சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

பாவண்ணன்


(ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி,அகம் வெளியீடு, 50 முதல் தளம், அஜிஸ் முல்க் மூன்றாவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6. விலை. ரூ30 )

‘வரைபடம் மீறி ‘, ‘வயலட்நிற பூமி ‘ ஆகிய இரண்டு கவிதைத்தொகுதிகள் மூலம் வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்ற அப்பாஸின் மூன்றாவது கவிதைத்தொகுதி ஆறாவது பகல் என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. ஒரு நெடுங்கவிதை உட்பட மொத்தத்தில் 48 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முந்தைய இரண்டு தொகுதிகளின் தொடர்ச்சியான உலகத்திலேயே அப்பாஸின் கவிதைகள் இயங்கினாலும் இத்தொகுதியின் கவிதைகளில் ஒருவித கச்சிதம் கைகூடி அழகைக்கொடுக்கிறது. நிற்க வேண்டிய இடங்களில் சொற்கள் தாமாக நின்று விடுகின்றன. பறக்க வேண்டிய இடங்களில் சுதந்தரமாகப் பறக்கின்றன.

பயமற்ற சுதந்தரத்துக்கான தாகமே அப்பாஸின் கவிதை உலகம் என்று சொல்லத் தோன்றுகிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை ‘ என்னும் கவிதையை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஒரு குழந்தையும் வண்ணத்துப்பூச்சியும் பயமற்று விளையாடிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு சித்திரமே இக்கவிதையில் இடம்பெறுகிறது. வாசித்து முடித்தபிறகு, அகவயமாகப் பலவிதமான அனுபவங்களை அலையலையாக எழுப்பியபடி உள்ளது கவிதை.

பயமற்ற சூழலைப்பற்றிய சித்திரத்தைப் பார்த்ததும் சதாகாலமும் பயங்களை நெஞ்சில் சுமந்தபடி திரியும் ஒரு வாழ்க்கைதான் உடனடியாக நினைவில் மிதந்து உறுத்தலைக் கொடுக்கிறது. நமக்கு நம் வாழ்வில் அனைவரைக் கண்டும் பயமாக இருக்கிறது. பெற்றோர், உற்றார், உறவினர்களைப் பார்த்ததும் பயமே உருவாகிறது. மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் அனைவரும் பயம் தருகிறவர்களாகவே இருக்கிறார்கள். அலுவலகத்திலும் பயம். கடற்கரையிலும் பயம். பேருந்துப்பயணங்களிலும் ரயில் பயணங்களிலும் இப்பயம் தொடர்ந்தபடி உள்ளது. நாம் கொல்லப்பட்டுவிடுவோமோ அல்லது ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் கிணற்றின் ஆழத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரைப்போல மனத்தடியில் தேங்கிக்கிடக்கிறது. ஒரே ஒரு தம்ளர் தண்ணீரைக்கூட வெளியில் அச்சமின்றி கைநீட்டி வாங்கிப் பருகமுடியாத துர்பாக்கிய சூழல். குலுக்க நீளும் கைகளிடையே விஷ ஊசிகள் இருக்கலாமோ என்று நடுங்கிக்கொண்டே கைகளை நீட்ட வேண்டியிருக்கிறது. இந்தப்பயம் மனிதர்கள் மனத்தில் மட்டுமல்ல, இரு குடும்பங்களுக்கிடையே, இரு ஊர்களுக்கிடையே, இரு நாடுகளுக்கிடையே, இரு இனங்களுக்கிடையே, இரு கண்டங்களுக்கிடையே என எல்லா மூலை முடுக்குகளுக்கிடையேயும் விரிந்து பரவிக்கொண்டே இருக்கிறது பயம். உலகையே குலுக்கிக்கொண்டிருக்கிற பயம் ஒரு குழந்தை-வண்ணத்துப்பூச்சிக்கிடையே இல்லை என்று சொல்லப்படும்போதுதான் பயமற்ற சூழலின் மகத்துவம் புரிகிறது. புத்தம்புதுசாக உருவானதா இத்தகு சூழல் ? இல்லை. ஒரு காலத்தில் பிரபஞ்சம் முழுக்க இந்நிலை இருந்திருக்கக்கூடும். இதை அணுஅணுவாகக் குலைத்தபடி வெகுதொலைவு வந்ததின் விளைவுதான் நாம் நிற்கிற இடம். பயமற்று அணுகவும் ஆடவும் துாண்டும் குழந்தைமையை நாம் எப்படி இழந்தோம் ? என்ன காரணத்தால் இழந்தோம் ? சுயநலமா ? அறிவா ? அகங்காரமா ? உயர்வு மனப்பான்மையா ? அப்பாஸின் கவிதை தொடர்ந்து பலவிதமான கேள்விகளை நமக்குள் எழுப்பிக்கொண்டே உள்ளது.

சுதந்தரத்தின் நாட்டத்தை உணர்த்தும் மற்ற கவிதைகளாக ‘நம்மை ‘, ‘கோடுகள் ‘, ‘நண்பகல் ‘ ஆகியவற்றைச் சொல்லலாம். குழந்தைமையைச் சுதந்தரத்தின் குணமாகவும் வெளியாகவும் காணும் தன்மையை இக்கவிதைகளில் உணர முடிகிறது. வெவ்வேறு விதமாகக் கவிதைக்களம் அமைந்திருந்தாலும் நாம் வந்தடையும் புள்ளி குழந்தைமையின் இழப்பு அல்லது குழந்தைமையின் மகத்துவமாகவே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் பக்கத்துவீட்டுக் குழந்தை வாயில் உமிழ்நீர் ஒழுக பொக்கைப்பற்களைக் காட்டிச் சிரித்தபடி ஸ்ஸ் என்று ஓசையெழுப்பியபடி தடதடவென்று உள்ளே நுழைந்து எதிரில் கண்ணுக்குத் தெரிந்த பந்தை ஒருகையாலும் செருப்பை மறுகையாலும் துாக்கியது. பிறகு அற்றைப்போட்டுவிட்டு புத்தகத்தைத் தொட்டது. பிறகு அதையும் எறிந்துவிட்டு கண்ணாடி, சீப்பு, தொலைபேசி, காய்கறிகள் எல்லாவற்றையும் ஒருமுறை தொட்டுத் தடவிப்பார்த்து நக்கிப்பார்த்து எறிந்தது. என்ன குட்டி என்ன குட்டி என்று கேட்பதற்குள் பழையபடியே ஸ்ஸ் என்று ஓசையெழுப்பியபடியே வெளியே போய்விட்டது. அக்குழந்தைக்கும் அப்பாஸ் பகிர்ந்துகொள்ள விழையும் காற்றின் சுதந்தரத்துக்கும் அதிக வேறுபாடு இல்லை. குழந்தைமையே சுதந்தரம். குழந்தைமைக்கு மட்டுமே இந்த சுதந்தரம் சாத்தியம். குழந்தைமையே ஆனந்தம். இந்த உலகம் குழந்தைமைக்கே உரியது. இக்குழந்தைமைக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. மாறாக, குழந்தைமையின் பாதங்கள் படாதா என்றே எல்லாருடைய மனங்களும் மலர்ந்திருக்கின்றன.

‘ஆறாவது பகல் ‘ நெடுங்கவிதையும் சுதந்தர நாட்டத்தை அனுபவமாக்கும் ஒரு முயற்சியாகவே எண்ணத்தோன்றுகிறது. மது பருகும் ஒரு தருணத்தை முன்வைத்து நீளும் இக்கவிதையில் சொற்கள் சுதந்தரமாக வந்து விழுகின்றன. பழகிய சொற்கலவையைக் கலைத்துப் போடுவதன் மூலம் ஒரு சுதந்தரமான சொற்பின்னலை உருவாக்கும் விழைவு அடிமனத்தில் உறங்குகிறது. ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்து வீசுவதைப்போல பழகிய சொற்கள், பழகிய உறவுநிலை, பழகிய உலகம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் களைந்தெறிகிறது மனம். களைதலைச் சுதந்தரமாகவும் குற்ற உணர்வின்றிச் செய்வதற்கும் உதவுகிறது மதுவின் கிறக்கம். எப்படியும் விளிக்கலாம், எதையும் சொல்லலாம், எதையும் கேட்கலாம் என தயக்கமின்மையின் எல்லைக்கு மனத்தை அழைத்துச்சென்று தயார்ப்படுத்துகிறது அந்தக்கிறக்கம். கிறக்கத்தின் ஒலிச்சித்திரமே கவிதையாக நீள்கிறது. வெட்டி நறுக்கி முன்னும் பின்னுமாகக் கோர்த்து ஒழுங்கு செய்யப்படாத ஒரு குறும்படத்தைப்போல காட்சி தருகிறது இந்த ஒலிச்சித்திரம். கவிதையில் நமக்கு அனுபவமாக விரிவடைவது வார்த்தைகள் சுட்டும் பொருளல்ல, அவை வெளிப்படுத்த விழையும் உணர்வின் உலகம். உணர்வை உள்வாங்காமல் வெற்று வார்த்தைகளைப்

பின்பற்றிச் செல்பவர்கள் விரைவாகவே இக்கவிதையில் அலுப்படைய நேரலாம்.

தொகுப்பின் மற்றொரு நல்ல கவிதை ‘குறிப்பு ‘. இக்கவிதையில் இடம்பெறுவது ஒரு குடும்பத்தின் சித்திரமாகும். அமைதியான இரவு. பறவைகள் உறங்கும் நேரம். அவனும் உறங்குகிறான். ஆனால் அவள் உறங்கவில்லை. அவள் மனப்பறவை ஏதோ ஒரு கேள்விக்கு விடைதேடியபடி அலைபாய்ந்தபடி உள்ளது. ஆனால் அவ்விடை அவளது உலகத்தில் இல்லை. மாறாக அவனுடைய உலகத்தில் உள்ளது. தன் அலகால் கொத்தி எடுக்க முடியாத அந்த இடத்தை நோக்கிப் பறவை பறந்து பறந்து ஏமாற்றத்துடன் திரும்பியபடி உள்ளது. வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே சதாகாலமும் முயற்சி செய்கிறோம். குடும்ப உறவில் இப்புரிதல் முயற்சி கூடுதலாகவே இருக்கிறது. துல்லியமாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒருவரிடமொருவர் தம் மனத்தைத் திறந்து காட்டினாலும் திறக்கவியலாத ஓரிடம் எப்படியோ உருவாகிவிடுகிறது. கொத்தப்படாத பூ அவனுக்குள் மட்டுமல்ல, அவளுக்குள்ளும் பூத்திருக்கிறது. யாருமறியாத அப்பூவின் மணத்தில் வாழ்க்கைப்புதிரின் கலந்து பரவியபடி உள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்