சுருக்கமாகச் சில வார்த்தைகள் (புகைச் சுவருக்கு அப்பால் – கவிதைத் தொகுதியின் முன்னுரை)

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

எம். யுவன்


புலன் அனுபவங்கள் யாவுமே மொழியில் பெயர்க்கப்பட்ட இரண்டாம் கட்ட நிலைகள்தாம். அப்படியானால் மொழிக்கு முந்தின அனுபவங்கள் உண்டா ? உண்டு என்றால், அவை என்ன என்பது போன்ற கேள்விகள் கவிதை பற்றிய பேச்சை மெய்யியல் புலத்துக்குள் நகர்த்திச் செல்லும். அது கவிதை பற்றிய பேச்சாக மட்டும் இருக்காது. ஒட்டுமொத்த அனுபவம் பற்றிப் பேசுவதாக விரிவடையும்.

அப்போது கவிதை பற்றிய பேச்சு, கவிதையின் வடிவம் பற்றிய பேச்சாக, அதாவது கவிதையியல் என்ற ஒரு தளத்திற்குள் சுருங்கி விடாமல், கவிதை உருவாவதற்கு முந்தின நிலைகள் பற்றிய விசார ணையாக விரியும். இவ்வாறானதொரு விவாதம் தன்னளவிலேயே கடினமான ஒரு காரியம்தான். ஏனெனில் பேச்சின் அடிப்படையான கருதுகோள்கள், கவிதையியலுக்கு வெளியில், பிற அறிவுத்துறை களில் நிலவும் கருத்தாக்கங்களையும் தம் விவாதப் புலத்துக்குள் இழுக்கும்

கவிதை பற்றிய விமரிசனங்களும் விவாதங்களும் போதுமான அளவு நிகழாத கால நிலையில், கவிதை நுகர்வு தீவிரம் குறைந்து மழுங்கியிருப்பதாகத் தென்படும் இலக்கியச் சூழலில், கவிதையின் ஏதேனும் ஒரு முனை பற்றிப் பேசுவதும், விவாதத்துக்கு உந்துவதும் அவசியமானதுதான்.

தேவதச்சனுடன் உரையாடுவது எனக்கு எப்போதுமே உவப்பான விஜயம். எழுதுதல் என்ற விஞ்ஞான பூர்வமான தர்க்கச் செயல் பாட்டை, சுதந்திரமான தன் உரையாடலின் வழியே, மெய்யியல் தளங்களுக்கு நகர்த்திவிடக் கூடியவர் அவர். ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்: எழுதப்படும் எல்லாக் கவிதைகளும் தாய்க் கவிதையை நோக்கி நகர்கின்றன. எனக்கு இந்தக் கூற்று உடன்பாடானதாய் இருந்தது.

இந்தப் பின்னணியில், கவிதை பற்றிய கருத்தாக்கங்கள் எல்லாமே தாய்க் கவிதையைப் பற்றியதாகவே இருக்க முடியும். எழுதப்பட்ட கவிதைகள் – அவை எத்தனை மகோன்னதமானவையாக இருந்த போதிலும் – சிசுக் கவிதைகளே. தாய்க் கவிதை பற்றிய சொல் லாடல்கள், ஒரு ஆதரிச நிலை பற்றிய விழைவுகள் மாத்திரமே. அந்த நிலையை ஏதேனும் ஒரு கவிதை அல்லது கவிஞன் எட்டிவிடும் சந்தர்ப்பத்தில், தாய்க் கவிதை இன்னும் வெகுதூரம் விலகிச் சென்றிருக்கும்.

எழுதப்படாத தாய்க்கவிதை, எண்ணற்ற கவிதைகளைப் பிறப்பித்துக் கொண்டேயிருப்பது எவ்வளவு சுவாரசியமான உள்முரண்!

சில எளிமையான கேள்விகளை முன்வைத்துப் பேசுவது வசதியாக இருக்கும். முதலாவது கேள்வி, ஒரு குறிப்பிட்ட சொற்கூட்டத்தைக் கவிதை என்று எழுதுபவன் மனம் எவ்வாறு நிச்சயிக்கிறது ?

வாசக மனத்தைப் பொறுத்தவரை, கவிதை என்ற பொருள் வரை யறுக்கப்பட்ட ஒரு சட்டகத்துக்குள் பொருத்தி வழங்கப்படுகிறது. தன்னிடமுள்ள கேள்விகளுடன் பொருத்திப் பார்த்து, மதிப்பிட்டு ‘இது கவிதை’, அல்லது ‘இது அல்ல கவிதை’ என்ற முடிவுக்கு வாசகமனம் வந்து சேர்கிறது. வாசகமனம் தன்னுடைய கேள்வி களை எங்கிருந்து சுவீகரிக்கிறது ?

தன்னுடைய சுய அனுபவம், கவிதை சம்பந்தமாகத் தன் மொழி யில் புழங்கும் வரலாற்று வடிவம், கவிதை சார்ந்த தன்னுடைய விழைவுகள்/கோரிக்கைகள், கவிதை என்ற வடிவத்துக்கு வெளியில் தனக்குள் சேகரமாகியிருக்கும் அறிவார்த்தத் தகவல்கள் வழியாகக் கவிதையுடன் தொடர்பு கொள்கிறது வாசக மனம். கவிதையின் உட்தளம் முன்னிறுத்தும் அர்த்தத்துக்கு ஈடான விசாரணை ஓட்டம் வாசக மனதிலும் செயல்படும் பட்சத்தில் கவிதையுடன் உடன்பட்ட ரசனையுணர்வோ, கவிதைக்கு எதிரான விமர்சன அபிப்பிராயமோ ஸ்தாபிதமாகிறது.

கவிதை எழுதுபவனின் அனுபவமும் முயற்சியும் இதே மாதிரி யானதுதானா, அல்லது மாறுபட்ட ஒன்றா ?

மொழி உருளாத கணங்களில் மனத்திற்குத் தான் இருப்பது தெரியுமா என்ன! புலன் அனுபவம் என்று சொல்லப்படும் யாவுமே மொழிவழி அறிதல்கள்தாம். புலன்களின் வழி ஊடுருவி, மனத் தளத்தில் அர்த்தம் மேற்கொள்கின்றன இந்த அறிதல்கள். இது ஒரு இடையறாத செயல்பாடு. இந்தச் செயல்பாட்டின் ஓட்டகதியை ஸ்தம்பிக்கச் செய்து, திகைப்புக்குள்ளாக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன.

உதாரணமாக, ஒரு ஓசை அல்லது வாசனை ஒரு காட்சி யனுபவமாக விரிவடையுமானால், அதை ஒரு அ-தர்க்க அல்லது பிறழ்வு நிலை அனுபவம் என்று சொல்லலாம். இது அனுபவம் கொள்பவனின் பிரத்தியேக அனுபவம். பகிர்ந்து கொள்ளச் சான்று கள் அற்றது.

கருவாட்டு மணம் என்னுடைய அம்மாவைத் தத்ரூபமாக நினைவுபடுத்தும் எனக்கு. தான் பிறந்து வளர்ந்த சைவச் சூழ்நிலை காரணமாக, கருவாட்டு மணம் எழும்பும்போது வாந்தி எடுத்து விடுவாள் அவள்.

அம்மா இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரையிலும் கருவாட்டு வாசனையில் என் அம்மாவின் ஒரு துளி ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது ஒரு தனிநபரின் சொந்த அனுபவம். இது போன்ற சொந்த அனுபவங்கள் ஒரு இனத்தின், மொழிப்பரப்பின், காலகட்டத்தின், தொகுப்பில் இருக்கக்கூடும். இந்த ஞாபகத் தொகுப்பை நினைவூட்டுவதாகவோ, ஞாபகத் தொடரை அறுப்ப தாகவோ ஒரு கவிதை வரி உருவாகிவிட முடியும்.

இதற்குப் பிரதியான மற்றொரு தருணத்தில் தொலைதூரக் காட்சி/புகைப்படக் காட்சி ஒன்று, மயிர்க்கூச்செரிதலையோ, தீர்க்கமான நறுமணத்தையோ புலன் அனுபவமாகத் தந்துவிட முடியும்.

இவ்வாறானதொரு அனுபவத்தை, மொழிவழிப்பட்ட மனதின் தொடர் தர்க்க நிலையில் ஏற்படும் ஒரு விரிசல் அல்லது இடை வெளி என்று சொல்லலாம். இந்த இடைவெளி ஒரு சொல்லாக இருக்கலாம். ஒரு சொற்றொடராகவோ, முழுமையான காட்சியாக வோகூட இருக்கலாம். அதைத் தரிக்கும் தருணத்தில், எழுதுபவன் மனம் விநோதமான கிளர்ச்சியை அடைகிறது.

கிளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முயங்கவும், மூழ்கவும், விசாரிக்கவும், விவரிக்கவும் ஆன பன்முனைச் செயல்பாட்டில் ஈடு படுகிறது. குறிப்பாகச் சொன்னால், மொழியின் தர்க்கப் புலத்துக்கு வெளியே நிகழ்ந்த மாற்று அனுபவத்தை (Alternative experience) வழமையான, பொது ஒப்பந்தம் சார்ந்த, மொழிப் பரப்புக்குள் பதியமிட முயல்கிறது.

நிச்சலனமான நீர்ப்பரப்பில் கல் விழுந்து உருவாகும் நீர்வளை யங்கள் போல், மொழியின் தர்க்கப் பரப்பில் ஒரு சொல் விழுந்து உள் மடிப்புகள் உண்டாகின்றன. அதிகபட்ச உள்மடிப்புகளைக் கவிதை ஏற்படுத்துகிறது – எழுதும் மனத்திலும், வாசிக்கும் மனத்திலும்.

இந்த இடத்தில் கவிஞன் சொல்ல ஆரம்பிக்கிறான். தான் உணர்ந்த இடைவெளியை, அனுபவத்தின் உள்மடிப்பை. பெரும் பாலான கவிஞர்கள் ஏற்கெனவே புழங்கிவரும், அங்கீகரிக்கப்பட்ட வெளிப்பாட்டு முறையைத் தேர்கிறார்கள், அந்த வெளிப்பாட்டு முறையில் உள்ள உத்தரவாதம் கருதி. சாகச வேட்கை கொண்ட கவிஞன், தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட நூதனமான சொல்லல் முறையைக் கையிலெடுக்கிறான்.

மேற்சொன்ன இடைவெளி தன்னிச்சையாக உருவாகிறதா, அல்லது கவிதானுபவம்தான் இந்த இடைவெளியை உருவாக்கு கிறதா ? இக்கேள்விகளுக்கு மெய்யியல் மற்றும் உளவியல் பதில் சொல்ல முற்படுகின்றன. மெய்யியலின் பதில், உணரப்பட்ட அனுப வத்தின் உண்மைத்தன்மையை ஆய்கிறது. உளவியல், உணர்வு கொண்ட நுகர்முனையின் பண்புகளைப் பட்டியலிடுகிறது.

உறக்க நிலையில் ஊடுருவிப் பரவுகிற கனவு நிலை பற்றி நிலவும் பல்வேறுபட்ட கருதுகோள்கள் அனைத்துமே கவிதை உருவாக்கம் சார்ந்தும் செல்லுபடியாகக் கூடியவைதாம். விழிப்பு நிலையின் நீட்சி யாகக் கனவுநிலை உருவாகிறதா, விழிப்பு நிலைக்கு அப்பாற் பட்டதா என்பதை தீர்மானிப்பது அவ்வளவு சுலபமா!

மனதில் ஒரு சுவாதீனமான மொழிப்பரப்பு நிலைகொண்டிருக் கிறது. (இதன் மறுபார்வையாக, நிலை கொண்ட ஒரு சுவாதீனமான மொழிப்பரப்பையே நாம் மனம் என்ற சொல்லால் குறிப்பிடு கிறோம்.) வேரூன்றிய இப்பரப்பைக் கவிதானுபவம் ஊடறுக்கிறது என்று மாத்திரமே சொல்ல முடியும். ஷென் கவிதைகளை இதற் கான சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம்.

உண்மையில், ஒரு அர்த்தப் பரப்பாகப் பொருள் கொள்ளப் படுவதற்கு முன்பே நிகழ்ந்து முடிந்து விடுகிறது கவிதை. இதன் காரணமாகவே, இருண்மை (obscurity) கொண்ட ஒரு கவிதை, மறுவாசிப்புக்கு வாசக மனத்தை ஈர்க்கும் வசீகரம் கொண்டிருக் கிறது. ‘இந்தச் சொற்கூட்டமைப்பு எனக்குத் தெளிவாகவில்லை. ஆனாலும் மறுபடி மறுபடி வாசித்து இதன் புதிர்மையத்தை உடைத் துப் பார்க்க முயல்வேன்’ என்ற சபதத்தை வாசகமனம் மேற் கொள்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் பொருத்தமானதாக இருக்கும்.

தமிழில் எழுதப்படும் நவீன கவிதைகளில் பெரும்பாலானவற்றில் இருபது அல்லது நாற்பது வரிகளே இருக்கின்றன. மொத்தமாக நூறு அல்லது நூற்றைம்பது சொற்கள். எந்தச் சொல்லுமே தெரி யாத தல்ல. ஆனால், கவிதை மட்டும் புரியாததாக ஆகிவிடுகிறது. ஏன் ?

கவிதையில் உபயோகப்படும் சொல் அகராதி தரும் நேரடியான விளக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு அர்த்தகனம் கொண்டிருக்கிறது என்பது ஒரு உடனடிக் காரணம். மிகவும் எளிதான காரணமும் கூட. வேறு ஒரு விதமாகவும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

மனித மனத்தின் விளிம்புகளுக்கு அப்பாற்பட்டு மொழிக்கு சுயேச்சையான ஒரு வளர்ச்சிப் போக்கு இருப்பதற்கான சாத்திய மில்லை. புலனாகும் ஒவ்வொரு பொருளையும், அரூபமான ஒவ் வொரு உறவுநிலையையும் ஒரு சொல்லால்/சொற்றொடரால் குறிப் பதன் மூலமே இன்று வரையிலான மொழி உருவாக்கம் நிகழ்ந்து வந்திருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாகவே நவீன மனத்தின் பிறழ்வுநிலை களைக் குறிப்புணர்த்தும் பணியைக் கொள்ளவேண்டும். கவிதை என்னும் சூட்சும வடிவம் இந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகிறது.

ஆக, தெரிந்த சொற்களின் வழி பிரயோகமாகும் தெரியாத நிலைகளைக் கிரகித்துக் கொள்வதில் சாதாரண மனம் (common mind) கொள்ளும் பிரமிப்பையே கவிதையின் புரியாத்தன்மை என்று கொள்ளவேண்டும்.

சிடுக்கான ஒரு கவிதையைப் புரிந்து கொள்வதற்காக, ஏற்கெனவே தனக்கு வழங்கப்பட்டு, தன்னுள் நிலைப்பட்டிருக்கும் மொழிசார்ந்த அர்த்தப் பரப்பைக் கீறிப்பார்க்கும் தீரமிக்க சவாலை வாசகமனம் மேற்கொண்டாக வேண்டும்.

கவிதை பற்றிய பேச்சில் இறுக்கம் கூடும்போது, கவிதை ஆக்கம் மர்மம் சூழ்ந்ததாக ஆகும் தோற்றம் உண்டாவதையும் பார்க்க முடிகிறது. மோட்டார் ஓட்டுவதற்கும், உந்துவிசை பற்றிய சூத்திரங் களைப் பயல்வதற்கும் ஆன வித்தியாசம் போன்றது இது.

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, மேலோட்டமான உணர்ச்சிச் சுழிகளை, மிகையுணர்ச்சிகளைப் பாடும் கவிதைகள் பரவலான வரவேற்பையும் அங்கீகாரத்தையும் சுலபமாகப் பெறுகின்றன. ஆழ் தள உணர்ச்சிகளை, அறிவார்த்தக் குழப்பநிலைகளை (intellectual perplexities) முன்னிறுத்தும் கவிதைகள் கூர்ந்த கவனம் பெறுவ தில்லை. (தமிழில் மொழிபெயர்க்கப்படும் கவிதைகள் சம்பந்தமாக இந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தே இருக்கிறது. பிறமொழிக் கவிதைகளுக்கு, அவை எழுதப்பட்ட பிரதேசம் சார்ந்து இயல் பாகவே வாசகமனம் வழங்கும் சலுகைகள் காரணமாக இருக் கலாம்.)

கவிதையின் குழூஉக் குறிகள் அழகியல் சார்ந்தவை. அவ்வளவே. மற்றபடி, பருப்பொருள் உலகத்தை, அதன் அர்த்தப் பரப்பு சார்ந்த அகநிலைகளை, கணிதம், அறிவியல், உளவியல் போன்ற அறிவுத் துறைகள் பரிசீலிக்கும் விதமாகவே கவிதையும் விவாதிக்க முடியும். பாடல் (lyric) என்ற வடிவத்துக்கும் கவிதை என்ற வடிவத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே, இந்த அறி வார்த்தப் பரவச நிலை(intellectual ecstsy)தான்.

மாறாக, அதீத உணர்ச்சிப் பெருக்கைப் பாடாத கவிதைகளை வெற்றுப் பாவனைகள் என்று கற்பிதம் செய்துகொள்ளும் போக்கு இருக்கிறது. இதை, அறிவுசார்ந்த நுண்உணர்வுகள் பற்றிய அக்கறை யின்மையின் விளைவு என்றுதான் சொல்லவேண்டும். கவிதையை அகவயமாக நிர்ணயிக்க, தன் சுய அனுபவம் சார்ந்த கேள்விகளும், சந்தேகங்களும் இருந்தால் போதுமானது.

இறுக்கமான புனைகதை, கட்டுரைகள் இவற்றின் மேல் தீராத மோகம் ஏற்பட்டிருக்கும்/ஏற்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் கவிதை மட்டும் ஏன் மயிலிறகு போன்ற சன்ன உணர்வுகளின் கள மாக இருக்க வேண்டும் ?

இதுவரையில் நான் படித்து என்னைக் கவர்ந்த கவிதைகள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை இருப்பதாக உணர்கிறேன். அவை அத்தனையுமே தனியர்களின் கவிதைகள். அவற்றில் தொனிக்கும் தனிமை, கூட்டத்துடன் பொருந்த முடியாதவனின் தனிமை அல்ல. நகுலனின்,

யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

எல்லாம்

என்ற கவிதையின் சாரமான தனிமை.

தன்னைத் தவிர யாருமற்ற, தானுமே அற்ற, ஆள்இலி நிலையின் குரல். உயிர்த்திருத்தல் என்பதையே தனிமை நிலையாக அடை யாளம் காணும் மனத்தின் குரல். வாசகனுக்குள்ளிருக்கும் ஆள்இலி நிலையுடன் உரையாடும் குரல்.

‘எல்லாம்’ நடந்துகொண்டிருக்கிற ‘யாருமற்ற பிரதேசமே’ கவிதையின் பிரதேசம் என்று சொல்லத் தோன்றுகிறது.

உண்மையில், பொருத்தமான எதிர்வினைகளும், கூர்மையான விமர்சனங்களும் என எந்த ஒரு எதிரொலியுமே கேட்காத தமிழ்க் கவிதைச் சூழலில், தொடர்ந்து கவிதையில் இயங்குவதற்கு ஒருவன் மகா தீரனாய் இருக்கவேண்டும்.

பெளதிக நிலையிலும் கூட நான் தொடர்ந்து உணரும் தனிமை யின் பதிவுகளாகச் சொல்லலாம் என்னுடைய கவிதைகளை.

சென்னை – 64 எம். யுவன்

22.11.2002

(புகைச் சுவருக்கு அப்பால் –

கவிதைத் தொகுதியின் முன்னுரை)

ஆசிரியர் : எம். யுவன்

பக்கம் : 96, விலை ரூ.45

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

இந்தியா

தொலைபேசி : 91-4652-222525

தொலைநகல் : 91-4652-223159

மின்னஞ்சல் :kalachuvadu@sancharnet.in

Series Navigation

எம்.யுவன்

எம்.யுவன்