வேத வனம் விருட்சம் -51

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

எஸ்ஸார்சி


பர்ஜன்யனுக்கு குரல் கொடுக்கும்
தவளைகள்
விரதம் முடித்த பார்ப்பனர் போல்
ஒலி எழுப்புகின்றன

வறண்ட தோலாய் க்காய்ந்த
ஏரியிடை
தாக்குப்பிடிக்கும் தவளை மீது
பர்ஜன்யன்
நீர் வார்க்கிறான்
தாகம் கூடித்தத்தளித்த
தவளைகள் இதோ சந்திக்கின்றன
காணும் காட்சியோ
தந்தைபின் விரையும் பிள்ளைகள் போல்.

மழையில் நனைந்து ஒர் தவளை
மற்றொன்றை வாழ்த்துகிறது
முன்னே பாயும் தவளைக்கு
அதிசயமானவை
பச்சை நிறத்தவை
வாழ்த்துப்பா பாடுகின்றன

குருவும் சீடருமாய்
தவளைகள் பாடம் படிக்கின்றன
நீர் மீது பாய்ந்து
குரல் தருங்கால்
தவளைகள் பருமன் கூடுவதுவாய்
காட்சி தருகின்றன

ஆ யெனவும்
ஆடு போலும் சப்திப்பன
புள்ளி கொண்டவை
பச்சை நிறத்தன
பல் உருவங்கொண்டன
குரல்களோ விதம் விதமாய்

இரவொன்றுக்கு மூன்று கால வேள்விசெய்
பார்ப்பனன்
முன் பண்டங்கள் குவிவது போலே
மழை காணும் முதல் நாளே
ஏரிக்கரை இரவு
தவளைகள் ஆளுகையில்

அந்தணர்கள் ஆண்டு வேள்வி
சாதிக்கிறார்கள்
சோம ரசங்கள் சுவைத்தவர்கள்
அவர்கள்

தவளைகட்கு தேவக்கட்டளை
நிறைவேறுகிறது
வருடங்கள் சுழற்சி கண்டு
மழையெனப் பொழிகிறது
பதுங்கிய தவளைகள்
விடுதலை எய்துகின்றன

ஆவென குரல் தரும்
ஆடு போல் கத்தும்
புள்ளித்தோலுடைய
பச்சை த்தவளைகளே
எமக்கு வளமே தாரும். ( ரிக் .7/103)

வள்ளற்பசுக்கள் பல
எமக்கு அள்ளி வழங்கிடும்
ஒ தவளைகளே
யாம் நூறாண்டு வாழ சேமம் தருக ( ரிக்/7/103)

—————————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி