உயிர் உறை ரகசியம்

This entry is part of 41 in the series 20101010_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


குறுக்கில் மரத்துண்டாய்.,
பூவில் பனித்துளியாய்.,
காரணமற்ற காய்ச்சலாய்..
பீடித்துக் கிடக்கிறது
உன் அன்பு ..என் மேல்..

எல்லா அம்புகளும் படுக்கையாய்..
தக்ஷிணாயனம் இருக்கட்டும்..
எய்துவிடு மிச்சமும்..

நேசத்தின் இழையா
அன்புப் பிளவை..
நெய்வதை நிறுத்து..

எவ்வளவு புரை ஏறியது
நுரையீரலைக் கேள்..
என் நினைவை விட்டெறி
மூச்சுக்குழாய் பிழைக்கட்டும்..

வலப்புற மூளையா..
இடப்புற மூளையா..
எதிலாவது அடக்கு..
நினைவுகளின் உற்பத்தி..

காதலும் காமமும்
கிளைத்த கொடியே..
பூப்பது உன்னிஷ்டம்.
என்னை மூழ்கடிக்காமல்

முப்பாலும் உன் அணைப்பால்
நாலாம் பக்கம் உன் ஆக்கிரமிப்பால்
நானும் ஒரு தீபகற்பமாய்..

எத்தணை யுகங்களாய்
உன்னைத் தள்ளுவது
இடையறாத அலையாய்..
என்னைச் சுற்றி நீர்தான்..

உயிர் உறை ரகசியமே.
மாய கர்ப்பமே..
இதயச்சூலுக்குள்
பிரசவிக்க இயலாமல் நீயும்

வெளியேற முயலாமல் நானும்.

Series Navigation