழுதுவது வழக்கம். இது எனக்கு மிகவும் புரியாத ஒரு புதிர். துப்பாக்கி கறுப்பாகத்தானே இருக்கிறது (சினிமாவில்) ? பிறகு ஏன் இவர் நீல நிறம் என்கிறார் என்னும் கேள்விக்கு நானும் ஆங்கிலத் துப்பறியும் நாவல்களின் ரசிகனானபோது விடை கிடைத்தது. சில நாவல்களில் துப்பாக்கியை வருணிக்க ‘Blue steel’ என்னும் அடைமொழி பயன்படுத்தப்படுகிறது!

எனக்குத் தெரிந்தவரை Dashiell Hammett எழுதிய The Thin Man நாவலின் துப்பறிவாளன்தான் மனைவியுடன் தோன்றுகிறான். மற்ற P.I களெல்லாம் ஒண்டிக்கட்டைகளே. தமிழில் மனைவியுடன் தோன்றிய துப்பறிவாளர் சங்கர்லால் மட்டுமாகத்தான் இருப்பார். The Thin Man நாயகன் மது விரும்பி. சங்கர்லால் தேநீர் விரும்பி. இருவருமே பணக்காரர்கள். அவனது மனைவி கணவன் ஈடுபடும் வழக்குகளில் ஆர்வம் காட்டுபவள், தன் பங்குக்குத் தானும் பல உதவிகளைச் செய்பவள். இந்திரா குடும்பப்பெண் (கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்). சில ஒற்றுமைகள் இருந்தாலும் சங்கர்லால் Thin Man பாதிப்பில் உருவானவரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. (1930, 40 களில் Thin Man தோன்றும் 5 திரைப்படங்களும் வந்துள்ளன)

தமிழ்வாணன் ‘பிடி-22’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். Joseph Heller எழுதிய Catch-22 என்ற நாவலின் தலைப்பைத் தவிர இரண்டுக்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

____________

சுஜாதாவின் கதைகளை எம்.ஜி.ர் படங்களோடு ஒப்பிட முடியாது என்றாலும் என் இருபதுகளில் ரசித்ததுபோல இப்போது அவரது புனைகதைகளை என்னால் படிக்க முடியவில்லை. முதலில் படிக்கும்போது கவர்ந்திழுத்த அவரது நடை இப்போது கசக்கிறது (சுஜாதாவின் பாணியிலேயே சொல்ல வேண்டுமானால் கச்சிருந்த அந்த நடை இப்போது கைக்குழந்தை வச்சிருக்கும் நடையாகிவிட்டது எனக்கு). கட்டுரைகள் மட்டுமே படிக்கும்படி இருக்கின்றன.

கணேஷ், வசந்தை மறக்க முடியுமா ? ஆரம்பக் காலக் கணேஷ் கதைக்கும் பெரிமேசனுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. ஆனால் சுஜாதா அந்தத் தொடர்பை உடனேயே துண்டித்துக் கொண்டார். வக்கீல்களாக இருந்தாலும் கணேஷும் வசந்தும் அவ்வப்போது சட்டப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதோடு சரி; பெரிமேசனைப் போல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுவதில்லை.

‘வசந்த காலக் குற்றங்கள்’ EdMcBain எழுதும் 87th Precinct நாவல்களின் பாதிப்பில் உருவாகியுள்ளது.

_____________

சுந்தர ராமசாமி தமிழை ஆற்றலுடன் கையாளும் திறன் பெற்றவர். (கட்டுரைகளில் கவனக் குறைவால் ஏற்படும் சிறிய பிழைகள் இப்போது தென்படுகின்றன) இவரது ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. இப்படிக் கூட எழுத முடியுமா என்று ஒரு வியப்பையும் பயத்தையும் ஏற்படுத்திய இந்த நாவலை முதலில் படிக்கும் போதே தவிர்க்கவியலா வகையில் சோவியத் மொழிபெயர்ப்பில் முன்னரே படித்திருந்த ‘உண்மை மனிதனின் கதை’ என்னும் நாவல் என் நினைவுக்கு வந்து வந்து போயிற்று. உண்மை மனிதனின் கதையைப் படிக்கும் போதும் படித்து முடித்த பிறகும் இந்தக் கதை ஒரு உண்மையான மனிதனைப் பற்றியதா அல்லது கற்பனையா என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. இதே குழப்பத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமே ஜே.ஜே. சில குறிப்புகளுக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை.

___________

பலரும் புகழ்ந்து பேசுகிறார்களே என்பதற்காகத் தி.ஜானகிராமனின் மோக முள்ளைப் படித்தேன். படித்தேனே தவிர என் மனதில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை (அதை ரசிக்கும் அனுபவம் எனக்கில்லை). படித்துப் பல ஆண்டுகள் கடந்த பிறகு John Garfield நடித்து 1946 ல் வெளிவந்த Humoresque என்ற ஆங்கிலப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்தபோது ‘மோக முள்’ தி.ஜாவின் சொந்தச் சரக்கு அல்ல என்பது தெரிந்தது.

மோகமுள் Humoresque படத்திற்கு வெகுவாகக் கடன் பட்டுள்ளது.

***

baalakumar@hotmail.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்