மாடவீதி

This entry is part of 34 in the series 20101107_Issue

ப.மதியழகன்


சில சமயம் புழுதியை பூசிக்கொள்ளும்
மழை நேரத்தில் உண்டாகும் மண்வாசனை
மக்களை மெய் சிலிர்க்க வைக்கும்
காலைப் பொழுதின்
ஆரவார இரைச்சல்கள்
சற்றே அடங்கி
மாலையில் அக்கடா என்றிருக்கும்
காலணி அணியாத காலடித்தடங்கள்
பதியாதா என எதிர்பார்த்திருக்கும்
மனிதர்களின்
பாதச்சுவடுகளை வைத்தே
யூகித்துக் கொள்ளும்
இவர்கள் இப்படி இப்படி என்று
எல்லா வீட்டு ரகசியங்களையும்
ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்தபடி இருக்கும்
இரு சக்கர வாகனம்
புகையை கக்கி
மாடவீதி காற்றை மாசுபடுத்தி
போயிருந்தது
மழை நீரில் மிதக்கும்
காகித கப்பல்
நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில்
கவிழ்ந்து கிடக்கும்
வீதியில் கிடக்கும் மண்ணை
வாயில் எடுத்து வைத்துக் கொள்ளும்
குழந்தைகளுக்குத்தான் தெரியும்
மாட வீதி மண்ணின் ருசி.

ப.மதியழகன்

Series Navigation