உரோம இழை!

This entry is part of 45 in the series 20110227_Issue

சபீர்மகள்
புறப்பட்டுச் சென்ற மருநாள்
அவள்
விட்டுச் சென்ற பொருட்களை
சுத்தம் செய்யுகயில்
உடையின் விலையும்
அளவும் குறித்த
அட்டை,
தலை கிடுக்கிகளின்
பட்டை,
காலி நறுமணக் குப்பி
கண்மை தீர்ந்த டப்பி
திராணியற்ற
ரப்பர் பேன்ட்
என
எல்லாவற்றையும்
காலி
பாலித்தீன் பையில் திணித்து
அதன்
காதுகள் கட்டி
அப்புறப்படுத்தினாலும்…

அவள்
தலையணை உறையில்
ஒட்டியிருந்த
ஒற்றைத்தலைமுடியையும்
பிரத்தியேக
பூவெண்னெய் வாசத்தையும்
என்ன செய்வதென்று
புரியாமல்
அவள்
நினைவு
கனக்கத் துவங்கியது!

மனதை மிரட்டி
மருகும்
நினைவை ஒடுக்கி
மகளின் படுக்கையை
சலவைக்குப் போட்டு
பின்னர்…
வாங்கி வந்த
படுக்கையில்
பூவெண்ணெய் வாசம்
போய்விட்டாலும்
இன்னும்
ஒட்டியிருந்தது
அந்த
உரோம இழை!

Sabeer abuShahruk,

Series Navigation