தந்தையாதல்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

வருணன்


தந்தையாதல்

அகால வேளைகளில்
தொந்தி சரிய அயர்ந்துறங்கும்
துணைவியினுள்ளே துள்ளல்
காணும் கணங்களில்
அவளை துயிலெழுப்பாமல்
வருடும் நடுங்கும் விரல்கள்.

தாயாகும் பூரிப்பினிடையே
பயங்கள் மிதக்கும்
மிரட்சிக் கண்களுருளும்
முகத்தை ஆதரவாய்
வருடும் கரங்கள்

வேறெப்போதிலும் தராத
பயத்தின் வர்ணங்களை
வரிந்து கொள்ளும்
மருத்துவமனையின் வெண்மை

குறுக்கும் நெடுக்குமாய்
ஆஸ்பத்திரி செவிலிகள்
பயணிப்பர் தடதடக்குமென்
இதயத் தண்டவாளத்தின் மேலே
பதிலேதும் சொல்லாமல்

எப்போதுமில்லாமல்
மனம் அரற்றியபடி
ஏங்கிக் கிடக்கும்
ஒற்றை அலறலுக்கும்
அதைத் தொடரும் அழுகுரலுக்கும்.

தவிப்புகளுக்கு மத்தியில்
தந்தையாதலும் மறுபிறப்பே
மங்கையின்
தலைப் பிரசவத்தைப் போல.

– வருணன்

வெயில்

நேற்றைக்கு முளை விட்ட
சிறுவிதையின் இருப்பு
சுவடின்றி பிடுங்கப்படுகிறது
இன்றொரு சூறைக்காற்றால்
கருவறையில் சுமந்திடும் கணக்கற்ற
பிள்ளைகளோடு முனங்கிக் கொண்டேயிருக்கிறது
பெருங்கடலொன்று அலை அலையாய்
மேகம் இழுத்து தாகம் தணித்திட
மேலெழும்பும் கோடையின் வெம்மை
தோற்று திரும்புகிறது
வரண்ட நிலத்தின் சுருக்கங்களை
முத்தமிட மீண்டுமொரு முறை
புழுக்கம் நிறைந்த அனாதை ராவொன்றில்
மனதின் ரணங்களை நக்கியபடி அலைகின்றன
நாலைந்து நினைவு நாய்கள்
உறங்காத என் தலையணையைச் சுற்றியபடி.

– வருணன்.

Series Navigation

வருணன்

வருணன்