உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

பாவண்ணன்


கோடையில் எங்கள் ஊர் வறண்டு போய்விடும். ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் ஏரியில் தண்ணீர் இருந்த காலத்தில் இருபது முப்பது அடி ஆழத்துக்குள் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு போடப்பட்டிருந்த பம்புகளில் காற்று கூட வருவதில்லை. தண்ணீர் ஆழம் இருநுாறு முந்நுாறைத் தாண்டி விட்டது. ஊர்ப்பொதுவிலும் அடிக்கிற பம்பு வசதி கிடையாது. பஞ்சாயத்து போர்டு நீர்க்கிடங்கிலிருந்துதான் தண்ணீர் வர வேண்டும். மின்சாரம் இருக்கிற சமயத்தில் இரண்டு நாளைக்கு ஒருதரம் அல்லது மூன்று நாளைக்கு ஒருதரம்தான் அரைமணிநேரமோ அல்லது ஒருமணிநேரமோதான் தண்ணீர் வரும். சந்தடி தெரியாமல் வந்து போகிற விருந்தாளி போல நள்ளிருள் வேளையில் வந்து நின்று விடும். பிடிக்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள். பிடிக்க முடியாதவர்கள் நாள் முழுக்க ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்வார்கள்.

ஒரு குடம் தண்ணீருக்காக வெட்டுப்பகை குத்துப்பகை உண்டாகி விடும். ஆண்டாண்டு காலம் ஒட்டிப் பழகியவர்கள் கூட முன்னே பின்னே குடங்களை நகர்த்தி வைத்துப் பிடித்த ஒரே காரணத்தால் பகையாளிகளாக மாறிப் போய்விடுவார்கள். ஆண்களும் பெண்களுமாக முட்டி மோதுகிற குழாயடியில் எல்லாக் கெட்ட வார்த்தைகளும் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும்.

அண்ணி முறையாக வேண்டிய ஒருவர் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக வீட்டில் இருந்த எல்லாப் பாத்திரங்களிலும் தண்ணீரை நிரப்பி வைப்பார். பெரிய பித்தளைக் குடங்கள், அண்டாக்கள், குண்டான்கள், சின்னச் சின்ன சமையல் பாத்திரங்கள், தகரக் குவளைகள், கூஜாக்கள் எல்லாவற்றிலும் தண்ணீர் மயமாக இருக்கும். வீட்டில் தொட்ட இடம் முழுக்கத் தண்ணீர்ச் சேமிப்பாக இருக்கும். அந்த அளவு அச்சப்பட்டிருக்கத் தேவையில்லை. ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தண்ணீர் வந்த நள்ளிரவு வேளையில் பிடிக்க முடியாமல் போய் மறுநாள் ஒரு குடம் தண்ணீருக்குச் சங்கடப்பட நேர்ந்த அனுபவத்தாலும் மற்றொரு தருணத்தில் குழாயடியில் நெருக்கித் தள்ளிய பெரிய பெண்மணி ஒருவரிடம் கண்டபடி கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கியதாலும் அதிக எச்சரிக்கை கொண்டவராகி விட்டார். இன்னொரு முறை அந்த நிலைமைக்கு ஆளாகி விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கத் தொடங்கினார். கார்த்திகை தீபத்துக்கு அகல்விளக்கு ஏற்றி வைத்ததைப் போல சின்னச் சின்னப் பாத்திரங்களிலெல்லாம் தண்ணீர் நிரப்பி வைத்து விடுவார். கிறுக்குப் பிடித்திருக்கிறதோ என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்கிற அளவுக்கு அவள் சேமிப்பு முறை இருக்கும்.

கோடை முடிந்து பருவமழை பொழிந்து ஓரளவு தண்ணீர்ப் பிரச்சனை இல்லாத தருணங்களிலும் அவர் தன் சேமிப்புப் பழக்கத்தை விடுவதில்லை. என்றாவது ஒருநாள் தண்ணீர் வராவிட்டால், என்றாவது ஒருநாள் மின்சாரமே இல்ாலமல் போய் நீர்வரத்து நின்று போய்விட்டால் என்றெல்லாம் தன் தரப்பு வாதங்களை அடுக்கத் தொடங்கி விடுவார். அப்படியெல்லாம் ஆகாது என்று எல்லாரும் எவ்வளவோ முறைகள் எடுத்து விளக்கிய பின்னரும் கூட அவர் தம் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செய்கிற கிண்டல்களை அவர் பொருட்படுத்துவதே இல்லை. பட்டவளுக்குத்தான் வலி தெரியும் என்பதைப் போல ஒரு சிறிய புன்னகையுடன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட்டு சேமிப்பு வேலையைத் தொடங்கி விடுவார்.

அக்காட்சி முதலில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் அவர் உள்ளூர எந்த அளவு தண்ணீரின்மையால் நொந்து போயிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த முன்னெச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கிற அச்ச உணர்வின் நியாயத்தையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஒன்றின் இல்லாமையும் அந்த இல்லாமையால் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுமே அச்ச உணர்வுக்குக் காரணமாகும்.

அதைப் பார்க்கும் போதெல்லாம் அறை முழுக்க உணவுப் பொருட்களைத் திருடித் திருடி ஒளித்து வைக்கும் ஒரு கதைப்பாத்திரம் நினைவுக்கு வரும். அப்பாத்திரம் ஜாக்லண்டனின் ஒரு சிறுகதையில் இடம்பெறுகிறது. ‘உயிர்ஆசை ‘ அக்கதையின் பெயர். உயிர் வாழும் ஆசையால் ஓர் ஓநாய்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கிற போராட்டத்தையும் நாட்கணக்கில் உணவே இல்லாமல் தவியாய்த் தவித்தவனின் நடத்தையில் ஏற்படும் மாறுபாடுகளும் வெகுநுட்பமாக முன்வைக்கப்பட்ட கதை இது.

கதையில் இரண்டு நண்பர்கள் இடம்பெறுகிறார்கள். இருவரும் தங்கப் பொதிகளுடன் நொண்டி நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடக்கிறார்கள். தண்ணீர் உறைபனி போல காலை வெட்டுகிறது. பாதம் அடிக்கடி மரத்துப் போகிறது. பாறைகள் வழுக்க அடிக்கடி விழுகிறார்கள். எதிர்பாராத ஆழத்தால் தடுமாறித் தண்ணீருக்குள் விழுந்து நனைந்து விடுகிறார்கள். இருவரையும் சோர்வு ஆட்டிப் படைக்கிறது.

முன்னவன் எதிர்கரைக்குத் தள்ளாடித் தள்ளாடி நடக்க இரண்டாமவன் நடுக்கத்துடன் மெதுவாகப் பின்தொடர்கிறான். சிறிது நேரத்தில் முன்னவன் பார்வையிலிருந்தே மறைந்து விடுகிறான். என்றாலும் இலக்குப் புள்ளியில் தனக்காக அவன் காத்திருப்பான் என்கிற நம்பிக்கையில் காலை இழுத்து இழுத்து ஒவ்வொரு அடியாக நடக்கிறான் இரண்டாமவன். அங்கங்கே காணப்படுகிற குத்துச்செடிகளில் தொங்கும் காய்களையும் நீர்நிலைகளில் காணப்படும் மீன்குஞ்சுகளையும் உணவாகச் சாப்பிடுகிறான். இரவுகளில் நெருப்பு மூட்டித் தகரப் போணியில் தண்ணீர் சுட வைத்துக் குடிக்கிறான். மீண்டும் மீண்டும் தன்னிடமிருக்கும் தீக்குச்சிகளை எண்ணிக் கொள்கிறான். நாளுக்கு நாள் அவன் நடைவேகம் குறைந்தபடி வருகிறது. ஒருநாள் அதிகாலையில் மான் ஒன்றைப் பார்க்கிறான். கொன்று சுட்டுத் தின்னும் ஆசையில் ஒரே ஒரு தோட்டா உள்ள தன் துப்பாக்கியால் குறி பார்க்கிறான். துரதிருஷ்டவசமாக குறி தப்பிவிட மான் ஓடிவிடுகிறது. ஆத்திரத்தில் துப்பாக்கியைக் கீழே எறிந்து விட்டு நடையைத் தொடர்கிறான்.

பல நாட்கள் கடந்தபின்னும் இலக்கை அடைய இயலவில்லை. உடல்தெம்பு குறைந்து கொண்டே வருகிறது. நடப்பது குறைந்து ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை வருகிறது. ஒரு நாள் காலையில் விழித்தெழும் போது வயதான ஓநாய் ஒன்று அவன் அருகில் உட்கார்ந்து அவனை உற்றுப் பார்த்தபடி இருப்பதைக் கவனிக்கிறான். அதன் கண்களிலும் பசியின் தீவிரம். இவன் மனத்திலும் உயிர் ஆசையின் தீவிரம். அதைக்கொல்ல தருணம் பார்த்தபடி காத்திருக்கிறான் இவன். இவனைக் கொல்லத் தருணம் பார்த்தபடி காத்திருக்கிறது அது.

திடாரென வழியில் ஒரு மனிதன் ஊர்ந்து சென்ற தடம் தெரிகிறது. முன்னவனை நெருங்கி விட்டோம் என்று மனம் குதுாகலிக்கையில் அவன் சுமந்து சென்ற பொதி கீழே விழுந்து கிடப்பதையும் எலும்புகள் சிதறி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து விடுகிறான். தொடர்ந்து ஊர்ந்து செல்லும் பயணத்தில் பாதத்தைப் போல முழங்காலும் தேய்ந்து சதைக் கோளமாக மாறுகிறது. பாசியிலும் பரல் கற்களிலும் மாட்டிக் கோடாக ஒழகத் தொடங்குகிறது ரத்தம். ரத்தத்தின் சுவையால் ஈர்க்கப்பட்ட ஓநாய் அதை நக்கியபடி அவனைப் பின்தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தளர்ந்து போன ஓநாய் அவனை நேரிடையாகத் தாக்கத் தொடங்குகிறது. மனிதனும் எதிர்த்தாக்குதல் நிகழ்த்துகிறான். விழிப்பிலும் கனவிலுமாக அரைநாள் வரை அந்த மோதல் நீடிக்கிறது. பலவீனமான ஓநாய் தன் பற்களை அவன் உடல்மீது அழுத்தகிறது. கிழிபட்ட மனிதனின் கை நீண்டு ஓநாயை எட்டிப் பிடிக்கிறது. ஐந்து நிமிடம் கழித்து மனிதனுடைய முழுஎடையும் ஓநாய் மீது விழுகிறது. அதை நசுக்கிக் கொல்ல விழைகிறான் அவன். அவன் முகம் ஓநாயின் கழுத்தைக் கடிக்கிறது. அரைமணிநேரம் கழித்து அதன் ரத்தம் வெதுவெதுப்பாகத் தன் தொண்டைக்குள் இறங்குவதை உணர்கிறான். ஓநாயைக் கொன்றதை உணராமலேயே உறங்கி விடுகிறான் மனிதன்.

எதிர்பாராமல் கரையை நெருங்கிய திமிங்கில வேட்டைக் கப்பல் அவனைக் கண்டெடுத்து மீட்கிறது. மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் அவனுக்கு மயக்கம் தெளிகிறது. ஆனாலும் சித்தம் தெளிய மேலும் சில நாட்கள் தேவைப்படுகின்றன. அந்த இடைப்பட்ட நாட்களில் தலையணை முதல் மெத்தை வரை எங்கு பார்த்தாலும் உணவுப் பொருட்களை ஒளித்து வைப்பதே அவன் வேலையாக இருக்கிறது. உணவைப் பாதுகாப்பது ஒரு நோயைப் போல அவனைத் தாக்கி விடுகிறது. இல்லாமையும் இல்லாமையால் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுமே அச்சத்தைத் துாண்டி அப்படி ஒரு நோய்நிலைக்கு மனிதர்களைத் தள்ளி விடுகிறது.

ஜாக் லண்டன் வடித்த பாத்திரத்துக்கும் எங்கள் அண்ணிக்கும் இடையே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நடுவே உள்ள துாரம் மட்டுமே பெரிய வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் உணர்வு நிலைககளில் இருவரும் ஒருவரே.

*

அமெரிக்க எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜாக் லண்டன். கலிபோர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்லான்டில் பிறந்தவர். காட்டின் அழைப்பு என்னும் இவருடைய நாவல் மிக விரிவான அளவில் வாசக வரவேற்பைப் பெற்றது. அவரது பெரும்பாலான சிறுகதைகளில் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டம் உயிர்த்துடிப்புடன் விவரிக்கப்பட்டிருப்பதே மிகச் சிறப்பான விஷயமாகும். 40 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்த இவரது படைப்புகள் அமரத்துவம் வாய்ந்தவை. ‘மணியோசை ‘ என்னும் தலைப்பில் வெவ்வேறு நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிட்டார் புதுமைப்பித்தன். அத்தொகுதியில் புதுமைப்பித்தனுக்கு மிகவும் பிடித்தமான இக்கதையும் இடம்பெற்றிருந்தது.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்