ரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

பயணி


பகுதி 1 : ரோஸியின் திரைப்படங்கள் – ஒரு அறிமுகம்

பகுதி 2 : ரோஸியின் ‘மெத்தே விவகாரம் ‘ – திரைப்பட விமர்சனம்

பகுதி 3 : ரோஸியின் எழுத்து – நினைவுக்கும் அடையாளங்களுக்குமான திரைப்படத்திற்காக

பகுதி 1 : ஃபிரான்ஸிஸ்கோ ரோஸி – ஒரு அறிமுகம்

‘பார்வையாளன் வெறும் செயலற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவே இருந்துவிடக் கூடாது ‘

‘எனது திரைப்படங்கள் மக்களை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இன்னும் அதிகப் பொறுப்புணர்வை ஏற்கச் செய்ய வைக்க வேண்டும் என நான் விரும்பினேன் ‘ என்னும் இத்தாலிய இயக்குனர் ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி, திரைப்படக்கலை பற்றிய விலகா அணுகுமுறை கொண்ட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார்.

ரோஸியின் படங்களை ஒரு பார்வையாளன் அணுகும் முறையை விட, அவரது படங்கள் ஒரு பார்வையாளனை அணுகும் முறை சுவாரஸ்யமானது. இவரது படங்கள் முகத்தில் அறையும் நேரடித்தன்மை கொண்டவையாகப் படைக்கப் பட்டுள்ளன. ‘பார்வையாளன் வெறும் செயலற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவே இருந்துவிடக் கூடாது ‘ என்கிறார் ரோஸி.

இது வெறும் கதை சொல்லும் முறை மட்டுமல்ல. ரோஸியின் திரைப்படங்களின் களனான அரசியல், ஊழல், கொலை, ஏமாற்று, அதிகாரம் என்னும் பிரச்சனை நிறைந்த உலகத்திலேயே ஜோடனைகளுக்கு இடமில்லை. எனவே, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்ற திரைப்படக்கூறுகள் எல்லாமே ஜோடனைகளைத் தவிர்த்து நேரடியான அணுகுமுறையைக் கையாள்கின்றன.

செய்தித்தாள் துண்டுகளைக் கொண்டே ஒரு செய்தித்தாள் போன்ற ‘கொலாஜ் ‘ படத்தினைச் செய்வது போலவுள்ளன ரோஸியின் படங்கள். பெரும்பாலும் இத்தாலியின் அரசியல், அதிகார நிகழ்வுகள், நிஜ சம்பவங்கள், லஞ்ச வழக்குகள், மர்ம மரணங்கள் போன்றவையே அழகு குறையாமலும் நேரடித்தன்மையுடனும் சார்புகள் ஏதுமின்றியும் நுணுக்கமும் பிரம்மாண்டமும் கொண்ட அரசியல் நாடகத் திரைப்படங்களாக ரோஸியின் கலைவண்ணத்தால் உருவாகின்றன.

கதை சொல்லுதல் என்னும் காரியமும் திரைப்பட மொழி என்னும் ஊடகமும் ஒன்றானவை அல்ல என்னும் தெளிவின் விளைவுகள் இவரது படங்களில் கிளைத்துக் கிடக்கின்றன. தனது ஒவ்வொரு படத்திற்கும் திரைக்கதை அமைப்புக் கட்டத்திலேயே பங்கேற்பதால் படத்தின் முழுமை கெடாதபடி சுவாரஸ்யமும் கலை நயமும் செறிந்த படங்களை மறுபடி மறுபடி சாத்தியமாக்குகிறார் ரோஸி.

நேப்பில்ஸ் நகரில் 1922-ஆம் ஆண்டு பிறந்தார் ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி. திரைப்படங்கள் பார்ப்பதிலும், தரமான திரைப்பட விமர்சன இதழ்களைப் படிப்பதிலும் ஆர்வம் வளர்ந்ததற்குக் காரணமான இவரது தந்தை இவரைச் சட்டம் படிக்க வற்புறுத்திய போதும் ஓய்வு நேரங்களில் நாடகத்துறையில் ஆர்வம் காட்டினார் ரோஸி. 1943-இல் மிலிட்டரியில் கட்டயச் சேவைக்கு அழைக்கப்பட்டு மறு ஆண்டு ஜெர்மனியர்களிடம் கைதியாகச் சிக்கி, தப்பி ஓடினார்.

1947-இல் பிரபல இத்தாலிய இயக்குனர் லுசினோ விஸ்கோண்டியிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து, பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் மைக்கலான்ஜிலோ அந்தோனியோனி மற்றும் மரியோ மோனிஸெல்லோ போன்றார்களின் படைப்புகளும் தொடர்பும் ரோஸியை ஈர்த்தன.

1958-இல் ‘சவால் ‘ (The Challenge) என்ற இவரது முதல் திரைப்படம் வெனிஸ் திரப்படவிழாவில் முத்திரை பதித்தது. அன்றிலிருந்து இவரது சமீபத்திய படமான ‘அமைதி உடன்படிக்கை ‘ (The Truce, 1997) வரை ஏறத்தாழ இருபது படங்களை உருவாக்கியுள்ளார் ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி.

*********

பகுதி 2 : ரோஸியின் ‘மெத்தே விவகாரம் ‘ – திரைப்பட விமர்சனம்

கூர்ந்த பார்வை; உற்சாக தைரியம்

1972-இல் கான் திரைப்பட விழாவில் ‘மெத்தே விவகாரம் ‘ (The Mattei Affairs – Il Caso Mattei) திரையிடப் பட்டபோது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நிஜ வாழ்வின் அடிப்படையில் நிஜ சம்பவங்களைக் கோர்த்து, அரசியல், அதிகாரம், சிக்கல்கள், புதிர்கள் கலந்த உலகில் ரத்தமும் சதையும் சேர்ந்த பாத்திரங்களை உயிருடனோ பிணமாகவோ படைத்து, டாக்குமெண்டரி படம் போன்ற தோரணையில் கலைக்கூறுகள் சிறக்க ஒரு அரசியல் நாடகத் திரைப்படமாக்கும் ரோஸியின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ‘மெத்தேயின் விவகாரம் ‘

மழைபெயும் இரவில் காட்டில் விபத்துக்குள்ளான விமானத் துண்டுகளை ஆம்புலன்ஸ் மற்றும் காவல் வாகனங்களில் சுழலும் விளக்கொளியில் காட்டியபடித் துவங்குகிறது படம். எடுத்த எடுப்பிலிருந்தே கேமரா பற்றிய மரியாதைகளைத் தள்ளிவிட்டுப் பார்வையாளர்களின் முகத்தில் இடிக்கும்படிக் காட்சிகள் நெருக்குகின்றன. ஒரு பிணத்தில் துவங்கிப் பின்னோக்கிப் போய் தகவல்களைத் தந்து கதயாகக கோர்க்கப்பட்டு உச்சகட்டத்தில் பிணத்தில் முடியும் கதைவடிவம் கொண்ட ரோஸியின் சில படங்களில் இதுவும் ஒன்று.

1963 அம்டோபர் 27-ஆம் தேதி இரவு நடந்த அந்த விபத்தில் இறந்தவர்கள் மூன்று பேர்: ஒரு விமானி, ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் மற்றும் இத்தாலிய அரசாங்க எரிபொருள் நிறுவனத் தலைவர் என்ரிகோ மெத்தே.

பரபரப்புடன் இந்த விபத்துபற்றிய செய்தி பரவுகிறது. தொலைக்காட்சியின் துண்டுப்படங்கள், செய்தித் தாள்கள், செய்தி வாசிப்புகள், பத்திரிகையாளர்களின் கேள்விகள், தகவலறிந்தவர்களின் பேட்டிகள், அக்காட்டின் அருகிலிருக்கும் கிராமவாசிகளின் கூற்றுகள், பாராளுமன்றத்தின் விசாரணைகள் என்ற விதவிதமான அணுகுமுறைகளின் மூலம் ரோஸி பார்வையாளர்களுக்கு மெத்தே பற்றிய சார்புகள் புலப்படாத தகவல்களைத் தருகிறார். இவற்றின் இடையிடையே மெத்தேயின் வாழ்விலிருந்து சில காட்சிகள் பிணைகின்றன. படத்தின் இடைப்பகுதியில் கதைவடிவில் நகரும் திரைப்படம், இறுதியில் மறுபடியும் டாக்குமெண்டரி படத்தன்மையின் வட்டத்தைத் தொடருகிறது. சிஸிலியைச் சேர்ந்த ஒரு செய்தியாளரின் மெத்தே மரணம் பற்றிய விசாரணைகளின் அடிப்படையில் நகர்ந்து சில குறிப்புகளைத் தந்து அவ்விமான விபத்தில் மீண்டும் முடிகிறது.

இத்தாலிய எரிபொருள் நிறுவனத்தின் தலைவராகி எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை நாட்டுடைமையாக்கிய மெத்தே, மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் கம்பெனியின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் இத்தாலிய தேசீயம் என மார்தட்டினார். மெத்தேவின் இப்போக்கினால் பன்னாட்டளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டன: மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய்வளம் பற்றிய அமெரிக்காவின் திட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டன; மேற்கு ஐரோப்பாவில் வளரத் துடித்த சோவியத் ரஷ்யாவுக்குத் தோழமை கிடைத்தது; இத்தாலியின் புதிய பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளம் கிடைத்தது; அல்ஜீரிய விடுதலை வீரர்களுக்கு ஆதரவு தந்ததால் பிரஞ்சு அரசு சுணங்கியது; மத்தியக்கிழக்கு நாடுகளுக்குப் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளின் கம்பெனிகளைவிட அதிகப் பணம் கொடுத்து எண்ணெய் வாங்குகிற ஒரு வியாபாரம் அமைந்தது…

நூற்றுக்கணக்கான நடிகர்களை வைத்துக் காட்சிகளை உருவாக்கி, காட்சி நயமோ கதையின் சுவாரஸ்யமோ கெடாமல், அதே நேரம் தெரிந்த உண்மைகளுக்கு மேல் ஏதும் வாயளக்காமல் நறுக்காகச் செல்லுகிறது இப்படைப்பு. சில குறிப்புகள் இருந்தாலும் மெத்தே இறந்தது விபத்தா, அல்லது எதிரி நாடுகளும் மாஃபியாக்களும் சேர்ந்து ஏற்பாடு செய்த கொலையா என்கிற விஷயத்தைக் கேள்வியாகவே விட்டுவிடுகிறது படம். இட்டுக்கட்டிய பதில்களைவிட நிர்தாட்சண்யமான கேள்விகளை நிலைக்க வைப்பதே கலைஞனின் வேலை எனும் தெளிவு திரிகிறது. ரொமான்ஸ் பண்ணாமல், கலையின் நேர்மை கெடாமல் அரசியல் உலகத்தைப் பார்க்கிற கூர்மையும் திரைப்பட மொழிக்கு உள்ள சுதந்திரங்களில் உற்சாகப் படுகிற தைரியமும் கைகூடினால் இது போன்ற திரைப்படங்கள் சாத்தியமாகும்.

இந்திய அரசியலின் பல முக்கிய கட்டங்களும் மனிதர்களும் அவர்களின் நாடகத்தன்மை மிகுந்த நல்லவைகளும் கெட்டவைகளும் திருப்பங்களும் சுழல்களும் இந்தியத் திரைப்படக் கலையில் பதிவு செய்யப்படவில்லை. பிரச்சனைகளைத் தொட்டதாக பாவலா காட்டும் படைப்புகளோ, அப்பிரச்சனைகளை, நாயகன் நாயகி கதைகளுக்குப் படுதாவாகவே பாவித்துக் கொள்கின்றன. நாயகத்தன்மை இருக்கையில் பிரச்சனைகளின் சிக்கல்களோ, அவற்றின் பிரும்மாண்டமோ, மறுக்கவியலா தொடர்ச்சியோ, சொல்ல இயலாததாகி, வெகுஜனங்கள் ஏற்கும்படியுள்ளத் தனிமனிதத் தீர்வுகளுக்கு இப்பிரச்சனைகள் காத்துக் கொண்டிருப்பதாக ஜோடித்து, நாயகர்களால் அவற்றைத் தீர்த்துவைத்து சுபம் போட்டுக்கொண்டிருக்கின்றன நமது பாவலா படங்கள்.

*********

பகுதி 3 : திரைப்படக் கலை பற்றி ரோஸி

இத்தாலிய திரைப்படத்தின் எதிர்காலம்: நினைவுக்கும் அடையாளங்களுக்குமான திரைப்படத்திற்காக – ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி

திரைப்படம் என்றால் வரலாறும் தொடர்ச்சியும். இளைய தலைமுறக்கு இத்தாலிய திரைப்படத்தைக் கிடைக்கச் செய்யும் எனது உந்துதல், கடந்த கால கலைக்கு, அது எவ்வளவுதான் சிறந்திருந்தாலும், வக்காலத்து வாங்க மட்டுமே முயல்வது அல்ல. பிம்பங்களினால் கிளர்ந்த உணர்வுகளின்மூலம், இளைஞர்கள் தெரிந்துக் கொள்ள வைக்க, அவர்களது தந்தையர்களுடைய பிம்பங்களை, தந்தையர்களின் தந்தையர்களுடைய பிம்பங்களை அவர்களுக்குக் காட்ட அது முயல்கிறது.

சமீபத்தில் இத்தாலிய ஒலிபரப்புத்துறையின் முதல் சானல், ‘போர் திரைப்படம் ‘ என்ற பெயரில் இரண்டாம் உலகப் போரின் காட்சிகளை ஒலிபரப்பியது. இது போன்ற செய்திப்பட விஷயங்கள் என்னதான் உணர்வுக்குவியலாகவும், கொடூரமாகவும் இருந்தாலும் ஒரு ரோஸிலியியின் அக்காலகட்டத்தின் திரைப்படம் இளைய தலைமுறைக்குச் சொல்லுகிற உணர்வுகளை இவை என்றுமே சொல்ல இயலாது – திரைப்படம் ஒரு கலை, செய்தி அல்ல; அது ஒரு கதை, அத்தியாம் அல்ல. இருபது வயதுக்குக் குறைந்த இத்தாலிய இளைஞர்களுக்கு பாடோக்லியோ என்றால் யார் என்று தெரியாது. அதுமட்டுமல்ல, ரோஸிலினி என்றால் யார் என்றோ, அவர் என்ன சாதித்தார் என்றோ கூடத் தெரியாது – என்னைப் பொறுத்தவரை இது முன்னதைவிடப் பெருங்குறை.

ரோஸிலினியின் paisan போன்ற படங்கள் தனிப்பட்ட வரலாற்றுக் கட்டத்தினால் மட்டுமின்றி, உற்சாகத்தினாலும் தோன்றியவை. நம் அனைவரின் வாழ்வையும் பாதிக்கும் விஷயங்களைக் குறித்து நமது மொத்த ஈடுபாட்டைத் தெரியப்படுத்துவதில் உள்ள தீர்மானத்தின் பெயரால், இத்தகைய உற்சாகத்தை நாம் எல்லோரும் மீட்டெடுக்க வேண்டும். இது நிகழ வேண்டுமானால், நாம் இழந்த நன்னய மதிப்பீடுகளை நாம் மறுகண்டுபிடிப்புச் செய்வது அவசியம்; தான்தோன்றித் தனமான குழப்பங்களால் உண்டான சமுதாயத்தைவிட, நன்னயத்தினால் ஒன்றுபட்ட சமுதாயத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். நாம் செயல்படாது போனால், தான்தோன்றிச் சமுதாயம்தான் கிடைக்கும்.

இத்தாலிய நியோ-ரியலிஸ்ட் திரைப்படத்தின் பெரும்தந்தைகள், ஒற்றுமையைப் போதிக்கவில்லை; தங்கள் கலைகளில் செயற்படுத்தினார்கள்.

*********

பின்குறிப்புகள்:

1. பாடோக்லியோ – Marshal Pietro Badoglio – 1940-களில் இத்தாலிய ராணுவத்தின் தலைவராக இருந்தவர். சுருக்கமான விவரத்திற்கு: http://www.expage.com/page/wwiilea1

2. ரோஸிலினி – Ronerto Rossellini – புகழ்பெற்ற இத்தாலிய இயக்குனர். சுருக்கமான விவரத்திற்கு: http://www.filmref.com/directors/dirpages/rossellini.html

3. paisan – ரோஸிலினியின் 1943 முதல் 1945 வரையிலான இத்தாலிய வரலாற்றுப் படம். சுருக்கமான விவரத்திற்கு: http://www.webster.edu/fatc/paisan.html

Series Navigation

பயணி

பயணி