வேத வனம்- விருட்சம் 83

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

எஸ்ஸார்சி


பேச்சுக்கடவுளே
தேவ மனத்தோடு வா
என்னிலே மொழியை நிலையாக்கு
நாணின் இருமுனைகள் போலே
என் அறிவை விசாலமாக்கு
இம்முஞ்சம் என்னும் புல்
இடை இருக்க நோய் தீரும்
பூமி வானத்தின் நடுவே
கதிரவன் போல் நிலையுறுக
வில்லிலிருந்து பாயும் அம்பு போலே
மூத்திரம் வெளியேறட்டும்
நீரே அமிருதம்
நிரே அவுடதம்
நீராலேயே திடக் குதிரைகள் நற்பசுக்கள்.
பகுத்தறிவில்லாதோர்
தற்புகழ்ச்சிக்காரர்
அக்கினி இருவரையும் இவண் கொண்டுவருக
இந்திரன் சிரம் கொய்யட்டும்
பெண்ணின் உடல்
சுகப் பிரசவத்துக்கு
ஏற்புடயதாய் அமைக
வானில் திசைகள் நான்கு
புவியிலும் அப்படியே
திசைகள் சூழ உள்ள
தாய்வயிற்றுச் சிசுவைத்
தேவர்கள் கவனிக்கிறார்கள்
பிறப்புறுப்பு விசாலமடைக
நஞ்சுக்கொடி தசையில் எலும்பில்
பற்றாது நழுவிக்கீழே வீழ்க
நாய் அதனைப் புசிக்கட்டும்
நதிகள் ஒன்றாகிப்பாய்க
காற்று ஒருமையுடன் வீசுக
பறவைகள் ஒற்றுமையாய்ப் பறந்திடுக
அறிஞர்களே அருகில் வாரும்
நெய்யொடு பால் நீர் நன்றாய்ப் பெருகுக
ஒன்றாய்ப்ப்பெருகுக
இந்திரனே ஈய உலோகம்
தந்தான் எமக்கு
வருணன் அதனை வாழ்த்த
அக்கினி ஈயம்அதனை இலகுவாக்கினான்
ஈயத்தால் பகையத்தனையும் முடிப்போம் யாம்
எமது நாடிகள் நிலை பெறுக
சின்னஞ்சிறிய நாடிகள் வலுகூடி
பெரு நாடியை நிலப்படுத்தட்டும்
மான் கால்
காளையின் பல்
பசுவின் எதிரிகள்
சினச்சொரூபிகள்
தொற்று நோயர்
தீயோர் எவரும் எம்மை விட்டகலுக
கதிரோன் உதிக்கட்டும்
நினது இதய நோயும்
காமாலையும் குணம்பெறட்டும்
எம்மிடமிருந்து வரும் சிவப்புக்கதிர்கள்
நோய் விரட்டட்டும்
கிளிகளும் நாகங்களும்
நின் பாண்டு ரோகம் பெற்றுக்கொள்ளட்டும்
ரஜனி மூலிகையே
குட்டம் போக்கு
வெண் புள்ளிகளை தூரமாக்கு
சுரக்காய்ச்சலே எம்மை விட்டு நீங்கிடு
நீ வேதனை தருவோன்
எரிப்பாய் எரிவாய்
சுரமே உனக்கு வணக்கம்
பகுத்தறிவில்லாதோர் தற்புகழ்ச்சி பேசுவோர்
வஞ்சகர் அரக்கர் என யாவரையும் அழிப்போனே அக்கினியே
கிருட்டிண வர்தனே தகிப்பாய் நீ
அவி கொண்டுசெல்ல மறுப்போரை அராயிகளை அழி
கிழக்கில் அக்கினி
மேற்கில் வருணன்
வடக்கில் இந்திரன்
தெற்கில் யமன் யாவர்க்கும் அவி அளிப்போம்
தாயும் தந்தையும் சுகமுறுக
புவி பசு ஆண்மக்கள் சுகம் பெறுக
செல்வமும் அறிவும் எம்மிடம் வருக
நீண்ட காலம் யாம் சூரியன் காண்போம்
செடிகொடிகள் சுவாசிக்க
யார்காரணமோ
அவன் புவியிலுமில்லை வானிலுமில்லை
பிரம்மம் இதுவென அறிவோம்
அறிஞர் அறியலாம் அறியாமலும் போகலாம்
எல்லாம் ஒன்றை ச்சுற்றி
பிறவோ ஒடுக்கத்தில் எப்போதும்
எல்லாமுடைய புவிக்கு என் வணக்கங்கள்
பிரகாசிக்கும் பொன் வண்ண நீரே
அனலை அழகாய்க் கருக்கொள்கிறது
மக்களின் நன்மையும் தீமையும் கண்டு
வருணன் நீருக்குள்
கர்ப்பமாகிறான்
சுகம் வளம் எமதாகிறது
நீரே மங்களமான கண்களால்
எங்களைப்பார்க்கவும்
எங்களை பாவிக்கவும்
பிரம்ம குமாரனுக்கு தொடர்புடைய பொன்னை
நிறை ஆயுளுக்கு
உன்னில் கட்டுகிறேன்
பிசாசும் அரக்கனும்
வெற்றிகாணமுடியாதவன்
தேவர்கட்கே பிரதானமான ஒளிறும்
பொன்னை மெய்யில் அணிவோன்
மாதம் அயனம் ருது வருடம்
என க்காலப்பால்கொண்டு
பொன்னைப் பூரணமாக்குவோம்
இந்திரன் அக்கினி விசுவே தேவர்
எம் பொன்னை அங்கீகரிக்கட்டும் ( அதர்வ வேதம் காண்டம் ( 1 )
———————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி