மேடை ஏறாத கலைவண்ணம் …!

This entry is part of 34 in the series 20100926_Issue

கலாசுரன்


—————————————————————-

இமைகளில் இருள் மை
இதழ்களில் வைகறையின் சாயம்
கன்னங்களின் நட்சத்திரத் தூள்
நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் …
கைவிரல்களில் வானவில் மருதாணி
உடுத்த தாவணியின் முந்தாணை
வெயில் இழை ஜரிகையால் நெய்யப்பட்டிருந்தது…
மேடை அருகில் சிறுமியின் அழகான தோற்றம் ….

தனக்கான மேடை நேரத்தை எதிர்பார்த்தபடி
ஓய்வில்லாது தாளம் போடும் கால்களும்
பொறுமையை நெருடி நிதானம் பழகத் துடிக்கும்
கைவிரல்கல்களும் புதுவித
நாட்டிய முத்திரை அரன்கேற்றியவாறு ….
அடிக்கடி இதழை கவ்விக்கொள்ளும்
மேல்வரிசைப் பற்கள்
ஒரு கிரகணத்தை நினைவூட்டிச் செல்கிறது ….

தனக்கான மணி ஒலித்ததும்
இயல்பான தன்
கலை வண்ணங்களை கலைத்துவிட்டு
மற்றவர்களின் கை தட்டலுக்கான
நிர்பந்தத்தின் இயல்பிழந்த
பாத தாளங்களும் முத்திரைகளும், முகபாவங்களும் நிகழ்த்திவிட்டு
சரியாக செய்தேனா ?
என்ற கண்ணசைவு தன்
இயல்பான அடுத்த நாட்டியத்தின் தொடக்கமாக
குருநாதருக்குப் பரிசளித்துவிட்டு
திரைகளுக்குப் பின்னால் ஓடி மறைந்தாள் …!
———————————————————————————–

Series Navigation