விருந்து

This entry is part of 32 in the series 20100220_Issue

நட்சத்திரவாசி


எனது அவயங்கள் யாவையும் வெட்டி
உங்கள் முன் பரிமாற வைக்கப்பட்டிருக்கிறது
ரத்த வாடை வீசாத மொழுக்கான
தோல்களற்றவையவை
உங்களில் ஒருவன் சொல்லுகிறான்
முன்பும் இதனொரு சுவையை அறிந்தேயிருக்கிறேன்
பாலித்தீன் பைகள் போலிருக்கும்
மேலுறையை பிரித்தெடுத்துவிடுகின்றனர்
அப்போது தான் அந்த சர்ச்சை உருவாகியது
மாமிசங்கள் இல்லாத தலை எதற்கு
நீங்கள் அவயங்களை புசிக்காமலே
வாதிடுகிறீர்
விருந்துகளிலும்,வைபவங்களிலும்
கேட்காத பேச்சாக இருந்தது அது
ஒவ்வொருவரின் தட்டுகளிலும் இருந்த
அவயங்களுக்கு ஒப்ப
அவர்கள் கொலைவெறி தாக்குதல்களில்
அவயங்கள் விழத் தொடங்கின
எனது தலையை தட்டில் வைத்திருந்தவன்
தலையை மிதித்துக் கொண்டு விழுகிறது உடல்
கால்களற்றவன் தவழத்துவங்குகிறான்
கைகள் இரண்டையும் இழந்தவன்
நிலை குலைந்து போயிருந்தான்
ரொம்ப காலத்துக்கு பிறகு நான்
ஒரு விருந்தில் கலந்து கொண்டிருந்தேன்

Series Navigation