அறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மன் இயற்பியல் அறிஞர் (Physicist) ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein) உலக சமாதானத்தைப் பெரிதும் விரும்பிப் போற்றியவர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய நகரங்களான இரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிப் பேரழிவை உண்டாக்கியபோது, தனது கண்டுபிடிப்பு இத்தகைய அழிவுச் செயலுக்குப் பயன்பட்டதே என வருந்திப் பேரதிர்ச்சி அடைந்தார்.

ஐன்ஸ்டான் தன் வாழ்நாளில் உலகப் புகழ்பெற்ற மாமேதையாக மட்டுமின்றி, அமைதித் தூதுவராகவும் விளங்கியவர். இறப்புக்குப்பின், அவரது மூளை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது; அவரது பேரறிவின் நுட்பத்தை அறியும் பொருட்டு பல அறிவியல் மேதைகள் அவரது மூளையை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. வேதியியல் தனிமம் (chemical element) ஒன்று அவரைக் கெளரவிக்கும் பொருட்டு அவரது பெயரால் ஐன்ஸ்டானியம் (Einstenium) என்று அழைக்கப்படுகிறது. அவருக்கு அறிவியல் துறையில் பெரும் புகழை அளித்தது அவரது நிறை-ஆற்றல் வாய்பாடான (Mass-energy formula) E=MC என்பதே ஆகும். {இதில் E= ஆற்றல் (Energy), M= நிறை (Mass), C= திசை வேகம் (Velocity)}. இதன் காரணமாகவே ஐன்ஸ்டானை நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கின்றனர்.

ஐன்ஸ்டான் 1879 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 14 ஆம் நாள் உல்ம் ஆஃப் வோர்டென்பர்க் (Ulm of Wortenburg) எனும் ஜெர்மன் நகரில் பிறந்தார். இவரின் தந்தை ஹெர்மன் (Herman) ஒரு வியாபாரி; தாய் பாலின் (Pauline) ஒரு இசைக் கலைஞர். இவர்கள் ஹிட்லரால் வெறுக்கப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஐன்ஸ்டான் தனது பள்ளிப்படிப்பை மூனிச் நகரிலிருந்த கத்தோலிக்கத் துவக்கப் பள்ளியில் பெற்றார். பள்ளிப்படிப்பில் சாதாரண மாணவராகவே விளங்கினார்; பள்ளியில் பிறரிடம் பழகுவதற்கும் கூச்சப்பட்டவர்; தாயிடம் பியானோ வாசிக்கப் பழகி வந்தார்; கணிதம், அறிவியல் பாடங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஐன்ஸ்டான் மற்ற பாடங்களில் சாதாரணமாக விளங்கினார்.

ஐன்ஸ்டானின் குடும்பம் 1894 ஆம் ஆண்டு இத்தாலிக்கும், பின்னர் சுவிட்ஜர்லாந்துக்கும் குடிபெயர்ந்தது. சுவிஸ் நாட்டில் குடியுரிமை பெற்று அங்குள்ள ஜூரிச் (Zurich) பல்கலைக் கழகத்தில் 1900 ஆம் ஆண்டு ஐன்ஸ்டான் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இயற்பியல் ஆசியராகப் பணியாற்ற வேண்டுமென்று ஆசைப்பட்ட அவருக்குக் கிடைத்தோ அலுவலக எழுத்தர் வேலை. பின்னர் 1903 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டு உரிமைக் காப்பக அலுவலகத்தில் (Patent office) ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் யுகோஸ்லாவிய நாட்டு மாணவியான மிலீவா மேரி (Mileva Maree) எனும் பெண்மணி மீது காதல் கொண்டு அவரையே ஐன்ஸ்டான் திருமணம் செய்து கொண்டார்; இரு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

ஐன்ஸ்டானின் சிந்தனை எப்போதும் கணக்கு மற்றும் இயற்பியல் துறைகளிலேயே ஆழ்ந்திருக்கும்; தன்னோடு ஒரு குறிப்பேட்டை எப்போதும் வைத்துக் கொண்டு மேற்கூறிய இரு துறைகளிலும் தனக்குத் தோன்றும் கருத்துகள், எண்ணங்கள், பிரச்சினைகளைக் குறித்து வைத்துக் கொள்வார். பின்னாளில் இக்குறிப்பேடுகளின் வாயிலாக இப்பிரபஞ்சத்தின் பல புதிர்களுக்கு விடை கிடைத்தது; 1905 ஆம் ஆண்டு 26 ஆவது வயதில் ஐன்ஸ்டான் தனது குறிப்பேடுகளில் இருந்து தயாரித்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஆரிச் (Aurich University) பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இக்காலகட்டத்தில்தான் இவ்வுலகம் அவரை ஓர் அறிவுலக மேதையாக ஏற்றுப் போற்றியது.

தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ஒளியின் வேகம் வேறெந்த ஆற்றலின் வேகத்தையும் விட அதிகமானது என்று ஐன்ஸ்டான் நிரூபித்தார்; பொட்டாசியம், டங்ஸ்டன் ஆகிய உலோகங்கள் மீது ஒளி விழும்போது, அவை உமிழும் எலெக்ட்ரான்களை ஒளி எலெக்ட்ரான்கள் (photoelectrons) என்றும், அவற்றின் விளைவினை ஒளிமின் விளைவு (photo electric effect) என்றும் வெளிப் படுத்தினார். இக்கண்டுபிடிப்புக்காக 1921 ஆம் ஆண்டு அவருக்கு உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐன்ஸ்டான் பிரெளனியன் இயக்கக் கோட்பாடை (Brownian Movement Theory) வெளியிட்டார்; இக்கோட்பாட்டின் சுருக்கம், ஒரு நீர்மத்தில் (liquid) கட்டிலாத் துகள்கள் (free particles) இயங்குவதற்கு அத்துகள்கள் நீர்ம மூலக்கூறுகளுடன் சேர்வதே காரணம் என்பதாகும். அவரது மற்றுமொரு கண்டுபிடிப்பு புகழ் பெற்ற சார்பியல் கோட்பாடாகும் (Theory of relativity); இதன்மூலமே ஐன்ஸ்டான் உலகப் பெரும் புகழை அடைந்தார்; “நிறை (mass), நீளம், காலம் ஆகிய இயற்பியல் அளவுகள் மாறாதவை அல்ல, ஒரு பொருளின் திசை வேகத்திற்கு (velocity) ஏற்ப அவை மாறக்கூடியவை” என்பதே சார்பியல் கோட்பாடாகும். “அசையாப் பொருள்களிலும் ஆற்றல் உண்டு, அவ்வாற்றல் உள்ளுறையாக விளங்குகிறது” என்ற கருத்தை ஐன்ஸ்டான் வெளியிட்டபோது அறிவியல் உலகமே நம்ப இயலாமல் வியப்பில் ஆழ்ந்தது. இக்கோட்பாட்டின் விளைவாக ஏற்கனவே இருந்துவந்த நிறை மற்றும் ஈர்ப்பு (mass and gravity) பற்றிய அறிவியல் கருத்துகள் மாற்றமடைந்தன. தனது மற்றுமோர் ஆய்வுக்கட்டுரையில் ஒளி, போட்டான் (Photon) துகள்களாக இடம் பெயர்கிறது என்று ஐன்ஸ்டான் நிருபித்தார். மற்றுமோர் புரட்சிக் கருத்தான ‘ நிறை மற்றும் ஆற்றல்களின் சமன்பாட்டை’ யும் ஐன்ஸ்டான் நிறுவினார்; இக்கோட்பாடே பின்னர் அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு வழி கோலியது.

1933 ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மன் நாடு நாஜிகளின் கொடுங்கோன்மைக்கும், இட்லரின் சர்வாதிகார அடக்கு முறைக்கும் ஆட்பட்டது. ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களும், ஐன்ஸ்டானும் இட்லரின் கொடுங்கோன்மையை எதிர்த்தனர். இந்நிலையில் அறிவியல் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவும், தனது கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள் பற்றி சொற்பொழிவாற்றவும், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில், ஐன்ஸ்டான் அமெரிக்கா சென்றார். ஜெர்மனியின் நாஜி அரசு இதனை விரும்பவில்லை; ஐன்ஸ்டானை தேசத்துரோகி என்று இட்லர் அரசு கருதியது. இதனால் ஐன்ஸ்டான் அமெரிக்கவிலிருந்து மீண்டும் ஜெர்மன் வருவது பாதுகாப்பற்றது என்றும், இட்லர் அரசு அவரைப் பழிவாங்கிவிடும் என்றும் கருதப்பட்டது; எனவே அவர் அமெரிக்கவிலேயே தங்கி தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அங்கு பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் (Princeton University) பொறுப்பான, உயர்ந்த பதவியில் பணியாற்றினார்; பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் அமைதியாகத் தனது அறிவியல் ஆய்வினை நடத்தி வந்தார். இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு ஏற்படுத்திய பேரழிவு ஐன்ஸ்டானை மனமுடையச் செய்துவிட்டது. இறுதியில் 1955 ஏப்பிரல் 18 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்து புகழுடம்பு எய்தினார்.

***

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர