சிலை பேசினால்

This entry is part of 35 in the series 20101219_Issue

கோமதி நடராஜன்


=================
காற்று வீசும் கடற்கரையில்

எங்களை நிறுத்தியதன் நோக்கமென்ன,

நாடு போகும் பாதை கண்டு

வெந்து போகக் கூடாது என்பதாலா?

ஆர்ப்பரிக்கும் அலைகள் காண ,ஆங்காங்கே

அரண் அமைத்து எங்களை இருத்தியது ஏன் ?

அடங்காத ,ஆர்ப்பாட்ட அரசியல் கண்டு,

புழுங்கிவிடக் கூடாது என்பதாலா?

கள்ளமற்ற குழந்தைகள் வந்துபோகும்

இடம் பார்த்து அமர்த்தியதன் சூட்சுமம் என்ன?

கொள்கையற்ற கட்சி கண்டு ,எங்கள் ரத்தம்

கொதிக்காதிருக்க வேண்டும் என்பதாலா?

எங்கள் எண்ணத்தில், ஊறிய குறிக்கோள்,

மண்ணோடு மண்ணானது,என்றும்,

எங்கள் மூச்சில் கலந்த கொள்கை,

காற்றோடு காற்றானது.!

எங்கள் பிறந்தநாள், ஜெயந்தியானது,நாங்கள்,

உலகை உதறிய நாள், நினைவு நாளானது.

ஆண்டுக்கு, இரண்டு நாட்களை மட்டுமே

நினைவில் வைத்து, இவர்கள் மாலையோடு வருவர்.

எங்களையே ஏணியாக்கி ,மாலையை வீசிவணங்குவர்.

எழுதி வாங்கி வந்த எங்கள் சரித்திரத்தை,

சிரத்தையின்றி,கேளாத கூட்டத்துக்குச் சொல்லிமுடிப்பர்.

அத்தோடு,வந்த வேலை முடிந்ததென ,சொந்த வழி திரும்புவர்.

எங்களை கல்லாகக் கூட அறியாத பறவைகள் ,

நாள் தவறாது இடும் எச்சம் கூட,எங்களுக்கு நாறவில்லை ,

எங்களை ,தேசத்தின் தூணாகச் சித்தரித்து, இவர்கள்

போட்ட மாலைகள் எல்லாம்,நாராகும் முன்பே நாறிப்போயின

Series Navigation