சித்திரக்காரனின் சித்திரம்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

நட்சத்திரவாசி


படங்களுக்கு வண்ணம் எழுதுபவனே
உன் தூரிகைப்பட்டு வந்துதித்த
சூரியன் வெறுமையாய்
நிற்பதை அறிவாயோ
எக்கணத்தில் நானதை வீட்டுக்கு
கொண்டுவந்தேனோ
கூடடைய விடாமல் நிற்கும்
சூரியனுக்கு பறவைகள் குறித்து
இவ்வளவு அலட்சியம் ஏன்
அவை அப்படியே இருக்கவும்
அசையாமல் இருக்கவும்
வஸ்துக்கள் என்று நினைத்தாயோ
களைத்து போன அந்த
தோணிக்காரனை பார்
சதாகாலமும் துடுப்பையே
பிடித்து கொண்டிருந்தால்
வீடடைய அவனுக்கும் தோன்றாதோ
மேலும்
வீட்டு முற்றத்தில் தானியங்களை
பொறுக்கி தின்னும் கோழியும் குஞ்களையும்
கண்டாயா
அவற்றுக்கும் இல்லையோ பொழுது சாய்தல்
பற்றிய கவலையும்,ஏக்கமும்
பொழுது சாய்ந்தாலும் பொழுது சாயாமல்
அப்படியே வைத்திருக்க
உன் தூரிகையை தூண்டியது எது?

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

நட்சத்திரவாசி

நட்சத்திரவாசி